தமிழ்நாட்டைத் தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள் என்பதெல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்கலாம். வரலாற்றிற்கு முந்தைய காலம் என்று கூடச் சொல்லலாம்.

தெலுங்குப் பகுதி ராயர்கள் (கிருஷ்ணதேவராயர்), பல்லவர்கள் ஆண்டிருக்கிறார்கள். நாயக்கர்கள் ஆண்டி ருக்கிறார்கள். மராட்டியர்கள் (சிவாஜி) ஆண்டிருக்கிறார் கள். சுல்தான்கள் ஆண்டிருக்கிறார்கள். இவர்களின் கீழ் கப்பம் கட்டும் அடிமை அரசர்களாக, சில காலம் நட்பு பாராட்டியபடி சிற்றரசர்களாக, ஆட்சி செய்திருக் கிறார்கள். இது ஒருவித சரிவு நிலை; தாழ்வு நிலை; ஏன்? தமிழர்களுக்குத் தொலைநோக்குப் பார்வை இல்லை. வரலாறு நெடுகிலும் இதுதான் காணக் கிடைக்கிறது. தமிழர்களின் பிறவிக் கோளாறு, தொலை நோக்குத் திட்டமிடத் தெரியாமை.

கடைசியாக ஆங்கிலேயர்கள் ஆண்டார்கள். இத் தனை ஆட்சிக்காலத்திலும் ‘ராஜகுரு’க்களாக அமர்த்தப் பட்டவர்கள், பரப்பிய மூடநம்பிக்கைகள், சாத்திரம் சடங்குகள், பாவ புண்ணிய அலங்கோலங்கள், சாதிய உயர்வு தாழ்வுகள் உட்பட்ட அக்கிரமங்களைக் கண்ட பிறகுதான் பெரியார் அவர்களால் ‘சுயமரியாதை’ எனும் தன்மான உணர்வு ஊட்டப்பட்டது.

வழிகாட்டிகள் நேர்மையான தலைமை மீதும் நம்பிக்கை வைக்காமல், மனம் போன போக்கில் விமர்சித்து, கொச்சைப்படுத்தும் இழிகுணம் கொண்ட வர்கள் ‘தமிழர்கள்’ என்பதையும் மனம் விட்டுச் சொல்லியாக வேண்டும்.

அதே நேரத்தில் பாகிஸ்தானியர்கள் விதிவிலக்கு இல்லாமல் ‘ஜின்னா’ தலைமையை ஏற்றுக்கொண்டு ஒற்றுமையைக் காட்டி, ஒன்றுபட்டு வீரத்தைக் காட்டி னார்கள்.

ஆங்கில அரசும் அவர்களைக் கண்டு அஞ்சி விடுதலை கொடுத்தது. பாகிஸ்தான் தனி நாடாகியது.

பெரியார் அவர்களால் கருத்தோட்டத்தைப் பரப்புரை செய்வதற்கே அவரின் ஆயுட்காலம் போதவில்லை. அவருக்கான எதிர்ப்பு எல்லாத் திசைகளிலும் அவரைத் தாக்கித் தீர்த்தன. தளபதிகளாக விளங்கியவர்கள், துரோகிகளாக மாறிவிட்ட நிலையில், அவரால் பாகிஸ் தானியர் போல், நாட்டை விடுவிக்க ஒட்டுமொத்த பலத்தைக் காட்டி, ஆங்கிலேயரைப் பயம் கொள்ளச் செய்திட முடியவில்லை.

தனித்தமிழ்நாடு நோக்கிய சிந்தனை தோன்றிய அந்தக் காலக்கட்டத்தில், நான்கு பேர் சேர்ந்தார்கள். தனித்தமிழ்நாடு கோரிக்கையை ஒரே குரலில் எழுப்பி னார்கள். ஒன்றுசேர்ந்த நால்வரும் தமிழ்நாட்டுக் காரர்கள் இல்லை. தெலுங்கரும், கன்னடரும் சேர்ந்து, தமிழ்நாடு கேட்க முனையும் போது, ‘உனக்கேன் இவ் வளவு அக்கறை’ என்று கேட்பார்கள் என்ற எண்ணத் தில், ‘திராவிட நாடு’ என்கிற பெயரை ஏற்றுக்கொண் டார்கள்.

