திரைப்படத்திற்கான விமர்சனமா இது என்று கேட்டால் நான் இல்லையென்று தான் சொல்வேன். தமிழில் எதையாவது எழுதும் முன், இது எது இல்லை என்று சொல்லிவிடுவது தான் உத்தமம் என்று நினைக்கிறேன். இது "ஏழாம் அறிவு' திரைப்படத்திற்கான விமர்சனம் இல்லை! ஏனெனில், திரைப்படத்திற்கான விமர்சனத்தை படத்திற்கான பிரச்சாரம் என்று தான் எல்லோரும் கருதுகிறார்கள் நேர்மறை பிரச்சாரம் அல்லது எதிர்மறை பிரச்சாரம். கட்டுரையின் முடிவில் "கதையின் நீதி என்னவென்றால்' பாணியில், படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்று சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

எந்தக் கட்டுரையையும் படித்து, திரைப்படத்திற்கு செல்வதா வேண்டாமா என்ற முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என்பது எனக்குத் தெரியும். படம் பார்க்கச் செல்வது என்பது படத்தின் தராதரம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை விடவும், ஒரு சமூகச் செயல்பாட்டில் கலந்து கொள்வதா வேண்டாமா என்ற பெருமுடிவு என்ற அளவில், இக்கட்டுரை "ஏழாம் அறிவின்' வியாபாரத்தோடு சம்பந்தப்பட்ட ஒன்றல்ல என்பதை முதலில் நான் தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். இந்தக்கட்டுரை தமிழ்ச் சமூகத்தில் நடைபெற்று வரும் ஒரு உரையாடல் தொடர்பானது. கடந்த இருபது வருடங்களாக, தமிழ் ஆய்வுலகில் "அடித்தளமக்கள் வரலாறு' என்றும் "வரலாற்று மீட்டுருவாக்கம்' என்றும் "நாட்டுப்புறவியல்' என்றும் "தலித்தியம்' என்றும் "அடையாள அரசியல்' என்றும் "நவீனத் தமிழ்ச்சமூக உருவாக்கம்' என்றும் நடைபெற்று வருகிற உரையாடல்களுக்கும், "ஏழாம் அறிவு' என்ற திரைப்படத்திற்குமான முரண்களை கவனப்படுத்துவதே இக்கட்டுரையின் ஒரே நோக்கம்.

திரைப்படம்:

ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் சொல்லப்படும் மையமான விஷயம் இது தான்: தமிழர்களாகிய நாம் அறிவிலும் திறமையிலும் மிகச்சிறப்பான இடத்தை வகித்திருந்தோம்; கலை, அறிவியல், மருத்துவம், தத்துவம் போன்ற துறைகளில் நாம் பிற சமூகங்களை விடவும் முன்னேறிய நிலையில் இருந்தோம்; ஆனால், இவையனைத்தும் பழங்கதைகள்! இந்தப் பெருமைகளையெல்லாம் நாம் எப்படியோ தொலைத்து விட்டோம். அப்பெருமைகளை மீட்டு வர வேண்டிய தேவை இன்றைக்கு இருக்கிறது. இன்றைய உலக மய சூழலில் பிற நாடுகளிலிருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்க்கு அந்த மறந்து போன அறிவுகளை மீட்டெடுப்பது அவசியம். அதைச் செய்வதற்கு ஒரு தமிழ்ப்பெண் முயற்சி செய்கிறாள்; அந்தக்கதை தான் ஏழாம் அறிவு!

அந்தப்பெண் இப்படித்தான் செய்கிறாள். சித்த வைத்தியரின் மகளாக சொல்லப்படும் அப்பெண் மரபணு அறிவியலில் ஆய்வு செய்கிறாள். போதி தர்மன் என்ற பழந்தமிழனின் உயிர் மூலக்கூறு அவளுக்குக் கிடைக்கிறது. அத்தமிழனின் வம்சாவழியினரையும் கண்டுபிடிக்கிறாள். போதி தர்மனின் உயிர் மூலக்கூறு இன்றைய தலைமுறையில் ஒருவனின் உடலில் இருப்பதைக் கண்டுகொள்கிறாள். மரபணு சிகிச்சையின் மூலம் இன்றைய தமிழனின் உடலுக்கு அந்தப் பழைய பெருமைகள் கிடைக்கும் படி செய்து, சீனா மாதிரியான வருங்கால வல்லரசு ஒன்றின் சதித்திட்டத்தை முறியடிக்கிறாள்.

இந்தக் கதையை கொஞ்சம் வரிசைப்படுத்திக் கொள்ளலாமா?

1.     தமிழர்களாகிய நாம் முற்காலத்தில் கலையிலும் கல்வியிலும் சிறப்புற்று இருந்தோம்.

2.     அந்தச் சிறப்புகளை இடையில் தொலைத்து விட்டோம்.

3.     உலகமயச் சூழலில் பிற நாடுகளின் அச்சுறுத்தலை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

4.     தமிழர்களின் பழந்திறமைகளை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது.

5.     இதற்காக உடற்கூறு அறிவியலின் மேம்பட்ட அறிவான மரபணு அறிவியலின் துணையை நாம் நாடலாம்.

6.     இன்றைய தமிழனின் மரபணுவில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் நாம் அந்தப் பழைய உன்னத நிலையை அடைய முடியும்.

இனி ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

1.     தமிழர்களாகிய நாம் முற்காலத்தில் கலையிலும் கல்வியிலும் சிறப்புற்று இருந்தோம்.

இந்தக் கற்பனை எல்லா சமூகங்களிலும் இருக்கிறது தான் என்றாலும் தமிழ் போன்ற நீண்ட எழுத்துப் பாரம்பரியம் கொண்ட சமூகங்களில் இந்தக் கற்பனை விசாலமானது. இதைக் கற்பனை என்று சொல்வதால் புண்ணியவான்கள் தயவு செய்து பொய் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இந்தக் கற்பனை சிலப்பதிகார காலம் தொட்டே நம்மிடம் வழக்கில் உண்டு என்றாலும் இதை நிரூபித்தாக வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இதை நிரூபிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் என்று நம்மால் சிலரை அடையாளம் காட்ட முடியும். அவர்களுள், மிக முக்கியமான தடங்களை அடையாளம் கண்டு அறிவித்தவர்கள் மூவர் அயோத்திதாசர், ஆபிரகாம் பண்டிதர், தேவ நேயப்பாவாணர். இவர்கள், மருத்துவம், கலை, மொழி, தத்துவம் போன்ற தளங்களில் தமிழ்ச் சமூகம் எவ்வாறு பிற பண்பாடுகளிலிருந்து வேறுபட்டு முன்மாதிரியாக இருந்தது என்பதைத் தங்களின் ஆய்வுகள் மூலமாக நிறுவியிருக்கிறார்கள். ஆனால், இன்னும் இந்தத் தடத்தில் நாம் பயணம் செய்ய வேண்டிய தூரம் நிறையவே இருக்கிறது.

தற்காலம், நாட்டுப்புறவியல் என்ற பெயரில் நடைபெறும் ஆய்வுகளில் சொற்பமான சிலர் இந்த நகர்வில் பங்கேற்கிறார்கள் என்பதும் முக்கியம். அதே போல், சித்த மருத்துவம், சிற்பம், ஓவியம் போன்ற தளங்களிலும் நமது சிறப்புக்கூறுகளைத் தேடிக்கொண்டிருக்கும் சிலரை என் சிற்றறிவிற்கு எட்டிய வகையில் என்னால் குறிப்பிட முடியும் நாட்டுப்புறவியலில் ஆ. சிவசுப்பிரமணியன், இ.முத்தையா; தலித்தியத்தில் ராஜ் கௌதமன்; ஓவியம் சிற்பத்தில் சந்ரு, ராமச்சந்திரன்; சித்த மருத்துவத்தில் மைக்கிள் ஜெயராஜ்; வானியலில் வெள்உவன்; தத்துவத்தில் ந.முத்துமோகன், நெடுஞ்செழியன், கோவை ஞானி; அயோத்திதாசர் ஆய்வுகளில் ஞான. அலாய்சியஸ், நான்; தமிழ் அடையாளம் குறித்து ஜெகநாதன் என்று வெகு சிலரே இந்தப் பயணத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள். எனவே, தமிழர்களாகிய நாம் முற்காலத்தில் கலையிலும் கல்வியிலும் சிறப்புற்று இருந்தோம் என்ற கற்பனையில் தவறில்லை, அதைத் தொட்டு விடும் தூரத்தில் தான் உள்ளோம். அதை எங்கு போய் தேட வேண்டும் என்பதிலும், அதற்கு உரியவர்கள் யார் என்பதிலும், அதன் பின்னணியிலான அரசியல் என்ன என்பதிலும் மேற்கூறப்பட்டவர்களுக்கு குறைந்தபட்ச ஒற்றுமைகள் உண்டு என்பது இங்கு முக்கியம்.

