ஒவ்வொரு ஆண்டும் நடுவண் அரசின் குடிமைப் பணிக்கான  (Civil Service)  தேர்வுகளை நடுவண் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)  நடத்துகிறது. இந்திய ஆட்சிப்பணி (IAS)  இந்தியக் காவல் பணி  (IPS)  இந்திய அயல்துறைப்பணி (IFS) உள்ளிட்ட 22 வகையான நடுவண் அரசின் பணி களுக்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. தொகுதி I  (Group I)) பதவிகளுக்கான தேர்வு என்றும் இது கூறப்படுகிறது.

இத்தேர்வு முதல்நிலைத் தேர்வு  (Preliminary  Examination)  முதன்மைத் தேர்வு (Main Examination)  நேர்காணல் என மூன்று கட்டங்களைக் கொண்ட தாகும். முதல்நிலைத் தேர்வில் 2010 வரை பொது அறிவியல்  (General Subject),  விருப்பப் பாடம் (Optional)  என இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்பட்டன.

ஆனால் 2011ஆம் ஆண்டில் விருப்பப் பாடத்துக் குப்பதிலாகத் திறனறிவு வினாத்தாள் (Civil Services Aptitude Test - CSAT)  அறிமுகப்படுத்தப்பட்டது.

cartoon-picture 6002001ஆம் ஆண்டு  அமைக்கப்பட்ட ஒய்.கே. அலாக்  குழுவின் பரிந்துரையின்படி, திறனறித் தேர்வு முறை புகுத்தப்பட்டது. கல்லூரியில் முன்னரே படித்துத் தேர்ச்சிப் பெற்ற பாடத்தில் மீண்டும் தேர்வு நடத்துவதைவிட, இப்போது மாறியுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப, தேர்வு எழுதும் இளைஞர்களின் திறனை அறியும் தன்மையில் வினாத்தாள் அமைய வேண்டும் என்று அலாக் குழு பரிந்துரைத்தது.

பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு (UGC) வின் முன்னாள் தலைவர் எஸ்.கே. கன்னா தலைமையில் 2010ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழுவினர் திறனறித் தேர்வுக்கான வினாக்களை உருவாக்கினர். சிக்கலைத் தீர்ப்பதில், முடிவு எடுப்பதில், தர்க்க ரீதியாக ஆராய்வதில், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் நேர்த்தியில் ஒருவருக்குள்ள ஆற்றலையும் திறமையையும் வெளிக் கொணரும் தன்மையில் திறனறித் தேர்வின் வினாக் கள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் திறனறித் தேர்வு வினாத்தாளில், கொடுக்கப்பட்டுள்ள ஆங்கில உரைநடைப் பகுதியைப் படித்து நன்கு புரிந்துகொண்டு, அது தொடர்பாகக் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு ஆங்கிலத்தில் விடையளித்தல் (Comprehension - புரிந்துகொள்ளும் திறன்) பகுதி யும் இடம்பெற்றுள்ளது. இந்த வினாவுக்கு 20 மதிப் பெண், திறனறித் தேர்வு முழுவதற்கும் 200 மதிப் பெண். பொது அறிவியல் தேர்வுக்கு 200 மதிப்பெண். ஆகமொத்தம் முதல்நிலைத் தேர்வு 400 மதிப்பெண் கள் கொண்டதாகும்.

முதல்நிலைத் தேர்வில் பொது அறிவியல், திறனறித் தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளும் வினாக்களின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் ஏதாவது ஒன் றைத் தேர்வு செய்து குறியீடு செய்யும் முறையில்  (Objective Type)  வினாக்கள் அமைந்திருக்கும். ஆனால் வினாக்கள் இந்தி, ஆங்கிலம் என இரு மொழிகளில் மட்டுமே தரப்பட்டிருக்கும்.