அப்போது ஊட்டிய ‘திராவிட நாடு’ என்கிற குறிக் கோள்தான் சமுதாயத்தாலும், அரசியலாலும் அடி மையாகக் கிடந்த தமிழ் இளைஞர்களுக்கு ‘தனி நாடு’ என்கிற அகத்தூண்டல் ஏற்படுத்தியது. பொது மக்களுக்கு, திராவிட நாடு என்றால், மற்ற தென் மாநிலங்களும் இதற்குத் துணை வருமா என்றெல் லாம் சிந்திக்கத் தெரியாதிருந்த காலம். புரட்சிகர நோக்கில் எதிர்காலத்தையும், வழிமுறைகளையும் திட்டமிடாமல், கொள்கை ரீதியான பிரகடனமாக முடிவெடுக்கப்பட்டதுதான் திராவிட நாட்டுக் கொள்கை. மற்ற மாநிலங்கள் இதற்கு ஆதரவு கொடுக்காத நிலையில், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்கிற கோரிக் கையை அழுத்தமாகக் கூறியவர் பெரியார் அவர்கள் மட்டுமே.

திராவிட நாடு கோரிக்கை வலுப்பெற்றதற்கு அடிப் படையே ‘தனித்தமிழ்நாடு’ உணர்வுதான் - தமிழ் உணர்வுதான் என்பதை விருப்பு வெறுப்பு இல்லாமல் சிந்திக்க வேண்டும். திராவிட நாடு கொள்கை தான் இளைஞர்களைச் சிந்திக்க வைத்தது. அன்று திராவிட நாட்டுக் கொள்கை ஏற்பட்டிருக்காவிட்டால், இன்று தனித்தமிழ்நாடு கொள்கையே தோன்றியிருக்காமல் போயிருக்கலாம். இன்றைய விழிப்புணர்ச்சி பெற இன்னும் எத்தனை ஆண்டுகளோ? தமிழ்நாடு கோரிக் கையின் ஆணிவேரே திராவிட நாடு கோரிக்கைதான் என்பதை நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்.

இன்றைய நிலையில் பார்த்தால் “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்பது உண்மை போலத் தோன்றலாம். அன்றைக்கு இந்த விடுதலை உணர்வைக் கூடத் தூண்டிவிட, தட்டி எழுப்ப பெரியாரைத் தவிர வேறு ஆள் இல்லையே! திராவிடம் என்கிற சொல்லைக் கட்சிப் பெயரில் ஒட்ட வைத்துக் கொண்டுள்ள அனைத்துக் கட்சிகளையும் எதிரியாகப் பார்ப்பது தவறல்லவா? இந்தக் கட்சிகளில் உள்ள இளைஞர்களுக்கு உண்மை உணர்த்தப்பட வேண்டுமே ஒழிய, முற்றாக அவர் களை ஒதுக்குவது சரியில்லையே! அங்கிருந்துதான் இளைஞர்களை மீட்டெடுக்க வேண்டும்.

அன்றைக்கு இந்தியத் தேசியத்திற்கு எதிர்ப்பாக, பிராந்திய உணர்வை ஊட்டத் திராவிடத் தேசியம் தான் பயன்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது.

அந்த ஆயுதம் சரியில்லை என்கிற போது, தமிழ்த் தேசிய ஆயுதத்தைக் கையில் எடுக்கிறோம். அவ் வளவுதான். ‘எதிரி’ யார் என்பதில் குழப்பம் இல்லை. அன்றும் அதே எதிரி, இன்றும் அதே எதிரி. நாம் மேற்கொண்ட வழிமுறையை மாற்றிக் கொள்கிறோம். அவ்வளவு தானே!

அன்று இந்தியத் தேசியத்திற்கு எதிர்ப்பாக உருவாக்கப்பட்ட ‘திராவிடத் தேசிய உணர்வு’ என்னும் அதே கடைக்காலைப் பயன்படுத்தித்தான், தமிழ்த் தேசியக் கட்டடத்தை, வேறு வடிவத்தில், மாறுபட்ட கோணத்தில் கட்டி எழுப்பியாக வேண்டும்.

