அஸ்தம்பட்டியில் ஒரு டீக்கடையில் நின்றிருந்தார் நாராயணன். டீ குடிப்பதற்காக அவர் வரவில்லை. சே‌லம் மத்திய சிறையில் அடைப்பட்டுள்ள உத்தமலிங்கத்தை ஜாமீனில் எடுக்க. தூரத்துக் சொந்தக்காரரான வக்கில் ஒருவரைத் தடி அங்கு வந்திருந்தார். அப்போது மதியம் மூன்றுமணியிருக்கும். நான்கைந்து கருநீல போலீஸ் வேன்கள் ஏற்காடு ரோட்டிலிருந்து வந்து, அஸ்தம்பட்டியைக் கடந்து சென்றன. குடிநீர் எடுத்துச்செல்லும் நகராட்சியின் மாட்டுவண்டியிலிருந்து ஒழுகும் நீரைப்போல் அந்த வேன்களிலிருந்து ரத்தம் ஒழுகியது. அந்த ரத்தத்துளிகள், இந்தியா குடியரசான சில நாட்களில் அதன் கறுப்புப் பக்கங்களைத் தார்ச்சாலையில் எழுதிச் சென்றன. அங்குக் கூடி நின்றவர்கள் ஜெயிலில் ஏதாவது அச‌ம்பாவிதம் நடந்திருக்கும் எனப் பேசிக் கொண்டார்கள்.

வேன்களைத் தொடர்ந்து வந்த இரண்டு "கம்யூனிஸ்டுங்களெச் சுட்டுக்கொன்னுட்டாங்களாம்' எனச் சொன்னார்கள். நிலைகுறைந்து போன நாராயணனின் கை, கால்கள், நடுங்க ஆரம்பித்தன. உடன்பிறந்த பாச‌த்துடிப்பால் யென் தம்பி உத்தமலிங்கம்? எனக்கேட்டார்.

“அவன் கம்யூனிஸ்டா?”

“ஆமா”

“அப்பொ அவனும் செத்திருப்பான்”

நாராயணனுக்குத் தலை”ற்றியது. நிலத்தில் கால்கள் நிலைகொள்ளவில்லை. ஜெயிலுக்குப்போய் விசாரிப்பதா? வீட்டுக்கு செய்தி சொல்வதா? தடுமாறிய அவர் சிறைச்சாலைக்கு நடந்தார். என்ன நினைத்தாரோ தெரியாது கொஞ்ச‌ம் தூரம் சென்றதும் திரும்பிய அவர்கால்கள், வீட்டை @நாக்கி வேகம் காட்டின.

உத்தமலிங்கம் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்; குகை கட்சி செல்லுக்குப்(கிளை) பொறுப்பாளர். கூட்டங்கள் அவர் வீட்டில்தான் நடக்கும். தோழர்கள் வந்து, வட்டமாக உட்கார்ந்ததும், உத்தமலிங்கம் கூம்பு வடிவிலான அலுமிய விளக்கில் நிறைய எண்ணெய் ஊற்றி நடுவில் வைப்பார். அது எரியத் தொடங்கும். பக்கத்தில் கடலை உருண்டைகள், இரண்டு கட்டுத் திவான் பீடிகள், பனையோலையில் பின்னப்பட்ட ஒரு சிறுபெட்டி. எல்லாரும் பேசிப்பேசிப் புகைப்பார்கள். புகைக் கங்குகளை அந்தப் பெட்டியில் தட்டி விடுவார்கள். இடையே உத்தமலிங்கம் "கிருஷ்ணம்மா' எனக் குரல் கொடுப்பார். வெல்லமும் தூளும் போட்டுக் காய்ச்சிய காப்பிச்ச‌ட்டி வந்து சே‌ரும்; அலுமினிய கிளா”களில் ஊற்றிக் குடிப்பார்கள். விளக்கில் எண்ணெய் தீர்வதும், கூட்டம் முடிவதும் ச‌ரியாக இருக்கும். எல்லாரும் எழுந்து, விரல்களை மடக்கி, கைகளை முறுக்கி, முஷ்டிகளை உயர்த்தி "ரெட் ச‌ல்யூட்' சொல்வார்கள். அதற்குள் கிழக்கு வெளுத்துவிடும்.

இருப்பினும் வருடத்திற்கு முன்புவரை அவர் ஒரு கைத்தறிநெச‌வாளியாகவே அறியப்பட்டிருந்தார். குகை மாரியம்மன் கோயில் அருகே அவர் வீடு. வீடு என்பதை விட கொட்டகை என்பதே பொருந்தும். மூங்கில் படல்களை நட்டு, இருபக்கமும் கட்டியான மண்சே‌ற்றை அப்பி எழுப்பிய சுவர்கள். பனைமரத்தலான நீண்ட உத்திரம். உத்திரத்தின் இரு பக்கங்களிலும் சாய்வாக மூங்கில் பிளாச்”களைக் கட்டி, வேயப்பட்டிருந்தது. உள்ளே குறுக்காகக் கட்டப்பட்ட சுவர் ஒன்று ச‌மையற்கட்டையும் குழிதறியையும் பிரித்திருந்தது. தறிக்கு நேராக மேலே உத்திரத்தில் பேட்டு அட்டை கட்டப்பட்டிருந்தது. அதுவே புடவைக்கான புட்டாக்களையும் முந்தானையையும் வடிவமைத்துக் கொடுக்கும்.

