முதலாளித்துவ உலகமயமாக்கல் கொள்கை ஏற்படுத்தும் விளைவு

police in slumசில நாட்களுக்கு முன்பு அரும்பாக்கம் பகுதியில் கூவம் ஆற்றங்கரையில் குடிசைகளில் வசித்துவந்த 247 ஏழை எளிய குடும்பங்களின் வெளியேற்றும் திட்டத்தை அரசு செயற்படுத்த முற்பட்டது. முன் தயாரிப்புகளின்றி வெளியேற்றப்பட்ட மக்கள் அரசின் இச்செயலை எதிர்த்து கடுமையாக போராடினர். அதனை தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்ப தற்காலிகமாக வெளியேற்றும் திட்டத்தை நிறுத்தவேண்டிய கட்டாயத்திற்கு அரசு தள்ளப்பட்டது. மறுகுடியமர்வு ஏற்பாடு செய்யும் வரை குடிசைகளை அகற்றுவதை நிறுத்துவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். ஆனால் அதற்கு முன்பாகவே 93 குடிசைகள் இடிக்கப்பட்டு பல ஏழை எளிய உழைக்கும் மக்கள் தெருவில் நிற்கும் அவல நிலை ஏற்பட்டது. 

மக்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக 30 கி.மீ அப்பால் பெரும்பாக்கம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பிற்கு மாற்றுவதாக இருந்த திட்டம் கைவிடப்பட்டு புளியந்தோப்பு பகுதியில் உள்ள கே.பி பூங்கா குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அவர்கள் குடியமர்த்தப்பட்டனர். மீதமுள்ள குடும்பங்களுக்கான குடியிருப்பு கே. பி பூங்காவில் ஒத்துக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சர்வதேச சட்ட விதிகளின் படி ஒரு குடியிருப்பிலிருந்து வெளியேற்ற படும் மக்கள் 3 கி.மீ தொலைவுக்குள் குடியமர்த்தப்பட வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளும் இருப்பிடம் என்பது இந்திய அரசியலைப்பின் 21-வது பிரிவின் படி மக்களின் அடிப்படை உரிமை என உறுதிபடுத்தியிருக்கின்றன.

ஆனாலும், சர்வதேச சட்டங்கள், அரசியலமைப்பு உரிமைகளை மறுத்து ஏழை எளிய உழைக்கும் மக்கள் ஒடுக்கப்படுவது தொடர்கதையாகவே நடந்தேறி வருகிறது. கட்சிகள் பேதமின்றி பூர்வகுடிகள் வெளியேற்றம் தொடர்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் கொரானா தொற்று பரவிக்கொண்டிருந்த செப்டம்பர்- டிசம்பர் 2020 காலப்பகுதியிலும் மனிதாபிமானமற்று எந்தவித முன்னறிவிப்புமின்றி உழைக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

2020 டிசம்பரில் தீவுத்திடல் காந்திநகரில் 220 குடும்பங்கள், 2019 செப்டம்பர் மற்றும் டிசம்பரில் சிந்தாதரி பேட்டையில் உள்ள பல்லவன் நகர், தீவுத்திடல் சத்யவானி முத்து நகர் மற்றும் இந்திரா நகரில் சுமார் 3000 குடும்பங்கள். 2018 மே மற்றும் நவம்பரில் சிந்தாதரிப்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் நகர் மற்றும் ஓட்டேரி கோனூர் ரோட்டில் சுமார் 1050 குடும்பங்கள், 2017 நவம்பரில் கிரீம் சாலை, நுங்கம்பாக்கம் திடீர் நகரில் 603 குடும்பங்கள் என பலகட்டங்களின் பூர்வகுடி ஏழை எளிய உழைக்கும் மக்களின் குடிசைகள் இடிக்கப்பட்டு வெளியேற்ற பட்டுள்ளனர்.