2013ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தி மொழி பேசும் மாநிலங்களிலிருந்து நடுவண் அரசுக் குடிமைப் பணி தேர்வு எழுதும் இளைஞர்கள் திறனறித் தேர்வு முறையை நீக்க வேண்டும் என்று தில்லியில் ஆர்ப் பாட்டம் செய்தனர். இதுகுறித்து ஆராய அப்போது ஆட்சி யிலிருந்த மன்மோகன் அரசு வர்மா தலைமையி லான ஒரு குழுவை அமைத்தது. அக்குழுவின் அறிக்கை 2014 சூலை இறுதியில் அரசிடம் அளிக்கப்பட்டது.

2014ஆம் ஆண்டிற்கான முதல்நிலைத் தேர்வு ஆகத்து 24 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்ட தைத் தொடர்ந்து, இந்தி பேசும் மாநிலங்களின் இளைஞர்கள் திறனறித் தேர்வுக்கு எதிரான போராட் டத்தைத் தில்லியில் நடத்தினர். நடுவண் அரசுப் பணி யாளர் அமர்த்தம் மற்றும் பயிற்சிக்கான  (Personnel and Training) இணை அமைச்சர் ஜிதேந்திரசிங், 15.7.2014 அன்று நாடாளுமன்றத்தில் இத்தேர்வைத் தள்ளி வைக்குமாறு நடுவண் அரசுப் பணியாளர் தேர் வாணயத்தைக் கேட்டுக் கொள்வதாக அறிவித்தார்.

ஆனால் தேர்வாணையம் தேர்வு எழுதுவதற்கதான மடல்களை சூலை 24 அன்று தேர்வு எழுதுவோர்க்கு அனுப்பியது. எனவே சூலை 25 அன்று இந்தி மொழி பேசும் மாநிலங்களிலிருந்து தேர்வு எழுதும் இளை ஞர்கள் தில்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 4.8.2014 அன்று இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், “திறனறித் தேர்வில் ஆங்கிலத் திறனாய்வு  தொடர் பான மதிப்பெண்ணை, தேர்வு எழுதியவரின் தேர்ச் சிக்கான மதிப்பீட்டு மதிப்பெண்ணுடன் சேர்க்க வேண் டாம் என்று அரசு கருதுகிறது” என்று நாடாளுமன் றத்தில் தெரிவித்தார்.

ஆனால் தேர்வாணையம் இது குறித்து இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. திறனறித் தேர்வை அடியோடு நீக்க வேண்டும் என்று இந்தி பேசும் இளைஞர்கள் தீவிரமாக எதிர்ப்பது ஏன்? முதன்மையாக இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள். முதலாவதாக, ஆங்கில உரைநடைப் பகுதியின் திறனறிதல் கடினமாக இருக்கிறது. இந்த ஆங்கிலப் பகுதி நகர்ப்புறங்களில் தரமான கல்வி நிறுவனங்களில் ஆங்கில வழியில் படித்தவர்களால் மட்டுமே எளிதில் விடையளிக்க முடியும்; இதனால் இந்தி வழியில் படித்த இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இரண்டாவதாக, ஆங்கிலத்தில் கேட்கப்படும் வினாக்களை அப்படியே கணினியில் உள்ளீடு செய்து இந்தியில் மொழி மாற்றம் செய்து வினாத்தாள் வழங் கப்படுகிறது. இந்த மொழி மாற்றம் புரிந்துகொள்ளும் தன்மையில் இல்லாததால் தவறாக விடையளிக்க நேரிடுகிறது என்று இந்தியில் படித்த இளைஞர்கள் கூறுகின்றனர்.

திறனறித் தேர்வை நீக்க வேண்டும் என்று கோரு பவர்கள் சில புள்ளிவிவரங்களை முன்வைக்கின்றனர். 2010ஆம் ஆண்டில் நடுவண் குடிமைப் பணிக்கான தேர்வில் கலைப் பாடங்கள் (Arts Subjects)  படித்தவர்களின் தேர்ச்சியும், பொறியியல் மற்றும் அறிவியல் படித்தவர்களின் தேர்ச்சியும் முறையே 28 விழுக்காடு, 30 விழுக்காடு என்று கிட்டத்தட்ட சம அளவில் இருந்தன.