ஜெயராமன் என்ற மாஸ்டர் வீவரிடமிருந்து நூல் வாங்கி உத்தமலிங்கம் நெய்துவந்தார். மாஸ்டர் வீவர் என்றால் தறி முதலாளி. நூலைப் பாவாக்கி, நெய்து, புடவையாக மடித்து அவரிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். எட்டு கஜம் கொடுத்தால் எட்டணா கிடைக்கும். பன்னிரண்டு மணிநேரம் நெய்தால்தான் பதினாறு கஜம் அறுக்க முடியும். ஒரு ரூபாய் வரும். இந்த வருமானத்தில் அவரும் மனைவி கிருஷ்ணம்மாளும் குடித்தனம் நடத்தினார்கள். அவர் இளைய மகன் என்பதால் தாயார் அவருடன் தங்கியிருந்தார்.

உத்தமலிங்கம்போல் நாராயணனும் ஒரு தறி வைத்திருந்தார். அவர் கொட்டகை அங்கிருந்து தெற்கே இரண்டு மூன்று வீடுகள் தள்ளியிருந்தது. அவருக்கு நான்கு குழந்தைகள்.

இரண்டாம் உலகயுத்தம் தீவிரமடைந்தபோது, மதுரை, அம்பாச‌முத்திரம் ஹார்வி மில்கிலிருந்து சே‌லத்துக்குக் கிடைத்துவந்த நூல் நின்று போயிற்று. எகிப்து, சூடான் நாடுகளின் நூல்கள் மட்டுமே தொடர்ந்து இறக்குமதி ஆயிற்று. இந்த நூலைச் சில வியாபாரிகளும் தறிமுதலாளிகளும் ச‌ட்டா வியாபாரம் செய்தனர். ச‌ட்டா வியாபாரம் என்றால் பதுக்கி வைத்து. கள்ளச்ச‌ந்தையில் அதிக விலைக்கு விற்பது. அதையும் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே விற்றனர். பெரும்பான்மை நெச‌வாளர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அதில் உத்தமலிங்கம் குடும்பமும் ஒன்று.

தொழில் முடக்கம் பட்டினியைப் பரிமாறியது. பசிதாங்காத தாய் அவ்வப்போது தண்ணீரைக் குடித்து படுத்துக்கிடந்தார். தாய்ப்பாலும் கஞ்சியும் கிடைக்காத நாராயணன் குழந்தைகளின் கதறல் கொட்டகை கூரையை மோதிமோதி மீண்டன. பதறிப்போனார் கிருஷ்ணம்மாள். "மலையாட்டம் புருச‌னிருந்தும் ஒருவேளெக் கஞ்சிக்கு வளியில்லாமப்போச்சே‌'ண்ணு புலம்பிக் கொண்டிருந்தார். உத்தமலிங்கமோ, வீட்டைக் கவனிப்பதைவிட நெச‌வாளர் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் மும்முரமாக இருந்தார்.

அவரும் தோழர்களும், கூலி நெச‌வாளர்களோடு கலந்து பேசி, பத்துப்பேரோடு கலெக்டர் ஆபீ”க்குச் சென்றார்கள். பதுக்கலைத் தடுத்து எல்லாருக்கும் நூல் கிடைக்கச் செய்யவும், தறிமுதலாளிகள் ஆதிக்கம் செலுத்தும் நெச‌வாளர் கூட்டுறவுச் ச‌ங்கத்தைக் கூலிநெச‌வாளர்களுக்கானதாக மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு எழுதப்பட்டிருந்த மனுவை ஜில்லா கலெக்டரிடம் கொடுத்தார்.

மறுநாள் அவர்கள் எதிர்பார்க்காத கேவலம் ஒன்று அரங்கேறிவிட்டது. கள்ளச்ச‌ந்தை பேர்வழிகள் யோச‌னையின் பேரில் நெச‌வாளர் குடியிருப்புக் பகுதிகளில் கஞ்சித்தொட்டி திறக்க கலெக்டர் உத்திரவிட்டிருந்தார்.

கோதுமைக் கஞ்சி ஒரு பெரிய அண்டாவில் குமிழ்விட்டுக் கொதித்துக்கொண்டிருந்தது. மாரியம்மன் கோயின்முன்பு ஆண்களும் பெண்களும், ஈயப்போகணியும் மண்ச‌ட்டியும் ஏந்தியவர்களாய் கியூவில் நின்றிருந்தார்கள். இதைக்கண்ட உத்தமலிங்கம் தடுமாறிப்போனார். கியூவை உற்றுப்பார்த்தார், அப்போது அவர்கண்ட காட்சி அவரையும் மீறி கண்ணீரைக் கசியச்செய்தது. மனைவி, தாய், அண்ணி, குழந்தைகள் நின்றிருந்தார்கள். ஒவ்வொருவர் முகத்தையும் பரிதாபத்தோடு பார்த்தார் உத்தமலிங்கம்.

