“என்ன இருந்தாலும் இதுபோன்ற சா-கசங்களில் ஈடுபடுவது நல்லதல்ல அரசே” திரிசங்கு மகாராஜா வின் பாதுகாவலன் பொறுப்புணர்வுடன் அவரைக் கடிந்து கொண்டான்.

“இதுபோன்ற சாகசச் செயல்களைச் செய்யாம லேயே இருந்தால், பின் வீரசாகசங்கள் புரியும் பழக்கம் விட்டுப் போய்விடும். அப்போது எதிரிகளுக்கு மோதிப் பார்க்கலாமே என்ற எண்ணம் தோன்றிவிடும். அப்படித் தோன்றுவது நல்லதில்லை அல்லவா?”-திரிசங்கு மகாராஜா தன்னுடைய பாதுகாவலனிடம் இப்படி விளக்கம் அளித்தார்.

“தாங்கள் கூறுவது சரிதான். ஆனால் தங்கள் குமாரர்கள் யாராலும் வெல்ல முடியாத பலசாலிகளாக உருவாகிவிட்டார்கள். நம் நாட்டின் மீது மோதிப் பார்க்கும் எண்ணம் யாருக்கும் வராது.”

“அப்படியானால் நான் அரண்மனையிலேயே முடங்கிக் கிடந்து விடலாம் என்று கூறுகிறாயா? ஏன் உனக்கு இந்தப் பாதுகாவலன் வேலையைச் செய்வது சிரமமாக இருக்கிறதா?”

“மன்னியுங்கள் அரசே! நான் தங்கள் உடல் நலத்தைப் பற்றித் தான் கவலைப்படுகிறேன்” என்று கூறிவிட்டு, அந்தப் பாதுகாவலன் மௌனமாகிவிட்டான். அரண்மனைக்குப் போய்ச் சேரும் வரை மௌன மாகவே இருந்தான்.

விஷயம் இதுதான். திரிசங்கு மகாராஜா தன் பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்றிருந்தார். வேட் டையின் போது ஒரு சிங்கத்தை வெகுதூரம் துரத்திச் செல்லும் போது குதிரை வழியில் இருந்த குழியில் விழுந்து, குதிரையுடன் அவரும் காயம் அடைந்து விட்டார். போதாக்குறைக்கு ஒரு முள்செடியின் கிளைகள் அவருடைய உடலில் பல பாகங்களில் நன்றாகத் தைத்துவிட்டன. பாதுகாவலன் அவரை மீட்டு வரும் பொழுது, கண்பார்வையின் கூர்மை குறைந்த, வயதான காலத்தில் சாகசங்களில் ஈடுபட்டு வேதனையை வர வழைத்துக் கொள்கிறாரே என்று வருத்தப்பட்டுத்தான், அதுவும் பல நேரங்களில் தன் உயிரைப் பொருட் படுத்தாமல் அரசரைக் காப்பாற்றியதால் உண்டான உரிமையில் தான் அவ்வாறு கேட்டான். ஆனால் அரசர் அதை விரும்பவில்லை என்ற உடன் மௌனமாகி விட்டான்.

அரண்மனைக்குச் சென்றதும் வைத்தியர் வரவ ழைக்கப்பட்டார். வைத்தியரும் அந்த முள் செடியைப் பார்த்துவிட்டு “இது நச்சுச் செடியாயிற்றே” என்று கூறி விட்டு வைத்தியத்தைத் தொடர்ந்தார். வைத்தியம் பலனளிக்கத்தான் செய்தது. ஆனால் உடலில் வலி வெகுநாட்கள் நீடித்தது. உடல் வலி இருந்ததால் சுவை யான உணவிலிருந்து, காமக் களியாட்டங்கள் வரை எதுவும் அவருக்குச் சுவைக்க மறுத்தன. கண் முன்னே விரிந்து கிடந்த சுகபோகங்களை அனுபவிக்க முடியாமல் தத்தளித்தார்.

ஒரு முறை வைத்தியரிடம் “வைத்தியரே! உடலில் வியாதி வந்தால் நாம் இவ்வளவு துன்பப்படுகிறோமே? தேவலோகத்தில் உள்ளவர்களுக்கும் இப்படித்தானா?” என்று திரிசங்கு மகாராஜா கேட்டார்.

