பெங்களூரு தொழிலாளர்களின் மேநாள் அறைகூவல்

முதலாளித்துவத்தின் மீதான போர் அறிவிக்கை யாக (பிரகடனமாக) மார்க்சும் எங்கெல்சும் உருவாக்கிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 1848 பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.

1760 முதல் நீராவி சக்தியைக் கொண்டு இயந்தி ரங்கள் மூலமாக உற்பத்தி செய்தல் என்கிற நடை முறை ஏற்பட்டது. முதலில் பஞ்சாலைகளும், நூற்பாலைகளும் நெச வாலைகளும் ஏற்பட்டன. பெரிய கூரையின் கீழ் ஒரே தொழிற்சாலையில் நூற்றுக் கணக்கில் தொழிலாளர்கள் வேலை செய்யும் புதிய முதலாளிய இயந்திர உற்பத்தி முறை உண்டானது.

இத்தொழிற்சாலைகளில் பதினான்கு, பதினாறு, பதினெட்டு மணிநேரம் என்கிற அளவில் தொழிலா ளர்கள் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். இவ்வாறு கசக்கிப் பிழியப்பட்டதால் பல்லாயிரக்கணக்கில் தொழி லாளர்கள் தொழிற்சாலைகளிலேயே செத்து மடிந்தனர். இக்கொடுமையை எதிர்த்திட தொழிலாளர்கள் துணிவு கொண்டனர்.

தங்கள் முதல் கோரிக்கையாக “ஒரு நாளைக்குப் பத்து மணிநேர வேலை” என்பதை முன் வைத்து அமெரிக்காவிலும், அய்ரோப்பிய நாடுகளிலும் பல நகரங்களில் தொழிலாளர்கள் போராடத் தொடங்கினர். முதலாளிகள் தொழிலாளர்கள் மீது கொடுமையான ஒடுக்குமுறைகளை ஏவினர். அரசுகள் முதலாளிகளுக் குச் சார்பாகவே செயல்பட்டன.

இந்நிலையில் 1864 செப்டம்பர் 28 அன்று மார்க்சு, எங்கெல்சு ஆகியோரின் வழிகாட்டுதலுடன் அய்ரோப் பாவின் பல நாடுகளிலிருந்து வந்து குழுமியிருந்த தொழிலாளர்கள் கூட்டத்தில் இலண்டன் மாநகரின் செயின்ட் மார்டின் மண்டபத்தில் சர்வதேசத் தொழிலாளர் சங்கம் (International Workings Men’s Association) தோற்றுவிக்கப்பட்டது. இது தமிழில் ‘முதல் அகிலம்’ என்று அழைக்கப்படுகிறது.

சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் செயல்பாடுகள் தொழிலாளர்கள் மேலும் போர்க் குணத்துடன் தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடவும், தொழிற்சங்கங்களை வலிமையாகக் கட்டியமைக்கவும்  உந்து விசையாக அமைந்தன.

1806 இல் அமெரிக்காவில் பிலடெல்பியா நகரில் உருவாக்கப்பட்ட தொழிற்சங்கமே உலகில் முதலாவது தொழிற்சங்கம் எனக் கருதப்படுகிறது. அமெரிக்காவில் பால்டிமோர் என்ற இடத்தில் 1866 ஆகத்து 20 அன்று அமெரிக்காவில் உள்ள தொழிற்சங்கங்களை இணைத் துத் தேசிய தொழிற்சங்கம் வில்லியம் எச்.சில்விஸ் என்பவரின் முன்முயற்சியால் உருவாக்கப்பட்டது. இவரே தேசிய தொழிற்சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்கள் இலண்டனில் இருந்த முதல் அகிலத்தின் தலைவர்களுடன் தொடர்பு கொண்டி ருந்தனர்.

தேசிய தொழிற்சங்கத்தின் முதல் மாநாடு அதே ஆண்டில் (1866) நடைபெற்றது. அம்மாநாட்டில், “அமெரிக்கா முழுமைக்கும் 8 மணிநேர வேலைநாள் என்பதைச் சட்டமாக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே முதலாளித்துவ அடிமைத்தனத்திலிருந்து இந்நாட்டின் உழைப்பை விடுவிக்க முடியும். இந்த மாபெரும் பயனை அடைய நாம் நம்முடைய ஆற்றல் அனைத்தையும் ஒன்று திரட்டத் தீர்மானிக்கிறோம்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1877ஆம் ஆண்டு 8 மணிநேர வேலை நாள் கோரிக்கையை முன்வைத்து அமெரிக்காவில் பல நகரங்களில் தொழிலாளர்கள் போராடினார்கள். அரசும் முதலாளிகளும் கூட்டுச் சேர்ந்து அப்போராட்டங்களை நசுக்கினர். தொழிலாளர்கள் மீண்டும் வீறு கொண்டெ ழுந்தனர். அமெரிக்கா முழுவதும் 8 மணிநேர வேலை நாள் என்பதைச் சட்டமாக்கிடக்  கோரி 1866 ஆம் ஆண்டு மே முதல் நாள் அமெரிக்கா முழுவதும் தொழி லாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதுடன் பேரணிகள், கூட்டங்கள் நடத்துவது என்று தேசிய தொழிற்சங்கம் முடிவெடுத்தது.