2.     அந்தச் சிறப்புகளை இடையில் தொலைத்து விட்டோம்.

இந்திய வரலாற்றிலும் சரி தமிழக வரலாற்றிலும் சரி இப்படியொரு இழப்பு ஏற்பட்டதான விவாதமொன்று பரவலாக நடைபெற்றிருக்கிறது. சமூகப் பண்பாட்டுத் தளத்தில் பெரும் வீழ்ச்சி ஒன்று ஏற்பட்டதாக வரலாற்றிலும் சொல்லப்பட்டிருக்கிறது. அது குறித்த குறிப்புகள் பஞ்சமென்று உருவகப்படுத்தப்பட்டும், சமூகக்கலவரம் அதாவது இருண்ட காலம் என்று வேறு சிலராலும், பௌத்த சமண சமயங்களுக்கு எதிரான வன்முறைகள் (கழுவேற்றம் போன்றவை) என்று வேறு சிலரும், சாதிப்பிரிவினைகள் வலுப்பெற்ற காலம் என்று இன்னும் பலரும் கருதுகின்றனர். அதாவது, மிகப்பெரிய மாற்றமொன்றை இந்த நிலப்பரப்பு சந்தித்திருக்கிறது என்பதில் மட்டும் யாருக்கும் சந்தேகமில்லை. இந்த விரிசல், இடைவெளி, தொடர்ச்சியின்மையை பலரும் பல்வேறு விதத்தில் ஆய்வு செய்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பல்வேறு கருதுகோள்கள் இருந்திருக்கின்றன. அவற்றுள் வரலாற்றாசிரியர்களும் ஏற்றுக்கொள்ளும் கருதுகோள்களை ஜோதிராவ் பூலே, அயோத்திதாசர் மற்றும் அம்பேத்கர் முன்வைக்கிறார்கள். இம்மூவரின் கருதுகோள்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது, இம்மூவரும் இந்திய சமூகத்தில் ஏற்பட்ட அறிவுத்தொடர்ச்சியிலான இடைவெளியை பௌத்த சமயத்தின் வீழ்ச்சியோடும், தீண்டத்தகாத சமூகப்பிரிவின் தோற்றத்தோடும் சம்பந்தப்படுத்தி பேசுகிறார்கள்.

வரலாற்றில் பிராமணர்களின் எழுச்சி, பௌத்த சமயத்தின் வீழ்ச்சி, சாதிப்பாகுபாடுகளின் கடுமை, தீண்டத்தகாதவர்கள் என்ற சமூக ஒதுக்கல் என்று பல்வேறு சம்பவங்கள் அக்குறிப்பிட்ட காலகட்டத்தில் நடைபெற்றிருக்க வேண்டுமென்பது இவர்களின் கணிப்பாக உள்ளது. பிராமணியத்தின் விஸ்வரூப வளர்ச்சி தமிழ் சிந்தனை மரபில் அளப்பரிய சீர்கேடுகளை ஏற்படுத்தியதாக அயோத்திதாசர் எழுதத் தொடங்குகிறார். பிராமணர்கள், மிகக்குறிப்பாக இங்கிருந்த அறிவுத்துறைகளை கபளீகரம் செய்வதையே தங்களது செயல்திட்டமாக வைத்திருந்தனர். தமிழ் சமூகத்தில் அது நாள் வரையில் பாரம்பரியமாய் அறிவியலில் ஈடுபாடு காட்டி வந்த சமூகப்பிரிவுகள் அனைத்தையும் பொது வெளியிலிருந்து அகற்றுவதும், மரபாக அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அந்தஸ்தையும் அதிகாரத்தையும் கைகொள்வதும் தான் அவர்களது நோக்கமாக இருந்தது. இதில் நேரடியாக பாதிக்கப்பட்ட தமிழ் மரபுக் குழுக்கள், கம்மாளர் என்ற தொழில் நுட்ப அறிஞர்களும், வள்ளுவர் என்ற காலக்கணியர்களுமே. இவ்விரு குழுக்களும் சமீப காலம் வரையில் பிராமணர்களுடன் தொடர்ச்சியாக மோதலில் ஈடுபட்டு வந்ததை அறிந்தால் நான் சொல்லக்கூடிய மோதல் உங்களுக்கு இன்னும் கூடுதலாய் விளங்கும்.

சிற்ப சாஸ்திரம், கட்டிடக்கலை, மருத்துவம், வானியல், காலக்கணிதம், இலக்கிய விசாரணை போன்ற அறிவியல்களெல்லாம் மக்களின் வாழ்வியல் தேவைகளை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. இன்றைக்கு வண்ணார் என்று இழிவுபடுத்தப்படுகிறவர்கள் முற்காலத்தில் மகளிர் மருத்துவத்தில் விற்பன்னர்களாக இருந்தனர்; நாவிதர் என்பவர்கள் தான் அந்த காலத்து 'அறுவை சிகிச்சை மருத்துவர்கள்'; பட்டியலினத்தவராகக் கருதப்படும் 'வாதிரியார்கள்' தான் பருத்தி நெசவில் கை தேர்ந்தவர்களாக இருந்தனர்; தீண்டத்தகாதவர்களாக சொல்லப்படும் 'வள்ளுவர்கள்' தான் அன்றைய வானியல் வல்லுனர்கள்; தாழ்த்தப்பட்டவர்கள் என்று வகைப்படுத்தப்படும் 'பள்ளர்கள்' தான் அக்காலத்திலிருந்து வேளாண் நுட்பத்தை பாதுகாத்து வருகிறவர்கள்; இவ்வாறு சமூகத்தின் அடித்தளத்திற்கு தள்ளப்பட்ட இம்மக்கள் தான் இன்றைக்கும் சிலம்பம், களரி போன்ற போர்க்கலைகளை காப்பாற்றி வருகிறவர்கள். வரலாற்றில் நடைபெற்றதாக சொல்லப்படும் மிகப்பெரிய வீழ்ச்சி நமது மரபையும் அறிவுத் தொகுதியையும் மட்டும் வீழ்த்தவில்லை, அதைப் பேணிப்பாதுகாத்து வந்த சமூகக்குழுக்களையும் வீழ்த்தியது என்பது தான் வரலாறு. இதற்கு மாறாக, வானியல் அறிவு 'ஜோதிடம்' என்ற மூட நம்பிக்கையாகக் குறுக்கப்பட்டது; வைத்தியம், 'வேள்வி, யாகம்' என்ற மாயமந்திரங்களாக மாற்றப்பட்டன மரபான வேளாண்மை அழிக்கப்பட்டு 'ரசாயன விவசாயம்' கொண்டுவரப்பட்டது; சிலம்பம், களரி போன்ற தற்காப்புக்கலைகள் புறக்கணிக்கப்பட்டு உயிர் வாங்கும் கொலைக்கருவிகளைக் கொண்ட குழுக்கள் அதிகாரத்தை கைப்பற்றின; ஆதி மருத்துவர்கள் துரத்தப்பட்டு 'ஆங்கில மருத்துவம்' முன்னிலைப்படுத்தப்பட்டது.

பாரம்பரியமான சிறப்புகளை இழந்தோம் என்று சொல்வதன் பின்னணியில் ஒரு பெரும் சமூக சீரழிவே நடைபெற்றிருக்கிறது என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? ஒரு பெரும் வீழ்ச்சியை சமூகம் சந்தித்தது என்பதே உண்மை. அது, தமிழ்ச் சமூகத்தை கோரமான ஏற்றத்தாழ்வுகள் உடைய சமூகமாக மாற்றியமைத்தது. ஒழுக்கம் அழிந்து சுய நலம் பெருத்த சமூகமாக மாற்றியிருந்தது. நீதி கெட்டு, அறம் தோற்ற சமூகமாக உருமாற்றியிருந்தது. பாரம்பரியமாய் இந்த நிலத்தோடு தங்களைப் பிணைத்துக் கொண்டு பன்னெடுங்கால அனுபவ அறிவை சுமந்து நின்றிருந்த மக்களையெல்லாம் ஊர்களுக்கு வெளியே துரத்தி விட்டு, மூடத்தனத்தில் மூழ்கிப்போயிருந்தது தமிழ் சமூகம். அறிவின்மை, மூடத்தனம், கடவுள், கோவில், சாதி, சம்பிரதாயம், வேதம், சூழ்ச்சி, சுய நலம்... இவையெல்லாம் தான் தமிழர்களின் வாழ்க்கை முறையாக மாறி ஒருபாட்டம் காலம் உருண்டோடி விட்டது. இந்த சமூகத்திற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையோ என்று யோசிக்கும் நிலைக்கு இதன் பாரம்பரிய குடிகள் தள்ளப்பட்டிருந்தனர். இது தான் பூலேயும், அயோத்திதாசர், அம்பேத்கர் போன்றவர்களும் முன்வைத்த வரலாற்று மறுவாசிப்பு.

