சில நேரங்களில் என்னைப் பற்றி நினைக்கும் போது எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கும். திருச்சி மாவட்டத்தின் ஏதோ குக்கிராமத்தில் பிறந்து அங்கேயே பள்ளி, கல்லூரி படிப்பையும் முடித்துவிட்டு மேற்படிப்புக்காக சென்னை வந்து அதுவும் இந்த பிரபலமான மாநில கல்லூரியில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் சென்னையில் விரும்பியும், விரும்பாமலும் காலத்தின் கட்டாயத்தில் இங்கேயே தங்கி வாடும் சென்னைவாசிகள் சொல்லும் ஒரு வாசகம்.

“என்னமோ, சொல்லுங்க, எவ்வளவு வெயில் அடிச்சாலும் மாலை நாலு மணிக்கு மேலே கடற்காத்து அடிக்க ஆரம்பித்தவுடன் வெயிலின் வக்ரமும், உடல் வேர்வையும், போன இடம் தெரியாம போய்விடும்”

கடற்கரை ஓரத்தில் இருக்கும் இந்தக் கல்லூரியில் படித்துக்கொண்டு என்னால் எப்படி அதை மறக்கமுடியும்? எல்லாம் அனுபவத்தால் தான் சொல்லுகிறார்கள் அடித்த வெயிலின் சுவடு கூட தெரியாமல் எப்படி நம்மை இப்படி சந்தோசபடுத்துகிறது என்று புரியவில்லை.

சென்னையில் கல்லூரி, விடுதி தவிர எனக்கு உள்ள ஒரே புகலிடம் அக்காவின் வீடுதான். மாதத்தின் ஏதாவது ஒரு ஞாயிற்றுகிழமையில் அங்கு போவது வழக்கம். திருவான்மியூர் தாண்டி பத்திரிகையாளர் குடியிருப்பில் வீடு போகும் போது பெரும்பாலும் வீட்டில் இருக்கமாட்டார் மாமா. பிரபலமான ஒரு வாரப்பத்திரிகையில் பொறுப்பாசிரியர் பதவி. நல்ல வேலை, நல்ல சம்பளம், அதற்காக வாரம் முழுவதும் ஓய்வே இல்லாமல் உழைப்பதா?

வீட்டிற்குப் போனவுடன் செல்போனில் அழைத்தால்

“சாரி, கண்ணா, இன்னைக்கு இஸ்யூ டேட்,”

அதனால் கொஞ்சம் வேலை அதிகம். கண்டிப்பாக அடுத்த வாரம் வா, உன்னைப் பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகுது? என்பார். பின் அட்டையில் வரும் ஒரு பக்க விளம்பரம் மாதிரி எப்போதும் ஒரே பதில் தான்.

இந்த வாரம் இவ்வளவு யோசனைக்கு இடம் கொடுக்காம் வீட்டில் நுழையும்போதே வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்.

கண்ணா! எப்படி இருக்கிற? படிப்பு எப்படி போகுது? என்றார். எனக்கு ஒரே ஆச்சரியம்.

“என்ன மாமா. வீட்டில்” என்றேன்.

“இல்ல, போன வாரம் வெளியூர் போயிருந்தேன். இன்று காலையில் தான் வந்தேன் என்றார்.

“சபரிமலைக்கு” போயிருந்தேன்.

“பரவாயில்லையே!” மாலை போட்டா போனிங்க? “இல்ல, இல்ல, ஈரோட்டில் உள்ள “பசுமை இயக்கம்” அப்படிங்கற அமைப்பு தேக்கடியில் “பத்திரிகையாளர் சந்திப்பு” ஒன்றை ஏற்பாடு செந்திருந்தாங்க. இயற்கை கொஞ்சும் மலைப்பிரதேசத்தில் மக்கள் இயற்கை வளத்தைக் கொஞ்சம் கொஞ்சமா எப்படி சீரழிக்கிறாங்க அப்படிங்கறத நேரடியா பாக்கறதுக்கு ஒரு ஏற்பாடு. சபரிமலைக்கு வருபவர்களால் அதன் இயற்கைச் சூழல் மொத்தமாக பாதிக்கபட்டிருக்கு, யானைகளின் கழிவுகளில் மினரல்வாட்டர் இருக்கு, மலைக்கு மேலேயே கரிமூட்ட போடுவதாகச்சொல்லி பெரிய சுற்றுபுறச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துறாங்க.

