தமிழ் மக்களுக்காக மேடை தோறும் ஆடிப்பாடிய பாவலர்கள் மிகப்பலர்.

       “தாய் நாட்டிற்காகத் தம்

       உடல் பொருள் ஆவியை

தந்த தியாகிகளுக்கும் வணக்கம் “ என்று தொடங்கி, சென்ற நூற்றாண்டின் முற்போக்கு மேடைகளில் கூத்தும் பாட்டுமாகத் தமிழகமெங்கும் சுற்றியலைந்து மக்களைத் தட்டி எழுப்பினார் வெ.நா. திருமூர்த்தி, மதுரையில் எம்.ஆர்.எஸ்.மணி, மணவாளன், ஐ.வி.சுப்பையா, எம்.எம்.மாணிக்கம், சங்கரராஜு, ஆனந்த ராஜு, கே.பி. ஜானகி அம்மா, சுப்புலட்சுமி முதலியோரும் மேடைகளில் ஆடிப்பாடி மக்களை விழிப்படையச் செய்தார்கள்.

       “விடுதலைப்போரில்

       வீழ்ந்த மலரே தோழா

       வீரர் உமக்கே வணக்கம் வணக்கம்..”

எனத் தொடங்கி, மக்கள் துயர் தீரத் தம் உயிரைப் பாட்டாக்கிப் பரவ விட்டவர்கள் இவர்கள்.

கவி.வெ.நாரா, எள்ளுண்டை நடேசன், வில்லியனுநீர் ஜெயராமன் வாத்தியார், தியாகி சக்கரை, சு.ஜெயராமன், எம்.கே.ராமன், சுப்பராயலு முதலியோர் புதுவை நாடு முழுவதும் சுற்றியலைந்து ஆடல் பாடல்கள் மூலம் மக்கள் எழுச்சிக்கான முயற்சிகளைச் செய்தார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் கவிஞர் சடையப்பனும், சேலம் மாவட்டத்தில் வாழப்பாடிச்சந்திரனும், மதுரையிலிருந்து பாவலர் வரதராஜனும் இம்மாதிரி முயற்சிகளைத் தங்கள் வாழ்நாள் கடமையாகச் செய்தார்கள்.

இவர்கள் அடியொற்றி, பூதை நல்லதம்பி தன் காலம் முழுவதும் தீவிரமாகப் பணியாற்றினார். இன்று நாட்டுப்புற இசைமேதை கே.ஏ. குணசேகரன், மக்கள் பாடகர் கைலாசமூர்த்தி, இவர்களின் வழியில் வீரியத்தோடு மேடையில் மக்களுக்காக ஆடிப்பாடித் தொண்டாற்றி வருபவர் மு. ஆதிராமன்.

ஆதிராமனை எத்தனையோ முறை மேடையில் பார்த்திருக்கிறேன். பாமர மக்கள் பல்லாயிரம் பேர் ஆர்வத்தோடு கூடி இருப்பார்கள். முழுக்கால்சட்டை, அரைக்கைச் சட்டையோடு, எந்த பந்தாவுமில்லாமல் மேடை ஏறுவார் அவர். கைகளை ஆட்டி, காலால் தாளம் போட்டு, உடம்பை நளினமாகக் குலுக்கி, மென்மையான குரலில் அவர் பாடத் தொடங்குவார். அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், ஏன் எந்தத் தீவிர அரசில் வாதிக்கும் திறக்காத மக்களின் மனக்கதவுகள், பூக்கள் மலர்வது போல மெல்ல மலர்ந்து திறக்க, மேடையின் காட்சிகளும் குரல்களும் உள்ளே நுழைந்து, அவர்கள் உணர்வில் கலந்து, உயிரில் நிறைந்து விடும்.

கடவுள் வணக்கத்துக்குப் பதிலாக ஏழை எளிய அவையோருக்கு வணக்கம் சொல்லுவார் ஆதிராமன். தமிழ்த் தாய் வாழ்த்துப் பாட வந்தால், பண்ணித் தமிழையும் சினிமாவின் மொண்ணைத் தமிழையும் வைது, நல்ல தமிழுக்கேங்குவார். மாகவிஞர். பாரதி, தியாகத்தலைவர் ஜீவா, மக்கள் தலைவர் சுப்பையா, நாடகத் தலைவர் சங்கரதாசர், புதுவையிலிருந்து புறப்பட்டுத் தமிழகமெங்கும் உழைக்கும் மக்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கும் மக்கள் ஒளியாம் தமிழ் ஒளி, எல்லோரையும் பாடுவார் அவர்.