“தேவர்கள் அமிழ்தத்தைக் குடித்து இருப்பதால் இதுபோன்ற பிரச்சினைகள் அவர்களுக்கு இல்லை அரசே!”-வைத்தியர் பயந்து கொண்டே பதிலளித்தார். தேவ வைத்தியத்தை ஏன் கற்கவில்லை என்று கேட்டு விட்டால் என்ன செய்வது என்று உள்ளூர அவருக்கு உதறல் எடுத்தது.

நல்ல வேளையாக அவர் அப்படிக் கேட்கவில்லை. “அமிழ்தம் சாப்பிட்டால் மரணம் ஏற்படாது என்பது சரி; நோய் நொடி வராது என்பதும் சரி; ஆனால் போரில் காயம் ஏற்படுமே! அதற்கு என்ன செய்வார்கள்?” என்று கேட்டார்.

“அரசே! அங்கு அசுவினி, தந்வந்திரி முதலிய தேவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வைத்திய சாஸ்திரம் தெரியும். மேலும் தேவலோகத்தின் சமாச் சாரமே வேறு. அங்கு எதையும் நொடியில் குணப்படுத்தி விட முடியும். பூலோகத்தில் அப்படி முடிவதில்லை அரசே!” வைத்தியர் மென்று விழுங்கிக் கொண்டு பதிலளித்தார்.

“ஏன் வைத்தியரே! தேவ வைத்தியத்தை மனிதர் கள் கற்றுக்கொள்ள முடியாதா?” என்று அரசர் கேட்ட வுடன், இந்த வினாவிற்காக அஞ்சிக் கொண்டு இருந் தாலும் “ஏன் கற்கவில்லை?” என்ற வடிவத்தில் வராதது குறித்து மனதில் தைரியம் கொண்டார். பின் “தேவர் கள் அதை நமக்கு அருளவில்லை. அரசே!” என்று கூறினார்.

இதைக்கேட்டுச் சிறிது நேரம் அமைதியாக இருந்த திரிசங்கு மகாராஜா “வைத்தியரே! அப்படியானால் நான் தேவலோகத்திற்குச் சென்றுவிட்டால் தேவ வைத்தியம் பெற்று உடனே குணம் அடையலாம் அல்லவா? மேலும் அங்கு கிடைக்கும் அமிழ்தத்தையும் குடித்துவிட்டால் சாகாமலும் இருக்கலாம் அல்லவா?” என்று கேட்டவுடன் வைத்தியர் அதிர்ந்துவிட்டார்.

சிறிது நேர இடைவெளிக்குப் பின் “கொஞ்சம் பொறுமையாக இருங்கள் அரசே! கூடிய விரைவில் நீங்கள் பூரணமாக குணம் அடைந்துவிடுவீர்கள். நீங்கள் தேவலோகம் போவது என்று பேசினால் எனக்கு நடுக்கமாக இருக்கிறது” என்று வைத்தியர் நடுங்கிக் கொண்டே பதிலளித்தார்.

ஆனால் திரிசங்கு மகாராஜாவோ சிரித்துக் கொண்டே பேசினார். “ஏன் வைத்தியரே! நடுங்குகிறீர்? இந்த உடல் வலியினால் துன்பப்பட்டு எங்கும் செல்ல முடி யாமல் படுத்திருந்த நாள்களில் எனக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது. நான் ஏன் இந்த உடலுடனேயே தேவலோகம் போகக் கூடாது?” அரசரின் இந்த வினாவினால் வைத்தியர் அதிர்ந்து விட்டார். ஒரு வேளை அரசருக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ?