சிகாகோ நகரில் 1866 மே அன்று ஊர்வலமாகச் சென்ற தொழிலாளர் களை அரசும் முதலாளிகளும் கூட் டாக ஏவிய கூலிப்படையினர் தாக்கி னர். இதைக் கண்டித்து மே 3ஆம் நாள் தொழிலாளர் நடத்திய கண்ட னக் கூட்டத்தில் காவல்துறையினர் தொழிலாளர் களைக் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கினர். காவல் துறை யைக் கண்டித்து மே 4 அன்று வைக்கோல் சதுக்கம் என்ற இடத்தில் தொழிலாளர்கள் மாபெரும் கண்டனக் கூட்டம் நடத்தினர். அப்போது கூட் டத்தில் ஒரு வெடிகுண்டு வீசப்பட்டது.

இதனால் ஏற்பட்ட மோதலில் படை அதிகாரி ஒருவரும் ஏழு காவல் துறையினரும், நான்கு தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர். வைக்கோல் சதுக்கத்தில் தொழிலாளர்களின் குருதி ஆறு போல் ஓடியது. சிகாகோ தொழிலாளர் தலைவர்கள் சிலர் தூக்கிலிடப்பட்டனர். பலருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. வைக்கோல் சதுக்கத்தில் தொழிலாளர்களின் குருதி தோய்ந்த சட்டையே செங்கொடியானது.

இரண்டு ஆண்டுகள் கழித்து 1888இல் திசம்பரில் கூடிய தொழிலாளர் கூட்டமைப்பு சிகாகோ நகரில் மே மாதம் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதை-தொழிலாளர் உரிமை நாளாகக் கொண்டாடுவது என்று முடிவெடுத் தது. 1889இல் பாரிசு நகரில் உலகின் பல நாடுகளி லிருந்து வந்திருந்த சோசலிசத் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் 1890 மே முதல் நாளை சர்வதேச தொழிலாளர் நாளாகக் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்கு எங்கெல்சு உந்து விசை யாக விளங்கினார்.

1890ஆம் ஆண்டு அய்ரோப் பாவிலும் அமெரிக்காவிலும் மே முதல் நாளை உலகத் தொழிலாளர் நாளாகக் கொண்டாடினர். இன்றுவரை உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே முதல் நாள் தொழிலாளர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தொடர்ந்து போராட்டகள் நடத்தியதன் மூலமே தொழிலாளர்கள் பல உரிமைகளையும், பல நலத்திட்டங் களையும் பெற்றனர். குறிப்பாக அய்ரோப்பாவில் 1930 களுக்குப்பின் தொழிலாளர்களின் வாழ்க்கையில் உறுதி செய்யப்பட்ட நலக்கூறுகள் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டன. அவை தொழில் வளர்ச்சி பெற்ற நாடு கள் என்பதாலும் கல்வி அறிவும், சமத்துவ, சுதந்தர உணர்வும் மிக்க நாடுகள் என்பதாலும், தொழிலா ளர்கள் ஒரே வர்க்கமாக அணிதிரண்டு போராடினர். பல பயன்களைப் பெற்றனர்.

இந்தியாவில் வர்க்க உணர்வு ஏற்படாதவாறு மக்கள் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகளாகப் பிளவுண்டு கிடக்கின்றனர். பெரும்பான்மை மக்கள் இன்றும் வேளாண்மையைச் சார்ந்தே வாழ்கின்றனர். மொத்த உழைப்பாளர்களில் 90 விழுக்காட்டினர் அமைப்பு சாராத் தொழிலாளர்களாக இருக்கின்றனர். 10 விழுக் காட்டினர் மட்டுமே அமைப்பு சார்ந்த (Organised Sector)) தொழிலாளர்கள். 1991 முதல் தாராளமயம், தனி யார்மயம், உலகமயம் என்கிற கொள்கையை நடுவண் அரசும், மாநில அரசுகளும் நடைமுறைப்படுத்தத் தொடங்கிய பிறகு, அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் பெற்றிருந்த உரிமைகளும், காப்பு நலன்களும் பறிக்கப்பட்டு வருகின்றன. இதில் மன்மோகன் சிங்கை விஞ்சும் வகையில் நரேந்திர மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

2016-17 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை யை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன் றத்தின் முன்மொழிந்தபோது, தொழிலாளர்கள் பணி யிலிருந்து ஓய்வுபெறும்போது, அவர்களுடைய வருங் கால வைப்பு நிதி சேமிப்புக் கணக்கில் உள்ள மொத்தத் தொகையில் அய்ந்தில் மூன்று பங்குத் தொகை மீது வரி விதிக்கப்போவதாக அறிவித்தார்.