தமிழ்த்தேசியத்திற்கு முன்னோடியாகத் திராவிடத் தேசியம் கட்டமைப்புச் செய்யப்பட்டது. அப்போது நடந்த நிகழ்வெல்லாம் ஒரு ‘கோரிக்கை’; அவ்வளவு தான்; விடுதலைப் புரட்சியல்ல. இதுதான் வரலாறு காட்டும் உண்மை. நம் திறமை இனியும் சிதறிவிடக் கூடாது. நம் இளைஞர்களுக்கு உண்மைகள் புரிய வைக்கப்பட வேண்டுமே தவிர, கடந்துபோன வரலாற் றைக் குற்றம் கூறிப் பயன் ஏதும் இல்லை. ஒன்றி ணைப்பதற்குப் பதிலாக, சிதறடிப்பதாகத்தான் நம் போக்குப் பயன்படப்போகிறதோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.

என்னவோ தமிழ்த்தேசியம் வளர்ந்து வந்தது போலவும், அதனை மழுங்கடித்துவிட்டு, திராவிடத் தேசியம் வஞ்சகமாகப் புகுத்தப்பட்டு, அதனாலேயே தமிழ்த்தேசியம் செத்துவிட்டது போலவும், கற்பனைக் கதையளப்பை நாம் கட்டுப்படுத்தியாக வேண்டும்.

வார்த்தையாடலில், திராவிடம் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளதே தவிர, தமிழ்நாட்டைத் தாண்டி எங்குமே திராவிடம் முளைவிட்டதில்லை. தி.மு.க. மாநாடுகளில், சில கன்னடர்கள், தெலுங்கர்கள் அழைத்து வரப்பட்டு, அங்கெல்லாம் திராவிடக் கொள்கை பரவி யுள்ளதாகப் பொய்வேடம் காட்டிய வரலாறு உண்டு. அதுகூட அங்கு வாழும் தமிழர்களின் “தமிழ் உணர்வு” தான் காரணமேயன்றி, கன்னடத்தில் தி.மு.கழகம் முளைத்து விட்டதற்கான ஆதாரம் இல்லை. திராவிடத் தேசியத்திற்குள் தமிழ்த் தேசிய உணர்வை நிரந்தரப்படுத்தியதுதான் தவறு. இந்தத் தெளிவான புரிதல் நம்மிடம் இல்லை.

தமிழர்களின் செயல்பாட்டைப் பார்ப்பனர்கள் பாராட்டுகிறார்கள் என்றால், அங்கே தமிழன் தவறு செய்துவிட்டான் என்று பொருள். குற்றம், குறை கூறு கிறான் என்றால், அங்கே தமிழன் சரியாக நடந்து கொண்டுள்ளான் என்றுதான் பொருள்.

உழைக்காமல் உண்ணுதற்கு, நிரந்தரமான ஏற்பாட்டைச் செய்து கொண்டு, கொஞ்சம்கூடத் தயக்கம், பயம் இல்லாமல், கோலோச்சி வந்தவர்கள், பெரியாரின் செயல்பாட்டைப் பார்த்த பிறகுதான், தமிழ்நாட்டை விட்டு இடம்பெயர்ந்தார்கள். எல்லாக் கிராமங்களிலும் ஊராட்சி மன்றத் தலைவர், முன்சீப் கர்ணம் என்று அனைத்துப் பதவிகளிலும் அமர்ந்து ஆட்சி செய்த பார்ப்பனர்கள், வீட்டைக் காலி செய்தார்கள் என்றால், பெரியாரின் எதிர்ப்பைக் கண்டுதான் அஞ்சி நடுங்கி வெளியேறினார்கள். இதன் பொருள் பெரியார் மிகச் சரியான ஆயுதத்தைத்தான் எடுத்திருக்கிறார் என்பது தான்.

இன்றைக்கும் திராவிடப் பெயர் தாங்கியுள்ள நான்கு கட்சிகளை அழைத்துத் தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவாகச் செயல்பட வைக்க முயற்சி செய்ய வேண்டி யதைவிடுத்து, செயல் வடிவத்திற்குத் துணை இருக்க எழுத்தும், பேச்சும், பரப்புரையும், நாம் தொலைநோக் கில் திட்டமிட்டு வடிவமைத்துக் கொண்டு உயிர் ஊட்ட வேண்டுமே அல்லாது, பகைத்துக் கொண்டு அழிந்து விடக்கூடாது. நம் இளைஞர்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டுவதுதான் நம் போர்த் தந்திரமாக இருக்க வேண்டும்.