2011இல் முதன்முதலாகத் திறனறித் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டில், கலைப் பாடங்கள் படித்தவர்களின் தேர்ச்சி 15.38 விழுக்காடு எனக் குறைந்தது. ஆனால் பொறியியல் - அறிவியல் படித்தவர்களின் தேர்ச்சி 49.7 விழுக்காடாக உயர்ந்தது.

அதேபோன்று, 2010இல் இந்தியைப் பயிற்று மொழியாகக் கொண்டவர்கள் முதன்மைத் தேர்வில் (Main Examination)  4,156 பேர் தெரிவு செய்யப் பட்டனர். ஆனால் 2011இல் இந்த எண்ணிக்கை 1,682 ஆகக் குறைந்தது. இதேபோன்று இந்த எண்ணிக்கை தெலுங்கில் 69-லிருந்து 29 ஆகவும் தமிழில் 38-லிருந்து 14 ஆகவும், கன்னடத்தில் 38-லிருந்து 5 ஆகவும் குறைந்துள்ளது.

திறனறித் தேர்வின் எதிர்ப்பாளர்கள் எடுத்துக்காட் டும் இந்தப் புள்ளிவிவரங்களை நடுவண் அரசோ, தேர்வாணையமோ மறுத்து எதுவும் கூறவில்லை. இந்தப் புள்ளிவிவரங்கள் உண்மைதான். ஆனால் இந்தப் புள்ளிவிவரங்களுக்குப் பின்னால் ஒரு பெரிய உண்மை மறைக்கப்பட்டுள்ளது. அதுதான் இந்தியின் அதிகார ஆதிக்கம். 2010 வரையில் இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களே மக்கள் தொகையில் அவர்களின் விழுக்காட்டுக்கும் அதிகமாக இடங்களைப் பெற்றுவந்தனர். நடுவண் அரசின் குடிமைப் பணித் தேர்வு எழுதுபவர்களில் 60 விழுக்காட்டினருக்கு மேல் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே ஆவர்.

இதற்கு முதலாவது காரணம் குடிமைப்பணித் தேர்வுக்கான வினாக்கள் அனைத்தும் இந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் மட்டுமே தரப்படுகின்றன. எனவே இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர் கள், வினாக்களை எளிதாகவும் சரியாகவும் புரிந்து கொள்வதோடு, விடைகளையும் துல்லியமாகவும் எழுத முடிகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலை யாளம், வங்கமொழி உள்ளிட்ட இந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாத இளைஞர்களுக்கு இவ்வாய்ப்பு வஞ்சகமாக மறுக்கப்படுகிறது. ஆனால் இந்திக்காரர்கள் பிற தேசிய மொழிகளுக்கும் சேர்த்துப் போராடுவதாக - ஆங்கிலத்தை எதிர்ப்பதன் மூலம் - திறனறித் தேர்வை நீக்க வேண்டும் என்று கோருவதன் மூலம் நம்மை ஏய்க்கப் பார்க்கின்றனர்.

2010ஆம் ஆண்டில் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட இளைஞர்கள் 4156 பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால் திறனறித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட 2011ஆம் ஆண்டில் 1682 பேர் மட்டுமே தேர்ச்சி பெறமுடிந்தது. 2010ஆம் ஆண்டைவிட 2474 பேர் குறைவாகத் தேர்ச்சி பெற்றது ஏன்?

2010ஆம் ஆண்டு வரையில் முதல்நிலைத் தேர்வில் விருப்பப் பாடம் இருந்தது. இந்த விருப்பப் பாடத் தேர்வை தங்கள் தாய்மொழியான இந்தியில் எழுதினார்கள். ஆனால் பிறமொழி இளைஞர்கள் ஆங்கிலத்தில் தான் இத்தேர்வை எழுதியாக வேண்டி யிருந்தது. அதனால் இந்தி இளைஞர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.