இக்கருத்தைக் கண்டித்து சமூக வலைதளங்களில் இலட்சக்கணக் கானோர் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர் எனவே ஒரு கிழமைக்குள் வரி விதிக்கும் இந்த எண்ணத்தைக் கைவிடுதாக நடுவண் அரசு அறிவித்தது.

நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைப் பதற்கு முன்பே 2016 பிப்ரவரி 10 அன்று தொழிலாளர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியில் சேமித் துள்ள பணத்தை அவர்கள் எடுப்பதற்குப் பல கட்டுப் பாடுகளை விதித்தது.

இந்த அறிக்கைக்கு முன்பு இருந்த நிலையைப் பார்ப்போம். அமைப்பு சார்ந்த தொழிலாளரின் அடிப் படை ஊதியத்திலிருந்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் சேமிப்புக்காக 12 விழுக்காடு தொகை பிடித்தம் செய்யப்படும். தொழிலாளி பணியாற்றும் நிறுவனம், தொழிலாளர் நலனுக்காக, அதன் பங்காக 12 விழுக்காடு தொகையை அளிக்கும்.

அமைப்புச் சார்ந்த தொழில் நிறுவனம் என்கிற வரையறைக்குள் உள்ள ஒரு நிறுவனத்தில்-20 தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்தால், தொழிலாளர் ஊதியத்தில் 12ரூ பிடித்தமும், நிறுவனத்தில் சார்பில் 12ரூ  தொகை யும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் சேமிப் பாகச் செலுத்த வேண்டும். தொழிலாளர்கள் தங்களின் நெருக்கடியான தேவைக்குத் தாங்கள் செலுத்திய சேமிப்புத் தொகையை முழுவதும் கூட எடுத்துக் கொள்ள லாம். ஆனால் நிறுவனம் தொழிலாளருக்காகச் செலுத் திய தொகையை அவர் 58 அகவையை எய்திய பிறகே எடுக்க முடியும்.

10-2-2016 அன்று நடுவண் அரசின் தொழி லாளர் நலத்துறை வெளியிட்ட ஆணையின்படி, இனி தொழிலாளர்கள் வேலையிலிருந்து நின்றுவிட்டால், அவர்கள் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட சேமிப்புத் தொகையைகூட 58 அகவைக்குப் பிறகே அவர் எடுக்கமுடியும். இதற்குத் கடுமையான எதிர்ப்பு கள் தெரிவிக்கப்பட்டன.

அதன்பின், தொழிலாளர் தன் குடும்ப உறுப்பினர்களின் கல்வி, மருத்துவம், திரு மணம், வீடு கட்டுதல் அல்லது வாங்குதல் ஆகிய செலவு களுக்கு மட்டும் அவர் செலுத்திய தொகையிலிருந்து பணத்தைப் பெறலாம் என்று நடுவண் அரசு கூறியது. ஆனால் இதை இந்திய அளவில் தொழிலாளர்கள் ஏற்கவில்லை.

பெங்களூவில் ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் 5 இலட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினர் பெண்கள். இவர்களில் 18-2-16 அன்று ஓசூர் நெடுஞ்சாலையிலும் பிற முதன்மையான சாலைகளிலும் மறியல் செய்து போராடினர்.

உயர்தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக ஊதியத்திற்காக ஒரு நாளைக்கு 10 மணி நேரத்துக்குமேல் வேலை செய்யும் படித்த அலுவலர் கள் ஆடை தயாரிப்புப் பெண் தொழிலாளர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசினர். மாதத் தில் 26 நாள்கள் வேலை செய்தால் ரூ.7,000-10,000 சம்பளம் பெறுகின்றனர். டெனிம்  நிறுவனத்தில் ஒரு பெண் தொழிலாளி ஒரு நாளில் 80-90 முழுக்கால் சட்டைகளைத் தைத்து முடிக்க வேண்டும்.

60 முழுக்கால் சட்டை மட்டுமே ஒரு நாளில் தைக்க முடியும். ஆனால் இவர்கள் 80 தைக்குமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். காவல்துறையினர் இவர்களைத் தாக்கினர். நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் சினமுற்ற இப்பெண் தொழிலாளர்கள் 19-2-16 அன்று பெங்களூர் நகரின் இயக்கமே நிலைகுலையும் வகையில் போராடினர்.

காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். வாகனங்கள் பல எரிக்கப்பட்டன. அன்று இரவே தொழிலாளர் நலத்துறை அமைச்சர் 10-2-16 அன்று விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார்.

எனவே போர்குணத்துடன் அஞ்சாமல் போராடுவ தன் மூலமே உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என்பதை பெங்களூரு ஆடை தயாரிப்பு நிறுவனங்களின் பெண் தொழிலாளர்கள் மேநாள் செய்தியாக அறிவித்துள்ளனர்.

Pin It