இந்து பத்திரிக்கையின் வன்மம்:

அரும்பாக்கம் குடிசைவாழ் மக்கள் வெளியேற்றம் தொடர்பாக ஆகஸ்டு 2ஆம் தேதி, இந்து பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி அரசியல் கட்சி தலைவர்களின் தலையீட்டின் காரணமாக பாரதிபுரம், கதிரவன் காலனி, மஞ்சக்கொல்லை, கஜலட்சுமி காலனி, திருவீதி அம்மன் கோயில் தெரு போன்ற பகுதிகளிலிருந்து மக்கள் மாற்று இடத்திற்கு குடிபெயர மறுக்கிறார்கள் என்று ஒரு வன்மமான செய்தியை வெளியிட்டுள்ளது. மேலும் அது கூறுகையில் 80 சதவீத கூவம் சுத்திகரிப்பு பணியை முடிந்து விட்டதாகவும் இந்த பூர்வகுடி மக்கள் வெளியேற மறுப்பதால் டிசம்பர் 2021 இல் முடிவுற வேண்டிய பணி தடைபட்டு நிற்பதாகவும் எழுதியுள்ளது. 

அதன் வன்மத்தின் உச்சமாக கவர்ச்சிகரமான வாய்ப்புகள் கொடுக்கப்படும் அரசியல் தலையீட்டின் காரணமாக மக்கள் இடம்பெயர மறுத்து அடம் பிடிக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த குடிசைகளை அகற்றி விட்டால் 300 மீட்டர் அகலமாக கூவம் நதி அகலப்படுத்த பட்டுவிடும் என்றும் கூறியுள்ளது. பல்வேறு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பை பற்றி ஒரு வரி கூட எழுத திராணியற்ற இந்து பத்திரிக்கை, இந்த எளிய உழைக்கும் மக்களின் குடிசை மட்டுமே ஆக்கிரமிப்பு என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி தன் பார்ப்பனிய மேட்டிமைத்தனத்தை வன்மமாக கக்கியுள்ளது.

நகரத்தின் உட்பகுதியிலேயே வீடுகள் வழங்கப்படுகிறது என்பதையே பொறுத்துக் கொள்ள முடியாத இந்து பத்திரிகை இதனை கவர்ச்சிகரமான வாய்ப்பாகவும், இந்த நல்ல வாய்ப்பையும் அரசியல் காரணங்களுக்காக மக்கள் மறுப்பதற்காகவும் பிரச்சாரம் செய்கிறது. தமிழீழ இனப்படுகொலைக்கு துணை போன தி இந்து போன்ற பத்திரிக்கைகள் உழைக்கும் மக்களுக்கும், தமிழர்களுக்கும் எதிராக தனது பார்ப்பனிய தமிழர் வெறுப்பு மனநிலையை தொடர்ந்து கக்கி வருவது புதிதல்ல. அதனை இப்போதும் தொடர்கின்றன.

வெளியேற்றப்பட்ட மக்களின் இன்றைய நிலை:

திமுக ஆட்சி காலத்தில் 1996ல் உருவாக்கப்பட்ட சிங்கார சென்னை திட்டம், 2010 ஆம் ஆண்டு உருவான நதி சீரமைப்பு திட்டம், அதிமுக அரசு கொண்டுவந்த மழை நீர் வடிகால் திட்டம் என அனைத்து திட்டங்களையும் செயற்படுத்தி கடந்த 1996லிருந்து 2019 வரை மட்டும் கிட்டத்தட்ட 25,000 குடும்பங்களை இருக்கட்சியின் அரசுகளும் அப்புறப்படுத்தியிருக்கின்றன.

இன்றைய தேதி வரை கண்ணகிநகர், எழில் நகர், செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் குடுசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் சுமார் 60,000 குடும்பங்களுக்கு மேல் குடியமர்த்தபட்டுள்ளனர். 

இந்த குடியிருப்புகளுக்கு முறையான கழிவு நீர் வடிகால் அமைப்பு கிடையாது. கழிப்பறை - குளியலறை குழாய்களில் இருந்து கழிவு நீர் வெளியாகி, இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் கழிவு நீர் நிற்கிறது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அங்கு சுகாதாரமற்ற சூழல் உண்டாகி குழந்தைகள் உள்பட அனைவருக்கும் நோய் தொற்றுகள் பரவுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் லிப்ட் வசதிகள் கூட இல்லாமல் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பினி பெண்கள் உள்பட அனைவரும் படிக்கட்டு வழியாக செல்லும் அவலமான நிலையில் தான் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் காட்டுமானம் உள்ளது.

