எரிதழல் போல எழுதும் ஆற்றல்
 எவர்க்கும் அஞ்சா
 சங்கமித்ரா - பார்ப்பனப்
புரிநூல் செய்யும் புன்மை நீக்கும்
 புரட்சி யாளர்
 சங்கமித்ரா!
குறிக்கோள் தன்னில் பிறழாதிங்கே
 கொதிக்கும் நெஞ்சர்
 சங்கமித்ரா - ஆரிய
வெறியை அடக்க வீறுடன் செயல்கள்
 செய்து வென்றவர்
 சங்கமித்ரா!
விடுதலை ஏட்டில் விடுதலை யாகி
 வீறுடன் எழுதிய
 சங்கமித்ரா - பார்ப்பனக்
கெடுதலை நீக்கிடக் கிளர்ந்து எழுந்து
 கிழித்துப் போட்டவர்
 சங்கமித்ரா!
பெரியார் விரும்பிப் படித்த கட்டுரை
 வழங்கி விட்ட
 சங்கமித்ரா - தந்தை
பெரியார் போல ஆனை முத்துவும்
 போற்ற எழுதிய
 சங்கமித்ரா!
இனத்தைக் காக்க இயன்ற வரையில்
 இமையை மூடாச்
 சங்கமித்ரா - தமிழ்
இனத்தை மீட்க இரண்டகத் தாரை
 இடித்து ரைத்த
 சங்கமித்ரா!
எதையும் துணிவாய் எடுத்துச் சொல்லிடும்
 ஆற்றல் பெற்ற
 சங்கமித்ரா - அடி
உதையென உணர்வில் உணர்ச்சி யேற்றும்
 ஊக்கம் தந்தவர்
 சங்கமித்ரா!
தமிழினம் வாழத் தம்முயிர் ஈந்தத்
 தன்மானத்தர்
 சங்கமித்ரா - உலகத்
தமிழினம் என்றும் தம்நெஞ்சகத்தில்
 ஏற்றுக் கொண்டவர்
 சங்கமித்ரா!
இனப்பகை யோடு இணக்கமின்றி
 எதிர்க்கும் நெஞ்சர்
 சங்கமித்ரா - தமிழ்
இனத்தைக் காக்க எழுத்தாய்தத்தை
 ஏந்தி வந்தவர்
 சங்கமித்ரா!
தமிழ்மொழி உலகம் போற்றும் படியாய்
 வளர்வார் என்றார்
 சங்கமித்ரா - கு.அ.
தமிழ்மொழி வளரத் தம்மிதழ் தன்னில்
 வாழ்த்துச் சொன்னவர்
 சங்கமித்ரா!
தன்முன் னேற்றம் ஒடுக்கப் பட்டோர்
 குரல் சங்கமித்ரா
 விடையளிக்கிறார் - என்று
தன்ஓய் வூதியம் தம்மினம் வாழச்
 சங்கமித்ரா
 கொடையளிக்கிறார்!
சங்கமித்ரா கட்டுரை என்பது
 தொகுப்பாய் வந்து
 அதிர்வெழுப்பும் - பகைக்குச்
சங்கார மென்று முழங்கிய முழக்கம்
 சந்து பொந்திலும்
 எதிரொலிக்கும்!
உறவால் மறைந்து உணர்வால் நம்முள்
 உணர்ச்சி ஏற்றி
 இருக்கின்றார் - நெஞ்சில்
கருவாய் வளர்ந்து காரிருள் நீக்கும்
 கதிரொளி போல
 வருகின்றார்!

- புதுவைத் தமிழ்நெஞ்சன்

Pin It