உழைக்கத் தயாராக இருக்கும் நெச‌வாளிக்கு நூல்கிடைக்க மாற்று ஏற்பாடு செய்யாது, பிச்சை‌ எடுக்க வைத்திருக்கும் ஆட்சியைக் கண்டு அவர் நெஞ்ச‌ம் கொதித்தது. அவரும் கட்சியினரும் உணவோ உறக்கமோ இன்றி, இரவும் பகலும் அந்த அநீதிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார்கள். அது வீண்போகவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெச‌வாளர்கள் திரண்டார்கள். ஊர்வலம் தாதகாப்பட்டியிலிருந்து குகை வழியாக வந்தது.

"குடிக்க கஞ்சி வேண்டாம்

நெய்ய நூல் வேண்டும்'

"சே‌லை நெய்து உண்பதே தன்மானம்

ச‌ட்டியேந்தி வாழ்வது அவமானம்'

என நெச‌வாளர்கள் மழங்கினார்கள். பெரிய அனல்காற்று ஒன்று வீசியடித்ததுபோல் சாலையோரத்தில் கூடிநின்றவர்கள் பரபரப்படைந்தார்கள். தொடர்ந்து கலெக்டர் ஆபீஸ் முன் தர்ணா நடந்தது.

ஒருவாரத்தில் பேல்பேலாக நூல் வந்தது. கூலி நெச‌வாளர்கள் குதூகலித்தார்கள். "ச‌ட்ச‌டக்.. ச‌ட்ச‌டக்' ச‌த்தம் எல்லா வீடுகளிலும் ஒலித்தது. ஒவ்வொருவருக்கும் குடும்ப அட்டை வழங்கப்பட்டது. கண்ட்ரோல் விலையில் நூல், அரிசி, சிமெண்ணெய், துணி வாங்கி, நிம்மதிபெருமூச்” விட்டார்கள். இது புதிதாக அமைக்கப்பட்ட நெச‌வாளர் கூட்டுறவுச் ச‌ங்கத்தின் சாதனை, உத்தமலிங்கத்தை அதன் தலைவராக்கி நெச‌வாளர்கள் கொண்டாடினார்கள்.

ஏற்கனவே இருந்த நெச‌வாளர் ச‌ங்கத்தின் தலைவர் மாஸ்டர்வீவர் ஜெயராமன், ச‌ட்டா வியாபாரம் செய்தவர். அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி பகுதிகளில் எட்டுகஜம் புடவை நெய்தல் பத்தணா கூலி. இவர் எட்டணாவே கொடுத்துவந்தார். இப்போது அவர் பதுக்கலும் பதவியும் பறிபோயிற்று.

"கேவலம் என்னிடம் கூலி வாங்கிப் பிழைக்கும் உத்தமலிங்கம் தலைவனா?' குமுறினார் ஜெயராமன். அது அவர் வயிற்றில் புளியைச் கரைத்துக்கொண்டிருந்தது. ஓரிருமுறை அடியாட்களை ஏவி தாக்க முயன்றார். ஒவ்வொரு முறையும் நெச‌வாளர் ச‌ங்கம் அவரை எச்ச‌ரித்திருந்தது.

அப்போது, இந்தியாவின் முதல் சுதந்திர தினத்தைக் கொண்டாடி ஆறுமாதமாயிருந்தது. அதன் பின்பு கூடிய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு "அது போலி”தந்திரம் என்றும் நேரு அரசாங்கத்தைத் தூக்கியெறிய வேண்டும்' என்றும் அறைகூவல் விடுத்திருந்தது. அதனால் அர” கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள். ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோரை விலங்கு பூட்டிச் சிறையில் அடைத்தது. இந்தச் ச‌ந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உத்தமலிங்கத்தைப் பழிவாங்க ஜெயராமன் போலீசை‌த் தூண்டிவிட்டார்; போலீசாரும் பொய்வழக்கு ஒன்றை ஜோடித்து அவரைக் கைது செய்யத்தேடினர். அதனால் அவர் தலைமறைவானார்.

பத்து நாட்களாக அவர் வீட்டுக்கு வரவில்லை. அவர் அண்ணன் நாராயணன் "வருவான்' என்றாரே தவிர விபரமாக எதையும் சொல்லவில்லை. கணவருக்கு என்ன ஆச்சி? எங்கு போனார்? எனத்தெரியாது கவலையாய் இருந்தார் கிருஷ்ணம்மாள். அந்தக் கவலையிலும் கணவருக்குத் தெரிவிக்கவேண்டிய மகிழ்ச்சியான செய்தி ஒன்று அவர் உடலிலும் உள்ளத்திலும் பூத்திருந்தது. அதனால் கணவரின் வருகைக்காக இரவும் பகலும் காத்திருந்தார். இரவில் உறக்கம் அவர் இமையோரத்தில் இருக்கும். ஏதாவது காலடிச் சத்தம் கேட்டால் போதும், கதவைத் திறந்து எட்டிப்பார்ப்பார். கணவரைக் காணாது ஏமாறுவார். அன்று விடியற்காலை நான்கு மணிக்கு "கிருஷ்ணம்மா.. கிருஷ்ணம்மா' அழைப்புக்குரல். வேகமாகப் போய் கதவைத் திறந்தார். பூதரித்துப் பொங்கியது அவர் முகம். கணவர் நின்றிருந்தார். "வாங்க' கையைப் பிடித்து, உள்ளே இழுத்துக் கதவைப் பூட்டினார் கிருஷ்ணம்மாள்.

