இந்தியாவில் வணிக முறையில் பயிரிட அனு மதிக்கப்பட்டுள்ள ஒரே மரபீனி மாற்றுப் பயிர் பி.டி. பருத்தி (BT.Cotton) மட்டுமே யாகும். மரபணுப் பொறியியல் ஏற்பளிப்புக் குழு (Genetic Engineering Approval Committee - GEAC) பி.டி. பருத்தியைப் பயிரிட ஒப்புதல் அளித்துப் பத் தாண்டுகளாகிவிட்டன.

முதலில் பி.டி. (B.T.) என்பது என்ன? என்பதை அறிதல் நல்லது. உயிரினங்கள் அனைத்திலும் மரபணுக் களில் அமைந்துள்ள ஜீன்களே அமைப்பியல் பண்புக் கூறுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல் கின்றன. இதை அடிப்படையாகக் கொண்டதே உயிரித் தொழில்நுட்பம். இயற்கையில் மண்ணில் பேசிலஸ் துரிஞ்சியன்சிஸ் (Bacillus Thuringensis – B.T. எனும் பாக்டீரியா உள்ளது. இந்தப் பாக்டீரியாவில் உள்ள Cry 1 Ac எனும் ஜீன், பயிர்களைத் தின்னும் புழுக்களுக்கு நஞ்சாக அமைகிறது. அதனால் இந்த ஜீனை மட்டும் பிரித்தெடுத்துப் பயிரினுள் செலுத்துகின்றனர். இவ் வாறு உருவாக்கப்பட்ட பயிரைத்தான் மரபீனி மாற்றுப் பயிர் என்கின்றனர்.

பருத்திப் பயிரில் காய்ப்புழுவின் தாக்குதலால் பஞ்சின் விளைச்சலும் தரமும் பெரிதும் குறைகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குக் காய்ப்புழுக்கள் எதிர்ப் பாற்றலை வளர்த்துக் கொண்டதால் அவை சாவ தில்லை. எனவே பருத்திப் பயிரில் எதிர்பார்க்கும் விளைச் சலைப் பெறுவதற்கு பி.டி. பருத்தியைப் பயிரிடுவது தவிர வேறு மாற்று இல்லை என்று இதன் ஆதர வாளர்களும், பி.டி. பருத்தி விதையை உற்பத்தி செய் யும் காப்புரிமை பெற்றுள்ள மான்சான்டோவின் இந்தியக் கிளையான மகிகோ (Mahyco)வும், அரசுகளும் பரப்புரை செய்தன.

இதன் விளைவாக, 2000ஆவது ஆண்டில் 40 விழுக்காடு பரப்பில் வீரிய ஒட்டுப் (Hybrid) பருத்தியும், 60 விழுக்காடு பரப்பில் மேம்படுத்தப்பட்ட பாரம்பரியப் பருத்தி இரகங்களும் விதைக்கப்பட்ட நிலை மாறி, தற்போது 80 விழுக்காடு பரப்பில் பி.டி. பருத்தியே பயிரிடும் நிலை ஏற்பட்டுள்ளது. பருத்தி சாகுபடி செய்யும் மொத்தப் பரப்பில் 80 விழுக்காடு மானாவாரி நிலமாகும்.

பி.டி. பருத்தியைப் பயிரிட அரசு அனுமதித்தது முதலே சூழலியல் ஆர்வலர்களும், சமூகச் செயற் பாட்டாளர்களும், அறிவியலாளர்களில் ஒரு பகுதியி னரும் சுற்றுச்சூழலுக்கும், உயிர்ப் பன்மைக்கும், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் மரபீனி மாற்றுப் பயிர்களால் மாற்றப்பட முடியாத தன்மையிலான மாபெரும் கேடுகள் காலப்போக்கில் ஏற்படும் என்று கூறி எதிர்த்து வருகின்றனர்.

2009 அக்டோபரில் நடுவண் அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மரபணுப் பொறியியல் ஏற்பளிப்புக் குழு (GEAC) ஆறு பி.டி. கத்தரி வகைகளுக்கு அனுமதியளித்தது. இந்தியா முழு வதிலும் பல தரப்பினரிடமிருந்தும் பி.டி. கத்தரிக்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்தியாவில் 2200 வகை யான கத்தரி பயிரிடப்படும் நிலையில் பி.டி. கத்தரி ஏன்? என்று வினவினர்.