பெரும்பாக்கம், செம்மஞ்சேரி பகுதி குடியிருப்பில் சுமார் 40000 குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு பள்ளிக்கூடம் மற்றும் ஒரு மருத்துவமனை மட்டுமே உள்ளது.

ஆனால் இக்குடியிருப்பு பகுதிகளில் போதைக்கு அடிமையாக்கும் அரசு மதுபானக்கடை மட்டும் தவறாமல் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அந்த மக்களின் வருவாய்க்கு ஆதாரமாய் இருந்த மாநகரத்தை விட்டு அப்புறப்படுத்தி விட்டு, தினக்கூலிகளாக அவர்களை மாற்றி விட்டு, மதுபான கடையையும் அங்கு திறந்து உழைக்கும் மக்களின் தினக்கூலியை வழிப்பறி கொள்ளை போல அபகரிக்கின்ற வேலையை தான் அரசுகள் செய்கின்றன. 

kannagi nagarஆண்களின் நிலை இப்படி என்றால் இந்த குடியிருப்பில் வாழும் உழைக்கும் பெண்களின் நிலை மிக மோசம். நகரின் மையப் பகுதியில் இருந்த போது சுற்றி உள்ள பகுதிகளில் வீட்டு வேலை அல்லது வேறு வேலைகளை பார்த்தனர். நகரை விட்டு 40 கிமீ தாண்டி இப்பகுதிகளில் குடியமர்த்திய பிறகு தினமும் பேருந்தில் பயணம் செய்து இந்த வேலைகளுக்கு சென்று வர வேண்டும். தங்கள் குழந்தைகளை, பருவ வயது பெண் குழந்தேகளை பாதுகாப்பற்ற சூழலில் விட்டு செல்ல வேண்டும் என்ற நிலையே உள்ளது. இது போன்ற பல உளவியல் மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளை நோக்கி இந்த எளிய மக்களை ஆளும் அரசுகள் தள்ளுகின்றன.

சரியான பள்ளிகள் இல்லாத காரணத்தினால், நகருக்குள் உள்ள பள்ளிகளுக்கு தினமும் பேருந்தில் சென்று வரும் அளவுக்கு வருமானம் இல்லாத காரணத்தினால் பெரும்பாலான மாணவ பருவத்து பிள்ளைகள் கல்வி கற்க இயலாத சூழலில் தள்ளப்படுகின்றனர்.

1990கள் தொடங்கி சென்னையின் மத்திய பகுதிகளில் இருந்து இவ்வாறாக அகற்றப்பட்டு கண்ணகி நகர், எழில் நகர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் குடியமர்த்தப்பட்டிருக்கும் மக்களின் இன்றைய நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது.

இந்தப் பகுதியிலிருந்து வரும் மக்களுக்கு எந்த வேலையும் கிடைப்பதில்லை. சென்னையின் மத்திய பகுதியில் வீட்டு வேலைகளுக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்த பெண்கள் எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப் பட்டிருக்கின்றனர். இவர்களிடம் இருப்பிடத்தை காரணம்காட்டி வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. ஒரு குற்றப்பரம்பரை போல் ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள்.

படித்த இளைஞர்களுக்கு கூட எந்த நிறுவனத்திலும் வேலை வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை. வேலை கேட்டு செல்பவர்களிடம் காவல் துறையில் நன்னடத்தை சான்றிதழ் வாங்கி வரும்படி கட்டாயப்படுத்தப்படுகிறது. காவல்துறையும் நன்னடத்தை சான்றிதழ் வழங்குவதில்லை. கண்ணகி நகர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி பகுதிகளில் வாழும் மக்களுக்கு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது.

வீட்டில் ஆண்கள் குடி, கஞ்சா போன்ற போதைக்கு அடிமையாகி, வேலைவாய்ப்பும் அற்று, குழந்தைகளை படிக்கவைக்க முடியாமல் பெண்கள் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். இருப்பிடத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலிருந்தும் விரட்டப்பட்டு வாழ வழியற்று நிற்கிறார்கள்.

