வட மாநிலங்களில் பெரும் சவாலாக விளங்கும் மாவோயிஸ்டுகள், எல்லையோரத்தில் தினம் ஒரு பிரச்சினையை உருவாக்கும் அண்டை நாடுகள், குண்டு வெடிப்பு வழக்குகளில் கைதாகியுள்ள இந்துத்துவா தீவிரவாதிகள், கண்ணெதிரே போலீசாரின் துப்பாக்கிக் குண்டு பட்டு சரிந்து விழுந்து சாகும் இளைஞர்களைக் கண்ட பின்பும் மனம் தளராமல் போலீசார் மீது தொடரும் கல்லெறிகள், காவல்துறையும் - ராணுவமும் இணைந்து நடவடிக்கை எடுத்தும் மாதக் கணக்கில் தொடரும் காஷ்மீர்க் கலவரங்கள் - இந்தியாவின் பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் பலநூறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்புகின்றனர். இதனைச் சமாளிப்பதற்காக ஆலோசனை நடத்துவதற்காக மாநில போலீஸ் டிஜிபிக்கள் மாநாடு அண்மையில் டெல்லியில் நடைபெற்றது. மாநாட்டில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் தன்னுடைய பேச்சின் ஊடே, “தற்போது புதிதாக காவித் தீவிரவாதம் பரவி வருகிறது. சில குண்டு வெடிப்புகளின் பின்னணியில் காவி உடை அணிந்தவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது'' என்று பேசியிருந்தார்.

இந்த உரை ஊடகங்களில் செய்தியாக வெளிவந்ததும் இந்துத்துவாவினர் எகிறிக் குதிக்க ஆரம்பித்து விட்டனர். பாராளுமன்ற நடவடிக்கைகளை முடக்கும் அளவுக்கு அவர்களுடைய நடவடிக்கைகள் சென்று விட்டன. பாராளுமன்றத்தில் பாஜகவின் அருண் ஜேட்லி பேசும்போது, காவி நிறம் என்பது இந்து மதத்தைக் குறிப்பது. தீவிரவாதத்துடன் மதத்தை கலக்காதீர்கள் என்று பேசியுள்ளார். இப்போது புத்தர்களாக வேடமிடும் இவர்களின் கடந்த காலங்களைப் பார்ப்போம். இந்தியாவில் 800க்கும் மேற்பட்ட தீவிரவாதக் குழுக்கள் உள்ளதாக 2008ஆம் ஆண்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறி இருந்தார்.

வட மாநிலங்களில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் நக்ஸலைட் இயக்கங்களில் ஈடுபடுவோர் இந்து மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும் அவர்கள் நக்ஸலைட்டுகள் என்றே அடையாளம் காணப்பட்டனர். வடகிழக்கு மாநிலங்களில் அரசுக்கு எதிரான புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அனைவரும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் அவர்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தை வைத்தே அடையாளம் காணப்பட்டனர்.

இலங்கையில் தலைமையகம் இருந்தாலும் அவ்வப்போது தமிழகத்திலும் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இந்து மதத்தின் சைவ மரபைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் அவர்கள் விடுதலைப் புலிகள் என்று அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் மீது வேறு சாயம் பூசப்பட்ட போதும் கூட தமிழ்ப் போராளிகள் என்று அழைக்கப்பட்டனரே தவிர, அவர்களுடைய மதத்தைப் யாரும் சம்பந்தப்படுத்தவில்லை.

அப்படியிருக்கையில் தாடி வைத்திருக்கும் முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள். புர்கா போட்டிருப்பவர்கள் எல்லாம் பெண் தீவிரவாதிகள் என்கிற கருத்துருவாக்கத்தை உருவாக்கும் முயற்சியில் இந்துத்துவாவினர் முழு மூச்சுடன் செயல்பட்டனர்.

நாட்டில் எங்காவது சதிச் செயலில் முஸ்லிம்களின் பங்கு இருக்கின்றதா என்று உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே முஸ்லிம் தீவிரவாதிகளின் நடவடிக்கை என்று அறிக்கை விட ஆரம்பித்தனர். தங்கள் இனத்தைச் சேர்ந்த ஊடகங்கள் மூலம் முஸ்லிம்கள் குறித்த அவதூறுகளை அள்ளித் தெளித்து, தீவிரவாத சம்பவங்களோடு கற்பனைக் கட்டுரைகளை எழுதி மக்களை மூளைச் சலவை செய்யும் நடவடிக்கைகளில் இறங்கினர். இவர்களுடைய பிரச்சாரத்தில் மயங்கிய உளவுத்துறை அதிகாரிகளும், சதிச் செயலின் விசாரணை துவங்குவதற்கு முன்பே முஸ்லிம் தீவிரவாதிகளின் செயல் என்று கூறி தங்கள் கற்பனை இயக்கங்களுக்கு பல்வேறு முஸ்லிம் பெயர் சூட்டியும் இந்துத்துவாவினருக்கு துணை நின்றனர்.