பி.டி. பருத்தியைப் பெரும் பரப்பில் பயிரிடும் நிலை ஏற்பட்டதால், பாரம்பரியப் பருத்தி விதைகளும், வீரிய ஒட்டு விதைகளும் காணாமல் போய்விட்டன. அதனால் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான மான்சான்டோ வின் பி.டி. பருத்தி விதைகளையே எவ்வளவு விலை கொடுத்தேனும் வாங்கும் நிலைக்கு உழவர்கள் தள்ளப் பட்டுள்ளனர். இதே நிலைதான் பி.டி. கத்தரியை அனு மதிப்பதால் ஏற்படும். தற்போது பயிரிடப்பட்டு வரும் 2200 கத்தரி வகைகளும் மறைந்தொழிந்துவிடும். மரபீனி மாற்றுப் பயிர்களைப் புகுத்துவதன் முதன் மையான நோக்கம் மான்சான்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கொழுத்த இலாபத்திற்காக இந்தியா வின் உயிர்ப்பன்மையையும் இந்திய வேளாண்மையையும் பலியிடுவதாகும் என்று எதிர்த் தனர்.

அப்போது சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த செயராம் ரமேசு, உழவர்களிடமும் வல்லுநர்களிடமும் கருத்தறியும் கூட்டங்கள் நடத்திய பிறகே பி.டி. கத்தரி குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். அவ்வாறான கூட்டங்கள் 2010 சனவரி, பிப்பிரவரி மாதங்களில் நடந்தன. இக்கூட்டங்களில் வெளிப்பட்ட கடும் எதிர்ப்பின் காரணமாக அமைச்சர் செயராம் ரமேசு பி.டி. கத்தரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

மேலும் மரபீனி மாற்றுப் பயிர்களை அனுமதிப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக் கப்பட்டன. இந்தச் சூழலில் நடுவண் அரசு, மரபீனி மாற்றுப் பயிர்கள் குறித்து ஆராயுமாறு வேளாண் மைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவைக் கேட்டுக் கொண்டது.

காங்கிரசுக் கட்சியின் 9 பேர், பா.ச.க.வின் 6 பேர் உள்ளிட்ட 31 உறுப்பினர்களைக் கொண்ட - வாசுதேவ் ஆச்சாரியாவின் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினர்கள் இரண்டரை ஆண்டு கள் காலத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் உழவர்க ளையும் வல்லுநர்களையும் மரபீனி மாற்றுப் பயிரின் ஆதரவாளர்களையும் சந்தித்தனர். அதன் அடிப்படையில், நிலைக்குழுவினர் ஒருமனதாக உருவாக்கிய 492 பக்கங்கள் கொண்ட ஓர் அறிக்கையை அரசிடம் அளித் தனர். இந்த அறிக்கை அண்மையில் நாடாளுமன்றத் தில் வைக்கப்பட்டது.

