வெட்கம் மானம் சூடு சொரணை
விட்டவர் இங்கே ஒருமனிதர் - பன்னாள்
கட்சி நடத்தியும் வேர்கா ணாத
காங்கிர சார்க்கு அவர்புனிதர்

பாழும் இராச பக்சே வுக்கு
வரவேற்புப் பா பாடுகிறார் - நம்
ஈழ மண்ணைச் சுடுகா டாக்கி
எலும்பு மாலை சூடுகிறார்

செந்தமிழ் மக்கள் குருதி குடிக்கும்
செந்நாய்க் கென்ன வரவேற்பு - நமைக்
கொந்துக் கறியாய் கூவிக் கூவி
விற்பவ னோடா கைசேர்ப்பு?

பதைக்கப் பதைக்கக் கொன்றான் அந்தப்
பாவி யோடா பல்லிளிப்பு - அவன்
உதைத்த காலில் முத்தம் தந்தால்
உயராதா நம் மனக்கொதிப்பு?

திறந்த வீட்டில் நுழையும் நாய்க்குச்
சிவப்புக் கம்பளம் ஒருகேடா - அங்கு
இறந்தோர்க் கோர்துளி கண்ணீர் இல்லை
இந்தியா எமக்குத் தாய்நாடா?

நேரு தொடங்கி சோனியாவரை
நிற்க வைத்தே கழுத்தறுப்பீர் - இங்கு
யாரை ஏய்க்க இன்னோர் நாட்டின்
இறையாண்மை எனக் கதையளப்பீர்

தானும் தனது குடும்பமும் தழைக்கத்
தவிக்கும் தலைவர் ஒருபக்கம் - எல்லாம்
நானே என்னும் தருக்கில் நம்மை
நாசம் செய்பவர் மறுபக்கம்

சிக்கிக் கொண்டே அழியும் நம்மின்
சிக்கல் எல்லாம் தீர்ந்துவிடும் - ஒரு
மக்கள் புரட்சி இனக்கேடர்தம்
மண்டையில் இடியாய்ச் சேர்ந்து விழும்!

Pin It