தோல்பாவைக்கூத்துக்கலைஞர் அம்மாப்பேட்டை கணேசனைப் பற்றி இரண்டரை மணி நேர அளவிற்கு "விதைத்தவசம்" என்ற ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டிருக்கிறார் மு.ஹரிகிருஷ்ணன்.

ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் பொதுச்சமூகத்திலிருந்து முற்றிலும் ஒதுங்கி வாழ நேர்ந்த குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் அம்மாப்பேட்டை கணேசன். வெளியூரிலிருந்து வந்து தோல்பாவைக்கூத்து ஆடவந்த கலைஞர்களைப் பார்த்து அக்கலையின்மீதும் அக்கலைஞர் களுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதையின்மீதும் மனம்கவரப் பட்டிருக்கிறார்கள் கணேசனின் முன்னோர்கள். ஆனாலும் அக்கலையை கற்றுக்கொடுக்க வெளியூர்க் கலைஞர்கள் தயாராக இல்லை.

ஆர்வம் கொண்டவர்களும் தமது ஆர்வத்தை விடுவதாயில்லை. மேடையின் பின்னே அமர்ந்து கலைநுட்பங்களை உற்றுக்கவனித்து தாமாகவே கற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். தோல்பாவைகளையும் தாமாகவே உருவாக்கிக் கொண்டனர். எப்போதும் தொடக்கத்தில் இருக்கும் ஆர்வம் படிப்படியாய் குறைந்துபோவது இயல்புதானே. அப்படித்தான் இங்கும் நடந்தது. ஆர்வமாய் ஒன்றிணைந்தவர்கள் ஒவ்வொருவராய் விலக இந்தக் கலையை கற்றுக்கொள்வதிலும் நிகழ்த்திக்காட்டுவதிலும் விடாப்பிடியாக இருந்திருக்கிறார் கணேசனின் தாத்தா நரசன்.

கூத்துக்கலைஞர்களாக மாறியபின்பும்கூட குறவர்களுக்கு எதிராக இருந்த குற்றப்பரம்பரைச் சட்டத்தின் கெடுபிடிகள் நீங்கிவிடவில்லை. கூத்துக்காக எந்த ஊருக்கு போனாலும் அவர்கள் கொண்டு செல்லும் பொருட்களும் இசைக்கருவிகளும் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப் பட்டிருக்கின்றன.

எங்கு எது திருடு போனாலும் அதற்கு காரணமாக்கப்பட்டு கொடுமை அனுபவிக்க வேண்டியிருந்த காலத்தில் பிழைப்பதற்கு வேறு ஏதேனும் தொழிலை தேர்ந்தெடுத்திருக்கலாம். என்றாலும் சமூகத்தில் மரியாதையை தேடிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவேதான் தமது முன்னோர்கள் கூத்துத் தொழிலைத் தேர்ந்தெடுத்ததாகக் குறிப்பிடுகிறார் கணேசன்.

surai_370தோல்பாவையை ஆட்டுபவரும் மிருதங்கக் காரரும் தோல்பாவைக் கூத்துக்கு முக்கியம். இவை இரண்டிலும் திறமை வாய்ந்தவர் கணேச னின் தந்தையார். சிறுவனான கணேசனை மடியில் உட்கார வைத்து பாவைகளை ஆட்ட வைத்தபடி மிருதங்கம் வாசித்து கூத்துக்களைச் சமாளித்திருக்கிறார் அவர். இப்படி அப்பா வகை யில் தோல் பாவைக்கூத்தில் பயிற்சி பெற்ற கணேசன் தனது அம்மா மூலம் தெருக் கூத்தையும் அண்ணன் மூலம் கட்டைக் கூத்தையும் கற்றுக் கொண்டு அனைத்திலுமே திறமை படைத்த கலைஞராக விளங்கிக் கொண்டிருப்பவர்.