தேக்கடியின் சுற்றுப்பகுதியில் உள்ள மரங்களை எல்லாம் அரசியல்வாதிகள் அதிகாரிகள் ஒத்துழைப்போடு மொத்தமாக வெட்டி கடத்திட்டாங்க.

கேள்விப்பட்டிருப்பியே! மலையில் உள்ள காடுகளில் கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாததால் வன விலங்குகள் எல்லாம் தண்ணிர் தேடி ஊருக்குள்ள வருது.

இருக்கிற மரத்தையெல்லாம் வெட்டிட்டா எப்படி மழை பெய்யும்? இயற்கை செல்வங்களை இப்படியே அழிச்சிட்டிருந்தா? அடுத்த தலைமுறைக்குத் தண்ணீர் என்பது ஒரு அபூர்வமான விசயமாகிப்போய்டும். அடுத்தத் தலைமுறை வளர கூட காத்திருக்க வேண்டியதில்லை இப்பவே நிலைமை மோசமாகத்தான் இருக்கு.

இதைப்பத்தி மக்களிடம் ஒரு விழிப்புணர்வு வரணும், இல்லையென்றால் ஒரு பெரிய இயற்கைச் சீரழிவை நம்ம காலத்திலேயே நாம் அனுபவிக்க வேண்டியிருக்கும் முக்கியமா இன்னிக்கு லீவு எடுத்ததே. அதைபத்தி ஒரு பெரிய கவர்ஸ்டோரி பண்ணனும், அதற்காகத்தான் வீட்ல இருக்கேன், என்றார்.

எனக்கு அக்காவைப் பார்த்தவுடன் அப்பா ஞாபகம்தான் வந்தது. அந்தச்சின்ன கிராமத்தில் இருந்து கொண்டு பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் அப்பாவிற்கு அப்படி ஒரு வைராக்கியம். ஊரிலேயே அக்காதான் முதன் முதலில் திருச்சி போய் கோலிகிராஸ் கல்லூரியில் படித்த பெண்.

என்னெ துறையூருக்கு அருகில் உள்ள புத்தனும்பட்டியில் உள்ள கல்லூரியில் சேர்ந்துவிட்டார். ஆமாம்! நீங்க நினைப்பது சரிதான் என்பதுகளிலேயே கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை அறிமுகப்படுத்திய கல்லூரி, அப்போது அதைப்பற்றி பத்திரிகைகள் எல்லாம் பக்கம் பக்கமாக எழுதினார்கள்.

எனக்கும் திருச்சி போய் படிக்க ஆசை, ஆனால் அப்பா எது செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும், அதனால் நமக்கும் நன்மை இருக்கும் என்று அதே கல்லூரியில் படித்து முதல் கிளாசில் பாஸ் செய்தேன். கெமிஸ்டிரி தான் மேஜர். பொதுவாக அந்தப்பாடத்தைப்பார்த்து எல்லோரும் பயப்படுவார்கள். எனக்கு என்னமோ பிடித்திருந்தது. மேற்படிப்புக்காக திருச்சியில் சேர்க்காமல் சென்னையிலேயே கொண்டு வந்து சேர்த்துவிட்டார்.

எனக்கு எம்.எஸ்.சி சீட் வாங்கும் போதுகூட பெரிய பிரச்சனை ஒன்றும் ஏற்படவில்லை. ஆனால் எம்.பில் சீட் வாங்கும் போது அப்பா பட்ட வேதனை சொல்ல மாளாது. சென்னையிலேயே அப்பா ஒரு மாதம் தங்கியிருந்தார். அந்த நாட்களில் அக்கா வீட்டிற்குக்கூட போகமாட்டார். பக்கத்திலேயே ஒரு அறை எடுத்துத் தங்கிக் கொண்டு தினமும் துணைவேந்தர் அறைக்கு முன்பு ஆஜராகி விடுவார். எனக்குக்கூட அதைப்பார்க்க ரொம்ப வருத்தமாக இருக்கும். பத்து நாட்கள் இதைத் தொடர்ந்து கவனித்த துணைவேந்தர் அப்பாவை அழைத்து எதற்காக என்னைப் பார்க்க வேண்டும் என்று கேட்க என்னுடை பையனுக்கு எம்பீல் சீட் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

அப்பா ஒரு பழைய காங்கிரஸ்காரர், எப்பவும் கதர் வேஸ்டி சட்டைதான் கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பார். அதுவும் பிறருக்கு அநியாயத்துக்கு மரியாதை கொடுப்பார். துணைவேந்தர் உட்கார சொன்னதுக்கு உட்காராமலேயே என் சர்ட்டிக்கட் எல்லாம் காண்பித்திருக்கிறார் பொறுத்து, பொறுத்துப் பார்த்துவிட்டு துணைவேந்தரே எழுந்து நின்று கொண்டாராம். இப்போது கூட ப்யூன் முத்துசாமி அந்த விசயத்தைச் சொல்லி சொல்லி நெகிழ்ந்து போவார்.