கணவரின் மார்பில் ஒரு ரோஜா மாலையைப்போல் மெல்லச் சாய்ந்தார் கிருஷ்ணம்மாள். கணவரின் வலது கையைப் பிடித்து. தன் வயிற்றில் வைத்துத் தடவச்செய்தார் "ஏன் இப்படிச் செய்கிறாள்? ஒருவேளை..' உத்தமலிங்கம் ஊகிப்பதற்குள் "ஒங்க கொளந்தெ' என்றார்.

இருவருக்கும் மணமாகி ஆறு ஆண்டுகளாகியும் குழந்தையில்லை. கிருஷ்ணம்மாள் கற்றாத கோயில்லை; வேண்டாத சாமியில்லை. அதற்கிடையே நாட்டுவைத்தியர் ஒருவர் கொடுத்த லேகியத்தை ஆறுமாதம் சாப்பிட்டார்கள். எந்தப்பலனும் கிடைக்கவில்லை. அரசாங்க டாக்டரிடம் சென்றார்கள். அவர் இருவரையும் பரிசோதித்துவிட்டு குழந்தை பிறப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் இருப்பதாகக் கூறி சில மருந்து, மாத்திரைகளை எழுதிக்கொடுத்தார். அவற்றைச் சாப்பிட்டு ஒரு வருடம் ஆயிற்று. கொஞ்சமும் நம்பிக்கையில்லாத நேரத்தில் அந்தக் கரு உருவாகியிருந்தது. அதனால் கிருஷ்ணம்மாள் முகத்தில் தோன்றிய வெளிச்சம் கொட்டகைக்குள் ஒரு நிலவை உலவச்செய்தது. உத்தமலிங்கம் தன் மடியில் வைத்திருந்த கடலை உருண்டையை எடுத்து மனைவி வாயில் வைத்தார். கிருஷ்ணம்மாளோ தான் முந்தியில் முடிந்திருந்த வெல்லத்துண்டை அவருக்குக் கொடுத்தார். இருவரும் இனிப்பில் ஊறிய எச்சிலை விழுங்கினார். உணர்வுகள் மென்மையாயின.

"தொக்... தொக்' சத்தம். வெறுப்பாய் இருந்தது கிருஷ்ணம்மளுக்கு, "யாராயிருந்தாலும் அப்புறமா பாத்துக்கலாம்' என்றார். உத்தமலிங்கத்தால் நிதானிக்க முடியவில்லை. கதவைத் திறந்தார். அவர் நெஞ்சைக் குறிவைத்து நின்றன மூன்று துப்பாக்கிகள். சிவப்புத்தொப்பியணிந்த ஐந்து போலிசார் நின்றிருந்தார். விலங்குடன் முன்வந்த ஒரு போலீஸ்காரர், "ஒன்னெ அரஸ்ட் பண்ரோம்' என்றார். கிருஷ்ணம்மாளின் இதயம் படபடவென அடித்துக்கொண்டது. அதை வெளிக்காட்டாத அவர், "என் புருசன் அப்படி என்னாக் குத்தம் செஞ்சிட்டாரு?'

"தொட்டம்பட்டி கல்லாவி ரயில் நிலைய மத்தில வந்திட்டிருந்த சரக்கு ரயிலெக் கவுக்க சதி செஞ்சிருக்கான். அதுக்கு அரஸ்ட்பண்ரோம்' விலங்கை மாட்டினார்கள். பெருமூச்சு விட்டார் கிருஷ்ணம்மாள். தொண்டையைப் பிளந்துகொண்டு வந்தது அழுகை. வாயைப்பொத்தி அடக்கிக்கொண்டார். போலீசோடு திரும்பி நடந்தார் உத்தமலிங்கம். இரண்டு மூன்று அடிகள்தான் எடுத்து வைத்திருப்பார். அதற்குள், "எனக்குப் பிரசவ வலி எடுக்கரதுங்குள்ளார வந்திருவீங்கல்ல.' தழுதழுத்தார் கிருஸ்ணம்மாள். உத்தமலிங்கத்தின் கண்கள் கலங்கிவிட்டன. அவரைப் பின் தொடர்ந்து ஓடிய கிருஷ்ணம்மாள் மாரியம்மன் கோயில் முன்பு அப்படியே நின்றுவிட்டார். கணவர் கண்ணிலிருந்து மறைந்ததும் "ஓ' வெனக் கதறி அழுதார். அந்த அழுகைக்கிடையே கணவரை வெளியே கொண்டுவர எண்ணி தாமதிக்காது நாரயணன் வீட்டுக்குப் போய் விஷயத்தைச் சொன்னார்.

