நர்மதை அணைக்கட்டு தொடர்பாக டில்லியில் மேதாபட்கர் உண்ணாவிரதம் இருந்த பொழுது இந்த சர்ச்சை நாடெங்கும் பேசப்பட்டு தேசத்தின் கவனத்தைப் பெற்றது. அந்த சந்தர்ப்பத்தில் தெஹல்கா வார இதழுக்கு அளிக்கப்பட்ட பேட்டி
Arunthathi Roy
கேள்வி - நர்மதைப் பள்ளத்தாக்குப் பிரச்சனைப் பற்றி விரிவாகக் கூற முடியுமா?
அருந்ததி - இது பற்றி “தி கிரேட்டர் காமன் குட்” என்ற எனது கட்டுரையில் விரிவாகக் கூறியிருக்கிறேன். சில எளிமையான விஷங்களை இங்கு நான் சொல்கிறேன்.
குஜராத்தில் உள்ள கட்ச் மற்றும் சௌராஷ்டிராவிலுள்ள வறட்சியான பகுதிகளுக்கு தண்ணீர் தரத்தான் சர்தார் சரோவர் அணை கட்டப்படுகிறது என்று வாக்குறுதி அளிக்கப்படுகிறது. இதுவரை எடுக்கப்படாத மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அறிவற்ற அரசியல் நிலைப்பாட்டை இது எடுத்துள்ளது. இதைச்சு.ற்றி மிகப் பெரிய பிரச்சார இயந்திரம் செயல்பட்டது.
தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டாக குஜராத் பட்ஜெட்டின் பாசன ஒதுக்கீட்டில் 85% இந்த திட்டம் தின்றுவிடுகிறது. அதைவிட பயன்தரத்தக்க உள்ளூர்த் திட்டங்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.
இந்தியாவிலேயே பேரணைகள் அதிகமுள்ள மாநிலம் குஜராத். தண்ணீர்த் தேவை பூர்த்தி செய்யப்படாத மாநிலமும் குஜராத்தான்.
குஜராத் அரசின் சர்தார் சரோவர் அணைத்திட்டத்தை நன்றாகப் பாருங்கள். கட்ச் பகுதியும் சௌராஷ்டிராவும் வாய்க்காலின் இறுதியிலுள்ளன. எல்லாம் அவர்கள் சொல்லியபடி சரியான வகையில் நடந்தால் மாயாஜாலம் நடந்தால் பெரு நகரங்கள், பெரும் தொழிற்சாலைகள், கோல்ப் மைதானங்கள், சர்க்கரை ஆலைகள் பொழுதுபோக்கு நீர்ப் பூங்காக்கள் தண்ணீரை உறிஞ்சி கொள்கின்றன. அணைக்கட்டும் திட்டப் பொறியாளர்களும் கூறுவதுபோல் தண்ணீர் கிடைத்தால் குஜராத்தின் 60% நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால் அது உண்மையல்ல, சொன்னது நடக்க வில்லை.
இந்தியாவிலுள்ள எந்த அணைத் திட்டமும் 40% இலக்கைக் கூட எட்டியதில்லை. ஆனால் அறிவிக்கப்பட்ட திட்டப்படியே கட்ச் பகுதியிலுள்ள பாசன நிலத்தின் 2%யும் சௌராஷ்டிராவிலுள்ள 9% நிலத்துக் கும் தான் பாசனம் கிடைக்கும். வாய்க்கால் நீரை கொள்ளையடிப்பது ஏற்கெனவே தொடங்கிவிட்டது.
சமீபத்தில் இந்த அணைத் திட்டத்தை ஆதரிப்பவர்கள் என பலரும் பெரிய முழுப்பக்கப் படங்களைப் போட்டு தேசிய நாளிதழ்களில் விளம்பரங்களை வெளியிட்டனர். மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள், பெரும் தொழிற் சாலை முதலாளிகள் தான் இப்படி விளம்பரம் கொடுத்தனர். விவசாயிகள் எங்கே போனார்கள்? கட்ச் மற்றும் சௌராஷ்டிரா பகுதி மக்கள் அணைத்திட்டத்தை ஆதரிப்பதாக எங்காவது கூறினார்களா?
கட்ச் பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். கட்ச் மற்றும் சௌராஷ்டிரா பகுதிக்குத் தருவதாக குஜராத் அரசு கூறியிருந்த குறைந்த அளவு தண்ணீரை விடவும் குறைச்சலாகத்தான் தருகிறது. இது நர்மதை நீர் விவகார நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்று குற்றஞ்சாட்டி அவர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இதில் பெரும் சோகம் என்னவென்றால், உள்ளூரில், மழைநீர் சேகரிப்பை அவர்கள் தீவிரமாக அமுல் படுத்தினார்கள் என்றால், சர்தார் சரோவருக்கு செலவு செய்யப்பட்ட தொகையில் 10%த்தை மட்டும் செலவு செய்து கட்ச் மற்றும் சௌராஷ்டிரா பகுதியிலுள்ள ஒவ்வொரு கிராமத் திற்கும் குடிநீரை வழங்கியிருக்கலாம்.