தாம் ஒரு பன்முகக் கலைஞர் என்றபோதும் மக்களிடம் நேரடியாக தோன்றி ஆடும் தெருக்கூத்தைக் காட்டிலும் திரைக்குப் பின்னால் நின்று பாவைகளை ஆட்டி பார்வையாளர்களை ரசிக்கச் செய்யும் தோல்பாவைக்கூத்தே சவாலானது என்கிறார் கணேசன். தோல்பாவைக் கூத்தில் தனது குரல் மூலமாகவே மக்களை கண்கலங்க வைப்பதே ஒரு கலைஞனுக்குப் பெருமை என்பதும் அவரது கருத்தாக இருக்கிறது.

தெருக்கூத்துக் கலைஞர்கள் உடைகளை வடிவமைப்பதோடு சித்திரத்தையல் கலையையும் கற்று வைத்திருக்கிறார்கள் என்றால் தோல்பாவைக் கலைஞர்களும் தமக்குரிய பாவைகளைத் தாமே தயார்செய்து சித்திரம் தீட்டி வண்ணம் சேர்க்கப் பழகியிருக்கிறார்கள்.

கணேசன் ஈக்கள் மொய்க்கும் ஆட்டுத்தோலை பதப்படுத்தி ரோமங்களை நீக்கி அதிலிருந்து ஒரு இராமனின் தோல்பாவையை உருவாக்கும் காட்சிகளின் பின்னணியில்தான் அவரிடம் எடுக்கப்பட்டிருக்கும் பேட்டி ஒலிக்கிறது. தோல்பாவையை சூரிய வெளிச்சத்தில் காட்டி அதன் நிழலைப் பார்த்து சீர் செய்கையில் தோலில் இட்ட துளைகள் எல்லாம் நிழலில் ஆபரணங்களாய் அழகு பெறுகின்றன. இடையிடையே கிஷ்கிந்தா காண்ட தோல்பாவைக் கூத்துக்காட்சிகள். தெளிவான கூறுமுறை. நாட்டுப்புற கலைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் இப்படத்தின் முகப்புரையை மட்டும் கொஞ்சம் நிறுத்தி நிதானமாக வாசித்திருக்கலாம். பள்ளிக் கூட பிள்ளைகள் பாடம் ஒப்பிப்பதுபோல இருக்கிறது அது. படத்தில் இடம்பெறும் உரையாடல்கள், கருத்துரைகள், கூத்துக்காட்சிகள் ஆகியவற்றுக்கு ஆங்கில சப்டைட்டில்களையும் இணைத்திருக்கலாம். அது தமிழறியாத பார்வையாளர்களுக்கு உதவியாக இருந்திருக்கும்.

தோல்பாவைக் கூத்தில் ஆணும் பெண்ணுமாய் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குமான உரையாடல்களை ஒருவரே தமது பல்குரல் திறமையால் சமாளிப்பதோடு யுத்தக்காட்சிகளில் சிறப்பு சப்தங்களையும் வழங்கி ஆச்சர்யப்படுத்துகிறார். ஒவ்வொரு பாத்திரத்திற்கும் தெளி வான குரல் வேறுபாடு இருக்கவேண்டும் என்பதற்காக பாவைக்கூத்தின்போது முகத்தில் சிறு மரக்கட்டையையும் கட்டிக்கொள்கிறார்.

நமக்கு முந்தைய தலைமுறைக் கலைஞர்களைப்பற்றியும் அவர்களது வழக்கங்கள் பற்றியும்கூட கணேசனின் நேர்காணலிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. பெண்களே தெருக் கூத்தின் சகல வேடங்களையும் ஏற்றதோடு இசைக்கருவிகளையும் வாசித்து தனி ஜமாவை நடத்தி வந்திருப்பது இந்தக் காலத்திலும் வியப்பாகத்தானிருக்கிறது. இராமாயணக் கூத்தை நடத்தி முடிக்கும் தருவாயில் பட்டாபிஷேகக் காட்சியின்போது கலைஞர்களுக்கு மகிழ்ச்சி யோடு அன்பளிப்புகளை வழங்கும் கிராம மக்கள் சீதை சிறைவைக்கப்பட்டிருக்கும் காட்சியோடு கூத்தை முடித்துக்கொண்டு போவதை அனுமதிப்பதில்லை என்ற ஆழமான அறநிலைப்பட்ட வழக்கம் இருப்பதும் தெரிய வருகிறது.