தமிழ்ச் சமூக வரலாற்றை அதன் அடித்தளமக்களின் பார்வையில் வாசித்தால், இந்தச் சமூகம் பெரும் சீரழிவை சந்தித்து அழுகி துர் நாற்றம் வீசுவதைப் போன்ற சித்திரமே உங்களுக்கு மிஞ்சும். ஒட்டுமொத்த இந்திய சமூகமே கூட மேற்கூறிய சீரழிவை சந்தித்தது என்றாலும், அதன் ஆழமான பாதிப்புகள் நீண்ட நெடிய சிந்தனை வரலாற்றைக் கொண்ட தமிழ் சமூகத்தில் தான் உணரப்பட்டன. இந்த பாதிப்பை நிவர்த்தி செய்து கொள்வதற்காகவே காலனிய தொடர்பால் கிடைத்த மேற்கத்திய சமூகத்தின் அறிவியலையும் நுட்பத்தையும் தீவிரக்காதலோடு தமிழ் சமூகம் கட்டி அணைத்துக் கொண்டது; ஆங்கிலத்தின் மீது வேறெந்த இந்திய சமூகங்களைக்காட்டிலும் பெருத்த மோகம் கொண்டு அலைந்தது.

சிந்தனையில் ஏற்பட்ட வீழ்ச்சியைக் கற்பனை செய்தவர்கள், அதனை மிகத்தெளிவாக பண்பாட்டு வீழ்ச்சியாகவே விவரித்தார்கள். மறந்து போனது அல்லது அறுந்து போனது அறிவுத் தொடர்ச்சி மட்டுமல்ல, சமூக நீதியும் தான் என்பதே இவர்களின் தீர்மானமான முடிவாக இருந்தது. இல்லையென்றால், ஒரு பாரம்பரிய சமூகம் இவ்வளவு கேவலமாக வீழ்ச்சியடைய வாய்ப்பில்லை என்பதும் அவர்களுடைய வாதம்.

3.     உலகமயச் சூழலில் பிற நாடுகளின் அச்சுறுத்தலை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

தாராளமயவாதம், புதிய பொருளாதாரக்கொள்கைகளின் மூலமாக நமது பொருளியல் கேந்திரங்களை வல்லரசுகளுக்கு தாரை வார்த்ததன் பின்னணியில், அணு உலைக்கூடங்களும், சிறப்பு பொருளாதார மண்டலங்களும் பெருகுவதையும், நமது நீர்வளங்கள் போன்ற இயற்கை வளங்களை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு குத்தகை பேசி விடுவதையும் எதிர்க்கிற மக்கள் போராட்டங்களுக்கு மாற்றாக, அப்துல் கலாம் முதல் அன்னா ஹாசாரே முதலான வயோதிகக் கோமாளிகள் பரப்பிவிடும் கட்டுக்கதைகளுள் ஒன்று, இந்தியா வல்லரசாகப் போகிறது என்பதாகும். இந்த வல்லரசு கதை ஆங்கிலத்தை மூலதனமாகக் கொண்டு பிழைத்து வரும் நகரத்து இளைஞர்களுக்கும், முதலாம் உலக நாடுகளில் போய் சேவகம் செய்யும் ஃபார்வர்டுகளுக்கும் ரொம்பவும் உவப்பாக இருப்பதில் நமக்கு ஆச்சரியமொன்றுமில்லை.

இந்தியா வல்லரசாக உருமாறிக்கொண்டிருக்கிறது என்றும், அதற்காக நாம் ராக்கெட் தொழில் நுட்பத்தில் கோடி கோடியாய் செலவழிக்க வேண்டும் என்றும் சொல்லும் இதே வயோதிகக் கோமாளிகள் தான், நமது நாடு எதிர் நோக்கியுள்ள மிக முக்கியமான பிரச்சினை, ஊழல் என்றும் பேசுகிறார்கள். இவர்களது 'வல்லரசு' கட்டுக்கதையின் சாராம்சம் இவை தான்: இந்த நாட்டின் ஃபார்வர்டுகள் வெளி நாட்டிற்கு சேவகம் செய்யாமல் இந்தியாவிற்கே திரும்பி வர வேண்டும் அதற்காக நாம் 'இடஒதுக்கீடு' என்ற முறையை ஒழித்துக் கட்ட வேண்டும்; இரண்டாவது, புதிய தொழில் நுட்பங்களான ராக்கெட், அணு உலைகள், மரபணு ஆராய்ச்சி போன்றவற்றை எவ்வளவு செலவானாலும் செய்து வர வேண்டும்; ஊழலை ஒழித்து இந்த நாட்டை பழைய படியே ஆன்மிக குருக்களின் கைகளில் ஒப்படைத்து விட்டால் எல்லாம் நல்லபடியாய் முடிந்து போகும்; இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதங்கள் நம் நாட்டில் ஏற்படுத்திய மாற்றங்களை நிர்மூலமாக்கி விட்டு பழைய படியே ராம ராஜ்ஜியத்தை ஏற்படுத்தி விட்டால் அனைத்து விதமான சீர்கேடுகளும் நேர்பட்டுவிடும். இந்த அபிப்பிராயங்கள் யாருடைய நலனை முன்வைக்கின்றன என்பதை மிக எளிதாய் எவரும் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், இவற்றில் எதையும் விளங்கிக்கொள்ளாமல் தத்தமது சாதி, சமய, குல, குடும்ப நலனை மட்டுமே பிரதானப்படுத்தி யோசிக்கும் நடுத்தர வர்க்க ஃபார்வர்டு அறிவுஜீவிகளின் இன்னுமொரு கோஷம் தான், சீனா என்ற பூதம். பௌத்தத்தின் தன்னுணர்வை மிகச்சரியாக உள்வாங்கிக் கொண்டு, தன் மொழி மீதும் பண்பாட்டின் மீதும் மரபின் மீதும் விடாப்பிடியான பற்றுதலையும் (அதாவது தனது அறிவு மரபின் தொடர்ச்சியை இன்றளவும் பேணி வருகிற) கொண்டிருக்கிற சீன தேசம், இங்குள்ள இந்துமதப் போர்வையில் பிராமணர்கள் நடத்தும் மாயாஜாலங்களுக்கு எதிராக இருப்பதை உணர்ந்த 'ஃபார்வர்டுகள்', சீன தேசத்தை இந்தியாவிற்கு எதிரான பூதமாகக் கட்டமைப்பதில் முனைந்து நிற்பதையும், இந்த சங்கதிகளை மக்களிடம் எடுத்து செல்வதில் முனைந்து நிற்பவை சினிமாவும் தொலைக்காட்சியும் தான் என்பதை உணர்ந்தால் இந்த அரசியல் எங்கிருந்து கிளம்பி வருகிறது என்பதைக் கண்டு கொள்ளலாம்.

4.     தமிழர்களின் பழந்திறமைகளை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது.

நிச்சயமாக இதை நாமும் தான் ஒத்துக்கொள்வோம். நமது தொலந்து போன அறிவு மரபை மீட்டெடுப்பதன் மூலம், நமது உள்முரண்களை முதலில் களைய முடியும். பல நூறு வருடங்களாக நமது சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டிருக்கிற பூர்வீக மக்களுக்கான நியாயத்தை செய்ததாக இருக்கும். அவர்களையும் மைய நீரோட்டத்திற்கு கொண்டு வந்ததாக அமையும். வர்ணம், சாதி என்ற பெயரில் இழைக்கப்பட்ட அநீதிக்கு சரியான தீர்வாக இது இருக்க முடியும். பழ மரபை மீட்டெடுப்பதன் மூலம், நவீன சமத்துவ சமூகமொன்றை உருவாக்குவதற்கான சாத்தியங்களை நாம் வருவித்துக் கொள்ளமுடியும். அதிகாரங்களை இன்னும் பரவலாக்கி அதன் பகிர்விலும் பங்கெடுப்பிலும் ஜனநாயகத்தை செயல்படுத்த முடியும். இதுவெல்லாம் நடந்த பின்பு, நாம் நமது சிந்தனை மரபின் வலிமையை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அதனை முன்னகர்த்தி செல்வதற்கான வழிமுறைகளை யோசிக்கலாம்.

