தமிழக மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர். ஆனால் அரசு புள்ளி விபரக் கணக்கு 6 சதவீதம் பேர் உள்ளதாக தெரிவிக்கிறது. முஸ்லிம்களின் மக்கள் தொகை சதவீதத்தின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவ சபைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இருப்பதில்லை.

எண்ணூறு ஆண்டுகாலம் இந்தியாவை ஆட்சி செய்தவர்கள் முஸ்லிம்கள். அரசியல் விழிப்புணர்வு இன்மையின் காரணமாக சட்டம் இயற்றும் சபைகளிலும், அதனை அமுல்படுத்தும் அதி காரப்பீடங்களிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படுகிறது.

சுதந்திரம் பெற்ற ஆரம்ப காலத்தில் தமிழக சட்டமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்தது. ஆனால் தற்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக விரல் விட்டு எண்ணக் கூடிய வகையில் உள்ளது.

முஸ்லிம்களின் ஒரு கட்சி பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காலம்போய் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மூன்று சீட்டு வாங்கியதே முக்கியத்துவம் வாய்ந்ததாக பேசப்படுமளவிற்கு நிலைமை உள்ளது.

இதற்கு விழிப்புணர்ச்சியின்மை, ஒற்றுமையின்மை, சுயநலத்தன்மை ஆகியவை காரணமாக சொல்லப்பட்டாலும் அதிகார வர்க்கத்தின் சதியும் மிக முக்கிய காரணம். முஸ்லிம்களின் வாக்குகள் எந்தக் காரணம் கொண்டும் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக அமைந்து விடக் கூடாது என்ற கருத்தில் அதிகார வர்க்கம் உறுதியாக உள்ளது.

முஸ்லிம் வாக்குகள் அதிகமாக உள்ள பகுதிகளை இரண்டு, மூன்றாக பிரித்து, அதனை வேறு, வேறு சட்டமன்றத் தொகுதிகளில் சேர்த்து முஸ்லிம் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக வரவிடாமல் தடுக்கும் வேலை செய்வது, அப்படி முஸ்லிம் வாக்குகளை பிரிக்க முடியாவிட்டால் அதனை தாழ்த்தப்பட்டோர் போட்டியிடும் ரிசர்வ் தொகுதிகளாக அறிவிப்பது என்று அதிகார வர்க்கம் திட்டமிட்டு முஸ்லிம்களை பழிவாங்குகிறது.

உதாரணமாக சென்னை மாநகரத்தில் முஸ்லிம் வாக்குகள் அதிகம் உள்ள எழும்பூர், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிகள் நீண்ட காலமாக ரிசர்வ் தொகுதிகளாக இருந்தன. எந்தக் காலத்திலும் ஆதிக்க சாதியினருக்கு வெற்றி வாய்ப்புள்ள மயிலாப்பூர், தி.நகர் தொகுதிகள் ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்பதிலிருந்தே இதனைப் புரிந்து கொள்ள முடியும்.

சட்டமன்றத் தொகுதிகளைப் போன்று உள்ளாட்சித் தேர்தல்களில் முஸ்லிம் பிரதிநிதிகள் அதிகம் தேர்ந்தெடுக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் அதிகார வர்க்கம் குறி வைத்து வேலை செய்கிறது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் வருகிற அக்டோபர் மாதம் 24ம் தேதி முடிவடைகிறது. சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. சட்டமன்றத் தேர்தலில் பெற்ற தோல்வியின் விளைவாக திமுக கூட்டணி சிதறுண்டு போயுள்ளது. அந்த அணியின் முக்கிய கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கொங்கு முன்னேற்றக் கழகம் ஆகியவை திமுக கூட்டணியை விட்டு வெளியேறி புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது.

அது மட்டுமல்லாது திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதிரடி கைது நடவடிக்கைகள் தொடர்வது அக்கட்சியினர் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றால் அது அதிமுகவிற்கு சாதகமாக அமையும் என்கிற காரணத்தால் விரைவில் தேர்தல் நடத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

கடந்த உள்ளாட்சிமன்றத் தேர்தல்களின்போது பல முஸ்லிம் கிராமங்கள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் முஸ்லிம்கள் போட்டியிடாமல் தடுக்கும் வகையில் அவை பெண்கள் போட்டியிடும் தொகுதிகளாகவும், ரிசர்வ் தொகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டன.

ஆறு மாநகராட்சிகளின் மேயர் தேர்தலில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பிருந்த திருநெல்வேலி மேயர் பதவியை தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு என்று அறிவித்து முஸ்லிம் மேயர் வர விடாமல் சதி செய்தனர்.

தற்போது புதிதாக மாநகராட்சிகள் சேர்க்கப்பட்டு மாநகராட்சிகளின் எண்ணிக்கை பத்தாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தல்களில் முஸ்லிம்கள் வெற்றி பெறக் கூடாது என்று கவனம் செலுத்தி வார்டுகள் பிரிப்பதில் சதி செய்யப்படுகிறது.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சங்கு நகர் பகுதியில் தொடர்ந்து முஸ்லிம் கவுன்சிலர்கள் வெற்றி பெற்று வந்தனர். தற்போது அந்த வார்டுகளில் முஸ்லிம்கள் வெற்றி பெறக் கூடாது என்ற வகையில் கூறு போடப்பட்டு வேறு வார்டுகளில் இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 500க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை காவல்துறை கைது செய்து பின்னர் விடுவித்தது. முஸ்லிம்கள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ள திருப்பூர் மாநகராட்சியிலும் வார்டுகள் பிரிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் வேலூர் மாவட்டத்திலும் அதிகார வர்க்கத்தினர் முஸ்லிம்கள் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளை ரிசர்வ் தொகுதிகளாக அறிவிக்கும் சூழ்நிலை இருப்பதை அறிந்து முஸ்லிம் இயக்கங்கள் போராட்ட அறிவிப்புகள் வெளியிட்டுள்ளன.

முஸ்லிம் சமுதாய அமைப்புகளும், மக்களும் விழிப்புடன் கண்காணித்து அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும். முஸ்லிம்கள் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளை பெண்கள் போட்டியிடும் தொகுதிகளாகவும், ரிசர்வ் தொகுதிகளாகவும் அறிவிக்க விடாமல் தடுக்கும் வகையில் சமுதாய அமைப்புகளும், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் போராட வேண்டும்.

அதையும் மீறி அதிகார வர்க்கம் அறிவிக்குமேயானால் அதனை உடனடியாக நீக்குமாறு ஒட்டுமொத்த சமுதாயமும் ஒரு மித்த குரலெழுப்பி தமிழக முதல்வரை நிர்ப்பந்திக்க வேண்டும்.

Pin It