சர்தார் சரோவர் அணைத் திட்டம் சூழலியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் அபத்தமாக உள்ளது. ஆனால் சொர்க்கத்தை உருவாக்கும், உங்கள் துன்பங்களுக்கு விடிவுகாலம் வரும், வீட்டுக்கே உணவைக் கொண்டுவரும் என்ற வாக்குறுதிகள் எல்லாம் அரசியல் ரீதியில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. சர்தார் சரோவர் அணைத்திட்டம் என்பது குஜராத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் பிரச்சாரத்திற்காக தீவிரமாக பயன்படுத்திக் கொள்ளும் ஒரு பொருளாக இருக்கிறது. இது எல்லாமே வெறும் பிரச்சாரம் தான்.
கேள்வி - உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு அனைவருக்கும் கிடைத்த வெற்றி என்று ஊடகங்கள் கூறி வருகின்றன. நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இந்தத் தீர்ப்பின் உண்மையான அர்த்தம் என்ன?
அருந்ததி - குஜராத் அரசுக்கு இது வெற்றியாக இருக்கலாம். நர்மதை பாதுகாப்பு இயக்கத்துக்கு எந்த வகையிலும் இது வெற்றியல்ல. இந்த வகையில் முறைப்படியான சமிக்ஞையை (ஒப்புதலை) உச்ச நீதிமன்றமும், பிரதமரும் கொடுத்துள்ளனர். இது வஞ்சகமான புதிய பகுதிக்கு எங்களை இட்டுச் செல்கிறது.
Medha patkar
மறுவாழ்வு பற்றி, தனது அமைச்சரவை சகாக்கள் தந்த மிகத் துல்லியமான அறிக்கையை பார்த்த பிறகும், தனக்கு சம்பந்தமில்லாதது போல் பிரதமர் விலகிக் கொண்டுள்ளார்.
மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சைபுதின் சோஸ் எதைப் பார்த்தாரோ, அதை அறிக்கையாகத் தரும் துணிச்சலைப் பெற்றுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் மறுவாழ்வு என்ற ஒன்றே இதுவரை நடக்கவேயில்லை.
ஒரேநாள் விஜயத்தில் அமைச்சர்கள் முழுமையான ஆய்வை மேற்கொண்டிருக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் நர்மதைப் பிரச்சனையின் அளவு அப்படிப்பட்டது.
கோப்புகளில் கூறப்பட்டிருப்பதற்கும், நடப்பிலுள்ள உண்மைக்கும் மாபெரும் இடைவெளி இருக்கிறது. எப்பொழுதும் நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படுபவை வெறும் அறிக்கைகள்தான்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நர்மதை சாகர் அணைக்கட்டு கட்டப் பட்டபோது ஹர்சுத் பகுதி மூழ்கியது. அங்கு சென்றிருந்தேன். அரசால் நிர்மாணிக்கப்பட்ட புது ஹர்சுத் என்று கூறப்பட்ட பகுதிக்கும் நான் சென்றிருந்தேன். அது முழுமையாக செயல்படும் ஒரு நகரம் என்று கூறப்பட்டது. ஆனால் அங்கு எதுவுமே நடக்கவில்லை. வீடுகள், தண்ணீர், கழிப்பறைகள், குப்பைகள் எதுவுமே இல்லை.
ஒன்றிரண்டு நியான் தெருவிளக்குகள் இருந்தன. பெரும் நிலம் இருந்தது. ஆனால் அதிகாரிகள் என்ன செய்தார்கள் தெரியுமா? நட்சத்திர பில்டர்கள் போட்டு பாரிசைப் போன்ற ஜொலிக்கும் நகர் மாதிரி ஹர்சுத்தை படம் எடுத்து அனைவருக்கும் காண்பித்தார்கள்.
ஏப்ரல் 17ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வழக்கு வந்தபோது, தர்க்கரீதியில் அணையின் உயரத்தை அதிகரிப்பதை நிறுத்த வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும்.
அங்கு ஒரு பிரச்சனை இருப்பதை அறிந்திருக்கிறோம். அடுத்த கட்டத்துக்குச் செல்லும் முன் அந்தப் பிரச்சினையை மதிப்பிட வேண்டும். ஆனால் எல்லாம் தலைகீழாக நடக்கிறது. பிரச்சனை இருக்கிறது. அந்தப் பிரச்சினையை இன்னும் பெரிதாக்குவோம் என்கிறார்கள்.
அணையின் உயரத்தை ஒரே ஒரு மீட்டர் உயர்த்தினால், இன்னும் 1,500 குடும்பங்கள் மூழ்கும் ஆபத்தில் உள்ளன. ஏற்கெனவே அக்டோபர் 2000லும், மார்ச் 2005லும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகள் தெளிவாக உள்ளன. அதற்கு எதிராக தற்போது அதே நீதிமன்றமே தீர்ப்பு வழங்குகிறது. ஒரு பகுதி மூழ்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன் மறுவாழ்வு அளித்திருக்க வேண்டும் என்று நர்மதை நீர் விவகார நடுவர் மன்றத் தீர்ப்பு வழங்குகிறது.
பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகளே நீதிமன்றத் தீர்ப்புகளை அவமதித்தால் என்ன செய்வது?
கேள்வி - குஜராத்துக்கு தண்ணீர் மிக அத்தியாவசியமான பிரச்சனை இல்லையா? தண்ணீர் தேவை, வெளியேற்றப்பட்ட மக்கள் இந்த இரு மூலைகளும் சமரசத் தீர்வு காண வேண்டிய பிரச்சனைகள் இல்லையா?
