பக்கத்தில் மாஸ்டர் குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருந்தான். அவன் குறட்டைவிட்டு தூங்குவதை குமார் இப்போதுதான் கவனிக்கிறான். தினமும் இப்படித்தான் தூங்குவானோ? ஜன்னல் வழியே அறைக்குள் வரும் தெருவிளக்கு வெளிச்சத்தில் மாஸ்டரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் குமார். கடையைச் சாத்திவிட்டு அறையில்வந்து படுத்துக் கொண்டபிறகு அவனை இப்படியே எத்தனையோ தடவை பார்த்துவிட்டான். இருட்டில் வெறித்துப் பார்ப்பதைவிட இவனால் வேறு என்னதான் செய்யமுடியும்?

எப்போதும்போலவேதான் இன்றைக்கும் மாஸ்டர் தலையில் தண்ணீர் எடுத்து ஊற்றி குமாரை எழுப்பிவிட்டான். இவனை மட்டும்தான் என்றில்லை. போன மாதம் புதுசாய் வேலைக்கு சேர்ந்த பாலுவையும் அப்படித்தான் எழுப்பிவிட்டான். பாலு எப்படியோ இங்கிருந்து தப்பித்துவிட்டான். வீட்டுக்கே? போய்விட்டானா இல்லை வேறு ஏதாவது கடையில் வேலை பார்க்கிறானா என்று தெரியவில்லை.

தலையில் தண்ணீர் ஊற்றாவிட்டாலும் தாமாக எழுந்துவிடப்போகிறோமா என்று வந்த சில நாட்களிலேயே இவனாகவே ஒரு சமாதானம் தேடிக்கொண்டான். மாஸ்டரும்கூட நம்மைப் போல டீ கிளாஸ் கொடுக்கிற பையனாக வேலையில் சேர்ந்தவன்தானே. நாமும்  அவனைப் போல் தொழிலைக் கற்றுக்கொண்டு மாஸ்டர் ஆனபிறகு கையில் கொஞ்சம் காசு சேர்த்துக் கொண்டு ஊருக்குப் போய்விடவேண்டும். அங்கே போய் ஒரு டீக்கடை வைத்து பிழைத்துக் கொள்ளலாம். மெட்ராஸ் பக்கம் மறந்தும்கூட வந்துவிடக்கூடாது என்றெல்லாம் இவன் மனதிற்குள் பல திட்டங்களைப் போட்டுக்கொண்டிருந்தான்.

எப்படியோ மாஸ்டர் இவனது லட்சிய கதாநாயகனாகிவிட அவன்மீது இவனுக்கு கோபமே இல்லாமல்போனது. அவன் படுத்தியெடுக்கிற பாடுகளை ஒரு விளையாட்டுபோல எடுத்துக் கொள்ளப் பழகிவிட்டான்.

காலையில் தன்னை எழுப்பிவிட்டு குளிக்கப் போன மாஸ்டர் திரும்பி வரும்போது இவன் பாதியில் விட்ட தூக்கத்தை மீண்டும் தொடர்ந்திருந்தான். கெண்டைக்காலில் அவன்கொடுத்த அடியில்தான் இவன் சுருண்டு எழுந்து உட்கார்ந்தான். பிறகு தூக்கம்போன இடம் தெரியவில்லை.

அவசரம் அவசரமாய் இவனும்போய் தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டு அதேவேகத்தில் தலை துவட்டியபடியே கொடியில் காய்ந்த இன்னொரு கால்சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டான்.

மாஸ்டர் சுருட்டிக்கிடந்த பாயை உதறி எதையோ தேடிக்கொண்டிருந்தான். காலையில் எழுந்தவுடன் ஒரு சிகரெட்டை பற்றவைத்து இழுத்தால்தான் அவனுக்கு வேலையே புரியும் போல. எங்கு வைத்தானோ, மறந்துவிட்டு தேடிக்கோண்டிருக்கிறான் என்றுதான் இவன் நினைத்தான். சுவரின் ஆணியில் மாட்டியிருந்த சட்டைகளின் பைகளுக்குள் அவன் கையை விட்டு துழாவிக்கொண்டிருந்தான்.