கலைவாழ்வின் திசைவழியில் ஊர் ஊராய் சுற்றித் திரிந்திருக்கும் கணேசன் தனது சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் நினைவு கூர்ந்திருக்கிறார். மலைச்சரிவான காட்டு வழிப்பாதையில் மாட்டுவண்டிப்பயணத்தில் மாடு நுகத்திலிருந்து விடுபட்டு ஓட வண்டி யிலிருக்கும் குழந்தைகளைக் காக்க வண்டி பாரத்தைத் தாங்கி நிற்க இடுப்பிலிருந்த வேட்டி விலக அண்ணன் மனைவி ஓடிவந்து முந்தானையால் மறைத்ததை தனது வாழ்வின் நினைவகலாத தருணமாகப் பகிர்ந்துகொள்கிறார் அவர். பெண்கள் இரவில் சென்றால் தானும் சேலை கட்டிக்கொண்டு போய் இருட்டில் நின்றபடி அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கவனிக்கும் சந்தேகப் பேர்வழி தாத்தா, தனது தாய்ப்பாலை கொடுத்து பேரனை வளர்த்தெடுத்த பாட்டி என்று முன்னோர்களைப்பற்றிய அவரது நினைவுகள் பார்வையாளனுக்கு மாறுபட்ட வாழ்வனுபவங்களை வழங்குகிறது.

தோல்பாவைக் கூத்தைப் போலவே கட்டைக்கூத்திற்கு தேவையான கட்டைகளையும் கணேசனே தயாரித்துக்கொள்கிறார். அக்கலையிலும் அவர் விற்பன்னர்.

தற்செயலாக கோமாளியாக நடிக்க ஆரம்பித்து பின்னர் பெண் வேடங்கள் ஏற்று அதன்பின்னர் சூர வேஷத்திலும் நடித்துப் பெயரடுத்தவர் கணேசன். அவர் இல்லாத ஒரே காரணத்திற்காக கூத்தைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கிராம மக்கள் சொன்னதை தனக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே அவர் கருதுகிறார். அவர் எப்படி சூர வேஷம் போடுகிறார் என்று பார்ப்பதற் காகவே பல ஊர்களில் இருந்து கூத்துக்கலைஞர்கள் வந்ததிலும் அவருக்குப் பெருமை.

பரம்பரைக் குற்றவாளிகளாக கருதப்பட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த கணேசன் தனது முன்னோர்கள் கூத்துக்கலைஞர்களாக மாறியதன் குறிக்கோளை எய்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். மற்ற மாவட்ட கலைஞர்களுக்குப் பயிற்சியளிக்க அரசு அமைப்புகளே அவரைப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன. மாவட்ட அளவிலான(?) அரசு விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தான் வாழும் பகுதியில் பெயர்பெற்ற கலைஞராக இருந்தா லும்கூட அவரது கலைத்திறமைகள் எதுவும் எவ்விதத்திலும் அவரது வாழ்வாதாரங்களுக்குப் பயனளிக்கவில்லை. இன்னும் அவர் காய்கறி விற்றுக் கிடைக்கும்  சொற்பப் பணத்திலும் கரும்பு வெட்டி கிடைக்கும் தினக்கூலியிலும்தான் நாட்களை கடத்த வேண்டியிருக்கிறது. ஆவணப் படத்தின் இறுதிக்காட்சியும் அதுவே.

Pin It