தன் மனதில் தோன்றியதை வெளியில் சொல்ல முடியாமல் வைத்தியர் தவித்தார். அவர் பேச முடி யாமல் தவிப்பதைக் கண்ட திரிசங்கு மகாராஜா, “அதிர்ச்சி அடைந்துவிட்டீரா வைத்தியரே? நான் உண்மையாகத் தான் சொல்கிறேன். வசிஷ்ட முனிவரிடம் என்னை இந்த உடலுடன் தேவலோகத்திற்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப் போகிறேன். அவர் என்மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். நிச்சயமாக என்னை இந்த உடலுடன் தேவலோகத்திற்கு அனுப்பி வைப்பார்” என்று கூறிய அரசரிடம் மேற்கொண்டு பேசாமல் இருப்பதே நலம் என்று நினைத்துக் கொண்டு, எதற் கெடுத்தாலும் தலையாட்டிக் கொண்டு, மட்டும் இருந் தார். அரசர் சென்று வரலாம் என்று விடைகொடுத்த போது “தப்பித்தோம்; பிழைத்தோம்” என்று ஓடோடி வந்துவிட்டார்.

மறுநாள் திரிசங்கு மகாராஜா, தமது குல குருவான வசிஷ்ட முனிவரை வரவழைத்தார். அவரிடம் தன்னுடைய உடலுடன் தேவலோகம் போகும் ஆசையை வெளியிட்டார். இதைக் கேட்டதும் வசிஷ்ட முனிவர் சிரித்துக் கொண்டே அதுவெல்லாம் நடவாத செயல் என்றும், அவர் அனுபவிக்க ஆசைப்படும் சுகங் களை எல்லாம் இப்பூவுலகத்திலேயே அனுபவிக்கலாம் என்றும், இவ்வுலக வாழ்வு முடிந்த பின் அவருடைய ஆன்மா தேவலோகத்தில் சென்று சுகம் அனுபவிக்கும் என்றும், கனிவான மொழிகளில் கூறினார். வேட்டைக் குச் சென்று அடிபட்டதில் இருந்து பல நாட்கள் ஆகியும் உடலில் வலி குறையாத காரணத்தால், காமக் களி யாட்டங்களில் மட்டும் அல்ல; உணவின் சுவையை யே உணர முடியாமல் எரிச்சலில் இருந்த அரசருக்கு, குருவின் கனிவான சொற்கள் கசக்கவே செய்தன. எவ்வளவு கெஞ்சியும் வசிஷ்டர் உடன்படாதது கண்டு அவரை அனுப்பிவிட்டு, மறுநாள் வசிஷ்டரின் மகன் களை அழைத்தார். அவர்களிடம் தன் ஆசையையும், வசிஷ்ட முனிவர் அதற்கு உடன்படாததையும் கூறி விட்டு, முனிகுமாரர்கள் தன்னை உடலுடன் தேவ லோகத்திற்கு அனுப்பி வைத்தால் சிறந்த பரிசுகளை அளிப்பதாகவும், தேவை எனில் தன் நாட்டையே அவர்களுக்குக் கொடுத்து விடுவதாகவும் கூறினார். முனிகுமாரர்களும் தங்கள் தந்தையைப் போலவே அறிவுரை கூறினர்.

இதனால் ஏமாற்றம் அடைந்த திரிசங்கு மகாராஜா, முனிகுமாரர்கள் தன்னுடைய ஆசையை நிறைவேற் றாவிட்டால், வேறு குருவை நாடி நிறைவேற்றிக் கொள்ளப் போவதாகக் கூறியவுடன் வசிஷ்டரின் மகன் களுக்குக் கோபம் வந்துவிட்டது. குருவின் சொல்லை மீறினால் நாசம் நிச்சயம் என்று எச்சரித்துவிட்டுச் சென்றார்கள்.

இந்த இடைவெளியில் அரசரைப் பற்றி வைத்தியர் பல இடங்களில் உளறி இருந்தார். அதனால் அரண் மனையிலும் சுற்றுவட்டாரத்திலும் அரசருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று செய்தி பரவி இருந்தது. மேலும் வசிஷ்ட முனிவரின் மகன்களுக்கு நாட்டையே கொடுத்து விடுவதாகக் கூறியதைக் கேள்விப்பட்ட இளவரசர்கள் கோபமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

இந்நிலையில் வசிஷ்ட முனிவரின் மகன்கள், திரிசங்குவை அரண்மனையில் வைத்திருப்பது ஆபத்து என்றும், அவரை ஊருக்கு வெளியில் மயானத்தில் சண்டாளர்களிடம் விட்டுவிட்டு வரும்படியும், இளவரசர்கள், அமைச்சர்கள், தளபதிகளிடம் கூறினர். அவ்வாறே அன்று இரவு அரசரைத் தூக்கிக் கொண்டு சென்று, சண்டாளனைப் போல் உருமாற்றி மயானத்திலே சண்டாளர்களிடையே விட்டுவிட்டு வந்தனர்.

