இதற்கு வழிகோல, விதி 335-அடியோடு நீக்க வேண்டும்

மண்டல் பரிந்துரையை அமலாக்கம் செய்வதைப் பிரதமர் வி.பி. சிங் 6.8.1990இல் அறிவித்தார். அதற் கான ஆணை 13.8.1990இல் பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணையை 6.8.1990 முதல் மிகவும் வன்மமாக எதிர்த்தவர்கள் பாரதிய சனதா ஆட்சியினரும், மத்திய அரசாங்க உயர்மட்ட அதிகாரவர்க்கத்தினரும், பார்ப்பன, பனியா பத்திரிகையாளர்களும் எல்லாக் கட்சிகளையும் சார்ந்த பார்ப்பன, இரஜபுத்திர, காயஸ்தர், பூமிகார் வகுப்பினர்களும் ஆவர்.

பிற்படுத்தப்பட்டோருக்குத் தனி இடஒதுக்கீடு தரக் கூடாது என்கிற உணர்ச்சி அவர்களால் தீவிரமாக வடஇந்தியா எங்கும் பரப்பப்பட்டது. எனவே 1990இல் அந்த ஆணை அமலாகவில்லை. இதையடுத்து வி.பி. சிங் பதவியை இழந்ததனால், 1991 மே மாதம் நடைபெற்ற தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றது.

காங்கிரசுப் பிரதமர் பி.வி. நரசிம்மராவ், வி.பி. சிங் பிறப்பித்த ஆணையை அடியோடு மாற்றினார். பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு அமல்படுத்தும் போது, அவர்களில் பொருளாதாரத்தில் வளர்ந்த பிரிவினரை நீக்கிவிட்டுத்தான் அமல்படுத்த வேண்டும் என்று திருத்தினார். மேலும் இடஒதுக்கீடு பெறாத மேல் வகுப்பில் உள்ள ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு தரவேண்டும் என்று ஒரு புதிய திருத்தத்தை 1991 செப்டம்பரில் சேர்த்தார்.

மேலேகண்ட இரண்டு ஆணைகளையும் எதிர்த்து இந்திரா சகானி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

மேற்படி வழக்கின் பேரிலான தீர்ப்பு 16.11.1992 இல் அளிக்கப்பட்டது. அத்தீர்ப்பு 3 செய்திகளை வலி யுறுத்தியது.

1.            மொத்த இடஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட் டுக்கு உட்பட்டே இருக்க வேண்டும்.

2.            பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தரும்போது அதில் பொருளாதாரத்தில் வளர்ந்த பிரிவினரை நீக்கிவிட்டுத்தான் தரவேண்டும்.

3.            பதவி உயர்வில் இடஒதுக்கீடு தரப்படுவது 15.11.1997க்குப் பிறகு நீடிக்கக் கூடாது.

அத்துடன், இடஒதுக்கீடு பெறாத வகுப்பிலுள்ள ஏழைகளுக்குப் பொருளாதார அடிப்படையில் இடஒதுக் கீடு தருவது கூடாது. அப்படிக் கொடுத்தால் ஏற்கெனவே உள்ள 50 விழுக்காட்டுடன் மேலும் 10 விழுக்காடு சேர்க்கப்பட்டு மொத்த ஒதுக்கீடு 60 விழுக்காடு ஆகிவிடும். எனவே அத்திருத்தம் செல்லாது.

மேலேகண்ட உச்சநீதிமன்றத்தின் கருத்து தன் அளவிலேயே முரண்பாடு உள்ளதாகும். ஏன்?

ஏழ்மை என்கிற அடிப்படையில் பொருளாதார அளவுகோலைக் கொண்டு முற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு தரமுடியாது என்று கூறிய உச்சநீதிமன்றம், அதே பொருளாதார அளவுகோலை விதி 16(4)இலும், விதி 15(4)இலும் இல்லாத ஒன்றை-புதியதாக பொரு ளாதார அளவுகோலைப் பிற்படுத்தப்பட்டோருக்குப் புகுத்தியது மாபெரும் தவறாகும்.