இந்த மீட்டெடுக்கிற காரியத்திலும் நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் கடந்த காலம் என்பது ஒரு உந்துதலுக்காக பொற்காலம் போல் கற்பனை செய்யப்படுகிறது என்றாலும், அது முழுக்க முழுக்க 'உன்னதங்களால்' செய்யப்பட்டது அல்ல. அதிலும் ஏராளமான கோளாறுகளும் குளறுபடிகளும் காணப்படுகின்றன. எனவே கடந்த காலத்திலிருந்து சிந்தனை மரபை நாம் மீட்டுருவாக்குகிற செயல் கறாரான தேர்வுகளை உள்ளடக்கியது. உதாரணத்திற்கு, நமது மருத்துவ அறிவையும், கட்டிடக்கலை ஞானத்தையும், வானியல் சிந்தனைகளையும் மீட்டெடுக்கிற அதே சமயம், ஏழாம் அறிவில் செய்யப்படுவது போல நோக்கு வர்மம் இன்னும் அதனோடு தொடர்புடையதாக சொல்லப்படும், கூடு விட்டு கூடு பாய்தல், உப்பை தங்கமாக மாற்றும் ரசவாதம், வசியம் செய்தல் போன்ற அழிவை நோக்கியவை என்று தெளிவாக விளங்கக்கூடிய எதையும் மீட்டுருவாக்கம் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. மீட்டுருவாக்குதல் என்பது தற்கால நவீன சமூகத்தின் மேம்பாட்டிற்கும் சமத்துவத்திற்கும் துணை நிற்பதாய் அமைய வேண்டுமேயொழிய 'வல்லரசாக' உருமாறுவதற்கு பயன்படக்கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

5.     இதற்காக உடற்கூறு அறிவியலின் மேம்பட்ட அறிவான மரபணு அறிவியலின் துணையை நாம் நாடலாம்.

ஏழாம் அறிவு என்ற திரைப்படம் சொல்லக்கூடிய தடத்திலிருந்து நாம் முதல் முறையாய் வேறுபட்டு நிற்கக்கூடிய இடம் இது தான். தமிழர்களின் தொலைந்து போன அறிவுச்செல்வத்தை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்று கேட்டால், நான் நிச்சயமாய் மரபணு அறிவியலை தேர்ந்தெடுக்க மாட்டேன். அது இந்த சிக்கலை மேலும் வலுப்படுத்துமே ஒழிய தீர்ப்பதற்கு உதவாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். இன்னும் கேட்டால், நமது பாரம்பரிய அறிவியலை தொலைத்தற்கான காரணங்களில் ஒன்று, இந்த உடற்கூறு அறிவியல் தான் என்பதையும் நான் திட்டவட்டமாக சொல்வேன். நம்மை படுபாதாளத்தில் விழச்செய்த யோசனை தான் நம்மை மீட்டெடுக்கவும் உதவப் போகிறது என்பதை நம்புவதற்கு நானொன்றும் அவ்வளவு எளிமையானவன் இல்லையே! இந்த இடத்தில் நான் கொஞ்சம் விளக்கமாக பேசியாக வேண்டுமென்று நினைக்கிறேன்.

வர்ணாஸ்ரம தர்மமும் சரி, சாதி பாகுபாடுகளும் சரி ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கலாம். அது, பிறப்பு! உங்களது பிறப்பு தான் நீங்கள் யார் என்று தீர்மானிக்கிறது. கேட்பதற்கு வேடிக்கையாகவும் மூடத்தனமாகவும் தோன்றினாலும் இந்த விளக்கத்தினடிப்படையில் தான் இந்திய சமூகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. பிறப்பு தான் உங்களை தீர்மானிக்கிறது. உங்கள் உடலில் ஓடக்கூடிய இரத்தம் தான் உங்களது யோசனையை தீர்மானிக்கிறது. நீங்கள் இந்த உலகில் என்ன வினையாற்ற வேண்டும் என்பதை உங்கள் பிறப்பு தான் தீர்மானிக்கிறது. 'சாதி', 'வர்ணம்' போன்ற காரணிகளுக்கு உடற்கூறியல் மிக முக்கியமான வாதங்களைத் தந்து கொண்டிருக்கிறது. மனித உடல், ஒரு உருவகம். அது தான் இந்த உலகின் ஆதாரமான உருவகம். இந்த உலகமே மனித உடல் போலத்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த சமூகம் இன்னும் நெருக்கமாக மனித உடலே தான். தலை, தோள், தொடை, கால் என்று மனித அவயங்கள் போலத்தான் இந்த சமூகமும் பாகுபடுத்தப்பட்டிருக்கிறது தலையாக அறிவுஜீவிகள் காணப்படுகிறார்கள்; தோளாக புஜபல வல்லாண்மையர்; தொடையாக வியாபாரிகள்; காலாக இந்த ஒட்டு மொத்த சமூகத்தையும் தாங்கி நிற்பவர்கள் உடல் உழைப்பாளர்கள். மனித உடற்கூறியலின் மீது அடங்காத மோகம் கொண்டு, அதனையே இப்பிரபஞ்சத்தின் மையம் என்று கொண்டாடும் சிந்தனையிலிருந்து உருவானது தான், வர்ணக் கோட்பாடு. இந்த பிரபஞ்சத்தின் மையம் 'பூமி' தான் என்று தானும் நம்பி அறிஞர்களையும் நம்பும் படி கட்டாயப்படுத்திக்கொண்டிருந்த கிறிஸ்தவத்தைப் போன்றே பிராமணீயமும் 'இந்த உலகின் மையமான உருவகம் மனித உடல் தான்' என்று நம்மை நம்பச்சொல்கிறது.

மனித உடலில் படிநிலைகளும் பாகுபாடுகளும் இருப்பது போல் சமூகத்திலும் பாகு பாடுகள் இருந்தே தீரும் என்று வலியுறுத்துகிறது. மனித உடலில் ஒவ்வொரு அவயத்திற்கும் செய்யக்கூடிய வேலைகள் என்ற திட்டம் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. தலை, சிந்தனைக்காகப் படைக்கப்பட்டது; அதன் உள்ளுறுப்புகள் அதன் காரணமாக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன. தலை, காலின் வேலையையோ, கால் தலையின் வேலையையோ செய்ய முடிவதில்லை. ஏனென்றால் அவ்வவ் உறுப்புகள் அந்தந்த வேலைக்காகப் படைக்கப்பட்டுள்ளன. தலை, மார்பு, தொடை, கால் என்ற நான்கு பகுதிகளும் ஒன்றிணைந்து செயல்படும் போதே இந்த உடல் இயங்க முடிகிறது. ஒன்று இன்னொன்றாக மாறுவதற்கான சாத்தியங்கள் அடியோடு மறுக்கப்பட்டிருக்கிறது. அதே போல் எல்லா அவயங்களும் படி நிலை அமைப்பில்லாமல் ஒழுங்கமைக்கப்படவும் இயலாத வகையில் இயற்கையே ஒரு தேர்வை நிகழ்த்தியிருக்கிறது. தலை உயரத்திலும், கால் அடிமட்டத்திலும் இருப்பது தான் இயற்கையின் தேர்வு. தலை, மார்பு, தொடை, கால் போன்றவை எவ்வாறு பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகின்றனவோ அதே போல் சமூகத்திலும் சமூகக்குழுக்கள் என்னென்ன பணியை செய்வது என்பதும் பிறப்பிலேயே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.