அருந்ததி - குஜராத்தில் உள்ள மொத்த நிலத்தில் 10 % மட்டுமே பாசன வசதி பெறுகிறது. அணையின் தற்போதைய உயரம் மிகக் குறைவான குடிநீர் தேவையை மட்டுமே நிறைவு செய்கிறது. இதற்கு முக்கியக் காரணம் வாய்க்கால்களும், தண்ணீரைக் கொண்டு சேர்க்கும் வழிகளும் இல்லாததே.
தற்போதுள்ள அணைக்கட்டின் உயரத்திற்கு சேமிக்கப்படும் நீரே சரியாக, முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. நர்மதை அணைப் பற்றி புதிதாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை. மிகப் பழமையான கதை இது.
பார்கி அணை 1990ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மிக அதிகளவு மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டது. பெருமளவு மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால் இன்று அந்த அணையால் மூழ்கிய நிலத்தைவிட குறைந்தளவு நிலமே பாசன வசதி பெறுகிறது. வாய்க்கால்கள் கட்டப்படாததே இதற்கு முக்கியக் காரணம்.
சர்தார் சரோவர் அணை எப்படிப்பட்டது என்றால், அந்த அணையை நம்புபவர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கத்தான் அதன் உயரம் தொடர்ந்து அதிகரிக்கப்படுகிறது. அணையின் உயரத்தை அதிகரிக்க எந்த அவசியமுமில்லை.
நேர்மையாக என்ன செய்ய வேண்டுமென்றால் அணையின் உயரத்தை உயர்த்தக் கூடாது. ஏற்கெனவே தேக்கி வைத்துள்ள நீரை ஒழுங்காகப் பயன்படுத்த வாய்க்கால்களை வெட்டுமாறு குஜராத் அரசுக்கு வலியுறுத்த வேண்டும். அப்பொழுது மறுவாழ்வு அனைவருக்கும் கொடுக்க தேவையான காலம் கிடைக்கும்.
கேள்வி - நர்மதை அணைப் பிரச்சனையில் உங்களுக்கு எப்படி ஈடுபாடு ஏற்பட்டது? எப்பொழுது, எந்த காரணத்திற்காக நர்மதை அணைப் பிரச்சனையில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்தீர்கள்? நர்மதை அணைப் பிரச்சனை எப்படி இவ்வளவு வலுவான அடையாளமாக மாறியது?
அருந்ததி - நர்மதைப் பள்ளத்தாக்கு பிரபஞ்சத்தில் ஒரு தனி உலகமாக இருக்கிறது என்று நம்புகிறேன். எல்லாவற்றைப் பற்றியும் ஆழமான வாதங்களை அது முன்வைக்கிறது. அதிகாரம் - அதிகாரமின்மை, பேராசை, அரசியல், உரிமைகள், நெறிமுறை, உரித்தான உரிமைகள், தவறான நம்பிக்கையை ஏற்படுத்துதல் என எல்லாவற்றைப் பற்றியும் அது விளக்குகிறது. நதிகளை நமக்கு வசதியாகத் திருப்புதல், பாலைவனச் சூழலை வைத்துக் கொண்டு கோதுமை அல்லது கரும்பு போன்ற அதிக தண்ணீரைக் கிரகிக்கும் பயிர்களை வளர்ப்பது எவ்வளவு தூரம் சரி? ராஜஸ்தானில் இந்திரா காந்தி கால்வாய் பேரழிவை ஏற்படுத்தி எப்படி பழிவாங்கிக் கொண்டிருக்கிறது என்று பார்க்கிறோம்.
உலகம் எப்படி இயங்குகிறது என்பதன் அடிப்படையைப் புரிந்து கொள்ள நர்மதை அணைப் பிரச்சனை எனக்கு உதவுகிறது. இந்த வாதத்தின் அழகு என்னவென்றால், மனிதனை மட்டும் மையமாகக் கொண்ட வாதமல்ல இது. பெரும்பாலான அரசியல் கொள்கைகள் கவனம் செலுத்தாத பிரச்சனை இது. பல்வேறு ஆதார பிரச்சனைகளை இந்த வாதம் முன்வைக்கிறது. நதிகள் கழிமுகங்கள், பூமி, மலைகள், பாலைவனங்கள், பயிர்கள், காடுகள், மீன்கள் என எல்லாவற்றைப் பற்றியும் இந்த வாதம் பேசுகிறது.
அதே நேரம் பெரும்பாலான சுற்றுச் சூழல் கொள்கைகள் கவனம் செலுத்தாத மனிதம் சார்ந்த விஷயங்களையும் இந்த வாதம் பேசுகிறது.
இது ஆதார நரம்பைத் தொடுகிறது. இந்த மக்களுக்கு இது பற்றி மிகக் குறைவாகத்தான் தெரியும். தங்களுக்கு மிகக் குறைவாகத்தான் தெரியும் என்பதை ஏற்றுக் கொள்ளும் மக்கள், எது சரி என்பதை தேடுவதில் கவனம் செலுத்துவதில்லை. உணர்ச்சிவசப்பட்டு கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.
இந்தியா தேர்ந்தெடுத்துள்ள மிகப் பெரிய வளர்ச்சி மாதிரியைப் பற்றி நர்மதைப் பள்ளத்தாக்கில் நடக்கும் போராட்டம் அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறது. அதே நேரம் சில அணைக்கட்டுகள் பற்றி மிகக் குறிப்பிடத்தக்க கேள்விகளையும் நர்மதைப் பள்ளத்தாக்குப் போராட்டம் எழுப்பியுள்ளது.
