“சிந்தனையாளன்” இதழ் நான் தொடங்கிய மூன்றாவது கிழமை இதழ். மக்கள் போதிய ஊக்கம் இல்லாததால், திங்கள் இதழாக இன்று வெளிவருகிறது.

“நான்” ஏன்?

2011ஆம் ஆண்டில், நானும் தோழர் தமிழேந்தியும் கடைசி தடவையாக, கோவை மாவட்டம் ஆவணக் காப்பகத்தில் படித்தோம். எல்லாம் பழைய ஏடுகள். நான் ஒரே நாளில் 15,000 பக்கங்களைப் படித்தேன் - எல்லாம் 150 ஆண்டு கடந்த ஏடுகள்; தூசி படிந்தவை; தூசி நச்சு ஏறியவை.

இன்று ‘கொரோனா’ நோய்அணு பரவாமல் தடுக்க முகக் கவசம் அணிவது போல், எல்லா மக்களும் முகக் கவசம் அணிய அறிவுரை கூறினால் போதும்.

ஆனால்; இந்திய அரசும் தமிழக அரசும் வலுக்கட்டாயமாக - மக்கள் செயல்படுவதைத் தடுத்தார்கள். முகக் கவசம் அணிந்த பிறகு ஒருவரோடு ஒருவர் பழகலாம், வாய் வழியாகவும், மூக்கு வழியாகவும் காற்றிலுள்ள நுண்ணுயிர்கள் மூக்கு வழியாக இன்னொருவர் உட்கொள்ளும் காற்று வழியாக நுழையாது.

“நான்” அவ்வளவு தூசி படிந்த பக்கங்களை நாள் முழுவதும் படித்தேன். நச்சை உட்கொண்டேன்; உணர்வை இழந்தேன்.

அடுத்த நாள், அதிகாலை தமிழேந்தி ஒரு திருமணத்தில் பங்கேற்க, தொடர் வண்டிக்குப் புறப்படும் நேரத்தில்-சூலூர் க.தேவராசு, ம.சரவணக்குமார், புலவர் ந.கவுதமன் மூவரையும் உசுப்பி விட்டுப் புறப்பட்டார்.

“நான்” என்ன ஆனேன்?

நான் படுக்கையிலேயே மலம், சிறுநீர் கழித்துவிட்டேன்; உணர்விழந்துவிட்டேன். ஒரு மணிநேரம் கழித்து, முன்சொன்ன இருவர் கீதா விடுதிக்கு வந்தவுடன் என்னைக் கழுவி, தானியங்கியில் ஏற்றி, தனியார் மருத்துவமனைக்குப் போய்ச் சேர்த்தார்கள். மருத்துவர்களிடம் 1. க. தேவராசு-நான் பெரிய மகன், அடுத்தவர் 2. ம. சரவணக்குமார் இளைய மகன் என வாக்குமூலம் அளித்தார்கள்.

“நிறைய செலவாகுமே” என்று மருத்துவர்கள் கூற, அதற்கு இருவரும் இணக்கம் தெரிவித்தார்கள்.

நான் காலை 9 மணிக்குக் கண் விழித்தேன். ந. கவுதமன் நிறைய பணத்துடன்; கோவை கு. இராம கிருஷ்ணன் பலருடன் என் முன் நின்றனர்.

அடுத்த நாள் என் மூத்த மகன் ஆனை. பன்னீர் செல்வம் கோவைக்கு வந்தார்.

செலவான தொகையைப் பிறகு சூலூர் தோழர்களுக்குக் கொடுத்தேன். இது “நான்”.

இப்போது, இந்திய அரசு, தமிழக அரசு இரண்டும் என்ன செய்தன?

  1. 2020 மார்ச்சு 25 முதல் ஏப்பிரல் 14 வரை 21 நாள்கள்;
  2. ஏப்பிரல் 15 முதல் மே 3 வரை 19 நாள்கள்;
  3. மே 4 முதல் மே 17 வரை 14 நாள்கள்;
  4. மே 18 முதல் மே 31 வரை 14 நாள்கள்;
  5. சூன் 1 முதல் சூன் 30 வரை;
  6. சூலை 1 முதல் சூலை 31 வரை;
  7. 2020 ஆகத்து 1 முதல் 31 முடிய 31 நாள்கள்.

ஆக, மார்ச்சு 25 முதல் 2020 ஆகத்து 31 முடிய 160 நாள்கள்!

தமிழ்நாட்டில்,

  1. பேருந்துகள், தொடர் வண்டிகள் ஓடவில்லை;
  2. பள்ளிகள், கல்லூரிகள் இயங்கவில்லை;
  3. சிறுதொழில்கள் இயங்கவில்லை;
  4. தேநீர் விடுதிகள், பெரிய உணவகங்கள் தொடர்ந்து இயங்கவில்லை;
  5. மருத்துவமனைகள் சரிவர இயங்கவில்லை;
  6. சிற்றேடுகள் வெளிவரவில்லை;

2020 ஏப்பிரல் முதல் 2020 சூலை வரை 4 மாதங்கள் ‘சிந்தனையாளன்’ திங்கள் இதழ் வெளியிடப் படவில்லை.

இன்னும் எத்தனை நாள்கள் ஊரடங்கு நீட்டிக்கப் படுமோ, யார் கண்டார்? பெரியார்-நாகம்மை அறக்கட்டளை அறங்காவலர் கூட்டம், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடை மைக் கட்சியின் பொதுக்குழு 2020 மார்ச்சு 21, சனி, 22 ஞாயிறு இரு நாள்கள் நடத்தப்படவில்லை!

காவல் துறை கட்டுப்பாட்டுக்கு அஞ்சி 2020 ஏப்பிரல் 14 முதல் ஏப்பிரல் 29 வரை மேதை அம்பேத்கர், பாவேந்தர் பிறந்த நாள்கள் நடத்தப்படவில்லை.

என் பிறந்த நாள், எந்த ஆண்டிலும் வீட்டோடு சரி. இந்த 21-6-2020, 96ஆம் அகவை பிறந்த நாள் அப்படியே! நாம் “சிந்தனையாளன்” இதழ் உறுப்பினர்களுக்கு அன்பார்ந்த வேண்டுகோளாக, நீங்கள் எம் அமைப்புகளை மனமார நம்புங்கள்.

பெரியார் வரலாறு-நானும் கவிஞர் தமிழேந்தியும், மற்ற தோழர்களும் திரட்டிய சான்றாவணங்கள் மூன்றாண்டுகள் - 2009, 2010, 2011, என் 96ஆம் பிறந்த நாளில் வரவேண்டும் என 21.06.2020இல் 8-9-2019-இல் வேலூரில், மார்க்சியப் பெரியாரியப் பொதுக்குழுவில் முடிவெடுத்தோம். இன்னும் என் 96ஆம் அகவை முடிய, 9 மாதங்கள் இடைவெளி உள்ளது.

இது போதும்! நாம் முயன்றால் இன்னும் 4 மாதங்களில், அழகான பதிப்பாக “பெரியார் வரலாறு” வெளியிட்டு, தமிழ் மக்களின்-பெரியார் பெருந் தொண்டர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம், வாருங்கள், வாருங்கள்!

- வே.ஆனைமுத்து

Pin It