அன்புடன்

புதிய போராளி வாசகர்களுக்கு,

இந்த நமது பொதுத்திட்டம் என்ற வரைவு ஆவணத்தை விவாதத்திற்கு பொதுமையர் பரப்புரை மன்றம் உங்கள் முன் வைக்கின்றது.

இவ்வரைவாவணம் ஆகஸ்டில் (2010) முன்வரைவாக சுற்றுக்கு விடப்பட்டது. இதர தோழமை அமைப்புகளுக்கு கலந்துரையாடல்களாக சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. பின்னர், மார்ச் - 13இல் (2011) நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் புதிய போராளி ஆதரவாளர்கள் மற்றும் மா.லெ.மா.குழு (திருப்பூர்) புரட்சிகர மக்கள் முன்னணி தோழர்கள் கலந்து கொண்டு ஆறுமாதங்களுக்கு மேலாக தொடர்ந்த விவாதங்களை வரைவாக இறுதிப்படுத்தினர்.

இனி இதன் உருவாக்கப் பின்னணியை சுருக்கமாகப் பார்ப்போம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.) மக்கள்யுத்தக் குழு தமிழகத்தில் எண்பதுகளில் முக்கிய பிளவுகளை எதிர்கொண்டது. தோழர் தமிழரசன் மற்றும் போல்ஸ்விக் கட்சி என்ற இரண்டு பிளவுகளை எதிர்கொண்டது. இந்த பிளவுகளை ஒட்டிய அரசியல் போராட்டங்கள் மற்றும் மக்கள் யுத்தக் குழுவின் நான்கு மாநில மாநாடுகள், மாநாடுகளுக்கிடையே நடந்த சிறப்புக் கூட்டங்கள், பிளினங்கள் மற்றும் பிற குழுக்களின் தொடர்ந்த எதிர்மறையான விமர்சனங்கள் ஒரு ஆழமான சொந்த அரசியல், அனுபவ அறிவை வளப்படுத்தின.

மேலும், கட்சி, மக்கள்திரள் அமைப்புகள், ஆயுதக்குழு போன்ற அமைப்பு வடிவங்களை கட்டியதில் உள்ள அனுபவ அறிவும் தொடர்ந்த கிராமப்புற வர்க்கப் போராட்டங்களும் அரசியல் போராட்டங்களும் சனநாயகப் போராட்டங்களும் இதர அடித்தளங்களாகும்.

இதன் பின்னணியிலேயே 1995இல் நடந்த அனைத்திந்திய சிறப்பு மாநாட்டில் தமிழக பிரதிநிதிகளால் சில அடிப்படைக் கோட்பாட்டு சிக்கல்களை விவாதிக்க முடிந்தது. இதன் முத்தாய்ப்பாகவே 2001.ல் நடந்த 9ஆவது பேராயத்தில் இருவழிப் போராட்டம் என்ற வடிவமெடுத்தது. மக்கள் யுத்தக் கட்சியின் (இன்றைய மாவோயிஸ்ட்) அரசியல் வழி, ஆயுத சீர்திருத்தவாதம் மற்றும் இராணுவ வழி கெரில்லாயிசம் என்பதனடிப் படையிலான தமிழக, கர்நாடக பிரதிநிதிகளின் அரசியல் போராட்டம் சிறுபான்மையாக பேராயத்தால் நிராகரிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக சிறையில் இருந்து நடத்தப்பட்ட உட்கட்சி சனநாயத்திற்கான போராட்டங்களும் நிராகரிக்கப்பட்டு வெளியேற்றப் பட்ட சூழ்நி​லையில், "புதிய போராளி"யால் திட்டம் தயாரிப்பு முன்வைக்கப்பட்டு கடும் எதிர் சூழ்நி​லையில் வெற்றிகரமாக இந்த ‘நமது பொதுத் திட்டம்’ உங்கள் முன் வைக்கப்படுகிறது.

தமிழகத்தில் மக்கள் யுத்தக்கட்சியின் அரசியல் வழியை நடைமுறைப் படுத்தியதிலும் அதை திடப்படுத்தியதிலும் என்னுடைய பங்கு முக்கிய மானது. இவை என்னுடைய முழு உடன்பாட்டுடனும், சில சமயங்களில் கருத்து மாறுபாட்டுடனும் நடைமுறைபடுத்தப்பட்டன. எனவே, தவறுகளுக்கான முக்கிய பொறுப்பை ஏற்கும் முகமாக எனது சுயவிமர்சனத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

கடந்தகால போராட்டங்கள் தமிழகத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார மாற்றங்களின் பாதிப்பிலேயே தொடர்ந்து எழுப்பப்பட்டன. இதுவே, முக்கிய அடிப்படைக் காரணியாகவும் இருந்தது. எனவே, வரலாற்றையும், சமூக, பொருளாதார, அரசியல் நி​லைகளையும் ஆய்வு செய்து அதனடிப்படையில் திட்டத்தை முன்வைப்பது என்ற ஒரு நடைமுறைவாதத் (Pragmatism) தன்மையிலேயே இம் முடிவை வந்தடைந்தேன் என்ற அடுத்த சுய விமர்சனத்தை உங்கள் முன் வைக்கிறேன்.