வாயும் வயிறுமா இருக்கிற மனைவிக்கு, கூட இருந்து ஒத்தாசை பண்ண முடியவில்லை. இந்தக் கவலை ஒருபாறைபோல உத்தமலிங்கம் நெஞ்சை அழுத்தியது. "சகா', "காம்ரேட்' "தோழர்', என்னும் தோமைக்குரல்கள் அந்தப் பாறையை உடைத்தெறிந்தன. ஆந்திரா, கேரளம், தமிழ்நாடு, சேலம் சார்ந்த இந்தியாவுக்குச் சுத்திரம் கிடைத்தது; கிடைக்கவில்லை என வாதிடுவதும் உத்தமலிங்கதுக்கு உற்சாகத்தைத் தந்தது.

கிருஷ்ணம்மாள், நாராயணன், தாயார் மூவரும் சிறைக்கு வந்து உத்தமலிங்கதைச் சந்திக்க மனு கொடுத்தார். அதிகாரிளோ அதைக் கிழித்துப்போட்டார்கள். அதோடு நிற்காது, மூன்றுபேரையும் சிறைக்காம்பவுண்டுக்கு வெளியே துரத்திவிட்டார். மிகுந்த வருத்தத்தோடும் ஏக்கத்தோடும் அவர்கள் வீடு திரும்பினார்கள். அதிகாரிகள் ஆங்கிலேயரின் அவதாரங்கள். சேலம் சிறையதிகாரி கிருஷ்ணன் நாயர் ஜெனரல் டயரின் அவதாரம். சிறைவிதிப்படி ஒரு கைதிக்குக் கொடுக்கப்பட வேண்டிய உணவைக் கூட அவன் கொடுப்பதில்லை.

காலையில் புளித்த கஞ்சி. மதியம் சோளக்களி, கீரைக்குழம்பு. மாலையில் கட்டிசோறு, அவரை ஆழாக்கு நீர்மோர், பத்துவேர்க்கடலைகள் அவ்வளவுதான். உறங்க கிழிந்துபோன ஒரு கோணிப்பை, ஒரு துண்டு கம்பளி. குளிக்க நான்கு குவளை தண்ணீர், துணி துவைக்க கொஞ்சம் மாவு. இந்தமாவு ஒருவிதப் படிக்காரம் போன்றது. கொசுக்கள் அவர்கள் தூக்கத்தைக் குடித்தன. அழுக்குத் தோய்ந்து உடம்புகள் நாறின.

உத்தமலிங்கமும் தோழர்கள், ஜெயிலரிடம் போய் முறையிட்டார்கள். அவனோ முறைத்தபடி மீசையை முறுக்கினான். அடுத்தநாள் காலையில் கஞ்சி குடித்ததும் எல்லாரும் ஒன்றுகூடி, சிறை அவலத்தைக் கோரிக்கைகளாக்கி கோஷமிட்டார்கள்.

ஜெயிலருக்கு அது கௌரவப்பிரச்சினை ஆகிவிட்டது. கம்யூனிஸ்டுகளைக் கிரிமினல்களாகச் சித்திரிக்க அவன் திட்டமிட்டான். வார்டனையும் போலீஸ்காரர்களையும் கூட்டி அது குறித்துப் பேசினான். கிரிமினல் கைதிகள்போல் தொப்பியில் கறுப்பு பேட்ஜும், கழுத்தில் நம்பர் கட்டையும் அணிய அவன் கட்டாயப்படுத்தினான். "நாங்கள் அரசியல் கைதிகள் எங்களைக் கிரிமினல்களாக நடத்தாதே' எனக்கைதிகள் கோஷமிட்டார்கள். அதிகாரத்திமிர் ஜெயிலரின் மூளையைக் கவ்விப்பிடித்தது. அவன் உத்தமலிங்கத்தையும் இன்னும் முப்பத்தைந்து பேரையும் தலைமைச் சிறையிலிருந்து பிரித்து, இணைப்புப் பகுதியில் அடைத்தான். அப்பகுதிக்கு "அனெக்ஸ்' என்று பெயர்.

வார்டன் அனெக்சுக்கு வந்தான். உத்தமலிங்கம் உட்பட ஐந்து பேரை அழைத்துச்சென்று, கழிவறைகள் முன் நிறுத்தினான். அறைகளில் மலமும் மூத்திரமும் நிரம்பிக்கிடந்தன. ஒரே நாற்றம். கைகளில் துடைப்பத்தைக் கொடுத்து, "களுவி சுத்தஞ் செய்யுங்க' கட்டளை இட்டான் வார்டன். "முடியாது'. குத்துக்கல்லாய் நின்றார் உத்தமலிங்கம். அடுத்த நொடியே அவர் தோள்பட்டையில் விழுந்தது தடி, அவர் திரும்பி கைகளைத் தூக்குவதற்குள் மீண்டும் விழுந்தது தடி. அதோடு நில்லாது அவரைக் கழிவறைக்குள் தள்ளி வெளியே கொக்கியைப் போட்டனர். ஒருமணி நேரம் அந்தத் துர்நாற்றத்தில் திணறிக்கிடத்தார் உத்தமலிங்கம். அதன் பின்பே மற்ற கைதிகள் அவரை விடுவிக்கமுடிந்தது. வெளிகாற்றைச் சுவாசிக்க சுவாசிக்க அவர் சகஜ நிலைக்குத் திரும்பினார். கையும் தோள்பட்டையும் வீங்கிய அவர் அனெக்சுக்கு வந்துசேர்ந்தார்.