உழைக்கும் மக்களை வெளியேற்றும் முதலாளித்துவ கொள்கைகள்

1990 களின் ஆரம்பப்பகுதியில் உலகமயமாக்கல் கொள்கையை இந்தியா ஏற்றுக்கொண்ட பிறகு, இந்திய நகரங்கள் பெருநிறுவனங்களின் சந்தைகளாக மாறத்தொடங்கின. சர்வதேச நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் சந்தைகளாக நகரங்களை மாற்ற தொடங்கின. குறைந்த கூலியில் தங்களின் உற்பத்தியையும், சேவைகளையும் செய்ய தொழிலாளர்களை இந்திய நகரங்களில் குவித்து தங்கள் லாபங்களை ஈட்டத் துவங்கின. இதன் மூலம் மேலைநாடுகளில் அதிக ஊதியம் கொடுத்து பெறப்படும் வேலைகள் குறைந்த ஊதியத்தில் இந்திய நகரங்களில் பெற்று அதிக லாபம் ஈட்ட முடிந்தது.

90களில் ஏற்பட்ட தகவல் தொழிற்நுட்ப துறை வளர்ச்சி, குறைந்த ஊதியத்தில் கிடைக்கும் தொழிற்துறை வல்லுநர்கள் என இந்திய நகரங்கள் சர்வதேச பெருமுதலாளிகளின் சுரண்டல் காடாக மாறியது. மேற்கத்திய நாடுகளின் ஊதியத்தை விட பலமடங்கு குறைவான ஊதியம் பெற்றாலும் அதுவரை பெறமுடியாத ஊதியம் முதல் தலைமுறை பட்டதாரிகளாக வெளியேறிய இந்திய தொழிலாளர்களுக்கு கிடைத்தது.

mrc nagar

(அடையாறு கழிமுகத்தை ஆக்கிரமித்துள்ள எம்ஆர்சி நகர்)

இதன் காரணமாக தனியார் துறைகளில் வேலைகள் கிடைக்கப்பெற்ற நடுத்தர உழைக்கும் வர்க்கம் நகரப்பகுதிகளில் குடியமரத் துவங்கினர். கொடுக்கும் ஊதியத்தை பறிக்கும் நுகர்வு கலாச்சார மக்களை உருவாக்கும் வணிக வளாகங்களும், தங்கும் விடுதிகளும், அடுக்குமாடி குடியிருப்புகளும், கேளிக்கை பொழுதுபோக்கு நிறுவனங்களும் தங்களுக்கான தளங்களை அமைத்துக் கொண்டனர்.

பெருநிறுவனங்களுக்கு தேவையான வசதி வாய்ப்புகள், நிலம் வரிசலுகைகள் உள்ளிட்ட ஆதரவுகள் அரசின் வரிப்பணத்தில் எல்லையற்று வாரி வழங்கப்பட்டன. நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்ட போது அரசு வேடிக்கை மட்டுமே பார்த்தது.

பெருநிறுவனங்களின் சரக்குகள் தங்குதடையின்றி கொண்டு செல்லப்படுவதற்கும், ஊழியர்கள் விரைவாக சென்று வருவதற்கும், நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சியால் ஏற்பட்ட மகிழுந்து பெருக்கத்தால் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்க்கவும் விரிவுபடுத்தப்பட்ட சாலை வசதிகள், மேம்பாலங்கள் என அனைத்திற்காகவும் பூர்வகுடி உழைக்கும் மக்களின் இருப்பிடங்கள் அபகரிக்கப்பட்டன.

