இந்தச் சமூகத்தில் சில விபத்துகள் அரசியல் காரணங்களுக்காக கொலைகள் என்று சொல்லப்படுகின்றன. அதேநேரத்தில் மன்னிக்க முடியாத சில மாபெரும் கொலைச் செயல்கள் மனசாட்சியே இல்லாமல் விபத்து என்று விளிக்கப்படுகின்றன. அப்படி ஒரு கொலைச்செயல் தான் சிவகாசி அருகே விபத்தாக நடந்தேறி இருக்கிறது. எல்லா விடியலையும் போலத்தான் வழக்கம் போல அன்றும் விடிந்தது முதலிப்பட்டி கிராமத்திற்கு. ஆனால் எல்லா நாட்களையும் போல வழக்கமான வீடு திரும்புதலாக இல்லை. இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை வெடிச் சத்தம் கேட்டதாம். நெருப்பை வெகுநேரமாக அணைக்க முடியவில்லை என்கிறார்கள். அந்த உச்சி வெயிலிலும் கூட அந்த தொழிற்சாலையின் வானத்தை காரிருள் சூழ்ந்து கொண்டது. அந்த இருள் விலகிவிடும் முன்னமே அவர்கள் வெடித்து சிதறி எரிந்து கருகி செத்து விட்டார்கள். இனி பேசித்தான் ஆக வேண்டும் ஏனென்றால் அந்த கோரச் சம்பவம் நடந்து விட்டது. தொலைக்காட்சியில் காட்டப்பட்ட அந்தக் காட்சிகளை நீங்கள் கண்டிப்பாக பார்த்திருக்க கூடும். ஒரு யுத்தக்களத்தில் கொன்று வீசியெறியப்பட்ட மனித உடல்களை போல இந்த வாழ்க்கையென்னும் யுத்தத்தில் முதலாளிகளால் கொன்று வீசப்பட்டவர்கள் அவர்கள் என்று சொன்னால் மறுப்பு சொல்வீர்களா நீங்கள்?

அந்த கந்தக பூமியில் வாழ்க்கை தேவைகளுக்காக கசக்கி பிழியப்பட்டது மட்டுமில்லாமல் வெடிவைத்து வீசியெறியப்பட்டதுமான வேதனையை எப்படித்தான் வார்த்தை படுத்துவதோ. அப்படி வார்த்தை படுத்தியும் என்ன பிரயோஜனம் என்ற கேள்வியும் கூடவே எழாமல் இல்லை. ஏனென்றால் வரலாறு முழுக்க நாம் பார்வையாளர்களின் பகுதியில் தான் அமர்ந்திருக்கிறோம். இப்போது மட்டும் என்ன செய்து விடப்போகிறோம். காலையில் சிரித்துக் கொண்டு சென்ற கணவன் கரிக்கட்டையாய் செத்துக் கிடக்கிறான் என்பதை கேள்விப்பட்ட அந்த மனைவியின் இதயம் என்ன பாடுபட்டிருக்கும். மகனை இழந்த தாய் இன்னும் அழுது கொண்டிப்பாள் அல்லவா. அவள் எங்கே சென்று எந்த ஆராய்ச்சி மணியை அடிக்கப் போகிறாள்? அவளுக்குத்தான் நீதி வழங்க இங்கே எந்த மனுநீதிச் சோழன் காத்துக் கொண்டிருக்கிறான். அப்படியென்றால் அவளுக்கு யார்தான் நியாயத்தீர்ப்பு செய்ய முடியும்? அந்த குழந்தைகள் இனி என்ன செய்வார்கள்? அந்தக் குடும்பங்கள் நிர்கதியாக நின்று கொண்டு என்ன பாடுபடப் போகிறதோ? வேதனை விம்மல்கள் வெடித்துக் கிளம்புகின்றன. அதிகாரிகளின் தொடர்ச்சியான அலட்சியப் போக்கால், பட்டாசுத் தொழிற்சாலையின் முதலாளிகளின் அளவுக்கதிகமான இலாபவெறியால் சிதறடிக்கப்பட்ட அந்த கனவுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் நாம்.