மேலும் 2011இல் திறனறித் தேர்வு, சரியான விடையைக் குறியீடு (Objective Type)  செய்யும் முறையில் அமைக்கப்பட்டதால், இந்தி மொழி யில் மட்டுமே ‘கதையளந்து’ தேர்ச்சி பெற முடிய வில்லை. இந்தியை எல்லா நிலைகளிலும் வேகமாகப் புகுத்தும் நரேந்திர மோடி ஆட்சியில், இந்திக்காரர்க்ள் குடிமைப் பணித் தேர்வில் தங்கள் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காக, ஆங்கில எதிர்ப்பு என்ற பெயரில் இந்தி மொழி வல்லாதிக்கத்தை நிலை நாட்ட முயல்கின்றனர்.

திறனறித் தேர்வை எதிர்க்கும் இந்திக்காரர்கள், தாய்மொழிவழியில் படிக்கும் சிற்றூர்ப்புற இளைஞர் களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது; நகர்ப்புற - மேட்டுக்குடி - ஆங்கில வழியில் படித்தவர்களுக்கே அதிக வாய்ப்பளிப்பதாகத் திறனறித் தேர்வு முறை இருக்கிறது என்று கூப்பாடு போடுகின்றனர். இந்தி அல்லாத பிறமொழி வாயிலாகப் பயிலும் எல்லா மொழிக்காரர்களின் சிற்றூர்ப்புற இளைஞர்களுக்கும் இதே பாதிப்பு உள்ளது. மேலும் இவர்களுக்கு, வினாக் கள் தங்கள் தாய்மொழியில் இல்லாததால் இன்னும் கூடுதலான சுமையும் கேடும் உண்டாகின்றன.

உலகமயக் கொள்கையால், கடந்த முப்பது ஆண்டு களில் கல்வி தனியார் மயமாகி, ஆங்கில மயமாகி, பெருங் கொள்ளைத் தொழிலாகிவிட்டது. அதே சமயம் தாய்மொழிக் கல்வி, அரசின் அரவணைப்பில்லாத தால் சவலைப் பிள்ளையாகிவிட்டது. தனியார் பள்ளி களிலும், கல்லூரிகளிலும் பெரும்பாலானவை தரமற்ற வைகளாகவே இருக்கின்றன.

தில்லியில் உள்ள ‘பிரதாம்’ என்ற அரசுசாரா அமைப்பு, ஆண்டுதோறும் இந்திய அளவில் பள்ளிக் கல்வியின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுகிறது. இதனுடைய 2014ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளி களில் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 50 விழுக்காட்டினருக்கும் மேற்பட்டவர்களால் இரண்டாம் வகுப்புக்குரிய மொழிப் பாடத்தைச் சரியாகப் படிக்க முடியவில்லை; எளிய பெருக்கல், வகுத்தல் கணக்கு களைச் செய்ய முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்திப் படிக்கும் தனியார் பள்ளிகளை ஒழித்து, 12ஆம் வகுப்பு வரை, தாய்மொழி வழியில் ஒரே தரமான கல்வி தரும் பொறுப்பை அரசே ஏற்காத வரையில், கல்வியில் நிலவும் கிராமப்புற - நகர்ப்புற ஏற்றத்தாழ்வை ஒழிக்க முடியாது. பணக்காரர்களின் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தரமான கல்வி - ஏழை மாணவர்களுக்குத் தரமற்ற கல்வி என்ற நிலை யையும் மாற்ற முடியாது.

தீர்வு என்ன?

முதல்நிலைத் தேர்விலும், முதன்மைத் தேர்விலும் வினாக்கள் இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றில் மட்டுமின்றி, அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் இருத்தல் வேண்டும். 22 மொழிகளும், மொத்த மக்கள் தொகை யில் அம்மொழிகளைப் பேசும் மக்களின் விழுக்காடும் கீழே தரப்பட்டுள்ளன.