கண்ணா! உங்க அப்பா அப்படி செய்தது கூட எனக்கு ஆச்சரியமில்ல. சீட் கிடைத்தவுடன் ஒரு விசயம் சொன்னார். பாரு, அது என்னோட முப்பது வருச சர்வீஸ்ல யாருமே சொல்லாத விசயம் என்றார்.

“ஐயா, என் பையனுக்கு சீட் கொடுத்ததுல ரொம்ப சந்தோசம், ஆனால் சென்னையில் இருக்கிற ஏதோ ஒரு கல்லூரியில் அவன் படிக்கிறதுல்ல எனக்கு உடன்பாடு இல்ல.

என் புள்ள இந்த மகா கடலை பார்த்துக்கிட்டே படிக்கனும் அவனுக்கு இதே கல்லூரியில் சீட் கொடுத்து தயவு பண்ணுங்க, நீங்க மனசு வச்சா நடக்கும் என்றார்.

என்ன, ஒரு அசாத்திய தைரியம், கண்ணா! கெமிஸ்டியில் எம்.பில் சீட் கிடைப்பதே மிகவும் சிரமம், அதுவும் இந்த மாநில கல்லூரியிலேதான் வேண்டும் என்று கேட்டு வாங்குவதற்கு எவ்வளவு அழுத்தமான தன்னம்பிக்கை வேண்டும் என்றார்.

அப்பாவிற்கு ஏதோ இந்த கடல் மீது ஒரு அடக்கமுடியாத ஆவல். அதற்கு எங்கள் சொந்த ஊர் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். காவேரி ஆத்துக்கு ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் ஊர் இருந்தாலும் எங்க நிலமெல்லாம் என்னமோ வானம் பார்த்த பூமிதான் கிணற்றுப் பாசனத்தை நம்பிதான் விவசாயம் கொல்லி மலையில் நல்ல மழை பெய்து ஐயாற்றில் தண்ணீர் வந்தால் அந்த சமயத்தில் ஊருல இருக்கும் கிணறுகளில் நாலுமட்டு தண்ணி ஏறும்.

அந்த தண்ணியிலேயே விவசாயத்தைப் பார்த்துக்க வேண்டியதுதான், மழை இல்லையென்றால் பூமி காஞ்சுதான் கிடக்கும். ஏன்? இரண்டு, மூன்று ஆண்டுகள் கூட தண்ணி இல்லாமல் பஞ்சம் தலைவிரித்தாடியதுண்டு.

அப்பா முன்னெச்சரிக்கையாக கிணற்றில் தண்ணீர் இருக்கும்போதே ஒரு மட்டு இரண்டு மட்டு என்று கிணற்றை இரண்டாகப் பிரித்து தூர் வாரி விடுவார். அதனால் ஊரில் எங்க வயலுக்கு மட்டும் எப்போதும் பாசனம் இருக்கும்.

அப்பா இறந்து எட்டு மாதங்கள் ஓடிவிட்டன. அம்மாவும் அக்கா வீட்டில் இருந்துவிட்டு போனமாதம் தான் ஊருக்கு போனார்கள். ஒரு வாரம் விடுமுறை கிடைத்து ஊருக்குப் போகலாம் என்று தோன்றியது. திருச்சி சென்று சில கல்லூரி நண்பர்களைப்பார்த்தேன். ஊர் ஒரே பரப்பரப்பாக இருந்தது. விபரம் கேட்டதில் எல்லோரும் புதிதாக வந்திருக்கும் அந்த சப்கலெக்டர் பற்றியே பேசினார்கள். மிகவும் நேர்மையான அதிகாரியும், உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு மதிப்பே இல்லையாம், என்னை எந்த ஊருக்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள் என்று சவால் விடுகிறராம். அவர் பதவியேற்ற கடந்த ஆறு மாதத்தில் எத்தனையோ பெரிய சாதனைகளைச் செய்திருக்கிறோம். பத்திரிகைகள் அவருடைய சாதனைகளைப் போடுவதற்காகவே சிறப்பு இணைப்பு மலர்களைப் போட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அரசாங்கம் மழை நீர் சேமிப்புத் திட்டத்தை மும்முரமாக செயல்படுத்தி கொண்டிருக்கும்போது, இவர் பிரச்சனைக்கு அடிப்படைக் காரணம் என்ன என்று யோசித்து அதற்கு தீர்வுகாண முயன்றது எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது.