தீவிரவாதத்தை மதத்தோடு சம்பந்தப்படுத்தாதீர்கள் என்று முஸ்லிம்கள் கோரிக்கை வைத்தபோது, முஸ்லிம்கள் அத்தனை பேரும் தீவிரவாதிகளில்லை. ஆனால் தீவிரவாதிகள் அத்தனை பேரும் முஸ்லிம்கள் என்று இந்துத்துவாவினர் எகத்தாளம் பேசினர்.

இந்துத்துவாவினர், உளவுத்துறை, ஊடகங்கள் ஆகியவற்றின் கூட்டுப் பிரச்சாரத்தினால் முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்ற சிந்தனைப் போக்கிற்கு மக்கள் தள்ளப்பட்டனர். பொது இடங்களில் தீவிரவாதச் செயல்கள் நடைபெற்றால் உடனடியாக முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டனர், இந்து மத வழிபாட்டுத் தலங்களில் குண்டு வெடித்தாலும் உடனடியாக முஸ்லிம்கள் மீதே குற்றம் சுமத்தப்பட்டது. முஸ்லிம்களின் பள்ளிவாசல்களிலும், தர்காக்களிலும் குண்டு வெடித்தால் கூட முஸ்லிம்கள் தான் கைது நடவடிக்கைக்கு உள்ளானார்கள்.

எந்த அளவிற்கு என்று சொன்னால், ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்திருக்கும் அஜ்மீர் தர்காவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் கூட முதலில் முஸ்லிம்கள்தான் கைது செய்யப்பட்டனர். ஹைதராபாத் மெக்கா பள்ளிவாசல் குண்டு வெடிப்பு, கோவா, புனே, மாலேகான் குண்டு வெடிப்புகளின் போதும் அதே நிலை தொடர்ந்தது. பின்னர் அந்த வழக்குகளில் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டபோது அவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக, இந்துத்துவா இயக்கங்களோடு தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

வட மாநிலங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் தொடர்ந்து இந்துத்துவா பயங்கரவாதிகள் பிடிபட்டவுடன் இந்துத் தீவிரவாதிகள், இந்து பயங்கரவாதம் என்ற சொற்களை சிலர் பிரயோகித்தனர். ஊடகங்களும் இதனை பயன்படுத்த ஆரம்பித்தன. இதனைத்தான் காவி தீவிரவாதம் என்று ப. சிதம்பரமும் பயன்படுத்தியுள்ளார். முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று உற்சாகத்தோடு பரப்பியவர்கள் இந்துத் தீவிரவாதிகள். இந்து பயங்கரவாதம் என்ற சொற்களைக் கேட்டதும் முகம் சுளிக்கின்றனர், மனம் கொதிக்கின்றனர்.

ஹிந்துத் தீவிரவாதம் என்ற சொல் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் வைத்யா சொல்கிறார். குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் கதாநாயகன் மோடி “காவித் தீவிரவாதம் என்று உள்துறை அமைச்சர் கூறியதற்காக பிரதமர் மன்மோகன் சிங் மன்னிப்புக் கேட்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

உள்துறை அமைச்சர் காவித் தீவிரவாதம் என்று சொன்னதற்கே இந்தக் குதி குதிக்கும் இவர்கள், பல கோடி முறை முஸ்லிம்களைப் பற்றியும், இஸ்லாத்தைப் பற்றியும் அவதூறு பேசியதற்கு எத்தனை முறை மன்னிப்புக் கேட்பார்கள்?

இயக்கங்களை, கட்சிகளை நடத்துபவர்கள் நடுநிலையாக சிந்திக்க வேண்டும். மக்கள் அனைவருக்கும் நன்மையை நாட வேண்டும். அதை விடுத்து குரோத மனப்பான்மையோடு மத துவேஷங்களைப் பரப்பினால் அவர்கள் விதைத்த வினையை அறுத்துத்தான் தீர வேண்டும்.

Pin It