இந்த யோசனையின் கோளாறு எங்கே ஆரம்பிக்கிறது என்று உங்களுக்கு விளங்குகிறதா? மனித உடலை மையப்புள்ளியாகக் கொண்டு யோசிப்பதில் தான் இந்த ஒட்டுமொத்த சீரழிவும் தொடங்குகிறது. இந்த பிரபஞ்சத்தையும், சமூக அமைப்பையும் மனித உடலை மாதிரியாகக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம் என்ற யோசனை அடிப்படையானக் கோளாறுகளை உடையது என்பதைத் தான் நமது மரபான அறிவியல்கள் சொல்லித்தந்துள்ளன. அதன் படி, மனிதன் இந்த பிரபஞ்சத்தின் மையம் அல்ல என்பதும், இந்த உலகின் உன்னத படைப்பு மனித உடல் மட்டுமல்ல என்பதும், இயற்கையை இவ்வளவு எளிமையான உருவகத்தின் மூலம் கண்டறிய முடியாது என்பதும் வர்ணக்கோட்பாட்டிற்கு தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனெனில் அந்த கோட்பாடே கூட அறிவுத்தேடலை முதன்மையாகக் கொள்ளாமல், அதிகார வேட்கையைத் தானே தனது உந்து சக்தியாகக் கொண்டிருந்தது! அந்தக் கோட்பாட்டின் நோக்கம் இந்த சமூக அமைப்பை விளங்கிக்கொள்வது அல்ல என்பது மிகத்தெளிவாகவே நமக்குப் புரிகிறது.

இதிலிருந்தே 'சாதி' கோட்பாட்டின் பிற முடிவுகள் தருவிக்கப்படுகின்றன. பிறப்பில் தான் எல்லாமும் தீர்மானிக்கப்படுகிறது; நீங்கள் யார் என்பதும், என்ன செய்ய வேண்டும் என்பதும், என்ன செய்ய முடியும் என்பதும் பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகிறது; உங்கள் உடலில் ஓடக்கூடிய இரத்தம் உங்களது குணத்தை வடிவமைக்கிறது; இதனால் குணம் என்பதும் அறிவு என்பதும் கருவிலேயே முடிவு செய்யப்பட்டு விட்டன; உங்களது இந்த உலகிலான அனுபவம் 'பிறவிக் குணத்தை' கொஞ்சம் மட்டுப்படுத்தலாமே தவிர அதுவே நீங்களாக உருவாக முடியாது; நீங்கள் செய்யக்கூடிய எந்தக் காரியமும் உங்களது சிந்தனையிலிருந்து உருவானது அல்ல; அவை அனைத்தும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவை. இயற்கை நிகழ்வுகளை முன் கூட்டியே கணிப்பதற்காக நாம் உருவாக்கி வைத்திருந்த வானியலைக் கொண்டு தனது உடல் மையக்கோட்பாட்டின் துணையோடு 'ஜாதகக் கணிப்பு' என்ற மூட நம்பிக்கையை இப்படித் தான் வடிவமைத்துக் கொண்டார்கள். மனித யத்தனத்தால் எதுவுமே சாத்தியமில்லை என்பதையும், நமக்கெல்லாம் அப்பால் தீர்மானிக்கக்கூடிய சக்தியொன்று நின்று நம்மை ஆட்டிவைக்கிறது என்ற யோசனையே இதன் பிரதான கோஷமாக இருந்தது.

6.     இன்றைய தமிழனின் மரபணுவில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் நாம் அந்தப் பழைய உன்னத நிலையை அடைய முடியும்.

இந்தக் கற்பனை விறுவிறுப்பான தமிழ் மசாலாவிற்கு வேண்டுமானால் உகந்ததாக இருக்க முடியுமே தவிர நிஜத்தில் இதுவெல்லாம் சாத்தியமில்லை என்று தான் மரபணு அறிவியலே கையை விரிக்கிறது. சமீபத்திய ஈழத்தமிழர் படுகொலையைத் தொடர்ந்து தமிழக மக்களிடம் நீரு பூத்த நெருப்பாக இருந்து கொண்டிருக்கிற 'தமிழ் இனப்பற்றை' வேறெந்த அரசியல் கட்சிகளோ அமைப்புகளோ சரியாக அறுவடை செய்து கொள்ளாத இடைவெளியில், அதனைத் திரைப்படம் மூலமாக அறுத்து விடுவது என்பது தான் ஏழாம் அறிவின் உச்சபட்ச நோக்கம் என்பது நமக்குத் தெரியும். இது அவர்களுக்கு வியாபாரம்! அறுபதுகளில் திராவிட கட்சிகள் விற்று வந்த தமிழுணர்வைப் போலவே இப்பொழுதும் 'இனப்பற்று' மக்கள் விரும்பி சாப்பிடும் பொருளாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. தாத்தாவிற்கும் பேரனுக்குமான வித்தியாசம் வெளிப்படையானது அந்த காலத்தில் 'இனப்பற்றை' செய்தித்தாளில் பொட்டலம் போட்டு சணல் கயிறு கொண்டு கட்டித்தந்தார்கள், இன்று அது காற்றுப்புகாத பிளாஸ்டிக் பைகளில் 'கூடுதலான ஆரோக்கியத்தோடு' கிடைக்கிறது; தாத்தா காலத்தில் இயற்கை வண்ணங்கள் பூசப்பட்டிருந்தன, இன்றோ நீங்கள் விரும்புகிற வண்ணங்களில் தேர்ந்தெடுக்கலாம். நமது கவலையெல்லாம் அவர் கட்டுகிற கல்லா பணத்தில் அல்ல; இந்த மாதிரியான திரைப்படங்கள் ஏற்படுத்தும் பிரேமைகள் சமூகத்தின் அடித்தளத்தில் நடைபெற்று வரும் சின்னச்சின்ன அசைவுகளையும் எவ்வளவு தூரம் முளையிலேயே கிள்ளி எறிந்து விடும் என்பது குறித்துத் தான்.

திரைப்படங்கள் குறித்து பயப்படுவதற்கானக் காரணங்களை நான் உங்களுக்கு பட்டியலிட்டுக் கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை. தமிழ் சமூகத்தின் 'பொதுப்புத்தி' திரைப்படங்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியும். இதை ஆய்வு பூர்வமாய் நிரூபித்தாக வேண்டியதில்லை. இது நம் எல்லோருக்கும் விளங்கக்கூடிய உண்மை. திரைப்படங்களின் மூலம் கட்டப்படும் பிம்பங்களைக் கொண்டு தான் நமது அரசியல் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. உள்ளீடற்ற அக்காற்றுக்குமிழ்கள் உதிர்க்கக்கூடிய கற்பனைகளுக்குள் ஏதாவதொன்றைத்தான் நாம் வரித்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. நம்மிடம் களத்தில் செயல்பட்ட தலைவர்களோ சிந்தனையாளர்களோ சமீப காலமாக யாரும் இருக்கவில்லை; நமக்கு வாய்த்தவை அத்தனையும் வண்ண பிம்பங்கள் தாம்.

வரலாற்றை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியமும், அதனோடு பின்னிப்பிணைந்துள்ள சமூக சீர்திருத்தமும் இத்தனை வலுவோடு விவாதிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கும் தமிழ்ச் சூழலில் தான் ஏழாம் அறிவு என்ற கட்டுக்கதையை திரைப்படங்கள் வாயிலாக பரப்பத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ் ஆய்வுத்தளத்தில் சமீபகாலமாகத்தான் பேசப்பட்டு வரும் அடித்தளமக்கள் வரலாறு என்ற யோசனையையும், மீட்டுருவாக்கம் என்ற செயல்திட்டத்தையும் ஏறக்குறைய கேலி செய்வது போலவே இந்தத் திரைப்படத்தின் மூலமான "தமிழுணர்வு' கட்டமைக்கப்படுகிறது என்பதே நமது கோபமாக உள்ளது.

தமிழ்த்திரைப்படம் என்ற சொல்லாடல்:

ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தைத் தயாரித்தவர்கள் இவ்வளவு சிக்கலான அரசியல் செயல்பாட்டில் தோய்ந்து போய்த்தான் இந்த சாதியச் சொல்லாடலைக் கட்டமைக்கிறார்களா என்று கேட்டால், எனக்கு அதிலும் கூட சந்தேகம் இருக்கிறது. தமிழகத்தில் தற்காலம் நடைபெற்று வரும் அடித்தள மக்கள் வரலாறை மீட்டெடுத்தல் என்ற வேலைத்திட்டத்தை நிர்மூலமாக்கும் தன்னுணர்வோடு தான் இப்படி செய்தார்களா என்று கேட்டால், வேலைத்திட்டம் அவர்களிடம் வெளிப்படுகிறது, ஆனால் தன்னுணர்வோடு இதைச் செய்தார்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. மேலும், ஏழாம் அறிவு திரைப்படக்குழுவினர் மட்டுமே தான் இப்படியான "பிராமணிய' சிந்தனயால் வளைக்கப்பட்டிருக்கிறாகள், வேறு யாராவது சிலர் இதே திரைக்கதையை படமாக எடுத்திருந்தால் இப்படி வந்திருக்காது என்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. யாராக இருந்தாலும், வியாபார ரீதியாய் வெற்றியடையக்கூடிய தமிழ்த் திரைப்படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கிற யாராயிருந்தாலும், இந்த அரசியலிலிருந்து தப்பித்து வந்திருக்க முடியாது என்றே எனக்குத் தோன்றுகிறது. அப்படித் தோன்றுவதற்கு வலுவான காரணங்களும் என்னிடம் உள்ளன. தமிழ்த்திரைப்படம் என்று இங்கு உருவாக்கி வைக்கப்பட்டுள்ள சட்டகத்தில் தொடங்கி நம்மிடம் ஏராளமானக் கோளாறுகள் உள்ளன.