“மண்ணின் மீது பெருங்காதல்

மணுவின் மீது கடுங்கோபம”;

கொண்டு பாயும் தமிழ் ஒளியின் கவிதையாற்றலைப் போற்றுவார். பட்டுக் கோட்டையாரை பாடுவார். பெருந்தலைவர் காமராசரையும், பெருந்தோழர் ஜீவாவையும் உரையாட விட்டுக் கரையாத மனதையும் கரைப்பார். தொட முடியாத தளங்களையெல்லாம் தன் கலை மூலம் தொட்டுத் தொட்டு துலக்குவார்.

கடவுள்களைப் பற்றி அவர் கைவசம் நிறையப் பாடல்கள் உண்டு. மூடபக்தியைச்சீ.. என்று இகழ்கிறார். தமிழர்களின் தெய்வங்கள் அவர்கள் போற்றிக் கொண்டாடும் முன்னோர்கள், அந்த முன்னோருக்குப் பிடித்தவற்றைப் படைத்து, அவர்களுக்கு உகந்தவற்றை உகந்தவாறு படித்து தெய்வ வணக்கத்தைச் சமூக வாழ்வின் ஒரு கூறாக்கிக் கொண்டவர்கள் தமிழர்கள். இவர்கள் வணக்கங்களினுள்ளே புகுந்து, தங்கள் நம்பிக்கைகளையும், சடங்குகளையும் அவற்றினுள் ஏற்றி, புரியாத வடமொழியை நுழைத்து, அறிவையும் அறத்தையும் அழித்து, நம்பிக்கையையும், சடங்கையும் வளர்க்கும் நயவஞ்சகத்தனத்தை,

“என்னுடைய துன்பத்துக்கு கிரகத்தோட பெயரைச்சொல்லி

எம்மனசை ஏன்டா தினம் ஒடிக்கிறே.

பாவப்பட்ட மொழி எங்க தமிழுன்று சொல்லிக்கிட்டு

யாருகிட்ட புழுகுமூட்டை அவிழ்க்கிறேஸ....”

என வார்த்தைச் சாட்டைகளால் விளாசுகிறார். எந்த அறிவாளியும் மக்களிடம் கொண்டு செல்ல முடியாத இந்தக் கருத்துக்களை, எவ்வளவு எளிதாக அவர்கள் மனதில் ஏற்றிவிடுகிறார்!

மனிதர்களுக்குள் சாதி ஏற்றத்தாழ்வு இருப்பது போலவே, சாமிகளுக்குள்ளும் சாதி ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. பூனூல் போட்டு, காய்கறி தின்னச் சொல்லிச் சுதந்திர மனிதனை வைதீகத்துக்கு அடிமைப்படுத்துகிறார்களே, அதே போல இன்று சாமிகளையும் சைவமாக்கிச் சமஸ்கிருதம் ஓதி, கும்பாபிசேகம் நடத்தி, உயர் சாமிக்கு அடிமைப்படுத்துகிற பண்பாட்டு அனியாயங்களுக்கும் சாட்டையடி கொடுக்கிறார் ஆதிராமன்.

இந்த சாமிப்பாட்டுகளின் உச்சம் “பாவம்பிள்ளையார்”; பிள்ளையார் வட நாட்டுக்காரர். வேடிக்கையும், வினோதமுமான பிறப்புக்கதைகளுக்குச் சொந்தக்காரர். ஆத்தங்கரை, குளத்தங்கரையில் ஒரு காலத்தில் தனக்குரிய மனைவியைத் தேடித் தளராமல் காத்திருந்தவர். திலகர் அவரை மிகச்சாதுர்யமாகக் கையில் எடுத்துப் பார்ப்பனீயத்தின் குறியீடாக உருமாற்றி, சுதந்திரப் போர்க்களத்தின் ஒரு தளபதியாக்கி, ரோட்டில் இறக்கிவிட்டார். ஒரு நூற்றாண்டு வளர்ந்த அவர். இன்று இந்துத்துவத்தின் குறியீடாக உயர்ந்து மதவாதப்போரின் தளபதியாக ஆயுதத்தோடு அலைகிறார். அந்தப் பிள்ளையார் போரின் முடிவில் படும்பாட்டை பாவம் பிள்ளையார் என்னும் பாடலாக அருமையாகப் பதிவு செய்திருக்கிறார் ஆதிராமன் படித்துப் பாருங்கள். வாய்விட்டுப் பாடிப்பாருங்கள். உங்களுக்குத் தோன்றிய முறையில் அசைந்து ஆடியும் பாருங்கள். பாடலின் உயிர் பளீரென உங்கள் முன் தோன்றிவிடும்.