பொழுது விடிந்தவுடன் மயானத்தில் இருந்த சண்டாளர்கள், அங்கே புதிதாக ஒரு மனிதர் இருப் பதைப் பார்த்து விசாரித்தார்கள். அவர் தான் அந்நாட்டு அரசன் திரிசங்கு என்று கூறியதைக் கேட்ட அவர்கள், யாரோ ஒரு பைத்தியக்காரன் வழிதவறி வந்து விட்டான் என்று நினைத்துத் தங்கள் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது அவ்வழியே வந்த சண்டாளப் பெண்ணைப் பார்த்த உடன் திரிசங்கு திகைத்துவிட்டார். அவள் அரண்மனைப் புரோகிதரின் மனைவி அபாலாவை அப்படியே உரித்து வைத்தாற் போல இருந்தாள். அவளைப் பார்த்து “நீ அபாலாவைப் போலவே இருக்கிறாயே! நீ யார்?” என்று திரிசங்கு கேட்கவும், அவள் பதில் ஏதும் சொல்லாமல் விழித்தாள். இதைக் கண்ட மூத்த வெட்டியான் அவளுடைய தாயைப் பற்றி எப்படித் தெரியும் என்று கேட்க, அவள் அரண்மனைப் புரோகிதரின் மனைவி என்பதால் தனக்குத் தெரியும் என்று கூற, அப்படியானால் அவர் அரண்மனைவாசி தான் என்று மற்றவர்கள் புரிந்து கொண்டனர்.

அரண்மனைப் புரோகிதர் பல மனைவிகளுடன் வாழ்ந்ததோடு மட்டும் அல்லாமல், மற்ற பெண்களோடும் தொடர்பு கொண்டு இருந்து, தன் மனைவிகளில் ஒருத்தியான அபாலாவை ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்தார். இயற்கையான உணர்வுகள் அழுத்திய தைத் தாங்க முடியாமல், தன் வீட்டினுள் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சூத்திரனுடன் உறவு கொண்டதில் கருவுற்று இந்தப் பெண்ணைப் பெற் றெடுத்து இருக்கிறாள். குற்றம் (!?) செய்த சூத்திரன் அடித்துக் கொல்லப்பட்டுவிட்டான். சூத்திர ஆணுக்கும் பிராம்மணப் பெண்ணுக்கும் பிறந்த குழந்தை சண்டாள சாதி என்று சாஸ்திரம் கூறுவதால், அப்பெண் பிறந்த உடனேயே சண்டாளர்களிடம் கொண்டு வந்து விட்டு விட்டார்கள். இந்த விவரங்களை எல்லாம் கூறிய மூத்த வெட்டியான், புது மனிதனின் கதையைக் கேட்க அவரும் தான் வேட்டைக்குப் போனது முதல், மயா னத்தில் கொண்டு வந்து விடப்பட்டது வரையிலான கதையைக் கூறினார். இப்பொழுது வந்திருப்பவர் பைத்தியம் அல்ல என்றும், அரசர் தான் என்றும் அவர் களுக்குப் புரிந்தது. இருந்தும் என்ன செய்ய முடியும்?

மூத்த வெட்டியான் ஒரு ஆலோசனை கூறினார். “ஏ ராஜா! உங்கள் வசிஷ்ட முனிவருக்கு யாராவது எதிரிகள் இருக்கிறார்களா?” என்று மூத்த வெட்டியான் கேட்டவுடன் “ஏன் அப்படிக் கேட்கிறாய்?” என்று திரிசங்கு திருப்பிக் கேட்டார். அதற்கு மூத்த வெட்டியான் “ஒன்றுமில்லை; அவருக்கு எதிரி யாராவது இருந்தால், வசிஷ்டர் முடியாது என்று சொன்னதற்காக அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கலாம் அல்லவா?” என்று கூறிய உடன் திரிசங்குவிற்கு ஒரு பொறி தட்டியது.