நமது அடிப்படையானக் கோளாறுகளுள் ஒன்று, நாம் கற்றுக் கொண்டிருக்கிற புனைவுகளோ என்று தோன்றுகிறது.

புனைவுகள் என்று சொல்லும் போது புனையப்பட்ட பனுவல்களை மட்டுமல்ல, நாம் கைகொண்டிருக்கிற கதை புனையும் முறையையும் சேர்த்தே தான் சொல்ல விரும்புகிறேன். நமது கதைகளிலும், கதைகளைக் கட்டுகிற முறையியலிலும் அடிப்படையான சிக்கல் ஒன்று இருப்பதாகத் தோன்றுகிறது. அந்த சிக்கல், முறையியல் சார்ந்த சிக்கலாக இருப்பதால் நாம் என்ன யோசித்தாலும் அதைத் தனது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தர்க்கத்திற்குள் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. அவ்வாறு கொண்டு வந்து சேர்க்கும் போது நமது ஆரம்ப யோசனை எவ்வளவு தான் நேர்மையானதாக இருந்தாலும் அதன் இறுதி வெளிப்பாடு, அதாவது அது கதையாக வெளி வந்து சேரும் போது, நம் கருத்தியலுக்கே எதிர்மறையானதாக இருந்து விடும் ஆபத்தை அது அதிகமாய் கொண்டிருக்கிறது.

இதை வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சொல்லாடலின் ஒழுங்கிற்குள் சிக்கிக்கொண்ட தமிழ் கதை சொல்லிகள் என்று சொல்ல வேண்டும். கேட்கும் போது லேசாய் தலையை சுற்றுவது போல் தோன்றினாலும் விளங்கிக் கொள்வதற்கு எளிமையான கருத்தாக்கங்கள் இவை. நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த உலகம் பருப்பொருட்களால் மட்டுமல்ல அரூபமான, ஏராளமான சிந்தனை சரடுகளாலும் நிரம்பியுள்ளது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். இப்பொழுது அந்த சிந்தனை இழைகள் நம்மை சுற்றி குறுக்கும் நெடுக்குமாய் ஒடிக்கொண்டிருப்பதாய் கற்பனை செய்யுங்கள். சிக்கலான வலைப்பின்னல் போன்ற ஒரு மாயத்தோற்றத்திற்குள் தான் நாம் சதா சர்வமும் பயணித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை இப்போது உங்களால் உணரமுடிகிறது. ஏறக்குறைய ராட்சத சிலந்தி வலை போன்ற அமைப்பொன்றில் நாம் எல்லோரும் ஊர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த சிலந்தி வலையில் தான் நாம் குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து திரிந்து யோசித்துக் கொண்டிருக்கிறோம். அந்த அலைச்சலில் வலையில் சிக்கிக்கொண்டிருக்கும் கருத்தாக்கங்களை வேட்டையாடி கபளீகரம் செய்கிறோம். இது நமது வலை, நமது ராஜ பாட்டை, நமது ராஜ்ஜியம், நமது யோசனை, நமது சித்தாந்தம் என்று களிப்படைகிறோம். ஆனால், உண்மையில் அது யோசனை தான், சித்தாந்தம் தான் என்றாலும் அந்த வலைப்பின்னலை 'நமது' என்று சொந்தம் பாராட்டிக்கொள்வது கொஞ்சம் அதிகபட்சமாகத் தோன்றுகிறது. ஏனெனில், அது 'நமது சிந்தனை' என்று சொல்வதைக்காட்டிலும், அந்த வலைப்பின்னல் நம்மையெல்லாம் பார்த்து 'இவர்கள் அனைவரும் எனது கருவிகள்' என்று சொல்வது சரியாக இருக்கும்.

ஆச்சரியப்படும் வகையில், அந்த வலைப்பின்னல், அவ்வாறு என்றைக்குமே சொல்லிக்கொள்வது இல்லை. மாறாக, அது நாம் சிறுபிள்ளைகள் போல பிதற்றிக்கொள்ளும், 'இது எனது பின்னல், இது எனது சரடு, இது எனது யோசனை' என்பதைத் தான் புன்சிரிப்போடு ஆதரித்து வந்திருக்கிறது. நாம் அப்படித்தான் உரிமை கொண்டாட வேண்டும் என்றும் சொல்லித்தருகிறது. அதன் வழித்தடங்களில் பயணித்து, அது சொல்லித்தந்த சாகசங்களை செய்து, அது காட்டித்தந்த நபர்களோடு உரையாடி, அது கட்டமைத்திருக்கிற இருள்வெளிகளை அது சொல்லித்தந்த அது சொல்லித்தந்த ஜாக்கிரதையோடும் பயத்தோடும் கடந்து, அது தொடர்ச்சியாய் தந்து கொண்டிருக்கும் உத்வேகத்தோடும், உற்சாகத்தோடும் வலையில் சிக்கிக்கொண்டிருக்கிற கருத்துருவங்களை வேட்டையாடி, தோள்களில் போட்டுக் கொண்டு, வீரனைப் போல திரும்பும் நம்மை அந்த வலைப்பின்னல் சாகசக்காரன் என்று சொல்லி கொண்டாடவே செய்கிறது.

இந்த சாகசத்தில், சுயமானது என்று சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை என்றாலும், நாம் செய்த அத்தனை காரியங்களும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவை என்றாலும், நாம் இல்லையென்றாலும் இன்னொரு நபர் இதே காரியத்தை இதே நேர்த்தியோடு செய்துவிடக்கூடும் சாத்தியம் நூறு சதவீதம் உண்டு என்றாலும், அந்த வலைப்பின்னல் நம்மை அதி புத்திசாலியாகவும், அதீத வல்லமையுடையவனாகவும் யோசிக்க செய்து, நாம் தொடர்ந்து அது போன்ற சாகசங்களுக்கு செல்லவும், நம்மைப் பார்த்து பலரும் அவ்வீர விளையாட்டில் ஈடுபாடு காட்டவுமான சூழலை வெற்றிகரமாக உருவாக்கிவிடுகிறது. இது தான் அந்த வலைப்பின்னல் என்ற சொல்லாடல்களின் தந்திரம்! அது, தான் சர்வ வல்லமையுடனிருப்பதை என்றைக்குமே பகட்டிக்கொண்டது இல்லை; பகட்டுவது இல்லை என்பதை விடவும் 'தனது' சர்வ வல்லமையை 'நமது' வல்லமையாக அது தோற்றம் காட்டுகிறது. நம்மை நம்ப வைத்து அதன் பின் சதிராடுகிறது.

எல்லா சமூகங்களும் இப்படியான வலைப்பின்னல்களால் தான் நிரம்பியுள்ளன. இந்த சிக்கலுக்குள் தான் நாம் ஒவ்வொருவரும் பிறக்கிறோம். அந்த சிக்கலைத் தான் கற்றுக்கொண்டு பேசவும் எழுதவும், வரையவும், நடனமாடவும், நடிக்கவும், இசைக்கவும் தொடங்குகிறோம். ஃபூக்கோவின் வார்த்தைகளில் சொல்வதானால், நமக்கு முன்னால் அந்த 'பேச்சு' ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கிறது; நாம் செய்ய வேண்டியதெல்லாம் அதனோடு போய் இணைந்து கொள்வது மட்டுமே. அந்த பேச்சு விட்ட இடத்திலிருந்து நாம் தொடங்க வேண்டும்; அது சொல்லக்கூடிய சுதந்திரங்களை அனுபவித்து, அது விதிக்கக்கூடிய நிர்பந்தங்களை கடைபிடித்து வெற்றிகரமாய் பேசி முடிப்பதே நமது சவாலாக இருக்கிறது.