இளைச்சுப் போன முருகன், டிகிரி ஜோசியம், கண்ணாறுப்பூசணி, இவைகளும் வீரியமான மூடமை எதிர்ப்புப் பாடல்கள். தகப்பன் கையிலிருந்த மாம்பழத்துக்காக முருகனும் பிள்ளையாரும் போட்டியிட்டு, முருகன் தோற்றுப் போன கதை எல்லாருக்கும் தெரிந்ததே. மிகமிக ஆழமான கதை இது. முருகன் தமிழ்ப் பண்பாட்டின் குறியீடு. பிள்ளையார் வைதீகப் பண்பாட்டின் குறியீடு. தமிழ்ப்பண்பாட்டுக்கும், வைதீகப்பண்பாட்டுக்குமிடையே ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக்காலத்தில் மோதல் ஏற்பட்டது. தமிழ்ப்பண்பாடு என்பது அறிவும், அறமும் முதன்மை படுத்தப்பட்ட பண்பாடு. வைதீகப்பண்பாடு இதற்கு நேர் முரணானது. நம்பிக்கையும் சடங்கும் முதன்மைப் படுத்தப்படும் பண்பாடு அது. இரண்டும் மோதுகின்றன கதையில். அறிவும் அறமும் முதன்மையாகக் கொண்ட தமிழ்ப் பண்பாடானது. நம்பிக்கையும் சடங்கும் முதன்மையாகக் கொண்ட வைதீகப் பண்பாட்டினால் வீழ்த்தப்படுகிறது. அதன் பண்பாட்டுக் குறியீடு தான் கதை. தமிழ் மக்கள் எப்பொழுது இந்தப்பிரச்சினைகளை ஆழமாக விவாதிப்பார்களோ, விடுதலைப் பெறுவார்களோ, தெரியவில்லை.

டிகிரி ஜோசியம் என்னும் பாடலும் மிக முக்கியமானது. மேலே சொன்னபடி அறிவும் அறமும் ஒடுக்கப்பட்டு நம்பிக்கைகளும், நம்பிக்கை சார்ந்த சடங்குகளும் ஆதிக்கம் பெற்று வரும் இன்றையச் சூழலில், கொஞ்ச நஞ்சம் மிச்சமிருக்கும் அறிவையும் அறத்தையும் முற்றிலும் போக்கி விடுவதற்காகவே பாடத்திட்டத்தில் ஜோதிடத்தைச் சேர்க்கும் முயற்சி இடைக்காலத்தில் நடந்தது. வானவியல் அறிவில் தமிழ் சமூகம் ஓங்கி நின்ற காலம் ஒன்று இருந்தது அது சோதிடமாக ஒடுக்கப்பட்டு, மக்கள் வாழ்வை இருள் சூழ்ந்தது. இந்த இருளை நிரந்தரமாக்குவதற்காக, ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட அரசு தொடங்கிய மூடத்திட்டத்தைப்படு கேலி செய்கிறது இந்தப் பாடல்.

இதே போல, மனித குலத்தை மேம்படுத்துவதற்காகப் பிறந்த சினிமா இன்று மக்களை எப்படியெல்லாம் சீரழிக்கிறது எனப்பல பாடல்கள் விளக்குகின்றன. மனிதகுல சமாதானம், பெண் ஆண் சமத்துவம், சாதிய, சமத்துவம், உலகமயமாக்கலின் கொடுமைகள் என சமூக விழிப்புணர்ச்சிப்பாடல்களின் தொகுப்பே இந்த நூல்.

மேடையில் பாடுவோருக்குப் பயன்படும் நூல் இது. ஆடிப்பாடுவோருக்கு இது அதிகம் பயன்படும். அமைதியாக உட்கார்ந்து, ஆழ்ந்து படிப்போருக்கும் பயன்படும். கலை நேர்த்திக்காக எழுதப்பட்டவை அல்ல இவை. அனுபூதி நிலையில் உருவானவையும் அல்ல. இந்த நாட்டில் பெருவாரியாகக் கிடக்கும் பாமர மக்களைத் தட்டி எழுப்பும் நல்லுணர்வோடு திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. இந்த உணர்வு இருக்க வேண்டியவர்கள் கைகளில் கட்டாயம் இருக்க வேண்டிய நூல் இது.

Pin It