அனெக்ஸ் கைதிகள் கொதித்துப் போனார்கள்.போலீஸ் அராஜகத்தைக் கண்டித்து அன்று மதியம் உண்ண மறுத்தனர். போலீசார் மிரட்டிப்பார்த்தனர்; அவர்கள் பணியவில்லை. இருப்பினும் ஏதாவது ஒரு மோதல் சூழ்நிலையை உருவாக்கி, போலீஸ் இன்னும் கொடுமையாகத் தாக்கக்கூடும் எனக்கருதினர். அதனால் மாலையில் செங்கற்களையும் ஜல்லிகளையும் சேகரித்து அறையில் பதுக்கிவைத்தார்கள்.

மறுநாள் தலைமை சிறையிலிருந்த கம்யூனிஸ்டுகளில் பத்துப்பேரை போலீசார் தோட்டத்துக்குக் கூட்டிச்சென்றனர். அவர்கள் அனைவரும் மலபாரைச் சேர்ந்தவர்கள். அவர்களில் இரண்டு பேரை நுகத்தடியில் மாடுகளைப்போல் மாட்டி, கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்க வைத்தனர். மற்றவர்கள் நீரை தோட்டத்துக்குத் திரும்புவதும், சமையற்கூடத்துக்கு எடுத்துச்செல்வதுமாய் இருந்தனர்.

நான்கு மணி நேரம் கிணற்றுக் கவலை இழுத்தால் இரண்டு பேரும் களைத்துப்போயினர். அவர்களின் சரும துவாரங்களிலிருந்து வியர்வை ஊற்றெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. சற்றுநேரம் நிழலில் இளைப்பாற தோட்டத்துக்குள் நுழைந்தனர். அவ்வளவுதான், குண்டாந்தடிகளோடு போலீசார் சீறிப்பாய்ந்தனர். இருவரையும் மூர்க்கத்தனமாக அடித்துக் கீழேதள்ளினர். அதோடு அவர்கள் வெறி அடங்கவில்லை; விழுந்தவர்களை பூட்ஸ் காலால் எட்டி எட்டி உதைத்தனர். இதைக்கண்டு ஆத்திரப்பட்ட மற்ற கைதிகள் ஓடோடிவந்தார்கள்; துரத்தித் துரத்தி அடித்தார்கள். இரண்டுபோலீசாரின் மண்டை உடைந்துபோயிற்று. ரத்தம் பூசிய தலைகளோடு அவர்கள் ஜெயிலர் அறைக்குச் சென்றார்கள்.

எங்கும் அமைதி. அன்றைய வேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. கைதிகள் அவரவர் செல்களில் அடைக்கப்பட்டார்கள். சிறையின் மத்தியப் பகுதியில் இருந்த கம்யூனிஸ்டுகளையும் போலீசார் அனெக்சுக்குக் கொண்டுவந்தார்கள், வரிசையாக நிற்க வைத்து எண்ணினார். முந்நூற்று இருபது; சரியாக இருந்தது. அதற்கு இருள் சதிகாரனைப்போல் ஆங்காங்கே பதுங்கியது.

அனெக்சில் என்ன விபரீதம் நடக்கப் போகுதோ? ஒரே பதட்டம். மௌனத்தின் பயங்கரத்தில் இரவு நகர்ந்தகொண்டிருந்தது. ஒவ்வொருவருவர் முன்னும் மரணத்தின் நிழலாட்டம். மெல்லிய குரலில் பேசி ஒருவருக்கொருவர் தைரியத்தைப் பரிமாறிக் கொண்டார்கள். அவர்கள் எதிர்பாராத வகையில் அன்றைய இரவு ஒழிந்துபோயிற்று.

காலை எட்டு மணி. துப்பாக்கி எமனோடு கைகோர்த்திருந்த நூறு போலீகாரர்கள் அனெக்ஸ் முன் நின்றிருந்தார்கள். ஜெயிலர் கிருஷ்ணன் நாயர். தலைமையில் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இரும்புத் தொப்பிகள் அணிந்து இடது கையில் ஷீல்டுகளோடும், வலது கையில் தடிகளோடும் வந்தார்கள். இவ்வளவு போலீசார் அந்தச் சிறையில் இல்லை. வெளியேயிருந்து வரவழைத்திருக்க வேண்டும். ஜெயிலர் இரவைக் கடக்க அனுமதித்ததன் காரணம் இதுவாக இருக்கலாம்.