இந்த வலைப்பின்னலைத்தான் நாம் சொல்லாடால் என்று சொல்கிறோம். நம்மை சுற்றி ஏராளமான சொல்லாடல்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சொல்லாடலுக்குள் நுழைவதற்கு ஒவ்வொருவரும் அனுமதிச்சீட்டைப் பெற வேண்டியிருக்கிறது. இதற்கு அச்சொல்லாடல் சொல்லக்கூடிய விதிமுறைகளை நாம் கடைபிடிக்க வேண்டியிருக்கிறது. அந்த விதிமுறைகளை நல்லபிள்ளையாய் செவ்வனே கற்றுக்கொண்டவர்களை அச்சொல்லாடல்கள் மடியில் வைத்து கொஞ்சத் தொடங்குகிறது. இலக்கியம், அறிவியல், கலை, சமயம், கல்வி, சட்டம், தத்துவம் என்று எதை எடுத்துக் கொண்டாலும் இது தான் நடைமுறை. முதலில் அச்சொல்லாடல்கள் விதிக்கக்கூடிய தகுதிகளை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்; அதன் பின் நீங்கள் அதன் கருணைக்காக காத்திருக்க வேண்டும். அது உங்களை தீவிரமாகக் கண்காணித்து அதன் பின் நீங்கள் அணிந்து கொள்ள வேண்டிய சீருடைகளையும், அமர வேண்டிய மேடையையும், உங்களுக்கான இருக்கையையும் வழங்குகிறது. இதன் பின் நீங்கள் "உண்மையைத் தேடும் உங்கள் பயணத்தை' சந்தோஷமாய் மேற்கொள்ளத் தொடங்குகிறீர்கள்.

இதில் வருத்தமான வேடிக்கை என்ன தெரியுமா? அச்சொல்லாடல் விதித்த சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் விதிமுறைகளையும் பேணத்தொடங்கிய கணம் முதலே "நீங்கள்' உங்களை இழந்து அச்சொல்லாடலாகவே மாறிப்போனீர்கள் என்பது தான். அந்த வலைப்பின்னலுக்குள் நுழைந்து பயணப்பட தொடங்கிய பின்பு, நீங்கள் தேடுவதாய் சொல்லும் உண்மையும், அதனைத் தொடர்ந்து அடைந்ததாய் களிப்புற்று சொல்லும் உண்மையும் அச்சொல்லாடல் கண்டுபிடிக்க விரும்பிய உண்மையே தவிர நீங்கள் சுயமாய் தேடும் உண்மையல்ல. சரி, அதனாலென்ன? உண்மையை அடைவது தானே நமது பயணத்தின் நோக்கம். அதைத் தானே அடைந்தோம். இதில் கிலேசமடைவதற்கு என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். "உண்மை' என்பதும் கூட புனைவு தான் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? சிரமப்படுவீர்கள் என்பது தான் எனது அனுபவம். ஏனெனில் "உண்மை' என்பது கட்டக்கடைசியானது என்றும், எனவே அது ஒன்றே ஒன்றுதான் என்றுமே நீங்கள் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறீர்கள். "உண்மை' ஒன்று அல்ல, கட்டக் கடைசியுமானது அல்ல! அது புனையப்பட்டது என்பதால், பலவகைப்பட்டது, மாறக்கூடியது, விதவிதமானது!

இதை விளங்கிக்கொள்வதற்கு சற்று சிரமமாக இருந்தால், நாம் வேறொரு திசையிலிருந்து இதைப்பார்க்க முயற்சிக்கலாம். நம்மை சுற்றிலும் சொல்லாடல்கள் வலைப்பின்னல்கள் போல் நிரம்பியுள்ளன என்றும், அதுவே நம்மை தீர்மானிக்கிறது என்றும் சொன்னோமல்லவா, இந்த சொல்லாடல்களை யார் நிர்வகிப்பது, அதன் சட்டதிட்டங்களை யார் தீர்மானிக்கிறார்கள், யாருடைய கைப்பாவையாக அல்லது சேவகனாக இந்த வலைப்பின்னல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற கேள்வி உங்களுக்கு தோன்றியதா? ஆம் என்றால் நல்லது. இல்லையென்றாலும் பரவாயில்லை. சொல்லாடல்கள் நிர்வகிக்கப்படுகின்றன; அவற்றை வழி நடத்துபவர்கள் என்று சிலர் இருக்கிறார்கள் என்பது தான் இங்கு முக்கியம். இந்த இடத்தில், பூக்கோ "நிறுவனம்' என்றொரு கதாபாத்திரத்தை அறிமுகம் செய்கிறார். இந்த நிறுவனம் சமூகத்தளத்தில் எப்பொழுதும் "அதிகாரத்தோடே' நெருக்கமாக இருந்து கொண்டிருக்கிறது.

அதிகாரம் என்றால் சமூகப்பண்பாட்டு பொருளாதாரக் காரணிகளைத் தீர்மானிக்கக்கூடிய அதிகாரம். யார் யாருக்கு என்னென்ன அந்தஸ்து, யார் யாருக்கு மூலதனங்கள் பகிர்ந்து தரப்பட வேண்டும், யார் யார் சமூகத்தின் தீர்மானிக்கிற சக்திகளாக விளங்க வேண்டுமென்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம். இந்த அதிகாரத்திற்கான போராட்டமே சமூக அசைவுகளாக வெளிப்படுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த அதிகாரத்தை கைப்பற்றும் சமூகக்குழு "நிறுவனமாக' மாறிக்கொள்கிறது; அதன் பின் அச்சமூகத்தின் சொல்லாடல் என்ற வலைப்பின்னலை ஆட்சி செய்யத் தொடங்குகிறது, தனக்கு சாதகமான "உண்மை' தான் ஒரே உண்மை என்று நம்பவைக்கிறது. அதை நோக்கியே நாமெல்லாரும் பயணப்பட வேண்டும் என்று நமக்குக் கற்றுத் தருகிறது. அவ்வாறு பயணம் மேற்கொள்ளும் நபர்களை அங்கீகரித்து தனது அதிகாரத்தின் சிறு துளிகளை அவர்களுக்கு சுவைக்கத் தருகிறது. இச்சிறுஅதிகாரத்துளியின் சுவைக்காக நாம் அந்தக் குறிப்பிட்ட ஒரே உண்மையைத் திரும்பத் திரும்பக் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறோம்.

இப்பொழுது விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். ஏற்கனவே கட்டப்பட்ட சொல்லாடல்களில் நுழைந்து உண்மையைக் கண்டுபிடிப்பது என்பது சமூகத்தின் அதிகார நிறுவனங்களுக்கு சாதகமான உண்மையத்தான் என்பது இப்பொழுது விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். இந்தச் சொல்லாடல் வலைப்பின்னலில் மிகவும் சக்தி வாய்ந்ததும், ஏராளமான பாதகங்களை விளைவிப்பதுமான சொல்லாடல் தமிழில் நிலவும் "புனைவு' என்ற சொல்லாடல் தான். தொன்மங்களை உருவாக்குவதிலிருந்து இன்றைய பிரபல புனைவான "திரைப்படங்களை' உருவாக்குவது வரை தமிழ்ச் சமூகத்தின் "பொது அறிவு' என்பது இத்தகைய புனைவுகள் உருவாக்கி வைத்தது தான். பழைய காலத்தில் தொன்மங்கள் மூலமாகவும், பழமரபுக்கதைகள் மூலமாகவும், நாட்டுப்புறக்கதைகள் மூலமாகவும் திரும்பத் திரும்ப உருவாக்கப்பட்ட இத்தகைய "அதிகார உண்மை' இன்று திரைப்படங்கள் மூலமாகவே பெரிதும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனாலேயே திரைப்படங்களின் மூலமாகப் பரப்பப்படும் இந்தப் "பொது அறிவு' எவ்வளவு தூரம் நேர்மையானது என்றும் நாம் நம்பக்கூடிய சமத்துவ சமூகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் நவீன குணங்கள் அதற்கு உள்ளனவா என்றும் நாம் கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது.

