கல்வியால் சாதியை ஒழித்துக் கட்ட முடியுமா? முடியும் என்றும், முடியாது என்றும் கூறலாம். தற்போதுள்ளது போல் கல்வி கற்பிக்கப்படுமானால், சாதியின் மீது கல்வியால் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. எப்போதும் போலவே அது இருக்கும்.

பார்ப்பனச் சாதியை இதற்குத் தெள்ளத் தெளிவான எடுத்துக்காட்டாகக் கூறலாம். இவர்களில் நூறு விழுக்காட்டி னரும் கல்வி கற்றவர்களாக இருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் இவர்களில் பெரும்பாலோர் உயர்கல்வி கற்றவர்களாக உள்ளனர். அப்படியிருந்தும் ஒரு பார்ப்பான் கூடச் சாதிக்கு எதிராகக் குரல் எழுப்பவில்லை. இன்னும் உண்மையைச் சரியாகக் கூறுவதானால், மேல் சாதியைச் சேர்ந்த கல்வி கற்ற ஒரு பார்ப்பான்தான், தான் மட்டுமே கல்வி கற்பதற்கு முன்னைவிட சாதி அமைப்பு முறை நீடிக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறான். ஏனென்றால் அவன் முன்னிலும் பெரிய உத்தியோகம் பெறுவதற்கு அவனுக்கு அது கூடுதல் வாய்ப்பை அளிக்கிறது.

இந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் சாதியை ஒழிப்பதற்குக் கல்வி உதவியாக இல்லை என்பது புலனா கும். இதுதான் கல்வியைப் பொறுத்தவரையில் அதன் தீங்கான கூறு. ஆனால் இந்தியச் சமுதாயத்தின் கீழ்த்தட்டு வர்க்கத்தினருக்குக் கல்வி பயனுள்ளதாக அமையும். அது அவர்களது சாதி ஆதிக்க எதிர்ப்பு உணர்ச்சியை அதிகப்படுத் தும். ஆனால் அவர்கள் அறியாமையில் ஆழ்ந்து கிடக்கும் இன்றைய நிலைமையில் அவர்கள் சாதி அமைப்பு முறையின் ஆதரவாளர்களாக இருக்கின்றனர். அவர்களது கண்கள் திறக்கப்பட்டதும் சாதி அமைப்பு முறையை எதிர்த்துப் போராட அவர்கள் தயாராக இருப்பார்கள்.

தற்போது கடைப்பிடிக்கப்பட்டுவரும் கொள்கையில் ஒரு தவறு இருக்கிறது. அது என்ன? கல்வி பரந்த அளவில் தரப் பட்டாலும் அது இந்தியச் சமுதாயத்தில் சரியான, பகுதியினருக்குத் தரப்படவில்லை. சாதி அமைப்பு முறை நிலைக்க வேண்டும்-நீடிக்க வேண்டும் என்பதில் இந்தியச் சமுதாயத் தில் சில பகுதியினர் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளனர். ஏனெனில், இது அவர்களுக்குப் பல நன்மைகளை அளிக் கிறது. ஆதலால் இத்தகையோர்க்கு நீங்கள் கல்விக்கு வழி செய்து கொடுத்தால் அதனால் சாதி அமைப்பு முறை மேலும் வலிமை பெறும். அதேசமயம் சாதி அமைப்பு முறை ஒழிவதில் அக்கறை கொண்ட இந்தியச் சமுதாயத்தின் மிகவும் கீழ்த் தட்டு மக்களுக்குக் கல்வி வசதி செய்து தந்தால், சாதி அமைப்பு முறை சுக்குநூறாக உடைந்து நொறுங்கும்.

(1956 மே 20 அன்று வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா வானொலியில் மேதை அம்பேத்கர் ஆற்றிய உரை)

Pin It