தோற்றம் : 23.04.1906 – மறைவு 11.10.1965

“பகுத்தறிவு பரப்பிய கணவன் மனைவி'' என்று தமிழகமே பெருமை கொள்ளும் வண்ணம் வாழ்ந்து மறைந்த இணையர் குத்தூசி குருசாமி – குஞ்சிதம் குருசாமி ஆவர். பிறர் போற்றுவதற்காகவும் பின்பற்றுவதற்காகவும் வாழ்ந்த பெருவாழ்வு அவர்களுடையது. அன்பு நெறியிலும் அறிவு நெறியிலும் வாழ்வதே பண்புநெறி என்பதை உணர்த்திய பெருமக்கள் அவர்கள்.

எவருக்கும் அஞ்சாமல் வாழ்ந்தார்கள். எவரிடமும் கெஞ்சாமல் வாழ்ந்தார்கள். வாழ்க்கை என்பது இப்படித்தான்! என்று பாடம்நடத்திக் கொண்டு இருக்காமல் பார்த்துத் தெரிந்துகொள்ளும்படி எல்லோருக்கும் தெரியுமாறு திரை தொங்கவிடாமல் வாழ்ந்தார்கள்.

இயக்கத்துக்காக உழைத்துப் பாடுபட்ட தொண்டர்கள் பலர் மறைந்து போனார்கள். அவர்களுடைய பெயர்கள் கூட மறக்கப்பட்டுவிட்டன. குருசாமியின் பெயர்கூட மறக்கப்படுமோ என்று கருதிய நேரத்தில் குருவிக்கரம்பை வேலு அவர்கள் குருசாமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிட்டார். அவரின் அரிய கட்டுரைகளை மறு பதிப்புச் செய்தார். அவருக்கு நன்றி.

“பாசறை முரசு'' இவ்விதழைக் குத்தூசி குருசாமி சிறப்பிதழாக வெளியிடுவதின் நோக்கம்:

“தமிழா உன் இனத்திலும் அறிஞர்கள் பிறந்தார்கள். இருந்தகாலமெல்லாம் தொண்டாற்றினார்கள். எளிதாகப் புகழும்பொருளும் உயர்ந்த சுற்றமும் நட்பும் பெறும்வாயப்புகளை உதறிவிட்டு வேண்டுமென்றே, அடித்தளத்தில் உள்ளவர்களோடு சேர்ந்து உழைத்து அவர்களை உயர்த்துவதையே மூச்சாகக்கொண்டு வாழ்ந்தார்கள். அதை அறிந்துகொள். அறிந்த பிறகு தெளிவு கொள், துணிவு கொள், வாழு. மண்டியிடாத மனிதனாக வாழு மூட நம்பிக்கையில்லாத மனிதனாக வாழு. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொல்வதோடு நில்லாமல், பிறரோடு ஓர் குலமாக வாழு, சுரண்டாமல் வாழு' என்பதைத் தமிழ் மக்களுக்கு நினைவுபடுத்தவே. 

***

ஒரு சாமிக்கும் வணங்காத குருசாமி

ஒரு சாமிக்கும் வணங்காத குருசாமி, பெரியார் ராமசாமியையும் வணங்க மறுத்தார் எனும் உண்மை வரலாறாக நிற்கிறது.

தலைமைக்குக் கட்டுப்படவேண்டும் என்பது வேறு, தலைமையை வழிபடவேண்டும் என்பது வேறு. முன்னையது நெறிமுறை, பின்னையது சுயமரியாதைக்கு எதிரான அடிமை மனப்பான்மை. சுயமரியாதையை ஏந்திப்பிடிக்கவே தோன்றிய இயக்கத்தைச் சார்ந்த அல்லது அதனை அடியொற்றித் தோன்றிய எல்லாத் திராவிடக் கட்சிகளிலும் தலைமை வழிபாடு என்பது அளவோடு நில்லாமல் அடைமொழி , அர்ச்சனையில் ஆரம்பித்து துதிபாடல் முறைவாசல் எனத் தொடர்ந்து காலில் விழும் கலாச்சாரமாக நிலைகுலைந்து தரம் தாழ்ந்து சுயமரியாதை எனும் தத்துவத்திற்கே சவாலாய் நிற்பது அவலத்திலும் அவலம் வரலாற்று அவலமாகும்.

Pin It