புதிய போராளியால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த வேலைத் திட்டம் நடைமுறையாக்கப்பட்டதில் சிலருடைய உதவிகள் விலை மதிப்பற்றவை என்றே கருதுகிறோம். ஏனெனில், நாங்கள் சிறையிலிருந்து வெளிவந்ததால் அமைப்பு பலம் இல்லை. திட்டம் இல்லாமல் அமைப்பு கட்டக் கூடாது என்ற முடிவையும் எடுத்திருந்தோம். மேலும், தமிழகத்தில் சில ‘மார்க்சிய பெரியவாள்கள்’ ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில் பல ஆண்டுகளாக "நிஷ்டையில்"" இருப்பதால் ஒரு நம்பிக்கையற்ற சூழல் நிலவுகிறது. இதனால், ஆய்வு, திட்டம் தயாரிப்பு போன்ற செயல்களுக்கு ஆதரவளிக்காத நி​லை நிலவுகிறது. இதனால், பல நல்ல தோழர்கள் இம்முயற்சியில் தோல்வியடைந்து சராசரி மக்கள் திரளில் கலந்துவிட்டனர். இத்தகைய சூழலிலேயே எங்களது இந்த வெற்றியை பெருமிதமாகவே உணர்கிறோம்.

இதனாலேயே, எங்களுக்கு பொருளாதார உதவி செய்த சில தோழர்கள் மற்றும் சில அமைப்புகளின் உதவியும் புத்தகங்களை கொடுத்து உதவிய சில பதிப்பகம் மற்றும் நூலகத் தோழர்களின் உதவியும் விலை மதிப்பற்றவை என்று கருதுகிறோம்.

கடந்த எண்பதாண்டுகளில் முதலில் உருவான இந்திய கம்யூனிஸ்டு கட்சி இந்தியாவைப்பற்றி எந்தவித பருண்மையான ஆய்வையும் மேற்கொள்ள வில்லை. முதல் நாற்பதாண்டுகளில் அகிலத்தின் வழிகாட்டுதலை எந்திரகதியாக பொருத்தவோ அல்லது இரசியாவை பெயர்த்தெடுக்கவோ முயற்சி செய்தது.

பின்னர், 70இல் உருவான மா.லெ கட்சியும் சீனாவை பெயர்த்தெடுக்கவே முயற்சி செய்தது. 80களில் பரவலாக இந்தியா முழுவதும் சில குழுக்களால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவைகள் "ஆபரேசன் வெற்றி நோயாளி மரணம்" என்ற கதையாக இருந்தது. இது கடந்த முப்பதாண்டு களாக நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

லெனினிய கோட்பாடான புறநி​லை ஆய்வு, அதன் மீதான மார்க்சிய கோட்பாட்டளவிலான திட்டம், திட்டத்தினடிப்படையிலான அகநி​லைத் தயாரிப்பு என்பதை நிராகரிக்கக்கூடிய அறிவுமறுப்பிய (அனுபவவாத-empiricism) போக்கிலேயே பெரும்பாலான புரட்சிகர அமைப்புகள் உள்ளன. ஆய்வை மேற்கொண்ட ஒருசில அமைப்புகளோ வரட்டு கோட்பாட்டிய போக்கில் சிக்கிக் கொண்டிருக்கின்றன.

எனவேதான், புதிய சமூக, பொருளாதார சூழ்நி​லையில் புதிய ஆய்வும் ஆய்வின் அடிப்படையில் திட்டமும் தேவை என்று கருதினோம். மற்றபடி நாங்கள்தான் புதியவைகளை கண்டுபிடித்துவிட்டோம் என்ற பொருளில் அல்ல. புரட்சிகர திட்டத்தை செழுமைப்படுத்தும் வரலாற்றுப்போக்கில் நாங்களும் இணைந்துள்ளோம் என்பதுதான்.

திட்டத்தின் மீதான அரசியல் மாறுபாடுகளை தொடர்ந்து விரிவாக புதிய போராளியில் விவாதிப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்களது ஆழமான விமர்சனங்களை, விவாதங்களை ஆவலுடன் எதிர்பாக்கிறோம்.

தோழமையுடன்,

துரைசிங்கவேல்

(ஆசிரியர்)

Pin It