2018ஆம் ஆண்டு Nike, H&M உள்ளிட்ட நிறுவனங்கள் விற்பனையாகாத பொருட்களை அழித்து விடுவதாக ஒரு செய்தி வந்து மக்களின் எதிர்ப்பை பெற்றது. பெரும்புயல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வசதியற்ற மக்களுக்கும் நன்கொடையாக கொடுப்பதற்கு பதிலாக இவ்வாறு அழிப்பது மனிதத் தன்மையற்ற செயல் என கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாயின. இதற்கான காரணம் வறுமையில் வாடும் மக்கள் தங்கள் பொருட்களை அணிந்தால் அதன் மதிப்பு குறைந்துவிடும் என்றன. எந்த வர்க்கத்தை தங்கள் நுகர்வோராக வைத்துக்கொள்வது என்பது முதலாளித்துவத்தின் மறுக்கமுடியாத, மறைக்கமுடியாத கூறு. அதே போல் அடிப்படையில் எந்த வர்க்கம் தங்கள் நுகர்வோர் அல்ல என்பதையும் கொண்டிருக்கின்றன. அவ்வகையில் சென்னையின் பூர்வகுடி உழைக்கும் ஏழை எளிய மக்கள் தங்களின் நுகர்வோர் அல்ல என்பதை தீர்மானித்து விட்டன. அதற்கேற்றாப்போலவே அரசின் கொள்கைகளும், திட்டங்களும் வகுக்கப்படுகின்றன.

அதுவரை நகரின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்காற்றிய ஏழை எளிய உழைக்கும் மக்கள் இந்த தராளமயவாத நுகர்வு கலாச்சார கொள்கைக்கு இடைஞ்சலாகவும், தேவையற்ற சுமைகளாகவும் கருதப்பட்டனர். நகர வளர்ச்சிக்கு அடிநாதமாக விளங்கியவர்களை, உள்ளடக்கியதாக நகரின் வளர்ச்சி இல்லை. அரசின் கொள்கைகள் இவர்களை தனிமைப்படுத்துவதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே நகரை தூய்மைப்படுத்துதல் என்கிற பெயரில் வகுக்கப்பட்ட திட்டங்கள் இந்த குடிசை வாழ் உழைக்கும் மக்களை நகரிலிருந்து அப்புறப்படுத்துவத்திலிருந்தே துவங்கியது. இவர்களின் நிலை மேல் கரிசனை வந்துவிடுவதை தவிர்க்க தொடர்ச்சியாக அழுக்கானவர்களாக, நாகரீகமற்றவர்களாக, குற்ற பின்னணி கொண்டவர்களாக, சமூக விரோதிகளாக முதலாளித்துவ கருத்துருவாக்க ஊடகங்கள், செய்தித்தாள்கள், திரைப்படங்கள் மூலம் நடுத்தர வர்க்க மக்களிடம் கருத்து திணிக்கப்பட்டது.

அரசு வேலைகளில் கடைநிலை ஊழியர்களாக வேலைசெய்தவர்களை வெளியேற்றும் பணி தனியார் நிறுவனங்களிடம் அரசுத்துறை வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் கொடுத்ததன் மூலம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகரின் துப்புரவு பணி பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பனியா முதலாளிகளுக்கும் வழங்கப்பட்டு அரசு பணியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

படிப்படியாக சென்னை நகரத்திற்கும் தங்களுக்குமான உறவு முறித்தெரியப்படுவதை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்களிப்பதன் மூலம் தடுத்து நிறுத்தும் திறன் இம்மக்களிடம் இல்லாமல் போனது. வாக்கு வாங்க வாக்குகொடுத்தவர்கள் வாக்கு வாங்கியப்பின் துரோகமே செய்தார்கள்.

வெளியேற்றப்பட்ட மக்கள் வாழ்வை இழந்து நிற்கும் போது, அரசுக்கு எதிராக கிளந்தெழுந்து விட கூடாது என்பதற்காக குற்றப் பரம்பரையாக மாற்றப்படுகிறார்கள். சாராயம், கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் தாராளமாக கிடைக்கப்பெற்று மீள வழியற்ற சமூகமாக மாற்றப்பட்டிருக்கிறது.

முதலாளித்துவ சுரண்டலுக்கு காடுகளிலிருந்து வெளியேற்றப்படும் பழங்குடியினர் போலவே நகர பழங்குடியினரும் முதலாளித்துவ சுரண்டலுக்காக தங்கள் உருவாக்கிய நகரத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். அரசும், முதலாளித்துவ நுகர்வு கலாச்சார அடிமை சமூகமும் காடுகளில் வாழும் பழங்குடியின மக்களை தீவிரவாதிகளாகவும், நகர பூர்வகுடி குடிசைவாழ் மக்களை ஆக்கிரமிப்பாளர்களாக கட்டியமைக்கிறது. முதலாளித்துவ எடுபிடிகளான ஊடகங்களும், பத்திரிக்கைகளும், திரைத்துறையும் அதற்கான கருத்துருவாக்க பிரச்சாரங்களை செய்கின்றன.