மரபீனி மாற்றுப் பயிர்கள் இந்தியாவுக்குத் தேவை யில்லை என்பதே நாடாளுமன்ற நிலைக் குழுவின் முடிந்த முடிவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. பி.டி. கத்தரிக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு நடுவண் அமைச்சர் ஒரு வரும், வேளாண் தொழில்துறை சார்ந்த சில நிறு வனங் களும் கொடுத்த நெருக்கடிதான் எனக்காரணம் என்றும், இது குறித்து நடுவண் அரசு மேலும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிலைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“82 விழுக்காடு சிறு மற்றும் நடுத்தர விவ சாயிகளைக் கொண்டிருக்கும் இந்தியாவில் மரபீனி மாற்றப்பட்ட உணவுப் பயிர்களுக்கு நாம் மாறக் கூடாது. இருப்பினும் கி.பி.2020ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் உணவுத் தேவை மிக அதிகமாக உயர்ந்துவிடும் என்று அரசு கருதினால்-தற்போதுள்ள வேளாண் தொழில்நுட்பங்கள் போதுமானவை அல்ல என்று அரசு நினைத்தால்-மரபீனிப் பயிர்களால் எத் தகைய பின்விளைவுகளும் கிடையாது என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தான் அரசு முன்னுரிமை தர வேண்டும். அவ்வாறு அரசு கருதக்கூடிய நிலையில் கூட, இந்தக் குழுவின் கருத்து மரபீனி மாற்றுப் பயிர்கள் கூடாது என்பதேயாகும்” என்று அறிக்கையில் திட்ட வட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“50 உணவுப் பயிர்கள் உட்பட 71 பயிர்களுக் கான மரபீனி மாற்றுப் பயிர்களின் ஆய்வுகள் பல்வேறு கட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த ஆய்வுகள் அனைத்தையும் உடனே நிறுத்த வேண்டும். மரபணுப் பொறியியல் ஏற்பளிப்புக் குழு (GEAC) உயிரித் தொழில்நுட்பத் துறைக்கும், தொழில் துறைக்கும் சார்பாகச் செயல்பட்டுள்ளமை அப்பட்டமாகத் தெரி கிறது. இதேபோன்று பி.டி. பருத்திக்கு அனுமதி அளிக் கப்பட்டதில் பல குளறுபடிகள் நடந்துள்ளன. எனவே நாங்கள் பல நாடுகளில் உள்ள சட்டங்களையும் நடை முறைகளையும் ஆய்வு செய்ததில், நார்வே நாட்டின் மரபணுத் தொழில்நுட்பச் சட்டம் சிறந்ததாக உள்ளது. அத்தன்மையிலான சட்டம் இந்தியாவில் கொண்டு வரப்படும் வரை மரபீனி மாற்றுப் பயிர் ஆய்வுகளுக் குத் தடைவிதிக்க வேண்டும்” என்று நிலைக்குழு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், “1950ஆம் ஆண்டு இந்தியாவின் உணவு உற்பத்தி 5.6 கோடியாக இருந்ததை, தற்போது 25 கோடி டன்னாக உயர்த்த முடிந்த நம்மால் 2020இல் அதிகரிக்கப் போகும் உணவுத் தேவையைச் சமாளிக்க முடியாமல் போகுமோ என்று நாம் ஏன் அச்சப்பட வேண்டும்?” என்கிற வினாவும் தொடுக்கப்பட்டுள்ளது.

பி.டி. பருத்தியால் விளைச்சல் பெருகும். அதன் மூலம் உழவர்கள் பயனடைவார்கள் என்பதை வலி யுறுத்தி வந்த நடுவண் அரசுக்கு, இந்த நிலைக்குழு மிகத் தெளிவான புள்ளிவிவரங்களைக் காட்டி, பி.டி. பருத்தியால் உழவர்கள் யாரும் பெரும் பணக்காரர் களாகிவிடவில்லை என்பதோடு-பருத்தி உற்பத்தியும் பல மடங்கு அதிகரித்துவிடவில்லை என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளது. பி.டி. பருத்தி பயிரிடும் விதர்பா பகுதி யிலும் மற்ற பகுதிகளிலும் உழவர்களின் தற்கொலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மொத்தச் சாகுபடிப் பரப்பில் பருத்தி பயிரிடும் பரப்பு 5 விழுக்காடாகும். ஆனால் மொத்தம் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் 50 விழுக்காடு பருத்திப் பயிரில் பயன் படுத்தப்படுகின்ற நிலை மாறவில்லை. இந்த ஒரு சான்று போதும் - பி.டி. பருத்தியைக் காய்ப்புழு தாக்கு வதில்லை என்று கூறப்படுவது அப்பட்டமான பொய் என்பதை எண்பிக்க.

