aanai muthu copy“உள்ளபடி ஒரு அளவிலே நான் திருப்தியாக இருந்தது - நாம் அதிலே இல்லை; மற்றவர்களுக்குச் சொல்லாம் என்று நினைத்தேன். பகுத்தறிவாளர்கள், நாத்திகர்கள், மதமற்றவர்கள், இந்துக்கள் அல்ல என்று சொல்லிக் கொள்பவர்கள் இருக்கலாம்.

இந்த இழிவிலே சம்பந்தமில்லை என்று அப்படி நினைத்தேன் நான், ஆனால், சட்டம் - நண்பர் ஆனைமுத்து வந்து படித்துக் காண்பித்தார், இந்தியாவிலே இருக்கிற கிறிஸ்தவன் தவிர, முஸ்லிம் தவிர மற்றவன் எல்லாம் இந்து; அவன் யாராயிருந்தாலும்” என்று. (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் தொகுதி-3, பக்கம் 2043-4-ஆம் பத்தி). 23.7.1973 அன்று மாலை பெரம்பலூரில் பெரம்பலூர் வட்டப் பகுத்தறிவாளர் கழக இரண்டாவது மாநாட்டில் பெரியார் சொன்னார். அதில் தந்தை பெரியார் அவர்கள், “இந்து மதத்தைவிட்டு வெளியேறுங்கள்” என்று அறிவிப்புச் செய்தார்.

தந்தை பெரியாரின் அறிவிப்பு தவறு என எனக்குப்பட்டது. அதுபற்றி, 20, 21.6.1973-இல் இரு நாள்களிலும் திருச்சியில் பெரியார் மாளிகையில் “இந்துக்கள் என்றால் யார்? இந்து மதத்தை விட்டு வெளியேறுவது என்றால் எப்படி? நாம் பகுத்தறிவாளர் - நாத்திகர் என்றால் போதுமா? நாத்திகர் என்றால் ‘கடவுள் இல்லை’ என்று எங்கே எழுதியிருக்கிறது?” என்று நான் தந்தை பெரியாரிடம் நீண்ட கேள்வி எழுப்பினேன். அது பெரிய உறுத்தலாகத் தந்தை பெரியாருக்குத் தென்பட்டது. ஏன்?

அவர், “இந்தியா கவர்ன்மெண்ட் கெசட்டில் அப்படி நாத்திகர் என்று அறிவிப்புச் செய்துவிட்டால் நாம் நாத்திகர்தானே!” என்று எதிர்க்கேள்வி கேட்டார்.

பகுத்தறிவாளர் என்றால் மத நம்பிக்கை உள்ளவர்கள் என்றும் பொருள் இருக்கிறது. நாத்திகர் என்றால் திட்டவட்டமாக ‘கடவுள் நம்பிக்கை இல்லாதவர்’ என்று பொருள் இல்லை. அதற்கான சட்ட விளக்கங்களை நான் பல ஆதாரங்களிலிருந்து தந்தை பெரியாருக்குத் தொகுத்துக் கொடுத்தேன். அதனால், நான் சொன்ன செய்திகளை ஒத்துக் கொண்டார்.”

இந்துக்களாகப் பிறந்தவர்கள் சூத்திரனாகவோ, தீண்டப்படாதவனாகவோ, சத்திரியனாகவோ, வைசியனாகவோ, பார்ப்பானாகவோதான் சாக வேண்டும். இந்து மதத்தை விட்டு வெளியேறுவது என்றால் இந்து மதத்தை விட்டு வெளியேறி, இசுலாமியனாகவோ, கிறிஸ்தவனாகவோ மதம் மாற வேண்டும். அப்படி மாறினால் ஒழிய இந்து மதத்தை விட்டு வெளியேறியதாகப் பொருளில்லை என்று நான் உறுதியாக எழுதிக் கொடுத்தேன்.

இன்னமும் அதை உறுதியாக நம்புகிறேன். இதுபற்றி, நம் தோழர்கள் எல்லோரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டுகிறேன்.

வே. ஆனைமுத்து

Pin It