ஜெயிலருடன் வந்தவர்கள் அனெக்சுக்குள் புகுந்தார்கள். தடியடி... அசுரத்தனமான தடியடி.. மின்னல் வேகத்தில் பூட்ஸ் கால்களால் உதைப்பதும் மிதிப்பதும் நடந்தது. தடிகளும் கைகளுமே மேலே உயர்ந்தன. அடி உதைச்சத்தங்களோடு ஒருவரை ஒருவர் திட்டிய கெட்டவரார்த்தைகள் கலந்து கலவரப்பட்டது. மற்றவர்களைப் பின்தள்ளிவிட்டு கேரளத்தவர்கள் முன்னேறி நின்றனர்.பேலீசாரின் தடிகளைப் பறித்து திருப்பியடித்தனர். இரப்பினும் போலீசாரின் கொடூரத் தாக்குதலை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. சிலர் தலை உடைந்து சரிந்தனர், வேறுசிலர் முதுகெலும்பு முறிந்து விழுந்தனர், இன்னும் பலர் கைகால்கள் ஒடிந்தும் வயிறு கலங்கியும் ஆங்காங்கே சுருண்டனர். பின்பகுதியில் நின்றவர்களால் இதைச் சகிக்க முடியவில்லை. அவர்கள் ஆவேசம் கொண்டு, செங்கற்களையும் ஜல்லிகளையும் எடுத்து போலீசை நோக்கி வீசினர். பெரிதான ஜல்லி ஒன்று ஜெயிலரின் வலது கண்ணைக் காயப்படுத்தியது. கண்ணைப் பிடித்துக்கொண்டே அவன் "ஷுட்' கர்ஜித்தான். இமைக்கும் நேரத்தில் உள்ளிருந்த போலீசார் வெளியேறினர். அடுத்த கணத்தில் துப்பாக்கிகள் "சடசட' வென வெடித்தன.

நாராயணன் வண்டித்தடத்தில் கால்வைத்தபோது தாயாரும் கிருஷ்ணம்மாளும் வாசற்படியில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். "எப்படிச் சொல்ரது?' எனத் தயங்கினாலும் சொல்லித் தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் அவர், "ஜெயில்லெ துப்பாக்கிச் சூடாம்!' என ஆரம்பித்தார். அதற்குள் தாயார் "உத்தமலிங்கம்?' எனப் பதைப்பதைத்தார். "அதிலெ அவனும்... செத்திட்டதா..' முடிப்பதற்குள் "அய்யோ... என் ராசா... என் ராசா..' கதறினார் கிருஷ்ணம்மாள். அதற்குமேல் அவரிடமிருந்து ஒரு விசும்பல்கூட வெளிவரவில்லை. அதிர்ச்சியில் மரத்துப்போய் மூர்ச்சையாகி வாசற்படியில் விழுந்தார். வாசற்படி அவர் வாயிற்றைப் பலமாக இடித்திருந்தது.

தண்ணீர் எடுத்துவந்து முகத்தில் தெளித்தார் நாராயணன். கிருஷ்ணம்மாளின் வாய் மட்டும் பிளந்து பிளந்து மூடியது. "இவளும் செத்திருவாளோ?' பயந்த அவர் ஓடிப்போய் ஒரு குதிரைவண்டியைப் பிடித்துவந்தார். அதற்குள் அக்கம்பக்கத்தார் கூடிவிட்டார்கள். அவர்கள் கிருஷ்ணம்மாளைத் தூக்கி வண்டியில் படுக்க வைத்தார்கள். கூடவே நாராயணனும் மனைவியும் ஏறினர். தாயார். தாயார், தலையில் அடித்து ஒப்பாரி வைக்க, வண்டி அரசாங்க மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தது.

கிருஷ்ணம்மாளைப் பரிசோதித்த டாக்டர், "வயத்தில பலமா அடிபட்டிருக்கு. கரு கலெஞ்சு போச்சு.. வயத்தெக் கிளீன் பண்ணச் சொல்லிருக்கேன். பயப்பட்ரதுக்கு ஒண்ணுமில்ல. ரெண்டு நாளெல சரியாயிடும்' என்றார். கிருஷ்ணம்மாளின் உயிருக்கு ஆபத்தில்லை என்பது ஆறுதலைத் தந்தாலும் "ஆறு வருசமா இவதவமிருந்து வயத்தில் தங்கின கருவாச்சே... அநியாயமா அப்பனும் புள்ளியும் ஒடுக்காப் போய்ச் சேந்திட்டாங்களே... இனி இவ எப்டி உசிர் வாளுவா..? அடியே மாரியாத்தா ஒனக்கிது அடுக்குமா?' புலம்பி அழுத ராஜம்மாளைச் சமாதானப்படுத்தினார் நாராயணன். தம்பியின் சடலத்தை வாங்க வேண்டுமே, சாவுச்சடங்குகள் செய்ய வேண்டுமே என்ற துக்கம் அவர் நெஞ்சில் கனத்துக்கிடந்தது. கிருஷ்ணம்மாளைக் கவனிக்கச் சொல்லிவிட்டு அவர் சிறைக்குச் சென்றார்.