விசுவாமித்திரர் மாமுனிவர் என்று பலபடப் புகழ் பெற்று இருந்தாலும் வசிஷ்டர் அவரை ‘பிரம்மரிஷி’ என்று ஒப்புக்கொள்வதில்லை. இதனால் விசுவாமித் திரருக்கு வசிஷ்டர் மேல் மனக்குறையும் கோபமும் உண்டு. அவரை அணுகினால் தான் நினைத்த காரியம் நிறைவேறும் என்று பட்டது. உடனே மூத்த வெட்டியானுக்கு நன்றி கூறிவிட்டு அவர்கள் அனை வரிடம் இருந்தும் விடை பெற்றார். நேராக விசுவாமித் திரரின் ஆசிரமத்திற்குச் சென்று அவரது காலில் விழுந்து வணங்கினார்.

ஒரு சண்டாளன் எப்படி ஆசிரமத்திற்குள் நுழைந் தான் என்று கோபமாகப் பார்த்தாலும், அடுத்த நொடி யில் வந்திருப்பது சண்டாளன் அல்ல என்றும், திரிசங்கு மகாராஜா என்றும் அடையாளம் கண்டு கொண்டார். என்ன நடந்தது என்று விசாரிக்க, அந்த அரசரும் எல்லா விவரங்களையும் கூறித், தன்னை எப்படியாவது உடலுடன் தேவலோகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

விசுவாமித்திரர் திடுக்கிட்டார். “உடலுடன் தேவ லோகம் செல்வதா? இது என்ன பைத்தியக்காரத்தனம்?” என்று மனதில் நினைத்துக் கொண்டாலும் திரிசங்கு மகாராஜாவின் உறுதியான நம்பிக்கையைக் கண்டு, பதிலேதும் பேசாமல் யோசனையில் ஆழ்ந்தார். திரி சங்குவோ, மகாமுனிவர் தன்னை உடலுடன் தேவ லோகத்திற்கு அனுப்புவதற்கான வழிவகைகளைப் பற்றி யோசிப்பதாக நினைத்துக் கொண்டு அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேர யோசனைக்குப் பின் விசுவாமித்திரர் திரிசங்கு மகாராஜாவைச் சிறிது காலம் ஆசிரமத்தில் ஓய்வு எடுத்துக் கொள்ளும்படியும், அப்புறம் என்ன செய்வது என்று யோசிக்கலாம் என்றும் கூறினார். திரிசங்குவும் தன்னுடைய ஆசை விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் ஆசிரமத்தில் காத்திருந்தார்.

திரிசங்கு மகாராஜா விசுவாமித்திரரின் ஆசிரமத் தில் வந்து தங்கி இருந்து தன் பூத உடலுடன் தேவ லோகம் செல்வதற்காகக் காத்திருக்கும் செய்தி அந்த ஆசிரமத்தில் உள்ளவர்கள் மட்டுமன்றி மிற்ற ஆசிர மங்களுக்கும் பரவியது. அப்படியே வசிஷ்டரின் ஆசிர மத்திற்கும் இச்செய்தி எட்டியது. வசிஷ்டர் கவலையுற் றார். உடலுடன் தேவலோகம் செல்ல முடியாது என் பதை அனைவரும் அறிவர். மகா அறிவாளியான விசு வாமித்திரரும் அறிவார். ஆனால் விசுவாமித்திரர் பிராம்மண நற்கிரங்களில் இன்னும் முழுப் பயிற்சி பெறாததால் திரிசங்குவின் ஆசையை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கலாம் என்று வசிஷ்டர் சந்தேகப் பட்டார். அவ்வாறு முயற்சி செய்தால் அதில் தோல்வி அடைவது நிச்சயம். மகாமுனிவரான விசுவாமித் திரரின் முயற்சியே தோல்வி அடைந்தது என்ற செய்தி பரவினால், மக்களிடையே ஏற்கெனவே தளர்ந்து கொண்டு வரும் வருணாசிரம தர்மத்தின் மீதான நம்பிக்கை, மேலும் தளர்ந்துவிடும் என்றும், அப்படி நடந்தால் பிராம்மணர்களின் அதிகாரமும் சுகவாழ்வும் பறிபோய்விடும் என்றும் வசிஷ்டர் மிகவும் கவலை யுற்றார்.

