1926இல் தன்மான இயக்கம் கண்டார்: தன்மானக் கொள்கையின் வெற்றி எவ்வளவு?

தந்தை பெரியார் அவர்கள் 26.12.1926இல் தம் 47ஆம் அகவையில், தன்மான இயக்கம் கண்டார். அந்த இயக்கத்தின் நிறுவனர் அவர்; இயக்கத்துக்குக் கொள்கை வகுத்தவர் அவர். இத்துடன் மட்டுமா? அக்கொள்கைகளைப் பரப்புநராகவும் - 47 ஆண்டுக்காலம் தமிழகத்திலும் கேரளத்திலும் வடபுலத்திலும் இடைவிடாது உழைத்தார். என்னென்ன கொள்கைகளை வெற்றி பெறச் செய்ய அப்படி உழைத்தார்?

1. மனிதருள் பிறவியால் உயர்வு, தாழ்வு இல்லை. பிறப்பால் எல்லாரும் சமம்.

2. தன்மானத்தைப் பறிகொடுக்கும் மத மூடச்சடங்குகளைச் செய்திட முந்துவதை வெறுக்கச் சொன்னார்; ஒதுக்கச் சொன்னார். அச்சடங்குகளைச் செய்வதற்கென்று மாற்று இனத்தவனை அழைக்காதீர்கள் எனக் கூறினார்.

3.            ஆணுக்கு உள்ள எல்லா உரிமைகளும் பெண்ணுக்கும் உண்டு என்பதை நாம் உணரவும், பின்பற்றவும் அறிவுரை கூறினார்.

4.            அய்ம்புலன்களுக்கும் எட்டாத - ஆராய்ச்சியில் தட்டுப்படாத - எல்லாவல்லமையும் உள்ள கடவுள் இருப்பதாக நம்புவதையும், அந்த நம்பிக்கையின் அடிப்படையில் கோவில்கள், மடங்கள் அமைத்தல் - கல்லுருவத்தை - செம்பு உருவத்தை - அய்ம் பொன் சிலையை வணங்காதீர்கள்; நேரம், சிந்தனை, பணம், உடலுழைப்பு இவற்றை அதற்காகப் பாழாக்காதீர்கள் என்று கற்பித்தார்.

இவ்வளவு கொள்கைகளையும் நெடுங்காலம் கற்பித்தவர்கள் புத்தரும், புலேவும், தந்தை பெரியாரும், பெர்ட்ரண்ட் ரஸ்ஸலுமே ஆவர். இவர்களின் கொள்கைகள் ஏறக்குறைய ஒரே தன்மையானவை.

தன்மான இயக்கம் பிறந்த 1926இல் எழுத்தறிவு பெற்றவர்கள், இந்தியாவிலும், தமிழகத்திலும் 100க்கு 10 பேருக்கு மேல் இல்லை.

இன்று 2012இல் தமிழகத்தில் 100க்கு 85 பேர் எழுத்தறிவு பெற்றவர்கள். எழுத்தறிவு பெறாதவர்களில் அதிகம் பேர் கீழ்ச்சாதிச் சூத்திரரும் ஆதித் திராவிடருமே ஆவர். இவர்களிலும் அதிகம் பேர் பெண் மக்களே; நாட்டுப்புற மக்களே!

இவ்வளவு கல்வி வளர்ச்சிக்கு ஏற்ற விகிதத்தில், கல்பொம்மையை - செப்புச் சிலையை - அய்ம்பொன் சிலையைக் கும்பிடாமல் எத்தனை விழுக்காடு பேர் உருவாகி உள்ளனர்? அந்தச் சிலைகளுக்கு உரிமையாக ஆயிரக்கணக்கான கோடி ரூபா பெறுமான சொத்து இருப்பதை யார் - எப்படி - ஏன் காப்பாற்றுகிறார்கள்?

கல்வி பெற்ற மக்களும், அம்மக்கள் கற்ற பயனற்ற கல்வியும், மத வேத ஆகமச் சட்டங்களும், அதிகார வர்க்கமும், நீதிமன்றங்களும் இவற்றைக் காப்பாற்றுகின்றன. அதாவது இவற்றை - இந்த அமைப்பை அப்படியே காப்பாற்றுவது அரசே!

இந்தப் பணியைச் செய்கிற இன்றைய அரசை - அரசமைப்பை - அதன் கிளை அமைப்புகளை அல்லது கட்டுமானங்களைக் குலைக்காத வரையில், எவ்வளவு சிறப்பாக, இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நாம் பெரியாருக்கு விழா எடுத்தாலும் - அது பெரியார் கொள்கை வெற்றியின் பரிமாணத்தை - அளவை வளர்க்க உதவுமா? உதவாது; இது உறுதி.

தமிழன், தெலுங்கன், மலையாளத்தான், கன்னடத்தான், இந்திக்காரன், வங்காளத்தான் எல்லோருமே இதுபற்றிக் கவலைப்படுவதே இல்லை.