வேளாண்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவர் வாசுதேவ் ஆச்சாரியா ‘தி இந்து நாளேட்டுக்கு (21.8.2012)’ அளித்த செவ்வியில், “மான்சாண்டோ நிறுவனம் தொடக்கத்தில் 450 கிராம் பி.டி. பருத்தி விதையை ரூ.1700க்கு விற்றது. ஆந்திர மாநில அரசு இதை எதிர்த்து வழக்குத் தொடுத்தது. அதன் பின்னர் அதன் விலையை ரூ.750க்குக் குறைத்தது. மான்சாண்டோ நிறுவனத்திடம் உரிமம் பெற்று பி.டி. பருத்தி விதையை உற்பத்தி செய்பவர் ஒவ்வொரு 450 கிராம் விதைக்கும் உரிமைப் பங்குத் தொகையாக (இராயல்டி) ரூ.250 அளிக்க வேண்டும். கடந்த ஆண்டு 450 கிராம் விதை ரூ.1200 முதல் 2000 வரை விற்கப்பட்டது. ஏனெனில் பொய்யான பற்றாக்குறை என்கிற நிலைமை உருவாக்கப்பட்டு விலை உயர்த்தப் பட்டது. மேலும் பி.டி. பருத்தி 80 விழுக்காட்டுக்கு மேற் பட்ட பரப்பில் பயிரிடப்படுவதால் மற்ற பருத்தி இரக விதைகள் சந்தையில் கிடைக்காமல் போய்விட்டன. இதேநிலை தான் பி.டி. கத்தரிக்கும் மற்ற பி.டி. உணவுப் பயிர்களுக்கும் ஏற்படும். எனவே மரபீனி மாற்றுப் பயிர் தொழில்நுட்பம் என்பது உணவுப் பாதுகாப்புக்கு எவ்வகையிலும் உதவாது. விதை நிறுவனங்களின் இலாபம் ஒன்று மட்டுமே இதன் குறிக்கோளாகும்” என்று கூறியுள்ளார்.

ஆனால் அண்மையில் நடைபெற்ற இந்திய அறி வியல் பேரவை மாநாட்டில் உரையாற்றிய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், “உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திட உயிரித் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்த வேண்டும்” என்பதை வலியுறுத்தினார். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவரப் போவதாக மன்மோகன் அரசு சில ஆண்டுகளாகக் கூறிவருகிறது. ஆனால் அச்சட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு மேல் இருப்பவர்-கீழ் இருப்பவர் என்ற பாகுபாடு இல்லாமல், அனைவருக்கும் பொதுவான ஒரே தன்மையில் உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆய்வாளர்கள் வலியுறுத்தும் கருத்தை நடுவண் அரசு ஏற்க மறுத்து வருகிறது.

தற்போது ஓராண்டில் விளையும் 25 கோடி டன் உணவு தானியத்தை முறையாக மக்களுக்கு வழங்கி னாலே, அனைவருக்கும் தேவைப்படும் உணவு கிடைக்கும். கொள்முதல் செய்யப்படும் தானியங்களைச் சேமித்து வைக்கப் போதிய கிடங்குகள் இல்லாத தாலும், மழை, பனி, எலிகள் ஆகியவற்றாலும் ஆண்டு தோறும் சில கோடி டன்கள் தானியம் வீணாகிறது. தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம் போன்ற சில மாநிலங்கள் தவிர்த்து, மற்ற மாநிலங்களில் பொது வழங்கல் முறை என்பதே மிகவும் சீரழிந்தும் ஊழல் மலிந்தும் கிடக்கிறது. இவற்றை ஒழுங்குபடுத்தி முறை யாகச் செயல்பட நடவடிக்கை எடுக்காமல், மரபீனி மாற்றுப் பயிரே தீர்வு என்று மாய்மாலம் பேசிப், பன்னாட்டு நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கு வழக்குரைஞராக வாதிடுகிறார் மன்மோகன் சிங்.

கார்ப்பரேட் வேளாண்மையின் ஆதிக்கத்தை முறியடிக்க இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், களைக்கொல்லி மருந்துகள் முதலான பெருஞ்செலவை விழுங்கும் பீடைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, இயற்கை உரங்கள், மேம்படுத்தப்பட்ட பாரம்பரிய விதைகள், இயற்கையான பூச்சி மருந்து, புன்செய் வேளாண்மை ஆகியவற்றுக்கு முதன்மை தருவதே உழவர்களின், மக்களின், இயற்கைச் சூழலின் நலன்களையும் வாழ்வையும் வளப்படுத்தும். இயற்கை வேளாண்மை மூலம் இரசாயன உரங் களை இட்டு, இரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் கிடைக்கக் கூடிய விளைச்சலுக்கு நிகரான விளைச்சலைப் பல பகுதிகளில் உழவர்கள் எடுத்து வருகின்றனர்.

நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது போல், நடுவண் அரசு, இந்திய நாட்டின் இயற்கைச் சூழலையும், உயிர்ப் பன்மையையும், 65 விழுக்காடு மக்கள் வேளாண்மையைச் சார்ந்தே வாழ்வதையும் கருத்தில் கொண்டு, மரபீனி மாற்றுப் பயிர்களுக்கு முற்றிலுமாகத் தடைவிதிக்க வேண்டும்.

Pin It