வசிஷ்டர் இவ்வாறு கவலையுற்று இருக்கும் அதே சமயத்தில், விசுவாமித்திரர் ஆசிரமத்தில் அவருடைய முக்கிய சீடர்களில் ஒருவரான நட்சத்திரேயனும், அதே போல் கவலையுற்றார். விசுவாமித்திரர் எதுவும் பேசா மல் மௌனமாக இருந்ததும், அவர் மேற்கொண்டு என்ன செய்வார் என்று எதுவும் தெரியாமல் இருந்த தும், நட்சத்திரேயனுடைய கவலையை அதிகமாக் கியது.

ஒரு நாள் தனிமையில் நட்சத்திரேயன் விசுவா மித்திரருடன் உரையாடிக் கொண்டு இருக்கும் பொழுது, திரிசங்குவின் ஆசையைப் பற்றி மெதுவாகக் கேட்டார். விசுவாமித்திரர் ஒரு சோகமான புன்னகையை உதிர்த் தார். யாகங்கள் பல செய்து, புகழ் பெற்ற சிறந்தஅரசன் இப்படிப் புத்தி பேதலித்துப் போயிருப்பதைக் காண வருத்தம் மிகுவதாகக் கூறினார். இதைக்கேட்ட நட்சத் திரேயனின் மனம் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தது. தடாலடியாக ஏதாவது செய்துவிடமாட்டார் என்ற நம்பிக்கையும் பிறந்தது. “அப்படியானால் திரிசங்குவை எப்படிப் சமாதானப்படுத்தப் போகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, விசுவாமித்திரர் “அவன் சமாதானப்படும் நிலையைத் தாண்டிவிட்டான். அவனுக்குப் பைத்தியம் முற்றிவிட்டது. அவனை வெளியே விட்டால் இதைப் பற்றிப் பேசிப் பேசி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிடுவான். வருணாசிரம தர்மத்தின் மேல் நம்பிக்கை தளர்ந்து கொண்டிருக்கும் இன்றைய நிலையில் மக்கள் உடலுடன் தேவலோகம் போகும் செயலை, பிராம்மண சக்திக்கு உரைகல்லாகக் கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள். அப்புறம் பிராம்மணர்களிடம் ஏமாற்று வித்தைதான் இருக்கிறது; அமானுஷ்ய சக்தி எதுவும் இல்லை என்று வெட்ட வெளிச்சமாகிவிடும்” என்று கூறிச் சற்று நிறுத்தினார்.

மேற்கொண்டு என்ன செய்வது என்று திட்டம் வைத்திருக்கிறார் என்று தெரியாத நட்சத்திரேயனும், அதைப் பற்றித் தெரிந்து கொள்ளும் தன் ஆவலைப் பார்வையிலேயே தெரிவித்தார். விசுவாமித்திரர் தொடர்ந்தார் “திரிசங்குவை உடலுடன் தேவலோகம் அனுப்பப் போவதாகக் கூறி ஒரு யாகத்தைத் தொடங்கு வோம். யாகத்தின் முடிவில் ஒன்றும் நடக்காது. உடனே நான் என்னைத் தேவர்கள் அவமதித்துவிட்டார்கள் என்று கூறி என் தவ வலிமையால் அவனை அப் படியே உயரக் கிளப்புவது போல் உரக்க மந்திரம் சொல் கிறேன். அப்பொழுது அவன் இருக்கும் இடத்தைச் சுற்றிப் புகை மண்டலம் உருவாகும்படிச் செய்துவிடு வோம். அப்பொழுது ஏற்கெனவே நாம் வெட்டி வைத் திருக்கும் குழிக்குள் அவனை உயிரோடு புதைத்து மூடிவிடுவோம்” என்று கூறிய உடன், “அப்பாடா! இந்தப் பிரச்சினையில் எப்படி முடிவெடுப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்தேன். குருவே! நீங்கள் சரியான தீர்வைக் கண்டுபிடித்து இருக்கிறீர் கள்” என்று நட்சத்திரேயன் கூறினான்.