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், வெளியேற்றப்பட்ட மக்கள், அவர்களுக்கான மறுவாழ்வு போன்ற வற்றைச் சுற்றியே தற்போது பிரச்சனை மையங்கொண்டுள்ளது. ஆனால் இன்னும் பதில் கிடைக்காத பெரும் கேள்விகள் உள்ளன.
அணைக்கட்டுகளால் ஏற்படும் பலன்தான் என்ன?
பெரும் பாசனத் திட்டங்கள் நீரைத் தேங்கிப் போக செய்கின்றன, உவர்ப்புத் தன்மையை அதிகரிக்கின்றன, பாலைவனங்களை உருவாக்கியுள்ளன. வரலாற்று ரீதியில் பார்த்தால் பண்டைய சமூகங்கள் அழிந்து போவதற்கு தவறான பாசனத் திட்டங்களை முக்கியக் காரணமாக அமைந்துள்ளன. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் மெசபடோமிய நாகரிகத்திலிருந்து இது தோன்றியது எனலாம். வளர்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ள ஜாரெட் டைமண்டின் “கொலாப்ஸ்” (அழிவு) என்ற புத்தகத்தைப் படிக்க பரிந்துரை செய்கிறேன்.
இந்தியாவில் ஏற்கெனவே ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நீர் தேங்கியுள்ளன. பெரும்பாலான நதிகளை நாம் அழித்து விட்டோம். நிலையற்ற பயிர்சுழற்சி முறையை நாம் கொண்டுள்ளோம். நமது வேளாண் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் உள்ளது.
நமது மிகப் பெரிய, மிக விருப்பமான பக்ராநங்கல் அணையில் நீர் தேங்கி, கடுமையான பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது. உண்மையான பிரச்சனை என்னவென்றால், குஜராத்தில் உள்ள சாதாரண விவசாயிகள் சர்தார் சரோவர் அணைக்கட்டால் என்ன பயன் பெறுகிறார்கள் என்பதில்லை. அவர்கள் அந்த அணையால் எவ்வளவு கஷ்டம் அனுபவிக்கப் போகிறார்கள் என்பதுதான்.
World
கேள்வி - ஒரு பாலைவனத்தில் நதிப்புற சூழலியலை வலுக்கட்டாயமாக திணிப்பதையும், அரசியல் ஆதரவு பிரச்சாரம் தீவிரமாக இருப்பது பற்றியும் கூறுகிறீர்கள். சரி, மின்சாரத்துக்கு நாம் என்ன செய்வது?
அருந்ததி - சர்தார் சரோவர், நர்மதை நிகாம் மின் உற்பத்தி பற்றி அறிவித்த உறுதியளிப்புகளை நிறைவேற்ற முடியாது என வெளிநாட்டுப் பொறியாளர் குழு சமீபத்தில் வெளிப்படையாக சவால் விடுத்துள்ளது.
சர்தார் சரோவர் அணைத் திட்டத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ள பொறியியலாளர் ஹமான்சு தாக்கரும் உறுதியளிக்கப்பட்ட மின்சார உற்பத்தி சாத்தியமில்லை என்று கூறியுள்ளார்.
1450 மெகாவாட்ஸ் மின்சார உற்பத்தி செய்வதற்கான உற்பத்திக் கலன்களை நிர்மானித்தால் 1450 மெகாவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் உண்மையில் எவ்வளவு தண்ணீர் பாய்கிறதோ அதைப் பொறுத்தே இங்கு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் அறிவிக்கப்பட்டதை விட மிகக் குறைவாகத்தான் தண்ணீர் பாய்கிறது. அந்த வகையில்தான் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, சர்தார் சரோவர் போன்ற பல்நோக்கு அணைத்திட்டங்களில் பெரும்பாலான நேரம் ஒன்று பாசனத்துக்கோ, அல்லது மின்சாரத்துக்கோதான் அணையைப் பயன்படுத்த முடியும். ஏதாவது ஒன்றைத்தான் ஒழுங்காகச் செய்ய முடியும். தண்ணீர் மேலும் அதிகளவு பாசனத்துக்குப் பயன்படுத்தப்பட்டால், நதிப்படுகையில் உள்ள மின் உற்பத்தி நிலையம் 1% கூட மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. எனவே இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியும் என்ற வாக்குறுதி அப்பட்டமான பொய்.
மூன்றாவதாக, மின் விநியோகத்தைப் பொறுத்தவரை உலகிலேயே அதிகளவு மின்சாரத்தைக் கடத்துதல் மற்றும் விநியோகம் இழப்பு ஏற்படும் நாடு இந்தியா தான். நாடு முழுவதும், 12க்கும் மேற்பட்ட பேரணைகள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தைவிட இங்கு அதிகளவு மின் விநியோக இழப்பு ஏற்படுகிறது.
எனவே, பேரணைகளைக் கட்டுவதற்கு முன்பும், அதன் காரணமாக சமூகங்களையும், காடுகளையும், நதிகளையும், சூழல் அமைப்புக்களையும் அழிக்கும் முன், எவ்வளவு மின்சாரத்தையும், தண்ணீரையும் வீணாக்குகிறோம், தேவையற்று செலவு செய்கிறோம் என்று ஒரு கணம் கணக்கு எடுத்துப் பார்ப்பது மிக மிக அவசியமாகிறது.