இந்தத் தவறுகளைப் பற்றிப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பட்டியல் வகுப்பு, பழங்குடி வகுப்புத் தலை வர்களோ, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புத் தலைவர்களால் ஆளப்பட்ட முதலமைச்சர்களோ அக்கறையோடும் பொறுப்போடும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

விதி 16(4) என்பது அரசு வேலைகளிலும் பதவிகளிலும் எந்த பிற்படுத்தப்பட்ட வகுப்புக் குடிமக் களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று தெரிகிறதோ அவர்களுக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றுதான் கூறுகிறது. “போதிய பிரதிநிதித்துவம்” என்பது விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் என்றுதான் பொருள்படும். அதனால் தான் டாக்டர் அம்பேத்கர் அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னா லேயே பட்டியல் வகுப்பினருக்கு விகிதாச்சார ஒதுக்கீடு பெற்றுத் தந்தார். அதே அடிப்படையில்தான் பிற்படுத் தப்பட்டோருக்கும் விகிதாசார இடஒதுக்கீடு 1956 லேயே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அது இன்று வரையில் நிறைவேறாததாகவே இருக்கிறது.

விதி 15(4)இல் பிற்படுத்தப்பட்டோரை அடையாளம் காணுவதற்குக் கல்வியிலும் சமுதாயத்திலும் பின்தங் கியிருப்பது மட்டுமே அளவுகோலாகும். பொருளாதார அளவுகோல் என்கிற கருத்து அந்தப் பிரிவில் அறவே இல்லை. பொருளாதார அளவுகோலை 30.5.1951இல் முன்மொழிந்த திருத்தம் 1.6.1951இல் நடந்த வாக் கெடுப்பில் தோல்வி அடைந்தது. நாற்பது ஆண்டுகள் கழித்து அதே பொருளாதார அளவுகோலை பிரதமர் பி.வி. நரசிம்மராவ் செய்தது தீய செயலாகும்.

1997 நவம்பருக்குப் பிறகு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தரக்கூடாது என்று சொன்னது, பட்டியல் வகுப்பினரையும் பழங்குடியினரையும் உடனே பெரிதும் பாதித்தது. பட்டியல் வகுப்பினருக்கு மத்திய அரசு வேலையில் சேருவதற்கு 1943 முதல் இட ஒதுக்கீடு தரப்படுகிறது. அவர்களுக்கு 1955 முதல் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு தரப்படுகிறது. அப்படி இருந்தும், 1992இலோ 1997இலோ 2012 வரையிலு மோ பட்டியல் வகுப்பாருக்கும் பழங்குடிகளுக்கும் மத்திய அரசில் முதல்நிலை, இரண்டாம் நிலை, மூன் றாம் நிலைப் பதவிகளில் விகிதாசாரப் பங்கீடு வந்து சேரவில்லை. அவர்களுக்கு விகிதாசாரப் பிரதிநிதித் துவம் வந்து சேரும் காலம் தான், இடஒதுக்கீடு நீக்கப் படுவதற்கான காலமாகும்.

அதேபோல் 1994இல் மத்திய அரசு வேலையில் முதன்முதலாக இடஒதுக்கீடு பெற்ற பிற்படுத்தப்பட் டோர், 2008 நவம்பர் 1ஆம் நாள் வரையில் வெறும் 5 விழுக்காடு இடங்களையே பெற்றுள்ளனர். அவர் களில் தகுதி உள்ளவர்களுக்கு பொதுத் தொகுப்பில் இடஒதுக்கீடு தரப்படாததாலும், அவர்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு தராததாலுமே இன்றுவரை 27 விழுக்காட்டையும் அடையவில்லை; விகிதாசாரப் பங்கீட்டையும் அடையவில்லை.

எனவே மேலே கண்ட செய்திகளைப் பற்றி பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பட்டியல் வகுப்பு, பழங்குடி வகுப்புத் தலைவர்களும், அரசியல் கட்சித் தலைவர் களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பத்திரிகையாளர் களும் மிகவும் கவலையோடு சிந்திக்க வேண்டும்.

இவர்கள் எல்லோரும் அரசமைப்புச் சட்டத்தில் உள்ள விதிகள் 15(4), 16(4), 16(4A) 338(10), 335 ஆகிய விதிகளைத் திரும்பத் திரும்பப் படிக்க வேண் டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். ஏன்?

