பெரியாரைப் பற்றிப் பேசும்போதெல்லாம் கருஞ்சட்டைத் தோழர்கள் ஆர்வமாகக் கலந்து கொள்கின்றனர். ஜீவானந்தத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம் செஞ்சட்டை இளைஞர் படை அதிக அளவில் கலந்து கொள்கின்றனர். ஜீவானந்தத்தை திராவிட இயக்க மேடைகளிலோ, பெரியாரை கம்யூனிஸ்ட் மேடைகளிலோ பேசுகின்ற தோழர்கள் மிக அரிது. இந்நிலை மாற வேண்டும் என்று பெரியார் தி.க. மேடையில் தமிழருவிமணியன் சில ஆண்டுகளுக்கு முன் கேட்டுக்கொண்டார். அவர் விரும்பி அந்த மாற்றத்தின் ஒரு விளைவாக இன்று தோழர் உமா போன்ற படைப்பாளிகள் முகிழ்த்து வருகிறார்கள் என்று நான் கருதுகிறேன்.

வர்க்க நிகர்மைச் சமூகத்தையும், சாதி ஒழிப்புச் சமூகத்தையும் @சர்த்து சமைக்க முற்படுகிறார் உமா. காத்திரமான வர்க்க அரசியலை முன்வைக்கும் ஜனசக்தியும், பிறவி முதலாளித்துவமான பார்ப்பனீயத்தை வேரறுக்க வேண்டும் என்பதை உணர்ந்த கருஞ்சட்டைத் தமிழர் இதழும் இணைந்து தன்னை வார்த்தெடுத்ததாக தோழர் உமா குறிப்பிடுகிறார். அவருடைய கூற்று 100 விழுக்காடு உண்மை என்பதற்கு சான்றாக, அவருடைய சொல்வதெல்லாம் என்கிற கட்டுரை நூல் வெளிவந்திருக்கிறது. இந்நூலிலுள்ள கட்டுரைகளின் தலைப்பே ஆயிரம் அர்த்தங்களைச் சொல்கிறது (உதாரணம்: ஆக்டோபஸ் ஆரூடம் அடகு போன ஆறறிவு). ஒரு குழந்தையின் கல்வியில் ஆரம்பித்து, காதல், திருமணம், சாதி, சடங்கு, மதம், கடவுள், எய்ட்ஸ், மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினை, அரசியல் என அன்றாடம் மனிதவாழ்வில் தவிர்க்க முடியாமல் எதிர்கொள்ள நேரிடும் அனைத்துப் பிரச்சனைகளையும் அலசியிருக்கிறார் என்று சொன்னால் அது மிகை கருத்தன்று. பெண்ணிய பிரச்சனைகளுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதைப் போல் தோன்றினாலும், சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, தொழிலாளர் பிரச்சனை என எந்த தளத்தையும் அவருடைய எழுத்துகள் விட்டுவைக்கவில்லை. இவ்வளவு ஆழமான கருத்துகள் அடங்கிய இந்நூல் இருபது நிமிடத்திற்குள் படித்து முடிக்கும் அளவிற்கு சுவாரசியமாகவும், எளிமையாகவும் வடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேடைகளிலும், எழுத்துகளிலும் இளம் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் என வருங்கால தலைமுறையினர் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் ஏராளமான தரவுகள் இவருடைய கட்டுரைகளில் இடம் பெற்றுள்ளன. (உதாரணம்: பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை). மூவர் தூக்குக்கு எதிரான போராட்டம், மாவீரன் கிட்டுவின் மனிதாபிமானம் போன்ற செய்திகளை பதிவு செய்யும் போது தோழர் உமாவின் தமிழின ஓர்மை குறித்த அக்கறை வெளிப்படுகிறது. தமிழர் பண்பாடு, கட்டிடக்கலை, இலக்கியம் குறித்துப் பெருமிதம் கொள்ளும் நூலாசிரியர், மொழி அடிப்படைவாத சிக்கலில் மாட்டிக்கொள்ளவில்லை என்பதை தஞ்சைப் பெரிய கோயில் தமிழனின் ஆயிரமாண்டு அடையாளம்! என்கிற கட்டுரை எடுத்துரைக்கிறது. பெரியாரின் பயிற்சிப் பட்டறையில் இடதுசாரி சிந்தனையையும், தமிழ்த்தேசியத்தையும் முறையாகப் பயின்று வருகிறார் உமா என்பதற்கு இக்கட்டுரை மிகச் சிறந்த உதாரணம்.

வழக்காடு மன்றங்களில் நீதிபதிகளை ‘Lord’என்று ஏன் அழைக்க வேண்டும் என்பது பற்றிய வழக்குரைஞர் அருள்மொழியின் வாதத்தை அழகாக எடுத்துக்காட்டியிருக்கும் உங்களுக்கு லோககுரு எங்களுக்குப் பெரியார் என்கிற கட்டுரை வளரும் இளம் தலைமுறையினர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி.

இந்நூலில் இடம்பெற்றுள்ள 23 கட்டுரைகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுத நிறைய இருந்தாலும், நேரடியாக இந்நூலை வாங்கி அனைவரும் பயன்பெற வேண்டும் என்கிற நோக்கத்திற்காக ஒரு சிறு குறிப்புடன் முடிக்கிறேன். இந்நூலிற்கான அணிந்துரையில் தோழர் ஜீவானந்தம் உருவாக்கித் தந்த தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் நா. வானமாமலை போன்ற ஆற்றல்மிக்க இடதுசாரி இலக்கிய முகம் உருவாக வழிவகுத்தது என்கிற செய்தியை தோழர் ஜீவபாரதி தெரிவித்திருக்கிறார். அ@தபோல், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஏற்படுத்தியிருக்கும் கருஞ்சட்டைத் தமிழர் என்கிற தளம் தோழர் உமா என்கிற எழுத்துலக ஆளுமையை நமக்குத் தந்திருக்கிறது என்றே நான் கருதுகிறேன். பேராசிரியர் சுபவீ குறிப்பிட்டுள்ளதைப் போல, எதிர்காலத் தமிழகம் உமாவை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறது.

சொல்வதெல்லாம்.. - இரா. உமா,

இலக்கியா பதிப்பகம், 169, வி.வி. கிரி தெரு, இராமகிருஷ்ணா நகர், ஆழ்வார்த்திருநகர், சென்னை 87

விலை: ரூ.70/, தொலைபேசி:9444582089

Pin It