தோழர்களே கி.பி. 1ஆம் வருசத்தில் அதாவது 2000 வருசத்துக்கு முன்பு உலகின் ஜனத்தொகையே 20 கோடி தான்.

அதற்கு முன்பு உலகம் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் இருந்து இருக்கும்? அதற்கு முன்பு 20 கோடிக்கும் குறைவாகத்தான் மக்கள் இருந்து இருக்கக் கூடும். அப்போது மக்களின் வயது சராசரி 5 கூட இருந்து இருக்க முடியாது. கி.பி. ஒன்றாம் வருசத்தின் உலக ஜனத்தொகை 20 கோடி. கி.பி. 1460இல் உலக ஜனத்தொகை 47 கோடி தான். 1500 வருடங்களில் கிட்டத்தட்ட இரண்டரைப் பங்குதான் வளர்ந்தது. அப்போது சராசரி வயது 10 கூட இருந்திருக்காது. கி.பி. 1800இல் அது 70 கோடியாக வளர்ந்து, 1914இல் 165 கோடியாகியது. 1964இல் 350 கோடியாகியது. இன்று சுமார் 400 கோடியாக வளர்ந்து உள்ளது.

இதேபோல் போனால் இன்னும் 50 வருசத்தில் உலக ஜனத்தொகை 1,000 கோடிக்குமேல் உயர் வதிலும் அதிசயப்பட ஒன்றும் இல்லை. நாமும் 100 கோடி ஆகிவிடுவோம்.

மக்களுக்கு அந்த அளவுக்கு உணவு, உடை, வீட்டு வசதி முதலியனவும் பெருக வேண்டுமே! எங்கே போவது? வேலைக்கு எங்கே போவது?

எனவே, மனிதன் ஒருவனை ஒருவன் அடித்துச் சாப்பிடும்படியான நிலைமை வரக்கூடும்.

இப்படி மக்கள் பெருக்கம் ஏற்படுவதினால் சமுதா யத்திற்குத்தான் என்ன பயன்? சமுதாயத்தில் ஒழுக்கம், நாணயம் நிலைக்கப்பெற வேண்டுமானால், மனக் கவலை - கஷ்டங்கள் குறைக்கப்பட வேண்டுமானால், மக்கள் பெருக்கம் கட்டுப்படுத்துவது மூலம்தான் முடியும்.

இந்த அரசாங்கம் மட்டும் இன்னும் 15 ஆண்டு களாவது நிலைத்து இருக்கும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். எதிரிகள் பொறாமைக்காரர்கள் மத்தியில் பல நல்ல காரியங்கள் ஆற்றி வருகின்றது. சட்டத்தின் மூலமே நிறுத்திவிடக்கூட முடியும்.

இன்றைக்கு இரண்டு பிள்ளையே போதும் என்று கூறுகின்றார்கள். நாளைக்கு இரண்டு பிள்ளைகளுக்கு மேலே பெற்றவர்கள் வேலையில் இருந்தால் பிர மோசன் இல்லை என்று ஆக்கிவிட வேண்டும்.

திருட்டை விடப் பெரிய குற்றமாக அதிகப்படி பிள்ளை பெறுவதைக் கொள்ள வேண்டும். வருங்காலத்தில் திருமணத்தைக்கூட ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டும்.

24, 25 வயதுக்குக் குறைந்த பெண்கள், ஆண் களுக்குத் திருமணம் நடத்துவதைத் தடை செய்ய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் ஒவ்வொரு தம்பதிகளும் பெறக்கூடிய 2, 3 பிள்ளைப் பிறப்பை யாவது தவிர்க்க முடியும்.

இன்றைக்கு அரசாங்கம் என்னமோ பெண்கள் 18 வயதுக்கு முன் திருமணம் செய்துகொள்வது கூடாது என்று சட்டம் கொண்டுவரப் போகின்றதாம். அதுவும் கூடப் போதாது. குறைந்தது 20 வயதாவது ஆக்க வேண்டும். இன்றைக்கு 13, 14 வயதில்கூட பெண்களுக் குத் திருமணம் செய்துவிடுவதால், அதிகப்படியாகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு சீரழிகிறார்கள்.

‘கொச கொச’ என்று பிள்ளையைப் பெற்றுக் கொண்டு அதிலேயே மனிதன் உழலுகின்றானே ஒழிய, மனிதன் வளர்ச்சியைப் பற்றிச் சிந்திக்க வழி இல்லாமல் போகின்றதே! மனிதனாகப் பிறந்தவன் உலக நன்மைக்கு ஏதும் செய்ய முடியாதவனாக அல்லவா ஆகிவிடுகின்றான்.

பெண்டாட்டி, பிள்ளை குட்டி, குடும்பம் இத்தோடு அல்லவா நின்று விடுகின்றான். இதனால் உலக நன்மைக்கு - வளர்ச்சிக்குப் பயனற்றவனாக ஆகிவிடு கின்றான்.

அதிகப்படியாகப் பிள்ளைப் பெற்றுக் கொள்வதினாலேயே பெண்கள் ஒரு காசுக்கும் உபயோகமற்ற வர்களாக ஆகிவிடுகின்றார்கள். அவர்களுக்குப் போட்ட குட்டிகளைக் காப்பாற்றுவதும், புருசனுக்குப் பணி விடை செய்யவுமே காலம் எல்லாம் சரியாகிவிடு கின்றது.

இதன் காரணமாக 54 கோடி மக்களில் 27 கோடி யாக உள்ள பெண்கள் நாட்டுக்கோ, உலகத்துக்கோ பயன்பட முடியாதவர்களாக ஆக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

ஆதலால் இனி ஒவ்வொரு ஆணும், பெண்ணும் பிள்ளை பெறுவதில் வெட்கப்பட வேண்டும். கடவுள் செயல் என்று சொல்லி முட்டாளாக, மானமற்றவனாக ஆகாமல், டாக்டரிடம் சென்று பிள்ளை பெறாமல் இருக்கும் சிகிச்சை செய்துகொண்டால், கையில் (ஏழைகள்) 30 ரூபாயும் பெற்றுக் கவலையற்ற வாழ்வு வாழ ஆசைப்படுகிறேன்.

(24.11.1971 அன்று சேலத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு; ‘விடுதலை, 29.12.1971’)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.