ஏழாம் அறிவு என்ற திரைப்படத்திற்கான கதைக்கருவாக "மறந்து போன அல்லது தொலைந்து போன மரபை மீட்டெடுத்தல்' என்ற யோசனை வந்து சேரும் முன்பே வெற்றிகரமான தமிழ்த்திரைப்படம் ஒன்றின் சூத்திரம் என்ன என்பது அக்குழுவினரின் மனதிற்குள் ஆணியடித்தாற் போல் உட்கார்ந்திருக்கிறது. அதுவும் இக்குழுவினரைப்போல் அமெரிக்கத் திரைப்படங்களை முன்மாதிரியாகக்கொண்டு படங்களைத் தயாரிப்போருக்கு ஒரு விஷயத்தி எவ்வாறு வியாபாரப் பண்டமாக மாற்றுவது என்பது நன்றாகத் தெரிந்திருக்கிறது. "வெற்றி பார்முலா' என்று அழைக்கப்படும் இச்சூத்திரம் "உலகைக்காக்க வந்த அவதாரம்' என்ற தொன்மக் கதைக்கூறைத்தான் தனது தொடக்க புள்ளியாக வைத்திருக்கிறது.

திரைப்படத்தின் வியாபார கோஷம் தமிழர்களின் பெருமையை...' என்று பன்மையில் பேசுகிறது என்றாலும், தமிழ்த்திரைப்பட சூத்திரம் இந்தப் 'பன்மை' கதாபாத்திரத்தை தனக்குள் என்றைக்குமே அனுமதித்ததில்லை; அது 'ஒற்றை' கதா நாயகனையே கற்பனை செய்யச்சொல்கிறது. 'அறிவை மீட்டெடுத்தல்...' என்பது தான் கதையின் மைய முடிச்சு என்பதால், 'அறிவு என்றைக்குமே தனிமனிதர்களின் உருவாக்கமாக இருந்ததில்லை; அது கூட்டாகவே உருவாக்கப்படுகிறது. இன்னும் குறிப்பாக இத்திரைப்படம் பேசுகிற மருத்துவம், போர்க்கலை போன்றவை என்றைக்குமே தனிமனிதர்களால் உருவாக்கப்பட்டதில்லை' என்பதை விளங்கிக்கொள்ள பெரிய படிப்பெல்லாம் தேவையில்லாமல் இருந்தும் இத்திரைப்படக்குழு தவறு செய்கிறது என்றால், தமிழ்த்திரைப்படம் என்ற சொல்லாடல் அவர்களை எவ்வளவு தூரம் தன்வயப்படுத்தியிருக்கிறது என்றும், எந்தவித படைப்புணர்வுமில்லாமல் எவ்வாறு மொன்னையாய் இந்தப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

இந்த ஆரம்ப சறுக்கலுக்குப்பின்பு மீதக்கதையை பின்னியதெல்லாம் அந்த 'ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட சொல்லாடல்' தான். அந்த சொல்லாடல் இடைக்கிடை தான் உருவாக்கி வைத்திருக்கிற 'பொதுப்புத்தி' அரசியலையும் வெளிப்படுத்தி தனது இருப்பை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. 'தமில் எவ்லவ் பெர்ய முளி தெர்யும்மா?' என்று கேட்கிற கதாநாயகி (எழுத்துப்பிழையெல்லாம் இல்லை, நேட்டிவிட்டிக்காக அந்தப் பெண்ணின் பேச்சு மொழியை அப்படியே எழுதியிருக்கிறேன்), அடுத்த நிமிடமே இந்த நாட்டின் சாபம் என்று வரிசைப்படுத்துகிற மூன்று விஷயங்களான 'ரிஸர்வேஷன், ரெக்கமெண்டேஷன், கரப்ஷன்' பற்றி சொல்லும் போதும், அதனால் தான் 'பெர்ய மூலைலாம் வெலினாட்டுக்கு போயிர்து' (திரும்பவும் நேட்டிவிட்டி தான்) என்று பேசும் போதும் ஏழாம் அறிவு திரைப்படக்குழுவை மட்டுமல்ல, 'தமிழ், தமிழ்' என்று பேசும் ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் பார்த்து சிரிக்கத் தான் தோன்றுகிறது. புர்ச்சி தலைவரின் வழியே தமிழ் சமூகத்தை காக்க வந்த புண்ணியவான் களை என்ன தான் சொல்வது?

இதை விட மோசம், கதாநாயகனுக்கு பூர்வ ஜென்ம ஞாபகத்தைக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி, அவனை பனிக்குடம் போன்ற ஒன்றிற்குள் தொங்கவிட்டு வேடிக்கை பார்ப்பது. உப நயனம், அதாவது ஞானக்கண்ணை திறக்கிறார்களாம்; கதா நாயகன் இருபிறப்பாளனாம்; நம்மவூர் பிராமணர்கள் பூணூல் மாட்டுகிறேன் என்று ஒரு கதையை சொல்லிக்கொண்டிருக்கிறார்களே அது போலவாம்! ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால், அத்தனை சடங்கு ஆச்சாரங்களிலும் திறக்காத ஞானக்கண் சீனாக்காரன் நையப்புடைத்ததும் செத்தேன் பிழைத்தேன் என்று திறந்து கொள்கிறது.

இது போல் ஓராயிரம் வேடிக்கைகள் நிறைந்த ஏழாவது அறிவைப் படைத்த குழுவினருக்கும் இந்த நேரத்திற்குள் அதைப்பார்த்து 'தான் தமிழனாய் பிறந்தது' குறித்து பெருமிதப்பட்டு ஆனந்தக் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும் ரசிகக் கண்மணிகளுக்கும் நாம் இறுதியாய் ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கொள்ளலாம். போதிதர்மனைப்பற்றிய தகவல்களை இணையத்தில் போய் தேடினால் ஆச்சரியமான் விஷயங்கள் எல்லாம் கிடைக்கின்றன. போதிதர்மன் ஒரு வேடிக்கையான மனிதராகவே வாழ்ந்திருக்கிறார்; வேறெந்த பௌத்த துறவிகளையும் போல இடக்கு மடக்காக பேசித் திரிவது தான் அவரது இயல்பாக இருந்திருக்கிறது; சீன நாட்டு அரசனொருவன், 'புத்தர் இன்னமும் உயிர் வாழ்கிறாரா?' (பௌத்த சமயம் 'ஆமாம்' என்று தான் சொல்லிக்கொண்டிருக்கிறது) என்று ஆவலாகக்கேட்டதற்கு, படக்கென்று 'இல்லை' என்ற பதிலை சொல்லியிருக்கிறார்; 'நான் பௌத்த மடாலயங்களுக்கும், மதத்திற்கும் செய்த உதவிகள் அனைத்தும் நல்ல காரியங்கள் தானே?' என்று கேட்டதற்கும் 'இல்லை' என்றே பதில் சொல்லியிருக்கிறார்.

பின்னொரு முறை ஷாவ்லின் மடாலயத்தினர் தியான முறைகளை சொல்லித்தாருங்கள் என்று கேட்ட போது எதிரிலுள்ள சுவரையே வெறித்துக்கொண்டிருக்கும் தியான முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஷாவ்லின் மடாலயத்திற்குள் வராமல் பல வருடங்களாக மலைக்குகையிலேயே 'சுவர்வெறித்தலை' செய்து கொண்டிருந்திருக்கிறார். வெளிப்பார்வைக்கு பைத்தியக்காரத்தனம் போலத்தெரியும் இச்செயல்பாடுகள் தான் போதிதர்மனின் தத்துவமாக விளக்கப்படுகின்றன. இதைத் தான் படைப்பு என்று சொல்கிறோம். ஏற்கனவே சொல்லப்பட்ட பதில்களைத் தவிர்த்து விட்டு புதிய பதில்களைத் தேடிச்செல்வதே உங்களை தீவிரமான செயல்பாட்டாளர்களாக மாற்றுகிறது. ஆனால், அப்பொழுது உங்களை சுற்றியிருப்பவர்கள் உங்களை ஏளனமும், கேலியும் செய்வார்கள்; பைத்தியம் என்று சொல்வார்கள்; யதார்த்தத்தை புரிந்து கொள்ளாதவர்கள் என்பார்கள். நீ பேசுவது விலைபோகாது என்பார்கள். நடைமுறைக்கு ஒத்துவராது என்பார்கள். போதிதர்மனைப் போலவோ அயோத்திதாசர் போலவோ இன்னும் கண்டறியப்படாத பலரைப் போலவோ சமூகத்தால் மறக்கப்பட்டிருப்பார்கள். இன்றைக்கு அடித்தளமக்கள் ஆய்வுகள் என்று பேசுவோரைப் பார்த்து இளக்காரமாய் சிரிப்பது போல் சிரிக்கப்பட்டிருப்பார்கள்.

ஆனால், சமூகம் இந்த பைத்தியக்காரர்களால் தான் முன்னகர்ந்து கொண்டிருக்கிறது; வியாபாரிகளால் அல்ல!

Pin It