நெருப் பெடுத்த சொல்லெடுத்து
 நிறைதமிழில் பாடியவன்
பிறப்பெடுத்த புதுவைக்கே
 பெருமையினைத் தேடியவன்

கொஞ்சுமவன் கவிதைக்குள்
 குயில்கூவிக் கொண்டிருக்கும்
நெஞ்சமெனும் கூட்டுக்குள்
 நிலாக்காலக் குளிர் அடிக்கும்

சாதிகளைச் சாடியவன்
 சமத்துவத்தைத் தேடியவன்
சமயமெனும் பொய்மைகளைச்
 சவக்குழிக்குள் மூடியவன்

கயமைகளைக் கொல்ல
 கனன்றதவன் கூர்வேல்
சுயமரியாதை கொள்ள  
 சுழன்றதவன் போர்வாள்

மாண்டதமிழ் வரலாற்றின்
 மாட்சிகளைப் போற்றியவன்
தீண்டாமைக் கொடுமைகளைச்
 "சீ' எனவே தூற்றியவன்

கேடுசெய்த பார்ப்பனியக்
 கீழ்மைகளைப் போட்டுடைத்தான்
நாடுமொழி இனமீட்பின்
 நலத்துக்கே பாட்டிசைத்தான்

எந்நாளும் பெண்மைக்கே
 ஏற்றமவன் கொடுத்திட்டான்
பொன்னாய்த்தொழி லாளர்தமைப்
 போற்றிப்பா வடித்திட்டான்

பகுத்தறிவுப் பெரியாரின்
 புகழ்பாடிப் பறந்த குயில்
பைந்தமிழின் அழகையெலாம்
 வடித்ததவன் கவிதைஎழில்!

Pin It