கேள்வி - நர்மதைப் பாதுகாப்பு இயக்கம் பல்வேறு ஆண்டுகளாக போராடி வருகிறது. தற்போது போராட்டம் இவ்வளவு தீவிரமானதற்குக் காரணம் என்ன?
அருந்ததி - சந்தேகமின்றி மேதாபட்கரின் எண்ணம் - பொறுப்பு, நர்மதை பாதுகாப்பு இயக்கம் பெற்றுள்ள பெயர், தான் தில்லியில் நடைபெற்ற சாகும்வரை உண்ணா விரதப் போராட்டம் உச்ச நிலைக்குச் சென்றது.
அத்துடன், தங்கள் பாரம்பரிய வாழிடங்களிலிருந்து வெளியேற்றப்படுதல் எனும் பிரச்சனை இலட்சக்கணக்கானோரைப் பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. நகரங்களிலும் கிராமங்களிலும் இது அதிகளவில் நடைபெறுகிறது. நிலைமை கட்டுக்குள் இல்லை.
வளர்ச்சிக்கானது என்று கூறப்படும் ஒவ்வொரு திட்டமும் - அது பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவாகவோ, கலிங்க நகரில் கட்டப்படும் டாடா இரும்பாலையாகவோ அல்லது கூலாவரம் அணையாகவோ இருக்கலாம்.
எதுவானாலும் அந்தத் திட்டம் முதலில் கை வைக்கும் செயல், ஏழை மக்களிடமிருந்து நிலத்தைப் பறிப்பதுதான். மக்கள் துப்பாக்கி முனையில் வெளியேற்றப்படுகிறார்கள். தில்லி, மும்பை போன்ற நகரங்கள் புல்டோசர் மற்றும் காவல்துறையின் நகரங்களாகி விட்டன.
கலிங்க நகரில் ஜனவரி மாதம் ஆதிவாசிகளுக்கு (பழங்குடிகள்) எதிராக நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, போலீசார் ஒப்படைத்த சில சடலங்களில் கைகளும், மார்புகளும் பிடுங்கி எறியப்பட்டிருந்தன. அந்த அளவு கொடூரத் தாக்குதல் நடந்திருந்தது. இதெல்லாம் தில்லி ஜந்தர் மந்தர் போராட்டத்திலும் நடப்பதற்கு வாய்ப்பிருந்தது. ஒரு மூர்க்கத்தனம் நாடு முழுவதும் பரவி வருகிறது.
பேரணைகளுக்கு எதிரான வாதத்தின் வீரியத்தைக் குறைக்க - முழுமையாக பலவீனப்படுத்த அணைக்கட்டில் தண்ணீர் உயருதல், வெளியேற்றப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு கொடுத்தல் என்பது போன்ற விஷயங்கள் அதிகம் விவாதிக்கப் படுகின்றன. பேரணைகளுக்கு எதிரான வாதத்தை சுருக்குவதாக இச்செயல் அமைந்துள்ளது.
இவ்வளவு முக்கியமான கடுமையான வெளிப்படையாக தீர்க்கப்பட வேண்டியது மறுவாழ்வு பிரச்சினை. அதற்கென்றே தனியாக ஒரு பிரபஞ்சம் இருக்கிறது. அது முழுக்க முழுக்க ஏமாற்று, பொய்கள், உணர்ச்சியற்ற விஷயங்களால் நிரம்பி இருக்கிறது.
மறுவாழ்வு தருவதாக அறிக்கைள் வெளியிடுவது, வாக்குறுதிகள் அளிப்பது என வாய்வார்த்தை பேசுவது எளிது. அதைத்தான நரேந்திர மோடி செய்கிறார்.
ஆனால் உண்மையான பிரச்சினை என்னவென்றால் (சைபுதீன் சோஸ அறிக்கை குறிப்பிட்டதுபோல) அறிக்கைகள் - கோப்புகளில் உள்ள தற்கும், உண்மையில் நடந்துள்ளதற்கும் பேரளவு வித்தியாகம் உள்ளது.
கேள்வி - மறுவாழ்வு அளித்தல் என்பது வெளிப்படையான பிரச்சினை என்கிறீர்கள். அது ஏன் இவ்வளவு பெரும் தெருச் சண்டையாக மாறியது?
அருந்ததி ராய் - வளர்ச்சித் திட்டங்களின் போது ஏழைகளிடமும், மக்களின் புரிதலிலும் நிகழ்த்தப்படும் மிக முக்கிய தந்திரம் பற்றி இங்கு பேசியாக வேண்டும். இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படும்போது வெளியேற்றப் படுபவர்கள் எல்லாம் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற கணக்கீட்டின் கீழ் வருவதில்லை.
கலிங்கநகர் டாடா இரும்பாலை கட்டுவதற்கு வாங்கப் பட்ட நிலத்தில், மிகக் குறைந்த ஆதிவாசிகள் மட்டும்தான் திட்டத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்று கூறப்பட்டார்கள். பெரும்பாலான வர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டனர். அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டு, துரத்தப்பட்டார்கள். பாதிக்கப் பட்டடவர்கள் என்று கூறப் பட்டவர்களின் நிலத்தின் மதிப்பீடு ரூ. 3.5 லட்சம் என்றால் டாடா நிறுவனம் வெறும் 35 ஆயிரம் ரூபாய் ம்டடுமே வழங்கியது. ஆனால் அந்த நிலங்களின் விற்பனை மதிப்போ இன்னும் அதிகம்.