என்ன நிவாரண நிதியா? உங்கள் இரண்டு இலட்சமும் செத்துப் போனவர்களை உயிர்ப்பித்து விடுமா என்ன? உங்களுடைய இருபத்தி ஐயாயிரம் அந்த காயங்களுக்கு மருந்து போட்டு விடுமா? அட ஆட்சியாளர்களே அந்தக் காயங்கள் அவர்களின் உடலில் மட்டும் இருக்கிறது என்று நினைத்து விட்டீர்களா. அவர்களின் ஒட்டுமொத்த இதயங்கள் எல்லாமுமே காயப்பட்ட இதயங்கள் என்பது தெரியுமா உங்களுக்கு. அந்த பாவப்பட்ட ஜனங்கள் தங்கள் பாவப்பட்ட வாழ்க்கையை தினந்தினம் எத்தனை எத்தனை பாடுகளோடு கழித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதெல்லாம் எங்கே போனீர்கள் எஜமானர்களே. உங்கள் வசதிமிக்க ஆடம்பரமான கார்கள் உள்ளே வருவதற்கு அவர்கள் ஊரில் சாலை வசதிகள் இல்லை. அவர்களின் வாழ்க்கையை போலவே மழை பொய்த்து போய் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கும் அந்தக் கண்மாய்களில் உங்கள் ஹெலிகாப்டர்கள் இறங்கலாம். பத்திரிக்கைகாரர்கள், தொலக்காட்சி நிருபர்கள் படைசூழ நீங்கள் ஏதோ அரசியல் ஊர்வலம் போல நடந்து வருவீர்கள் அவர்களுக்கு பக்கத்தில் வந்ததும் சோகத்தில் இருப்பது போல தலையை தொங்கப்போட்டு கொள்வீர்கள். திக்குவது போலவும் திணறுவது போலவும் தொண்டையைச் செறுமிக் கொண்டு பேட்டியளிப்பீர்கள். அவர்கள் உங்களை அண்ணாந்து பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருப்பார்கள். ஒன்று வாக்கு கேட்க இல்லையென்றால் வாக்கரிசி போட என்ற உங்களின் அரசியல் எங்களுக்கு தெரியாமல் இல்லை. இதென்ன இன்று நேற்று நடந்து கொண்டிருக்கிறதா என்ன? இதற்கு முன்னால் இப்படி நடக்கவே இல்லையா? உங்களைப் பொருத்த அளவில் இரங்கல் செய்தி கொடுக்க வேண்டுமென்றால் கூட இறப்பு எண்ணிக்கை முப்பது நாற்பது இருக்க வேண்டும் போல இல்லையா? ஏனென்றால் அங்கே இங்கே என்று நடந்த ஒன்றிரண்டு மரணங்களால் எந்த மாற்றமும் வந்து விடவில்லை என்பதும் ஒருபக்கம் மறுக்க முடியாத உண்மை தானே.

ஒரு சம்பவம் நடந்து விட்டால் ஆங்காங்கே இருந்து கூக்குரல் வருவதும் கொஞ்ச நாட்களில் அங்கே எரிந்து அடங்கிய நெருப்பை போல அடங்கிப் போய் விடுவதும் வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்சம் கூடுதலாக இழவு விழுந்த வீட்டின் நடுவில் உட்கார்ந்து பட்டிமன்றம் நடத்துவதும். விவாதங்கள் என்ற பெயரில் எதையாவது பேசிக் கொண்டிருப்பதும் மாறத்தான் வேண்டும். ஏனென்றால் அவர்கள் சரியாகவே இருக்கிறார்கள். அவர்கள் சரியாகவே செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதிகாரிகளைக் கேட்டால் ஒரு மழுப்பல் பதில். ஆட்சியாளர்களை கேட்டால் ஆணையம் நிறுவியிருக்கிறோம் அதிகாரிகளை நியமித்திருக்கிறோம் என்கிறார்கள். இத்தனைக்கும் இயக்கக் கூடாது என்று சொல்லப்பட்ட தொழிற்சாலையாம் அது. அப்படியென்றால் அதை இயக்கியவர்கள் யார். வெறும் முதலாளி என்று மட்டும் சொல்லிவிட முடியுமா என்ன. அதிகாரிகளின் அலட்சியப் போக்கும் இதற்க்கு காரணம் தானே.

அறநூறுக்கும் அதிகமான பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டிருக்கும் அந்த நகரம் பாதுகாப்பு உடையதாக இருக்கிறதா? அங்கே வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறதா என்றெல்லாம் கவனிக்க வேண்டியது யார் வேலை. அரசாங்கத்திற்கு அந்த பொறுப்பு இருக்கிறதா இல்லையா. இன்றைக்கு சொல்கிறார்கள் எல்லோரும், அந்த இடத்திற்கு சொந்தக்காரர் ஒருவர், உரிமம் வேறொருவர் பெயரில் வாங்கப்பட்டிருக்கிறது. இப்போது அதை குத்தகைக்கு எடுத்து நடத்துகிறவர் வேறொருவர் என்று. அப்படியென்றால் அந்த கந்தக பூமியில் இயங்கிக் கொண்டிருக்கும் மொத்த தொழிற்சாலைகளின் தர நிர்ணயம் தான் என்ன? இதெல்லாம் இவ்வளவு நாள் கண்ணுக்கு தெரியவில்லையா அல்லது கையூட்டு பெற்றுக் கொண்டு காணாமல் விடப்பட்டிருக்கிறதா? ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் முதலாளிகளே, அதிகாரிகளே, முக்கியமாக அரசியல்வாதிகளே ஏனென்றால் அதிகமான பட்டாசுகளின் பயன்பாடு உங்கள் ஊர்வலங்களிலும் உங்களுக்கான வரவேற்புகளிலும் தான் இருக்கிறது ஒவ்வொரு பட்டாசிலும் அந்த உழைப்பாளிகளின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பது போல அவர்களின் ஒவ்வொரு மரணத்திலும் உங்கள் பெயர்களும் பொறிக்கப்பட்டிருக்கும் பாவத்தின் சின்னமாய்.