திடீரென்று இவனைப்பார்த்து அப்படிக் கேட்பானென்று எதிர்பார்க்கவேயில்லை.

"எங்கடா ஒளிச்சு வைச்ச?"

"என்னண்ணே..."

ஓடிவந்த வேகத்தில் இவனைக் குப்புறத்தள்ளி காலால் ஓங்கி சரமாரியாக மிதித்தான் மாஸ்டர்.

"அய்யோ, அம்மா" என்று அடித்தொண்டையில் அலற ஆரம்பித்தான் இவன். பொழுது விடிகிற நேரத்தில் இவன்போட்ட கூச்சலுக்குப் பயந்து விலகியவன் சட்டைப்பையிலிருந்து சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக்கொண்டான்.

ஒன்றும் புரியாமல் மாஸ்டரையே பார்த்துக்கொண்டிருந்தான் இவன்.

"கடைக்கு வா. முதலாளிகிட்ட வைச்சு பேசிக்கிறேன்"

மாஸ்டர் விறுவிறுவென்று நடந்துபோனான். இவனும் எழுந்து அவன்பின்னால் நடந்தான்.  இவன் பின்னால் வருகின்றானா என்று அடிக்கடி நின்று பார்த்தான் மாஸ்டர். அப்படி என்ன தப்பு பண்ணிட்டோம்? எதற்காக இந்த அடி அடிக்கிறான் என்று இவன் குழம்பிப்போயிருந்தான்.

boy_370காலையிலிருந்து இவனிடம் கடுகடு என்றே முகம் காட்டிக்கொண்டிருந்தான் மாஸ்டர். கடைக்குப் பக்கத்தில் சவாரிக்குக் காத்திருக்கும் ஆட்டோ டிரைவர்களுக்கு வழக்கம்போல டீ கொண்டுபோனான் இவன். காதில் வளையம் மாட்டிக்கொண்டிருக்கும் தாடிக்காரனுக்கு ஸ்ட்ராங்காக டீ சொல்ல மறந்தது அப்போதுதான் ஞாபகம் வந்தது. அவனுக்கு இவனைப்  பிடிப்பதேயில்லை. முதல்தடவை பார்த்தபோதே கிளாஸிக்குள் கைவிரலை விட்டுப் பிடித்திருந் தான் என்று சொல்லி டீயைக் கீழே ஊற்றிவிட்டு மீண்டும் போடச்சொல்லிக் கேட்டான். அப்போது கடையில் முதலாளி இருந்தார். இவனை திட்டிக்கொண்டே கிளாஸை அடியில் பிடித்துக்கொடு என்று சொல்லி மீண்டும் அனுப்பிவைத்தார். அதன்பிறகு இவன் எப்போதுமே டீ கிளாஸ்க்குள் கைவிரலை நுழைத்ததில்லை. இன்றைக்கு "ஸ்ட்ராங்கா கொண்டுவா" என்று திருப்பியினுப்பினான் தாடிக்காரன். "ஸ்ட்ராங்க்" என்று சொல்லி இவன் டீ கிளாஸை மாஸ்டரிடம் காட்ட அவனும் சூடான டிக்காஷனை தாராளமாக ஊற்றினான் இவனது கையில் படுமாறு.

சாயந்திரம்தான் முதலாளி கடைக்கு வந்தார். அவரிடம் மாஸ்டர் இவனைக் கைகாட்டி ரொம்ப நேரமாக ஏதோ பேசினான். அவனை எங்கோ அனுப்பிவைத்தார் முதலாளி. அவன் கிளம்பிப்போனதும் இவனைக் கூப்பிட்டு "அவன் போனை எடுத்து யாருகிட்ட வித்த?" என்றார். அப்போதுதான் காலையிலிருந்து அவன் காட்டிய கோபத்தின் காரணம் புரிந்தது. இவனையறியாமலே இவனுக்குள் இருந்து எழுந்துவந்தது ஒரு  விசும்பல் சப்தம். ஆனால் அதற்கெல்லாம் முதலாளி அசைந்துகொடுத்ததாய் தெரியவில்லை. "அழுவாதே. இது கடை. நைட்டு ரூமுக்கு வர்றேன். அங்க வைச்சு விசாரிச்சாதான் உண்மை ஒழுங்கா வெளியில வரும்"