இங்கே என்ன நடக்கிறது என்றால் ஏழைகளிடமிருந்து திருடுகிறீர்கள், பணக்காரர்களுக்கு மானியம் வழங்குகிறீர்கள், இதைத்தான் தாராளச் சந்தை என்று அழைக்கிறீர்கள்.
சர்தார் சரோவர் அணைக்கட்டு பிரச்சினையில் கால்வாய் வெட்டுவதற்காக வெளியேற்றப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் கணக்கிடப்படவில்லை. கேவடியா குடியிருப்பு மக்கள், காடுகள் வளர்ப்பதற்காக வெளியேற்றப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக கருதப்படவில்லை. அணைக்கட்டு திட்டத்தின் கீழ் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களே கணக்கில் எடுக்கப்பட்டனர் - அதிலும்கூட பிரச்சினை இருக்கிறது.
அணை கட்டப்பட்டதன் காரணமாக வேலையிழந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக கருதப்படவில்லை. தங்கள் வாழ்வாதாரமாக நதியை மட்டுமே நம்பியுள்ள ஏழையிலும் பரம ஏழை மக்கள், நிலமற்ற ஏழைகள், தலித் மக்கள், ஆதிவாசிகள் - நதிப்படுகையில் பருவ காலத்துக்கு ஏற்ப விவசாயம் செய்பவர்கள், மீனவர்கள், மணல் அள்ளுபவர்கள் என பல்வேறு தரப்பினர் மத்தியப் பிரதேச பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சின்ன இடத்தைகூட பிடிக்கவில்லை.
நிலத்துக்கு பதில் நிலம் தரப்படும் என்ற வாக்குறுதி இவர்களுக்குச் செல்லாத ஒன்றாகிவிட்டது.
இங்கே மற்றொரு பிரச்சினையும் உள்ளது. சமூகங்கள் வெளியேற்றப்பட்டு, முறையற்ற நிவாரண உதவி வழங்கப்படும் போது ரொக்கம் ஆண்களிடம்தான் கொடுக்கப்படுகிறது. அந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டுமென்று அவர்களுக்குத் தெரிவதில்லை. அவர்கள் குடிக்கிறார்கள் அல்லது வெட்டியாகச் செலவு செய்து தீர்த்து விடுகிறார்கள்.
இதற்கெல்லாம் தீர்வே இல்லை என்பது போல் நம்பச் செய்யப்படுகிறது. இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கின்றன என்று நினைத்துப் பார்த்திருப்போமா?
லாப மதிப்பீட்டில் ஏழைகளையும், எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களையும் கணக்கிலெடுக்கத் தேவையில்லையா? பேரணைகளை எந்த எதிர்ப்புமின்றி அனுமதிக்க வேண்டுமா?
நர்மதை அணைத் திட்டத்தால் பாதிக்கப் பட்டவர்கள் என்ற கணக்கில் எடுக்கப்பட்டவர்கள்கூட, எந்தவித மறுவாழ்வும் கொடுக்கப்படாமல் வெளியேற்றப் படுகிறார்கள். இது முழுக்க முழுக்க நர்மதை நீர் விவகார நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரானது, வெளியேற்றப்பட்ட மக்களுக்கு நிலத்துக்குப் பதிலாக நிலம் வழங்க வேண்டும் என்று மேற்கண்ட தீர்ப்புகள் வலியுறுத்தியுள்ளன.
ஆனால் மத்தியப் பிரதேச அரசோ சிறப்பு மறுவாழ்வு திட்டம் என்ற பெயரில் அறியமுகப்படுத்தியுள்ள ரொக்கப் பணத்திட்டத்தை ஏற்கும்படி பாதிக்கப் பட்டவர்களை நெருக்கடிக்குத் தள்ளுகிறது. இது சட்டத்துக்குப் புறம்பானது. இதில் செயல்படுத்தப்படும் தந்திரம் என்ன வென்றால், எதற்கும் பயன்படாத தரிசு நிலத்தை நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்குக் காட்டுவார்கள். அவர்கள் அதை ஏற்க மறுக்கும்போது, ரொக்கப் பணத்தை வாங்கிக் கொள்ளும்படி வற்புறுத்துவார்கள்.
சர்தார் சரோவர் மறுவாழ்வுக் கொள்கையை அரசுகளும் நீதிமன்றங்களும் திரித்துக் கூறி, மத்தியதர வர்க்கத்தினரிடம் பொதுக்கருத்தை உருவாக்கி , நர்மதை பாதுகாப்பு இயக்கத்தின் வாதத்தை அர்த்தமிழக்கச் செய்ய முயற்சிக்கின்றன. இப்பொழுது அணை கட்டப்பட்டு விட்டது. பி.ஜ.வர்க்கீஸ் உட்பட பல்வேறு பிரபலங்கள் அணையை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்கள். முழுமையாக மறுவாழ்வு தரப்படும் என்று வாய் கிழிய பேசியவர்கள், தற்போது நிலத்துக்கு பதிலீடாக நிலம் தருவது சாத்தியமில்லை என்று பின்வாங்குகிறார்கள். ஆனால் அணைகட்டும் திட்டம் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இப்பொழுது என்ன சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் தெரியுமா? சர்தார் சரோவர் மறுவாழ்வு கொள்கை நதி நீர் இணைப்பு திட்டத்துக்கும் அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. சர்தார் சரோவர் ஏற்படுத்திய அழிவைப் போல இன்னும் நூறு அழிவுகளை இது ஏற்படுத்தப் போகிறது. அதனால் லட்சக்கணக்கானோர், கோடிக் கணக்கானோர் வெளியேற்றப்படப் போகிறார்கள். மிக உன்னதமானது போன்று தோற்றமளிக்கும் இக்கொள்கை மிகவும் தந்திரமானது. எதிரியை குழப்பும் தன்மை கொண்டது.
