தமிழ்த் தேசியத் தன்னுரிமையை நாட்டுவோம்!

கடந்த செப்டம்பர் மாதம் மன்மோகன் சிங் தலைமையிலான நடுவண் அரசு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடுக்கி விடுவதற்காக என்ற பெயரில், சில்லறை வணிகம், காப்பீடு, ஓய்வூதியம், வானூர்தித் துறை ஆகியவற்றில் அந்நிய முதலீடுகள் தாராளமாக நுழைவதற்கான அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டது. டீசல் விலை உயர்வு, ஆண்டிற்கு ஆறு எரிவளி உருளை மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்ற கட்டுப்பாடு ஆகிய அறிவிப்புகளால் அதிர்ச்சியடைந்திருந்த மக்களுக்கு தாராளமய அந்நிய முதலீட்டுக்கான நடுவண் அரசின் முடிவுகள் பேரிடியாய் அமைந்தன.

இந்தச் சூழலில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த - உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்று - தற்போது இந்தியப் பத்திரிகைக் குழுவின் (Press Council of India) தலைவராக உள்ள மார்கண்டேய கட்சு 20.9.12 அன்று ‘தி இந்து’ நாளேட்டில் ஒரு கட்டுரை எழுதினார். அதில், மக்கள் நலனுக்கு எதிரான நடுவண் அரசின் பொருளியல் முடிவுகளைக் கண்டித்து எழுதவில்லை. ஆனால் “ஆங்கிலம் படிக்காதவர்கள் மாட்டுவண்டி ஓட்டுவதற்கு மட்டுமே இலாயக்கானவர்கள்” என்று எழுதியிருந்தார். மேலும் இந்தியாவில் இணைப்பு மொழியான இந்தியைத் தமிழர்கள் கற்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

மார்கண்டேய கட்சு எத்தகைய மனப்போக்குக் கொண்டவர் என்பதை இங்கு நினைவுகூர்வது நன்று. 2009ஆம் ஆண்டில் ‘தி இந்து’ நாளேட்டில், ‘குலத் தொழில் - அதாவது அப்பன் செய்த சாதி வழிப்பட்ட தொழிலையே மகன் செய்வது என்ற நிலைமை கிட்டத்தட்ட இப்போது ஒழிந்துவிட்டது; அதனால் சாதி செத்துக் கொண்டிருக்கிறது’ என்ற கருத்தை வலியுறுத்தி விரிவானதோர் கட்டுரை எழுதியிருந்தார். கட்சுவின் கருத்தைக் கண்டித்துச் சிந்தனையாளன் ஏட்டில் ஒரு கட்டுரை எழுதப்பட்டது. வெகுமக்களின் எதிரிகள் பார்ப்பான், படித்தவன், பணக்காரன் என்று பெரியார் அடிக்கடி கூறுவார். இம்மூன்று கூறுகளையும் கொண்டவர் நீதிபதி கட்சு. எனவே அவரது குரல் எப்போதும் இந்திய ஆளும் வர்க்கத்தின் குரலாகவே ஒலிக்கிறது.

கட்சு, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தபோது, வழக்குரைஞர் சங்கத்தில் செப்டம்பர் 14 அன்று ‘இந்தி நாள்’ விழாவில் உரையாற்ற அழைக்கப்பட்டார். அவ்விழாவில் பேசிய அனைவரும் ‘ஆங்கிலம் ஒழிக’ என்று கருத்துரைத்தனர். இறுதியில் சிறப்புரையாற்றிய கட்சு, “என் தாய் மொழி இந்தி. நான் இந்தியை நேசிக்கிறேன். அதற்காக நான் முட்டாள் போல் நடந்துகொள்ள முடியாது. எல்லா அறிவுச் செல்வங்களும் ஆங்கில மொழியில்தான் இருக்கின்றன. மருத்துவம், பொறியியல் முதலான படிப்புகளுக்கான நூல்கள் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. எனவே ஆங்கிலம் ஒழிக என்பவர்கள் நம் குழந்தைகளின் எதிரிகள். உண்மையில் நாட்டின் முன்னேற்றத்திற்காக நாம் ஆங்கிலத்தைப் பரப்ப வேண்டும். ஆங்கிலத்தைக் கற்காதவர்கள் மாட்டு வண்டி ஓட்டுவதற்குத்தான் இலாயக்கானவர்களாக இருப்பார்கள்” என்று கூறினார்.