ஒருமுறை சப்கலெக்டர் அதிகாரிகளை அழைத்து திருச்சி மாநகரத்தின் வரைபடத்தைக் காண்பித்து, அதாவது இந்த மாவட்டம் உதயமானபோது தயாரிக்கப்பட்ட பிரத்யோக வரை படம் இது இதில் உள்ள சிறப்பு அம்சம், இதோ நான் பச்சை மையால் குறிப்பிட்டுள்ள எல்லாம், திருச்சியில் உள்ள ஏரிகள், குளங்கள் அவை எல்லாம் பொது சொத்து இதுவரை அவை எந்தத் தனியாருக்கும் விற்கபடவில்லை. மொத்தம் எண்பது குளங்களும், விற்கபடவில்லை.

“எனக்கு என்ன செய்வீர்களோ தெரியாது, உங்களுக்கு ஒரு வாரம் கெடு, எல்லா குளங்களும், ஏரிகளும் எனக்குத் திருப்பி வேண்டும். அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் எல்லாவற்றையும் இரவோடு இரவாக அப்புறப்படுத்துங்கள் இதோ அதற்கான நீதிமன்ற உத்தரவு. சென்றமுறை முதல்வர் வந்தபோது இதற்காகப் பிரத்யோக அனுமதி வாங்கப்பட்டுள்ளது. அதனால் எந்தக் குறுக்கீடுகள் வந்தாலும் அதைப் பற்றிக் கவலைபடாமல் கட்டிடங்களை இடித்துத் தள்ளுங்கள்” என்று உத்தரவிட்டுள்ளார். அதைச் செயல்படுத்தும்போது திருச்சி மாநகரமே ஸ்தபித்து நின்றதாம்.

எப்படி ஒரு அறிவுபூர்வமான முடிவு, நமக்கு இயற்கையாக இருக்கும் நீர் சேமிப்புப் பகுதிகளை எல்லாம் மூடி கட்டிடங்களையும், வீடுகளையும் கட்டிவிட்டு சின்னச் சின்னத் தொட்டிகளில் மழை நீர் சேமிப்பு செய்ததால் என்ன பெரிய பயன் ஏற்பட போகிறது?

இவர் போன்ற அதிகாரிகள் ஒவ்வொரு நகரத்திலும் பொறுப்புவகிக்கும் போதுதான் இந்தத் தண்ணீர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு ஏற்படும்.

அம்மாவைப்பார்த்துவிட்டு சென்னை கிளம்பினேன். இன்னும் ஆறு மாதத்தில் கல்லூரி படிப்பு முடிகிறது. ஏதோ நல்ல வேலை கிடைத்து வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம். ஆனால் எனக்கு இந்தச் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் ஏதாவது ஒருசாதனை செய்ய வேண்டும் என்று ஆசை! நமக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து தொடர்ந்து வரும் தண்ணீர்ப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டால் அதுவும் இதுவரை சாதிக்க முடியாது ஒரு நிரந்தரத் தீர்வாக இருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது.

நட்டை ஆட்சி செய்யும் ஒவ்வொரு அரசாங்கமும் அவர்களுடைய செல்வாக்கிற்கும் வசதிக்கும் ஏற்ப கர்நாடகத்தையோ, ஆந்திரத்தையோ, அல்லது வீரானத்தையோ, நெய்வேலியையோ நம்பியே காலம் தள்ளுகிறது. இதற்கான நிரந்தர தீர்வுதான் என்ன என்று தோன்றியது.

கல்லூரி வாசலில் நின்று கடலைப்பார்க்கும் போது அப்பாவின் ஞாபகம் அடிக்கடி வரும். உலகில் மூன்றில் இரண்டு பகுதி நீர் ஒரு பகுதி தான் நிலம், ஆனாலும் நமக்கு ஏன் இப்படி ஒருதண்ணீர் பிரச்சனை உலகமெங்கும் தலைவிரித்தாடுகிறது. யோசித்துப் பார்த்தால் கடல் நீரை மட்டும் மனிதன் குடிநீராக பயன்படுத்த முடிந்தால்! ஆமாம் அப்படி ஒரு தீர்வு ஏற்பட்டால் அது தான் நிரந்தர தீர்வாக இருக்கும் என்று தோன்றியது.