கேள்வி - நீங்களும் நர்மதை பாதுகாப்புத் திட்டமும் இயல்பான வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று பார்க்கப்படுகிறீர்கள். ஆனால் சில சக்திகள் உலகம் முழுவதையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வர நினைக்கின்றன. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அருந்ததி ராய் - இது என்னை அயர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. உலகை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கும் அமைப்பு களை நாங்கள் தீவிரமாக எதிர்க் கிறோம். இந்த வகையான வளர்ச்சியை நாங்கள் எதிர்க்கிறோம். இது வளர்ச்சியல்ல, அழிவு என்பதை மீண்டும் மீண்டும் பல முறை வலியுறுத்திவிட்டோம். இது ஜனநாயகம் இவற்றைத்தான் நாங்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம். வலியுறுத்தி வருகிறோம்.
எங்கள் எதிர்ப்பை வலுவாக வெளிப்படுத்துகிறோம். ஒடுக்கப் படுகிறோமா, நாங்கள் வெல்கிறோமா, தோற்கிறோமா என்று கவலைப்பட வில்லை.
கேள்வி - உலகமயமாக்கம் தொடர்ச்சியாக அனைத்தையும் பெருமளவில் ஆக்கிரமித்து வருகிறது. இந்நிலையில் உங்களது பார்வை ஒரு சிறு மூலைக்குத் தள்ளப்படாதா?
அருந்ததி ராய் - எங்களது பார்வை சிறுமூலைக்கு தள்ளப்படும் என்று கூறமுடியாது. அது பரந்து விரிந்தே இருக்கும் - சிறிய, வளமான, மினுமினுக்கும் செல்வாக்கு செலுத்தும் மூளையாக இல்லாமலிருக்கும். எங்களது மூளை கருத்துடன் இருக்கும். மற்றொரு மூளை துப்பாக்கி, வெடிகுண்டுகள், பணம், ஊடகங்கள் போன்றவற்றுடன் இருக்கலாம்.
எங்களது பார்வை விரிந்த, துண்டிக்கப்பட்ட கடுமையான ஆபத்துகள் நிறைந்த பெருங்கடலில் தள்ளலாம். அங்கு உலகின் பெரும்பாலான மக்கள் நிலையற்று மிதந்து கொண்டிருப்பார்கள். அங்கு சற்று அலைந்து திரிந்த பிறகு இங்கே வந்தால், எல்லாம் மோசமாக மாறி வருகிறது என்று கூறத்தோன்றுகிறது.
கலிங்கநகர், ராயக்கடா, சட்டீஸ்கருக்குச் செல்லுங்கள் அங்கெல்லாம் உள்நாட்டுப் போர் மெல்ல கொதித்தெழுந்து வருவதை உணரலாம்.
கலிங்க நகரில் உள்ள ஆதிவாசிகள் பாரதீப் துறைமுகத்துக்கான பிரதான நெடுஞ்சாலையை ஜனவரிமாதம் முதல் அடைத்து வைத்திருக்கிறார்கள்.
சட்டீஸ்கரின் சில மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. அங்கெல்லாம் அரசு நிர்வாகம் உள்ளே நுழையவே முடியாது. ஒரு அழகான அரசியல் புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது என்று நான் கூறவில்லை. ஏழைகள் அதிகாரத்தை கைப்பற்றத் தயாராகிறார்கள் என்று கூறவில்லை. அது முடியும் தான். ஒரு சமூகமாகப் பார்த்தால் கிளர்ச்சிக்கான அனைத்து வகை வன்முறைகளும் இங்கு நிரம்பியுள்ளன.
குற்றவாளிகள், லும்பென், அரசியல் போன்ற விஷயங்கள் ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளை சிதைத்து விட்டன. நாம் முழுக்க முழுக்க நமது சமூகம் பற்றிய சிந்தனை காரணமாக, மினுமினுக்கும் பக்கத்தில் இருப்பவர்கள் அமர்ந்து இவற்றையெல்லாம் கவனிக்க வேண்டுமெனக் கோருகிறேன்.
கேள்வி - உங்கள் மீதும் நர்மதை பாதுகாப்பு இயக்கத்தின் மீதும் வைக்கப்படும் மற்றொரு கடுமையான விமர்சனம், ஒரு வகை உலகப் பார்வையை நீங்கள் எதிர்க்கிறீர்கள். ஆனால் அதற்கு மாற்றைக் கூறுவதில்லை. மாற்றுப் பார்வை இருக்கிறதா? அப்படிப்பட்ட ஒன்று அவசியமா?
அருந்ததி ராய் - மாற்றுப் பார்வை என்று ஒன்று இருக்கிறது. ஆனால் அது ஸ்டாலினின் திட்டம் போல மூன்று வரிகளில் சொல்லிவிடக்கூடியதில்லை. ஏன் தற்போதுள்ள உலகத்தையே மூன்று வரிகளில் வர்ணித்துவிட முடியாது.