இத்தனை மொழிகளைப் பேசுகிறவர்களும் - இவர்களிலுள்ள எல்லா இந்துக்களும் இத்தன்மை உள்ளவர் களாகவே 2012லும் வாழ்கிறார்கள். மாற்றானை-மேல்சாதிக்காரனை மதித்து அழைத்தே எல்லாம் செய்கிறார்கள்.

இவர்கள் எல்லோருமே வீட்டு நிகழ்ச்சிகள், சமய நிகழ்ச்சிகள், கோவில் நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலுமே அவரவர் தாய் மொழியைப் புறந்தள்ளிவிட்டு, தேவமொழி என நம்பி சமஸ்கிருதத்தையே ஏற்கின்றனர்; எல்லா வகுப்பினரும், எல்லா உள்சாதியினரும் பார்ப்பான் உயர்ந்தவன் - சமயச் சடங்குகள் செய்ய உரிமையும் தகுதியும் படைத்தவன்; நம் முன்னோர் காலந்தொட்டு வருகிற இந்தப் பழைய நடப்பை - பழக்கவழக்கத்தை நாம் கைவிடக்கூடாது என்பதில் - மொழி, வாழும் பகுதி, படிப்புத் தகுதி, செல்வத் தகுதி, பதவித் தகுதி என்கிற எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு, ஒரு கணமும் சிந்திக்க மறுத்து - பார்ப்பனியக் கோட்பாட்டை - பார்ப்பனரின் உயர்சாதித் தன்மையை - பிறவி காரணமான வருண சாதியை - சாதியச் சடங்கைக் கட்டிக் காப்பதில் பிடிவாதமாக உள்ளனர். அரசு தரும் கல்வி, அரசு அறியத் தனியார் தரும் கல்வி, மதக் கல்வி நிலையங்கள் தரும் கல்வி; அறிவை அழிக்கவோ, வளர்க்கவோ ஏற்ற வலிமை படைத்த அரசு மற்றும் தனியார் செய்தி ஊடகங்கள்; அரசு நிருவாக அங்கம், உயர்நீதி - உச்சநீதிமன்றங்கள்; நாடாளுமன்றச் சட்டங்கள்; இந்திய அரசமைப்புச் சட்டம் எல்லாமே பழக்கவழக்கத்தை - இந்து, இஸ்லாம், சீக்கியம், கிறித்துவம், பவுத்தம், சமணம் ஆகிய எல்லா மதங்களிலும் உள்ள மேலே கண்ட நிலைமைகளை அப்படியே காப்பாற்றிட மட்டுமே உள்ளன.

47 ஆண்டுக்காலம் தன்னை மறந்து மாடாக உழைத்தார், பெரியார். அவர் மறைந்து 39 ஆண்டுகள் முடியப் போகின்றன.

இந்த 86 ஆண்டுக்காலத்தில் தமிழகத்தில் பெரியார் பெயரிலான இயக்கங்களால் - அவருடைய இனமானக் கொள்கைகளால் வாழ்வு பெற்றவர்களால், சிலை வணக்க ஒழிப்பு-பார்ப்பனப் புரோகித ஒழிப்பு போன்ற எந்த எந்தக் கொள்கையில் - எந்த எந்த வேலைத் திட்டத்தில் எத்தனைத் தப்படிகள் மேலே ஏறினோம்-ஏறினார்கள் என்று நாம் எண்ணிப் பார்த்தோமா? கணக்குப் பார்த்தோமா? அப்படி அளந்து பார்ப்பதால் பெரியாருக்கு இழுக்கு நேருமா? நேராது!

இப்படியெல்லாம் கணக்குப் பார்ப்பது கூடாது - அது நம் பணி ஆகாது - அளந்து பார்க்காமல், கணக்குப் பார்க்காமல் பெரியார் காலத்தில் அவர் செய்த பரப்புரையை விடப் பல மடங்கு அளவில் பரப்புரை செய்தலே நம் கடமை - வீடுதோறும், தெருதோறும் - சிற்றூர் தோறும் அப்பரப்புரையைச் செய்வோம் - அதைத் தொடர்ந்து செய்வோம் - அதுவே பெரியார் கொள்கை வெற்றிக்கு அடையாளம் என்பது பகுத்தறிவா? பக்தி வழியா? குறி தெரியாத குருட்டுத்தனமா? எனச் சிந்திக்க வேண்டாமா? சிந்திப்போம், வாருங்கள்!

கூட்டாகச் சிந்திப்போம்! தனித்தனி முத்திரைகளைப் பதித்துக் கொண்டு, “தந்தை பெரியாரின் தலைசிறந்த பக்தர்களாக” நாம் ஆனால் போதாது, நாம் வாழுங்காலத்திலேயே பெரியாரின் கொள்கைகளை வெற்றி பெற வைப்பதற்கேற்ற நமக்கான ஓர் அரசை அமைப்போம், வாருங்கள்! அதை அன்னியில் வேறு வழி இருந்தால், அன்புகூர்ந்து - அது என்ன என்பதை ஆர அமர எண்ணிக் கூறுங்கள்!

பெரியார் கொள்கைகளை வெற்றி பெறச் செய்ய இவை தேவை; தேவை.

- வே. ஆனைமுத்து

Pin It