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் பல வனிகவளாகங்களையோ, மருத்துவமனைகளையோ, கல்லூரிகளையோ, நட்சத்திர தங்கும் விடுதிகளையோ ஆக்கிரமிப்பாளர்களாக கட்டமைப்பதில்லை. வாழ வசதியற்று சுகாதாரமற்ற குடிசைகளில் வாழும் இம்மக்களைத்தான் ஆக்கிரமிப்பாளர்கள் என்கிறார்கள். குடிசை கட்டுப்பாட்டு வாரிய குடியிருப்புகள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருக்கிறது என்று பலர் குற்றம் சாட்டுகிறார்கள். பெருநிறுவனங்களோ, அரசோ ஆக்கிரமித்தால் வாய்மூடி மௌனிக்கும் அதே வாய்கள் எளிய மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்வதற்கு கூச்சம் காட்டுவதில்லை. இம்மக்களை சுகாதாரமற்ற சூழலில் வைத்திருக்கும் அரசின் கொள்கை செயற்பாட்டை இவர்கள் யாரும் கேள்வி கேட்பதில்லை.

சமூகநீதி காப்பாளர்களாக தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் திராவிட ஆட்சியாளர்களும் முதலாளித்துவ பொருளாதார சுரண்டலுக்கு வழிவகுக்கும் திட்டங்களையே தீட்டுகின்றனர். சமூகநீதி என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சியை மையப்படுத்தி ஒருங்கிணைந்த வளர்ச்சியைக் கொடுப்பது. ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களை விளிம்பிற்கு தள்ளி பெருமுதலாளிகளின் வளர்ச்சியை மையப்படுத்தியே கடந்த 30 வருட திராவிட ஆட்சிகள் செயற்பட்டிருக்கின்றன என்பதை சென்னை நகர பூர்வகுடி மக்களின் வெளியேற்றம் தெளிவாக விளக்குகிறது.

சென்னை குடிசைவாழ் பூர்வகுடி உழைக்கும் மக்கள் கேட்பதெல்லாம் சர்வதேச விதிகளுக்குட்பட்டு, இந்திய அரசியலமைப்பு கொடுத்திருக்கும் உரிமையை மட்டுமே. சென்னையை அழகுபடுத்துவதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது, அது சென்னைவாழ் பூர்வகுடி உழைக்கும் மக்களின் உரிமையை பறிக்காத, அவர்களையும் உள்ளடக்கிய அழகாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பும். மார்வாடி சேட்டுகளுக்கும், சர்வதேச பெருமுதலாளிகளுக்குமான சென்னை அழகாக தெரியலாம், ஆனால் தமிழ் மண்ணிற்குரிய சமூகநீதி சென்னையாக இருக்காது.

கடின உழைப்பை கொண்டு அழகாக உருவாக்கிய கரையான் புற்று கரையான் வெளியேறிய பின் கொடும் விசம்கொண்ட பாம்பின் வசிப்பிடமாக மாறிப் போகும் என்பதை இந்துத்துவ பார்ப்பனியம் ஒட்டுமொத்த மாநிலங்களை கபளீகரம் செய்து கொண்டிருக்கும் வேளையில் கருத்தில் கொள்வது அவசியம் என்பதை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொண்டு உழைக்கும் மக்களை உள்ளடக்கிய அழகிய சென்னையாக உருவாக்க முனைய வேண்டும். உழைக்கும் மக்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதை நாம் ஒவ்வொருவரும் நம் கடமையாக செய்ய வேண்டும். அதன் மூலம் அரசிற்கு அழுத்தத்தை கொடுத்து அரசை மக்களுக்காக செயற்பட வைப்போம்.

- மே பதினேழு இயக்கம்