1
நான் உனைக் கடந்துப்
போகும்போதெல்லாம்
என் கால் உன்மீது பட்டுவிடுகிறதென்று
நீ எட்டி என்காலைத் தொட்டு
உன் கண்களில் ஒற்றிக்கொள்வாய்;

இன்று நீ எனைக் கடந்துச்
செல்கிறாய்
எதேச்சையாக உன் கால்
என்மீது பட்டுவிடுகிறது;

நீ தொட்டெல்லாம் கும்பிடவில்லை
நானுன் கால்தொட்டு
என் கண்களில் ஒற்றிக் கொண்டேன்

நீ உடனே பதறி விலகி நின்றதில்
நான் அதலாம் ஒன்றும் தவறில்லை போ' என்று சிரித்ததில்
இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகனுக்கு
கொஞ்சமேனும் புரிந்திருக்கும்  நீயும்
நானும் ஒன்றுதான் என்று!!

2
வீட்டில் அதிரசம் செய்தாய்
எடுத்து ஒரு துண்டு கடித்தேன்

ஐயோ  'சுகரு' கூடும் வையுங்க என்று சொல்லி
வாயிலிருந்துப் பிடிங்கிக் கொண்டாய்;

தெருக் கடையில் குழந்தைகளுக்கு
இனிப்பு வாங்குகையில் ஒன்றெடுத்து
வாயில் வைத்தேன் வேண்டாம், வேண்டாமென்று
கெஞ்சினாய்;

பிறகு சர்க்கரையே இல்லாமல்
தேநீர் கொடுத்தாய்
கசப்பு முகத்தில் அரைய'

எனக்குத் தேநீரே வேண்டாம்
ஆளைவிடு என்றேன்
மன்னிக்கக்  கேட்டு வருத்தப்பட்டாய்
கசந்ததையும் கண்மூடிக் குடித்தேன்;

ஒரு திருமணத்திற்கு ஆசி கூற போனோம்
திருமணம் முடிந்து பந்தியிலமர
பாயாசத்தை முதலாக தட்டில் வைத்தார்கள்
நீ  என்னையே பார்த்தாய்
நான் பாயாசத்தை தொடக் கூட இல்லை;

இப்போதெல்லாம் இனிப்புகளை
எனக்காக இல்லையென்றாலும்
உனக்காக நான் திண்பதில்லை' என்று நீ
புரிந்துக் கொண்டாய் போலும்  உனக்கும் பாயாசம்
வேண்டாம் என்றாய்;

கொஞ்ச நாள் கழித்து 'சுகர் டெஸ்ட்' செய்தார்கள்
அத்தனை ஒன்றுமில்லை  கொஞ்சம் இனிப்பு
தின்னலாம் என்றார் மருத்துவர்

நானுன்னைப் பார்த்துச் சிரித்தேன்

நீ மருத்துவரையே பார்த்தாய்
இந்தப் பாவி மனுசன்
இப்படியா சொல்லிவைப்பான் இவரிடமென்று நீ
நினைத்திருப்பாய்  போலும்

உன் கண்களில் கடுகு பொறிய
உனைப் பார்த்து மகன் சிரித்துவிட
நானும் சிரிக்க அதற்குள் நீ

அதிக இனிப்பில்லாமல்
வேறு என்ன செய்துதரலாமென யோசித்துக்
கொண்டிருந்தாய்,

நான்  உனக்குக் கட்டிய தாலியை நீ பிரித்து
எனக்குக் கட்டிய ஒரு மரியாதையில்
கரைந்து போயிருந்தேன்;

மனதால் இருவரும் இருவேறு மாற்றங்களில்
சமமாகவே இருந்தோம்!


3
என்ன பார்க்கிறீர்கள் என்றாய்
உன் முகத்தில் பொட்டில்லாமலும்
அழகாகத்தான் இருக்கிறாய் என்றுசொல்லி
சிரித்தேன் நான்;

ஐயோ விழுந்துடுச்சான்னு சொல்லி நீ
விழுந்து ஓடி
சாந்தெடுத்து கண்ணாடி பார்த்து நெற்றியில்
வட்டமாய் வைக்க

உனக்குப் பின்புறமிருந்து
அதே கண்ணாடியில்
என் முகமும் தெரிய

நான் அந்த என் முகத்தினுள்ளே
உன் பொட்டில் திணித்துள்ள என் உயிர்ப் பின் நியாயத்தை
தேடிக் கொண்டிருந்தேன்
நீ
இப்போ எப்படியிருக்கு என்று கேட்டு
பொட்டோடு என்பக்கம் திரும்பினாய்
நான்
பொட்டு நல்லாருக்கு
அதிலிருக்கும் நாங்கள்தான்
நல்லாயிருந்திருக்கவில்லை போல் என்றேன்,

நீ உடனே 'ஏன், அந்த உங்களில்
நாங்களும்தானே இருக்கிறோம்
அதனால் வருந்தாதீர்கள்
அதெலாம்  அப்படித்தான்' இனி மாற்றினாலும்
வலிக்குமென்றாய்;

வலிக்கும்தான்
இருவரும் இருக்கிறோம் தான்
நீயில்லாமலில்லை தான்...., ஆனாலும்

இருவரும் நடக்கும் சாலையில் நீ மட்டும்
சுமக்கிறாயே என்றேன்;

விதித்ததை சுமக்கிறோம்
விடையேது வாருங்கள்' என்று நீ
கையிழுத்துவிட்டு உள்ளேப் போனாய்,

நான் அவ்வப்பொழுது
இதுபோன்ற இடங்களில் நின்றே போகிறேன்

காரணம் கேள்விகளின் ஓட்டையில்
பதில்கள் அத்தனை அடைவதேயில்லை!!
Pin It