நமது நாட்டில் இரண்டு துறையினர் தரும் தகவல்களை எதிர் மறையாகத்தான் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒன்று வானிலை ஆராய்ச்சித் துறை. மற்றொன்று உளவுத்துறை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறி வித்தால் அந்த இடத்தில் வெயிலடிக்கும். அல்லது சிறு தூறலோடு நின்றுவிடும்.

உளவுத்துறை தகவலும் அப்படித் தான். ஒரு மதப்பண்டிகை வந்து விடக் கூடாது; உடனே பண்டிகையை சீர்கு லைக்க பயங்கரவாதிகள் சதி என்று உளவுத்துறை தகவல் தரும். ஒரு டிசம்பர் ஆறு வந்து விடக் கூடாது; உடனே கோயில்கள் மீது தாக்குதல் நடத்த சதி என்று உளவுத்துறை சொல்லும். சுதந்திர தினம் குடியரசுத் தினம் வந்து விட்டால் உடனே பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் என்று சொல்லும்.

உளவுத்துறையின் இந்த செய்தி உண்மையா? பொய்யா? என்று கூட ஆராயாமல் வலிந்து கொண்டு பக்கம் பக்கமாக வெளியிட்டு ஊடகங்கள் காசு பார்க்கும். ஆனால் உண்மை என்னவோ நேர்மாறாகத்தான் இருக்கும். ''நடக்கும் என்பார் நடக்காது; நடக்காதென்பார் நடந்து விடும்' என்ற பாடலைப்போல, உளவுத்துறை நடக்கும் என்றால் எதுவுமே நடக்காது என்பதைத்தான் கடந்த காலங்கள் சொல்லும் சான்றாக உள்ளன.

எப்போதெல்லாம் பயங்கரவாதிகள் சதி என்று உளவுத்துறை சொல்லியதோ அப்போதெல்லாம் நாடு அமைதியாகவே இருந்திருக்கிறது. ஆனால் உளவுத்துறை எச்சரிக்காத நாளில் நாட்டில் அசம்பாவிதங்கள் நடந்துள்ளது.

ஒரு பயங்கரவாத செயலைச் செய்ய நினைக்கும் ஒருவன், கடுமையான சோதனைகளும் கட்டுப்பாடுகளும் மிக்க சுதந்திர தினம், குடியரசு தினம், பாபர் மஸ்ஜித் இடிப்பு தினம் போன்ற நாளையா தேர்ந்தெடுப்பான் என்ற சாதாரண அறிவுகூட உளவுத்துறைக்கும் இல்லை. உளவுத்துறையை மிஞ்சிய உளவுத்துறையாக செயல்படும் பத்திரிக்கைகளுக்கும் இல்லை. உளவுத்துறையின் குருட்டுத்தனமான அறிவிப்புகளால் சோதனை என்ற பெயரில் மக்கள் படும்பாடு சொல்லிமாளாது.

வழிபாட்டுத்தலங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் சோதனை என்ற பெயரில் செய்யப்படும் கெடுபிடிகளால் அந்த நாள் ஏன்தான் வருகிறதோ என்று மக்கள் நினைப்பதற்கும், அந்த நாளோடு சம்மந்தப்பட்ட மதத்தினர் மீது வெறுப்புணர்வு கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாக ஆவதற்கும் காரணம் உளவுத்துறையின் உருப்படியில்லாத தகவல்கள்தான். இதை நாம் சொல்லவில்லை மாநில அரசுகள் சொல்லியுள்ளன.

ராஜஸ்தான், ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், காஷ்மீர் மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கூட்டம் சமீபத்தில் டில்லியில் நடந்தது. இதில், பேசிய மாநில அரசு அதிகாரிகள் கூறியதாக ஊடகங்களில் வந்துள்ள செய்தியில்,

''உளவு நிறுவனங்கள் தரும் தகவல்களை நம்பி, மாநிலங்களில் பாதுகாப்பு பணிக்கென அதிகளவில் ஆட்களை நியமிக்க நேரிடுகிறது.

ஏற்கெனவே சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்காக நிறைய பாதுகாப்பு படையினரும் பல்வேறு இடங்களில் பணி அமர்த்தப்படுகின்றனர். உளவு நிறுவனங்களின் தகவல்கள் உறுதியற்றதாக இருக்கும்போது பாதுகாப்புப் படையினருக்கு பணிச்சுமை அதிகரிப்பதோடு, அரசுக்கும் செலவு ஏற்படுகிறது.

பொதுமக்களும் சோதனை என்ற பெயரில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. எனவே, இனி மேலாவது அரை குறை தகவல்களைத் தெரிவிப்பதை மத்திய உளவு நிறுவனங்கள் கைவிட வேண்டும்' இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இனிமேலாவது உளவுத்துறை ஒழுங்காக உளவறிந்து தகவல்களை பரிமாறட்டும். ஒரு குறிப்பிட்ட நாளை தேர்ந்தெ டுத்து அந்த நாளில் எதையேனும் சொல்லி பரபரப்பை உண்டாக்குவதை விட, ஒழுங்காக உளவறிந்திருக்குமானால் நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்புகளை தடுத்திருக்க முடியும் என்பதுதான் உளவுத்துறை பற்றி மக்கள் கருத்தாக உள்ளது.

மேலும் மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டிய பத்திரிக்கைகள் பொய்யான தகவல்களை முதல் பக்கத்தில் வெளியிட்டு மக்களுக்கு பீதியை உண்டாக்கி காசு பார்ப்பதை நிறுத்த வேண்டும். இல்லையேல் பத்திரிகை ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று என்ற நம்பிக்கை சிதைத்து விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அஸ்ஸாம் கலவரம் தொடர்பான தவறான தகவலை அனுப்பி மக்களை பீதிக் குள்ளாக்கும் செயலை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்ததை போன்று, மக்களுக்கு அறிமுகமான பதற்றமான நாளில் மக்களை பீதிக்குள்ளாக்கும் வகையில் பொய்யான தகவலை பரப்பும் பத்திரிகைகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கக் மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும்.

Pin It