15.11.1997க்குப் பிறகும் பட்டியல் வகுப்பாருக்கும் பழங்குடி வகுப்பாருக்கும் பதவி உயர்வில் இடஒதுக் கீடு செல்லுபடியாக வேண்டும் என்பதற்காக விதி 16(4A) என்பது 17.6.1995இல் அரசமைப்புச் சட்டத் தில் சேர்க்கப்பட்டது. அந்தத் திருத்தம் செல்லாது என்று 1995 சூலையிலேயே நாம் கருத்துத் தெரிவித்தோம். அதை யாரும் சட்டை செய்யவில்லை. அந்த விதி செல்லாது என்று 1999 நவம்பரில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மறுபடியும் ஒரு திருத்தம் நிறைவேற்றப் பட வேண்டுமானால், விதி 335 என்பதை அடியோடு நீக்கிவிட்டுத்தான் நிறைவேற்ற வேண்டும் என்று 2000 சனவரியில் தெளிவாக நாம் எழுதினோம். 2.1.2000இல் நடைபெற்ற நம் கட்சி மாநாட்டில் அதே தன்மையிலேயே தீர்மானம் நிறைவேற்றினோம். ஏன் எனில் விதி 335 பட்டியல் வகுப்பினரையும் பழங் குடியினரையும் வேலைக்குத் தெரிவு செய்யும் போதோ பதவி உயர்வு கொடுக்கும் போதோ, அதனால் நிர்வாகத் திறமை பாதிக்கப்படாமல் இருக்குமா என்று பார்த்தே கொடுக்க வேண்டும் என்று சொல்கிறது. இது அவ்இரு வகுப்பினரையும் இழிவுபடுத்துவதாகும் என்பது நம் தெளிவான முடிவு. இப்படி நாம் சொல்லுவது மேதை அம்பேத்கரை நாம் குறைத்துச் சொல்லுவது ஆகாது. இதைப் பிற்படுத்தப்பட்டவரும் பட்டியல் வகுப்பினரும் உணர வேண்டும்.

ஏன் எனில், 2012 செப்டம்பர் 14 அன்று நாடாளு மன்றத்தில் பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த இணை அமைச்சர் வி.நாராயணசாமி அவர்களால் விதி 16(4ய) அய் திருத்துவதற்கான ஒரு மசோதா முன்மொழியப் பட்டது. அதில் அவர் விதி 241, 242 இவற்றை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளார். இது போதாது. இப்பொழுது திருத்தப்படப் போகும் மசோதாவின் வடிவம் பின்வருமாறு வடிவமைக்கப்பட வேண்டும்.

அரசு வேலைகள், பதவிகள் ஆகியவற்றில் பதவி உயர்வு அளிப்பதற்கு விதி 16(4), 16(4A), 338(10) ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அவ்விதி களில் சொல்லப்பட்டிருக்கிற (1) சமூகத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், (2) பட்டியல் வகுப்பினர், (3) பட்டியல் பழங்குடி வகுப்பினர் ஆகி யோருக்கு அரசு வேலையிலும் அரசுப் பதவிகளிலும் பதவி உயர்விலும் - அந்தந்த வகுப்பினர் எண்ணிக் கைக்கு ஏற்பப் பதவிகள் கிடைக்கிற காலம் வரைக்கும், எல்லா நிலைப் பதவிகளிலும் பதவி உயர்வு அளிக் கப்படும் என்று உறுதி கூறுகிறது.

(அ) மேலே கண்ட நோக்கம் நிறைவேறுவதற்கு ஏதுவாக, அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள 335ஆம் விதியையும், அதில் 2000இல் செய்யப்பட்டுள்ள பகுதித் திருத்தமும் அடியோடு நீக்கப்பட்டிருக்கிறது என்கிற தன்மையில் மேலே கண்ட மசோதா மறுவடிவமைக் கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்தக் கருத்தைப் புறந்தள்ளிவிட்டு நிறைவேற்றப் படும் எந்தத் திருத்தமும் பட்டியல் வகுப்புக்கும் பழங் குடி வகுப்புக்கும் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டைத் தந்துவிடாது. இவ்இரு வகுப்பினரும் “பிற்படுத்தப்பட்ட வர்கள்” என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் தான் என்று, விதி 338(10)இல் தெளிவாகக் குறிப்பிட்டிருப் பதை எல்லோரும் தெளிவாக உணர வேண்டும்.

- வே.ஆனைமுத்து

Pin It