வ.எண்.மொழி - பேசும் மக்கள்விழுக்காடு

1.            அசாமி              - 1.28

2.            வங்காளி       - 8.11

3.            போடோ          - 0.13

4.            டோங்ரி           - 0.22

5.            குசராத்தி       - 4.48

6.            இந்தி                - 41.03

7.            கன்னடம்      - 3.69

8.            காஷ்மீரி         - 0.54

9.            கொங்கணி   - 0.24

10.          மைதிலி         -1.18

11.          மலையாளம் -3.21

12.          மணிப்புரி      - 0.14

13.          மராத்தி           - 6.99

14.          நேபாளி           - 0.28

15.          ஒரியா              - 3.21

16.          பஞ்சாமி         - 2.83

17.          சமற்கிருதம்      - (குறிப்பிடும்படி இல்லை)

18.          சந்தாலி           - 0.63

19.          சிந்தி  - 0.25

20.          தமிழ் - 5.91

21.          தெலுங்கு      - 7.19

22.          உருது                - 5.01

2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி, 15,000 பேர் மட்டுமே சமற்கிருதத்தைத் தங்கள் தாய்மொழியாகக் கூறியுள்ளனர். ஆனால் இந்த 15,000 பேர்களும் அவர்கள் வாழும் மாநிலத்தில் உள்ள மொழியில்தான் கல்வி பயில்கின்றனர். எனவே நடுவண் அரசின் குடிமைத் தேர்வுகள் மட்டுமின்றி, இந்திய அளவில் நடைபெறும் எல்லாத் தேர்வுகளும் சமற்கிருதம் தவிர்த்து 21 மொழிகளில் நடத்தப்பட வேண்டும்.

திறனறித் தேர்வுப் பகுதியில் ஆங்கில உரைநடைப் பகுதியைப் புரிந்துகொண்டு விடையளித்தல் (ஊடிஅயீசநாநளேiடிn) பகுதியை நீக்க வேண்டும். சிற்றூர் மற்றும் நகரங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பு இளைஞர்களை முதல்நிலைத் தேர்விலேயே வடிகட்ட வேண்டும் என்ற வஞ்சக உள்நோக்கம் கொண்டதாகும் இது.

 ஏனெனில் 18.11.2008 அன்று நாடாளுமன்றத்தில் அரசு அறிவித்த புள்ளிவிவரத்தின்படி, மக்கள் தொகையில் 17.5 விழுக்காட்டினராக உள்ள பார்ப்பனர், காயஸ்தர் உள்ளிட்ட மேல்சாதியினர் முதல்நிலைப் பதவிகளில் (ழுசடிரயீ ஐ) 77.16 விழுக்காடாக உள்ளனர். 57ரூ உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 5.44ரூ இடங்களும், 17ரூ உள்ள பட்டியல் வகுப்பினர் 12.53ரூ இடங்களும், 8.5ரூ உள்ள பழங்குடியினர் 4.85ரூ இடங்களும் பெற்றுள்ளனர்.

 civil-service-examination-sஇந்தி-இந்துத்துவ பார்ப்பன மேல்சாதியினர் அரசின் உயர் பதவிகளில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திட காலமாற்றத்துக்கேற்ப தங்கள் சூழ்ச்சித் திட்டங்களை மாற்றியமைத்து வருகின்றனர்.

முதல்நிலைத் தேர்வில் தவறான விடை அளித்தால் மதிப்பெண்ணைக் குறைக்கும் வழிமுறை 2011ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்படுகிறது. அதாவது மூன்று வினாக்களுக்குத் தவறான விடையளித்தால், சரியாக விடையளித்த ஒரு வினாவுக்கான மதிப்பெண்ணை இழக்க நேரிடும். பெருநகரங்களில் பயிற்சி நிலையங் களில் பணம் செலுத்திப் படிக்க வாய்ப்பில்லாத கீழ்த்தட்டு உழைப்புச் சாதி மாணவர்களை விரட்டியடிப்பதற்கான ஒரு வழி இது. ஆகவே மதிப்பெண் குறைக்கும் முறை உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