“இருப்பது இரண்டு சட்டை!

இரண்டுமே கிழிஞ்ச சட்டை!

ஒன்றை மாற்றி ஒன்றாக

உடுத்திப் பார்த்திட்டோம் - தோழா

உள்ளதெல்லாம் கிழிசலடா

தோழா!

தி.மு.க. பழைய சட்டை!

அ.தி.மு.க. ஒட்டுச் சட்டை!

ஒன்றை மாற்றி ஒன்றாக

ஏற்றிப் பார்த்திட்டோம் - தோழா

விடியவழி தெரியலடா

தோழா!

- மெய்யறிவு 4, 2009

- ஒடுக்கப்பட்டோர் குரல் 5, 2009

இதுதான் உண்மையான நிலைமை. வாக்களிக்க வேண்டும்; யாருக்கு? ஒன்றுமே சரியில்லை. ஒரு முறை இவருக்கு; அடுத்தமுறை அடுத்தவருக்கு! அவ்வளவுதான் தெரிகிறது தமிழர்களுக்கு!

புதிய தலைமை ஏற்படவில்லை. யாருமே தமிழ்த் தேசியத் தலைமையை ஏற்க முன்வரவில்லை. பழ. நெடுமாறன் தொடங்கிய தமிழ்த் தேசிய இயக்கத்தைச் செயலலிதா அம்மையார் முன்னைய ஆட்சிக்காலத் திலேயே தடை செய்தார்கள். தமிழ்த்தேசிய உணர்வு முளைவிட்டு முண்டிவெளிவந்துவிடக்கூடாது என்கிற அக்கறை அவாள்களுக்கு.

அடுத்து வந்த கலைஞர் அந்தத் தடையை நீக்க வில்லை! ஏன்? தமிழ்த்தேசிய உணர்வை பிழைப்புக் கான யுக்தியாகக் கொண்டிருப்பவர் நீக்குவாரா?

தமிழ்த்தேசியம் பற்றி வீரமுழக்கம் செய்து வரும் இன்றைய தோழர்கள் யாருமே தமிழ்த்தேசிய இயக் கத்தின் மீதான தடையை நீக்கக் குரல் கொடுக்க வில்லையே!

தனித்தனியே வீரம் பேசி மாண்டொழிந்த இனம் தானே நாம்.

அந்நியனுக்கு அடிமையாக இருப்பார்களே ஒழிய, தம்முள் ஒருவரைத் தலைமைப்படுத்திச் செயல்பட மாட்டாத குணம் நம்மவர்களுக்கு. சரிதானே!

மாற்றிக் கொண்டாக வேண்டும். நம் போக்கினை மறுபரிசீலனை செய்தாக வேண்டும். தமிழ்நாடு மறு உருவம் பெற்றாக வேண்டும். இதுவே காலத்தின் கட்டாயம்.

ஒன்றுபடல் பற்றிப் பேசத் தொடங்கும் போதே, பகையைத் தேடிக் கொள்கிறோம்.

பெரியார் பகைவர் அல்லர். தமிழ்த் தேசியத்தை மழுங்கடிக்க திராவிடத் தேசியத்தைக் கையெடுக்க வில்லை! அப்படி இனியும் பரப்புரை செய்வது, நாம் எதிர்பார்க்கும் வெற்றியைத் தேடித்தந்துவிடாது.

பெரியாரை நிந்திப்பது நன்றி கொன்ற செயல் ஆகும்.

பெரியார் தமிழ்த்தேசியத்i தன் முன்னோடி.

திராவிடத்தால் தமிழ்த்தேசியம் முளைத்தது - உண்மை!

திராவிடக் கட்சிகளால் தமிழ்த்தேசியம் மறைந்தது - உண்மை!

பகைக்காமல் தமிழ்த்தேசியம் வளர்ப்பது - நன்மை!

புதுவழிகண்டு தமிழ்த்தேசியம் படைப்பதே - கடமை!!

Pin It