கடையை மூடியதும் அறைக்கு திரும்பி வந்தபோது எப்போதும்போல மாஸ்டர் மட்டுமே இவன்கூட வந்தான். முதலாளியைக் காணவில்லை. அவரும் மாஸ்டரும் சேர்ந்து அடிப்பார்களோ என்று இவன் பயந்துகொண்டே இருந்தான். அம்மாவுக்கு ஒரு ரூபாய் போனில் காசு போட்டு பேசியபோது சொல்லிவிடலாம் என்றுதான் நினைத்தான். மளிகைக் கடைக்காரர் கூப்பிட்டு அவள் வந்து சேர்வதற்குள் மீண்டும் விசும்பல் வந்து கேவி கேவி அழ ஆரம்பித்துவிட்டான். வழக்கம்போலவே அவள் இவனை ஆறுதல்படுத்தி நன்றாக சாப்பிடு, கடன் அடைந்ததும் அழைத்துக்கொண்டு போய்விடுகிறேன் என்று சொன்னாள். தினமும் அழுபவன் திடீரென்று வேறொரு காரணத்திற்காக அழுதாலும் அதே வார்த்தைகள்தானா? திருட்டுப் பழியாகிவிட்டது என்று அவளிடம் தானாக எப்படிச் சொல்வது? அவளாவது தன்னை நம்புவாளா? ஒருவேளை அவளும் அது உண்மையாக இருக்கலாம் என்று எண்ணிவிட்டால்? இவன் அழுகையோடு நிறுத்திக்கொண்டான். அவள் சொன்ன வார்த்தைகளுக்கு "ம்" கொட்டியதோடு சரி.

அறைக்கு வந்து பார்த்தபோது இவனது துணிமணிகள் எல்லாம் கலைந்து கிடந்தது. முதலாளி மாஸ்டரை அனுப்பிவைத்தது அறையை சோதனை போடுவதற்காக. இவன் ஒன்றும் சொல்லவில்லை. இருவரும் பேசிக்கொள்ளாமலேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தார்கள். எப்போதும் வந்த வேகத்தில் அப்படியே தூங்கிவிடுபவன்தான். ஆனால் இன்றைக்கு தூக்கம் வந்தபாடில்லை. மாஸ்டரின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் வேறுபக்கம் முகத்தை திருப்பிக்கொண்டான். கொஞ்ச நேரத்தில் விளக்கை அணைத்துவிட்டு மாஸ்டர் படுத்துக்கொண்டதும் இவனும் படுத்துக்கொண்டான்.

திடீரென்று செல்போன் சப்தம். மாஸ்டர் விளக்கைப் போட்டு எங்கிருந்து சப்தம் வருகிறதென்று நிதானிப்பதற்குள் அது நின்றுவிட்டது. சிறிது நேரம் கழித்து மீண்டும் சப்தம் வந்தது.

"இல்ல... காலையிலே குளிக்கும்போது பாத்ரூமிலேயே வைச்சுட்டுப் போய்ட்டேன். எங்க வைச்சேனு ஞாபகப்படுத்த முடியல. சொன்னா நம்பமாட்டியா...?"

குளியல் அறையிலிருந்து செல்போனை எடுத்துக்கொண்டு மாஸ்டர் அறைக்கு வெளியே போனான். சிறிது நேரத்தில் திரும்ப வந்தான். வந்த வேகத்தில் தூங்கியும் விட்டான். இவனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. 

இமைகள் வலியெடுத்துவிட்டன. யாரோ ஏறி மிதிப்பது போன்று உடம்பெங்கும் அசதி. இருந்தாலும் குமாருக்கு இன்னும் தூக்கம் வந்தபாடில்லை.

Pin It