“அவசரப்படாதே நட்சத்திரேயா! இது மட்டுமே போதாது. இப்படி மட்டுமே நடந்தால் சிலருக்குச் சந் தேகமும் ஏற்படலாம். கூடவே பல அரசர்களுக்கு உடலுடன் தேவலோகம் போக வேண்டும் என்ற பைத் தியம் பிடிக்கக் கூடும். அப்பொழுது இந்த உபாயம் பயனற்றுப் போய்விடும் என்பது மட்டுமல்ல; உண் மையும் வெளியாகி, வருணாசிரம தர்மத்தின் தத்து வத்திற்குக் கேடு சூழவும் செய்யும். ஆகவே திரிசங்கு உடலுடன் தேவலோகம் சென்றவுடன் இந்திரன் அங் கிருந்து அவனைக் கீழே தள்ளிவிட்டதாக ஒரு நாடகத் தை அரங்கேற்ற வேண்டும். அவன் கீழேவிழும் போது என் தவ வலிமையால் அவனை அப்படியே வானத்திலேயே நிறுத்திவிட்டது போன்ற பிரமையை உண்டாக்க வேண்டும். பின் திரிசங்கு வானத்தில் நட்சத்திரமாக என்றென்றும் ஒளிவிட்டுக் கொண்டிருக் கிறான் என்று கதை கட்டி விடவேண்டும். இவ்வள வையும் செய்தால் தான் மற்ற அரசர்களுக்கு உடலுடன் தேவலோகம் போக வேண்டும் என்ற ஆசை பிறக்காது” என்று விசுவாமித்திரர் கூறியதைக் கேட்ட நட்சத்தி ரேயன், பிராம்மணனான தன்னை விட, சத்திரிய னாகப் பிறந்த விசுவாமித்திரர் அதிகமான அறிவுக் கூர்மையுடன் விளங்குகிறாரே என்று நினைத்தான். சாஸ்திரங்களில் பல இடங்களில் அறிவுக் கூர்மை என்பது அனைத்து வகுப்பு மக்களுக்கும் பொதுவானது என்று ஒப்புக் கொள்ளப்பட்டு இருப்பது பற்றியும், சூத்திரர்களை ஒடுக்கி வைத்து உழைக்க வைக்க அரசு அதிகாரம் தான் சரியான ஆயுதம் என்று கூறப்பட்டு இருப்பது பற்றியும் படித்த நினைவு நட்சத்திரேயனுக்கு வந்தது. வருணாசிரம தர்மத்திற்கு எதிராகக் கிளம்பும் எந்த ஒரு கருத்தியலையும் முளையிலேயே கிள்ளி எறியும் விசுவாமித்திரரின் அறிவுக்கூர்மையையும் மனதில் மிகவும் புகழ்ந்தான்.

விசுவாமித்திரரின் திட்டப்படி, எல்லாமே கனகச் சிதமாக நிறைவேற்றப்பட்டன. வசிஷ்ட முனிவர் இதைப் பற்றிக் கேள்விப்பட்ட போது ஆச்சரியப்பட்டுப் போனார். வருணாசிரம தர்மத்திற்குப் பாதுகாப்பாக இருப்பதற்குத் தனக்கே தோன்றாத யோசனைகள் விசுவாமித்திரருக்குத் தோன்றி இருக்கிறது என்றால், இனிமேலும் அவரைச் சத்திரிய குலத்தில் பிறந்தவர் என்று தாழ்வாகப் பேசக் கூடாது என்று முடிவு செய்தார். விசுவாமித்திரiரைப் பிரம்மரிஷி என்று மட்டுமல்ல; பிரம்ம ரிஷிகளிலேயே தலைமை ரிஷி என்று ஒப்புக்கொள்வதாகப் பிரகடனம் செய்தார். அவர் இயற்றிய காயத்திரி மந்திரத்தைப் பிராம்மணர்கள் அனைவரும் ஓத வேண்டும் என்றும் ஒரு நியமத் தையும் ஏற்படுத்தினார்.

பொது மக்களிடமோ, மண்ணில் புதைந்த திரிசங்கு மகாராஜா வானில் நட்சத்திரமாக ஒளிர்வதாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. மக்களும் இன்றும் அதை நம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

Pin It