அதைப் பற்றிய ஆய்வையே நம்முடைய எம்பில் ஆய்வாக எடுத்துக் கொண்டால் என்ன? என்று தோன்றியது. அதற்கான முயற்சியில் இறங்கினேன். கன்னிமாரா, பிரிட்டிஷ் நூலகம், அமெரிக்கன் நூலகம், இணையம் என்று எல்லா வழிகளிலும் அதற்கான தகவல்களைத் திரட்டினேன்..

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மொராக்கோ நாட்டில் உலக நீர் ஆதாரங்கள் பற்றிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு பற்றி படித்தேன் அதில் அணு சக்தியைப் பயன்படுத்தி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் பரிசிலிக்கப்பட்டதாக செய்தி இருந்தது. அது புரட்சிகரமானத் திட்டமாக இருந்தாலும் நம்மைப்போன்ற வளரும் நாடுகளில் அணு சக்தியை இதுபோன்ற நீராய்ச்சிக்குப் பயன்படுத்த சில ஆண்டுகள் ஆகலாம்.

அமெரிக்காவின் சில நகரங்களில் “ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்” என்ற தொழில் நுட்பத்தில் நகரின் அனைத்துத் தேவைகளுக்கும் கடல் நீரைக்குடி நீராக்கும் முயற்சி சிறப்பாக நடைபெறுகிறது. இங்கே அந்த முறையைப் பயன்படுத்தும்போது செலவு அதிகமாகும் அதற்கு முக்கிய காரணம் பயன்படும் வேதிப்பொருளின் விலை அதிகம்.

அந்தச் குறிப்பிட்ட வேதிப்பொருளுக்கு இணையான வேதிப்பொருளை நமது நாட்டில் கிடைக்கும் இயற்கையான வேதி, கணிம பொருள்களில் இருந்து கண்டுபிடித்தால் எப்படி இருக்கும்? எனவே ஒவ்வொரு மாவட்டமாக அங்கு கிடைக்கும் வேதி, கணிம பொருள்கள், ஆபூர்வ மண் அவற்றின் தன்மைகள் பற்றிய தகவல்களை திரட்டினேன்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், சித்தன்னவாசல், மெய்வழிச்சாலை போன்ற பகுதிகளில் உள்ள ஒரு குறிப்பிட்ட மண் படிபுகளில் இந்த வேதிப்பொருளை ஒத்த வேதிதன்மை கொண்ட பொருள்கள் இருப்பது தெரியவந்தது. அந்தக்குறிப்பிட்ட மண்ணிற்கு அந்த வேதித்தன்மை அதிகமாக இருப்பது ஆராய்ச்சியில் தெரிந்தது. சோதனை சாலையில் அந்தத்திட்டம் முழுவெற்றி பெற்றது.

அரசாங்கத்திடம் இந்தப் புரட்சிகரமானத் திட்டத்தைக் கொடுப்பதற்கு முன்பு என் மனதில் தோன்றிய ஒரு உறுத்தல் இப்படி கடல் நீரை குடி நீராக்கும் முயற்சி வெற்றிபெற்றதால் இனிமேல் மத்திய, மாநில அரசுகள் காடுவளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு, நதிநீர் இணைப்பு, போன்ற நீண்ட கால திட்டங்களைக் கிடப்பில் போட்டுவிடும் அதனால் அடுத்த பத்து ஆண்டுகளில் இயற்கை சமநிலை பாதிக்கப்பட்டு ஒரு மிகப்பெரிய இயற்கைப் பேரழிவை நாடு சந்திக்கும் என தோன்றியது. எனவே இந்தத் திட்டம் ஒரு இடைக்கால நிவாரணமாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்தேன்.

என்னுடைய கண்டிப்பு முடிவுகளோடு ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கேட்டேன். கிடைத்தது. அவரிடம் நேரடியாக செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தேன். அத்தோடு ஒரு வேண்டுகோளையும் வைத்தேன். அதாவது இந்தத்திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் அதற்கு பிறகு அரசாங்கமோ, தனியார் அமைப்போ இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று ஒரு அவசரச் சட்டம் தேவை என்று சொன்னேன்.

Pin It