சிறைக்கு வெளியே ஏராளமானோர் கூடியிருந்தனர். இருட்டில் அவர்களை அடையாளம் காண்பது நாராயணனுக்குக் கடினமாக இருந்தது, இருப்பினும் ஒன்றிரண்டு பேரிடம் விசாரித்தார். யாருக்கும் இறந்தவர்கள் பற்றிய விபரம் தெரியவில்லை. போலீஸ்காரர் ஒருவரிடம் கேட்டபோது "ஜெயிலர் வெளியே போயிருக்காரு.. வந்தப்பரம்தன் தெரியும்' என்று பிடிகொடுக்காமல் பேசினார். "இரவில் ஜெயிலர் வருவார் வருவார்' எனக் காத்திருந்தனர். விடிந்தும் அவர் வரவில்லை.

காலை ஒன்பது மணிக்கு ஒரு ஜீப் வந்தது, ஜெயிலர் வந்துவிட்டதாகக் கூறிக் கூட்டம் பரபரப்படைந்தது. அரைமணி நேரத்துக்குப் பின் உள்ளேயிருந்து ஒரு போலீஸ்காரர் வந்தார். கூட்டம் அவரைச் சுற்றி நின்று கொண்டது. அவர் சொன்னார்.

"செத்தவங்க, இருபத்திரண்டுபேரு.'

"பேரெக்சொல்லுங்க' எனக்கேட்டார் நாராயணன்.

"அதெல்லாம் சொல்லமுடியாது..'

"பொணத்தையாச்சம் குடுங்க'

"நேத்துராத்திரியே ஜெயிலுக்குள்ளாற எல்லாத்தியும் பொதச்சிட்டோம்... எல்லாச் சம்பிரதாயங்களும் முடிஞ்சு போச்சு'

"இதென்ன ஜெயிலா சுடுகாடா? உசிரோட இருந்தவங்களெக் சாகடிச்சிட்டீங்க பொணத்தாயச்சம்

குடுக்கலிண்ணா எப்படி?'

நாராயணன் கேட்டதும், "பொணத்தெக்குடுங்க, பொணத்தெக்குடுங்க' எனத் திருப்பித் திருப்பிக்கேட்டு கூடிநின்றவர்கள் கூச்சலிட்டார்கள்.

"கூச்சல் போட்டுப் பிரயோசனமில்லெ. இதுக்குமேலயும் சத்தம் போட்டீங்க.. சுட்டுப் பொசுக்கிடுவோம் ஜாக்கிரதெ' என எச்சரித்த அவர் "காயம் பட்டவங்களேல்லாம் ஜிஎச்ல சேத்திரக்கோம். அவங்கள்ல ஒங்க சொந்தக்காரங்க யாராவது இருக்காங்களாண்ணு தெரிஞ்சுக்கர வழியெப் பாருங்க.' அந்த போலீஸ்காரர் உள்ளே போய்விட்டார். கூட்டத்தில் சலசலப்பு; என்ன செய்வதென்று தெரியாது எல்லாரும் குழம்பினார்கள்.

"பொணம் இல்லாம எப்டி ஈமச்சடங்கு செய்ரது?' நாராயணனின் படபடவென அடித்தது. ஏதோ ஒரு உந்துதலில் ஓட ஆரம்பித்தார். ஓட்டம் அரசு மருத்துவமனையில் முடிந்தது. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி அவர் பெண்கள் வார்டில் வந்து நின்றார்.

ராஜம்மாளின் மடியில், பசையில் முறுக்கிய நூற்கற்றைபோல் சுருண்டுகிடந்தார் கிருஷ்ணம்மாள். "மெள்ளமா அவளை நடத்திக் கூட்டிக்கிட்டு வா' என்றார் நாராயணன். கிருஷ்ணம்மாளைத் தாங்கிப்பிடித்தபடி எழுந்துநின்றார் ராஜம்மாள். தன்னை அழைத்துச் செல்லும் காரணம் கிருஷ்ணம்மாளுக்குப் உடலைக் கடைசிமுறையாகப் பார்ப்பதற்காக இருக்கலாம். இந்த ஊகம் அவரைப் பற்றி எரியச்செய்தது. உடம்பெல்லாம் அனல் கொதிக்க ஏங்கி அழுதார். கண்ணீராய் உருகி தரையில் விழப்போன அவரை தாங்கிப்பிடித்து இருவரும் ஆண்கள் வார்டுக்கு நடத்தி வந்தனர்.

அங்குக் கக்கிச்சட்டைகளும் சிவப்புத் தொப்பிகளும் வியாபித்திருந்தன. துப்பாக்கிகள் மட்டும் சுதந்திரமாக நடமாடின. கைதிகள், காயங்களுக்குக் கட்டுப்போட்டவர்களாய் உள்ளேயும் வராந்தாவிலும் படுத்துக்கிடந்தார்கள். நூற்றுக்கும் மேலே இருக்கும்.

மூவரும் வார்ட்டைச் சுற்றி வந்தபோது "கிருஷ்ணம்மா... கிருஷ்ணம்மா' அழைத்தது கேட்டு கிருஷ்ணம்மாளின் மேனி சிலிர்த்தது. புரியாத ஒரு பரபரப்பில், வந்த இடம்பார்த்து முகத்தைத் திருப்பினார். இடது கையை மட்டும் அசைத்துக் காட்டியபடி தலையிலும் கையிலும் கட்டுகளோடு படுத்திருந்தார் கணவர்.

Pin It