நேற்று செத்துப் போன அந்த உழைப்பாளி உறவுகளின் ஆன்மா இன்னும அங்குதான் அலைந்து கொண்டிருக்கின்றன. அவைகள் இப்படித்தான் கர்ஜிக்கின்றன. இன்னும் இன்னும் சத்தமாக பெருமை பேசிக் கொள்ளுங்கள் நீங்கள், குட்டி ஜப்பான் எங்கள் சிவகாசி என்று சொல்லிச் சொல்லி. இந்தியாவிலேயே தொண்ணூறு சதவிகித பட்டாசுகளை நாங்கள் தான் உற்பத்தி செய்கிறோம் என்றும் மார்தட்டிக் கொள்ளுங்கள். அந்த தொண்ணூறு சதவிகிதத்திற்குள் ஒளிந்திருக்கும் உற்பத்தி உறவை பற்றி நாங்கள் பேசாமலிருப்போம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். உங்களின் மாளிகை வீடுகள் எங்கள் குடிசைகளின் மேல் தான் எழுப்பப் பட்டிருக்கிறது. உங்கள் வங்கிக் கணக்குகள் எங்கள் ஏழ்மையால் தான் நிறைந்திருக்கிறது. உங்கள் பிள்ளைகளின் உயர்தரக் கல்வி எங்கள் பிள்ளைகளின் படிப்பின்மையாலும், கடின உழைப்பாலும் தான் சாத்தியப்பட்டிருக்கிறது. எங்களின் பாதங்கள் தேயத்தேயத் தான் உங்களின் கார்சக்கரம் வேகமாக ஓடுகிறது. ஆனால் முதலாளிகளே நாங்கள் செத்து போன பின்பும் கூட நீங்கள் எங்களைத் தான் குற்றம் சொல்கிறீர்கள். கவனமில்லாமல் வேலை செய்தோமென்றும், அனுமதி மறுக்கப்பட்ட பொருட்களை உள்ளே கொண்டு வந்திருந்தோம் என்றும். நாங்கள் தவறிழைத்தோம் என்றால் நீங்கள் செய்தது எல்லாம் என்ன ஐயாமார்களே?

இலாபம் இலாபம் இலாபம் ஒன்றையே குறிக்கோளாக வைத்து எங்களை கசக்கி பிழிந்ததையெல்லாம் இல்லையென்று சொல்லப் போகிறீர்களா? அதிக விற்பனை, அதிக இலாபம், மூலதனத்தை விடவும் பலமடங்கு மேலான உபரிக்காக எங்கள் உயிர்களை எடுத்து விட்டீர்களே இது நியாயமா? அனுமதி மறுக்கப்பட்டதை எடுத்து வந்தவர்கள் நாங்களல்ல, அனுமதி மறுக்கப்பட்ட எல்லாவற்றையும் செய்தவர்கள் நீங்கள். செய்யச் சொல்லி செய்யச் சொல்லி எங்களை செத்துப் போக வைத்தவர்கள் நீங்கள். இன்னும் உங்களிடம் பணம் இருக்கிறது. உங்களின் கட்டிடச் சுவர்களுக்கும் கூட காப்பீடு செய்யப்பட்டிருக்கும். ஆனால் காப்பீட்டில் இருந்து மட்டுமல்ல எல்லாவற்றிலிமிருந்தும் அன்னியப் படுத்தப்பட்ட எங்களுக்கு எதுவுமே கிடையாது இழப்பதற்கு. அதனால் தான் எங்கள் உயிரையும் இழந்து விட்டோம் நாங்கள். தனியார்மய இலாபவெறி என்னும் யுத்தத்தில் எங்கள் மரணங்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நீங்கள் விசாரிக்கப் படுவீர்கள். தண்டிக்கப் படுவீர்கள். இந்த உலகத்திற்கு தெரியும், நன்றாகவே தெரியும் உயரப் பறந்து வெடித்துச் சிதறும் ஒவ்வொரு பட்டாசிலும் எங்கள் இரத்தமும் சதைகளும் நிறைக்கப்பட்டும், திணிக்கப்பட்டும் இருக்கின்றன என்பது.

தோழர்களே, எப்படியும் நீங்கள் பட்டாசு வெடிக்காமல் இருக்கப் போவது கிடையாது. தரையிலிருந்து பறந்து சென்று வானத்தில் வெடித்துச் சிதறி வண்ணமயமாக காட்சியளிக்கும் பட்டாசுகளை பார்த்து உங்கள் குழந்தைகள் குதூகலிப்பார்கள். அவர்கள் குதூகலிக்கட்டும் அதே நேரத்தில் அவர்களுடைய கரங்களில் பட்டாசுகளை கொடுக்கும் போது எங்கள் கதைகளையும் கொஞ்சம் காதில் போட்டு வையுங்கள் ஏனென்றால் நாளை மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது.

Pin It