வழக்கமாக இந்தக் கேள்வி ஏளனமாகவும், மோதும் எண்ணத்துடனும் கேட்கப்படும்.
நாம் வாழும் உலகத்தை நான் எப்படிப் பார்க்கிறேன் என்று நான் விளக்குகிறேன்.
பெரும் வளர்ச்சியை முன்வைத்து எண்ணற்ற முடிவுகள் எடுக்கப்படுகின்றன - பொருளாதார முடிவுகள், சூழலியல் முடிவுகள், சமூக, அரசியல், முன்மாதிரி, கொள்கை ரீதியிலான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இப்படி எடுக்கப்பட்ட ஒவ்வொரு முடிவுகளுக்கும் ஒரு மாற்றம் இருக்கிறது.
கட்டப்படும் ஒவ்வொரு அணைக்கும் ஒரு மாற்று இருக்கிறது. அந்த மாற்று அணைக்கட்டு கட்டப் படக்கூடாது என்பதாகவோ, குறைந்த உயரமுள்ள அணையாகவோ இருக்கலாம். கையெழுத்திடப்படும் நிறுவன ஒப்பந்தத்திற்கும் மாற்று இருக்கிறது. இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தம், விவசாய ஆராய்ச்சி அறிவை பகிர்ந்து கொள்வதில் இந்திய - அமெரிக்க ஒப்பந்தம் மரபீனி மாற்றம் செய்யப்பட்ட உணவு என எதுவானாலும் அவற்றுக்கெல்லாம் மாற்று இருக்கிறது.
இராணுவத்திற்கு கட்டுமீறிய அதிகாரத்தை வழங்கும் சிறப்பு அதிகாரச் சட்டம், நிலத்தை கையகப்படுத்தும் அராஜக சட்டம் என எல்லாவற்றுக்கும் மாற்று இருக்கிறது.
அடிப்படைப் பிரச்சனை என்னவென்றால் இந்த நாடு ஒரு நிறுவனம் அல்ல. நாட்டை நிறுவனத்தைப் போல நடத்த முடியாது. அனைத்துக் கொள்கைகளையும் வணிக நோக்கத்துடனும், இலாப நோக்கத்துடனும் உருவாக்கி செயல்படுத்த முடியாது.
நாட்டின் குடிமகன்கள் வேலையாட்கள் அல்ல. நினைத்தபோது வேலைக்குச் சேர்க்கவும், பிடிக்கவில்லை யென்றால் துரத்தியடிக்கவும் அவர்கள் கூலிக்காரர்கள் அல்ல. அரசு வேலைதரும் நிறுவனமும் அல்ல.
ஊடகங்கள் நிறுவனங்களின் செயல் அறிக்கைகளை வெளியிடுவனவாக இருக்கக்கூடாது. இந்தியாவின் கொள்கைகளை மான்சான்டோ, வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் நிர்ணயிக்கக்கூடாது.
ஆனால் நமது வளங்களான காடுகள், நதிகள், கனிம வளங்கள் பெரும் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுகின்றன. செயல் நுட்பமுள்ளது, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி போன்றவற்றின் பெயரால் முன்வைக்கப்படும் இந்த விஷயங்கள் பெரும் மக்கள் கூட்டத்தை சுரண்டவே வாய்ப்பளிக்கிறது. முறையற்ற வகையில் ஒரு சிறு கூட்டம் வளத்தைக் கொள்ளை யடிக்கிறது. இதன் காரணமாக ஏழை - பணக்காரரிடையே உள்ள இடைவெளி இன்னமும் விசாலமாகிறது. இதனால் சமூக முரண்பாடுகள் அதிகரித்துள்ளன.
மாற்று உலகின் அடிப்படை என்னவென்றால் குடிமகன்களின் அடிப்படை உரிமைகளை மீறிவிட்டு, எக்காரணத்தை முன்வைத்தும் அவற்றை நியாயப்படுத்தக் கூடாது என்பதுதான். இதுதான் ஆதாரம். இரண்டாவதாக நாட்டின் வளர்ச்சி விகிதத்தை வைத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் ஜனநாயகத்துக்கு என்ன அர்த்தம் இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் கணிதத்தில் (அல்ஜீப்ராவில்) தஞ்சமடைய முடியாது. இரண்டு லட்சம் பேரின் வாழ்க்கையைப் பறித்து 20 லட்சம் பேரின் வாழ்க்கையை மேம்படுத்தப் போகிறேன் என்று கூறமுடியாது.
இப்படி கற்பனை செய்து பாருங்கள். இந்தியாவிலுள்ள 2 லட்சம் பேரின் சொத்தை மத்திய அரசு பறிமுதல் செய்து 20 லட்சம் ஏழைகளுக்கு பிரித்துக் கொடுப்பது பற்றி ஏன் யோசிக்கவில்லை?
பணக்காரர்களிடமிருந்து ஒன்றைப் பெற்றால் அது அவர்கள் செலுத்தும் பங்கு என்றும், அதே ஏழைகளிடமிருந்து பறிக்கப்படுவது மட்டும் வளர்ச்சி என்றும் எப்படிச் சொல்ல முடிகிறது?
தமிழில்: ஆதி

Pin It