முதன்மைத் தேர்வில் ஆங்கிலத்தில் ஒரு தேர்வை எழுத வேண்டும், மற்ற தேர்வுகளை அவரவர் தாய் மொழியில் எழுதலாம். ஆங்கில அறிவுத்திறனுக்கு இத்தேர்வு மட்டுமே போதுமானது. எனவே திறனறித் தேர்வில் உள்ள ஆங்கிலப் பகுதி வினாவை நீக்கிட வேண்டும். ஆங்கிலமே கூடாது என்பது அல்ல நமது நோக்கம். ஆங்கிலப் புலமையைக் கொண்டு தான் ஒருவரின் அறிவை மதிப்பிட முடியும் என்பது மிகவும் கேடான கருத்தாகும்.

12ஆம் வகுப்பை முடிப்பதற்குள் - ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகப் பயிலும் மாணவனுக்கு, ஆங்கிலத்தில் சொந்தமாக எழுதும் அளவுக்குப் பயிற்றுவிக்க முடியும். அரசு இதைச் செய்தால் போதும்.

இந்திய அளவில் பாரதிய சனதாக் கட்சி வெளிப் படையாகவும் காங்கிரசுக் கட்சி ஓரளவு மறைமுக மாகவும் இந்தியை ஆதரிக்கின்றன. வடமாநிலங்களில் உள்ள சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய சனதா கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஐக்கிய ஜனதாதளம் போன்ற கட்சிகள் இந்தி மொழிக்காக வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றன. ஆனால் இந்தி  பேசாத மாநிலங்களில் உள்ள கட்சிகளும், தலைவர்களும், மக்களும் இந்தி மற்றும் ஆங்கில ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில் தங்கள் தாய்மொழிகளை எல்லா நிலைகளிலும் வளர்த்தெடுத்துத் தங்கள் உரிமையை நிலைநாட்டிடத் தவறிவிட்டனர்.

இந்தி எதிர்ப்பு அரசியல் அலையால் ஆட்சி வந்த திராவிட அரசியல் கட்சிகள், தில்லியில் ஆளும் கட்சி களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு பதவி நாற் காலியைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே குறியாக இருந்தன.

மாநில சுயாட்சி பேசிக் கொண்டே இந்திக்கும் ஆங்கிலத்துக்கும் சிவப்புக் கம்பளம் விரித்தன. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ் எல்லா நிலைகளிலும் புறக்கணிக்கப்பட்டு இழிநிலையில் கிடக் கிறது. எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழி களையும் அலுவல் மொழியாக்க வேண்டும் என்று எப்பொழுதுhவது கனவில் பிதற்றுவதோடு நிறுத்திக் கொண்டன. இதைச் செயல்படுத்த உருப்படியாக எதை யும் செய்யவில்லை.

நடுவண் அரசின் குடிமைப்பணி தேர்வுகள் அனைத்தும் அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும். மற்ற அனைத்திந்திய தேர்வு களும் இதே தன்மையில் நடத்தப்பட வேண்டும்.

எல்லா மாநிலங்களிலும் உள்ள நடுவண் அரசின் அலுவலகங்கள், வங்கிகள் முதலானவை அந்தந்த மாநில மொழியிலே செயல்பட வேண்டும். அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற உயர் அதிகாரிகள் அவரவர் தாயக மாநிலத்திலேயே பணியமர்த்தப்பட வேண்டும். பல கோடி மக்கள் பேசும் தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காளி, கன்னடம், மராத்தி, குசராத்தி, ஒரியா போன்ற தேசிய மொழிகளுக்குரிய மதிப்பும் உரிமையும் இல்லாத போது, இந்தியா என்கிற நாட்டுடன் ஏன் சேர்ந்து இருக்க வேண்டும் என்ற எண்ணம் சுய மரியாதையுள்ள ஒவ்வொருவரிடமும் எழுவது ஞாயம் தானே!

Pin It