உலக அளவில் மொழியியல் அறிஞர்களும், கல்வியாளர்களும், சமூகவியல் ஆய்வாளர்களும் மழலையர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரையிலான கல்வி அனைத்தும் தாய்மொழி வாயிலாகத் தான் தரப்பட வேண்டும் என்று உறுதிபடக் கூறுகின்றனர். தாய்மொழி வழியில் கற்பதே இயல்பானது; எளிதானது; சுயசிந்தனை ஆற்றலை வளர்க்க வல்லது; இளைஞர்களின் - சமூகத்தின் - நாட்டின் நலத்திற்கும் வளத்திற்கும் ஏற்றது என்பது ஆய்ந்தறிந்த முடிவாகும்.

இந்தியா இருநூறு ஆண்டுகள் ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தது. அதனால் ஆங்கிலேயர் தங்கள் நிருவாக வசதிக்காக ஆங்கிலக் கல்வியை ஏற்படுத்தினர். காலங்காலமாகத் தாம் மட்டுமே கல்வி கற்கும் உரிமை பெற்றிருந்த காரணத்தால், பார்ப்பனர்கள் முதலில் ஆங்கிலத்தைக் கற்றனர். அதன்மூலம் அரசு வேலைகளையும் பதவிகளையும் கைப்பற்றித் தங்கள் முற்றுரிமையாக்கிக் கொண்டனர். பின்னர் பிற மேல்சாதியினரும் இவற்றில் இடம் பெற்றனர். சுதந்தரப் போராட்டக் காலத்தில் தாய் மொழிக்குக் காந்தியும் காங்கிரசுக் கட்சியும் முதன்மை கொடுத்தனர் - மக்கள் ஆதரவைத் திரட்டுவதற்காக! 1947இல் இந்திய ஆட்சி இந்திய ஆளும் வர்க்கத்தின் கைக்கு வந்தது. சமற்கிருதத்தின் குழந்தையான இந்தி மட்டுமே இந்தியாவின் அலுவல் மொழி என்று அரசியல் சட்டத்தின் மூலம் ஆக்கப்பட்டுவிட்டது.

தாராளமயம், தனியார் மயம், உலகமயம் கொள்கையால் கடந்த முப்பது ஆண்டுகளாக இந்தியா முழுவதும் மழலையர் பள்ளி முதலே ஆங்கில வழிக் கல்வி என்பது பெருகிவிட்டது. எப்போதும் பிறர் உழைப்பில் வயிறு வளர்க்கும் பார்ப்பனக் கூட்டமும், அவர்களுடன் சேர்ந்து பொறுக்கித் தின்னும் பார்ப்பன அடிவருடிகளும் ஆங்கிலமும் இந்தியும் வேண்டும் என்று கூறித் திரிகின்றனர். தாய்மொழிப் பற்றோ - மக்கள் பற்றோ இல்லாத ஒட்டுண்ணிகள் இவர்கள்.

உலகில் இருநூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. அவற்றுள், இங்கிலாந்து, வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகளில் மட்டுமே ஆங்கிலம் தாய்மொழியாக இருக்கிறது. இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு தேசிய மொழிகள் உள்ளன. நாம் ஏன் ஆங்கிலம் படிக்க வேண்டும்? உலக நாடுகள் அனைத்திலும் பரவியுள்ள வடஅமெரிக்காவின் - இங்கிலாந்தின் பன்னாட்டு நிறுவனங்களில் குறைந்த ஊதியத்தில் வேலை செய்வதற்கான இளைஞர்களை உருவாக்குவதே ஆங்கில வழிக் கல்வி முழக்கத்தில் அடங்கியுள்ள சூழ்ச்சியாகும்! இதற்கு இந்தியப் பெருமுதலாளியக் குழுமங்களும் கூட்டாளிகளாக உள்ளனர். சில இலட்சம் பேர் ஆங்கில வழியில் உயர்கல்வி பெற்றுக் கொழுத்த ஊதியம் ஈட்டுவதற்காகக் கோடிக்கணக்கான - குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்புகளின் குழந்தைகள் தலைமீது பாறாங்கல்லைப் போட வேண்டுமா?

அய்ரோப்பாவில் உள்ள நாடுகளில் இங்கிலாந்து, தவிர, செருமனி, பிரான்சு, இத்தாலி முதலான எல்லா நாடுகளிலும் அந்நாடுகளின் தேசிய மொழியில்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்நாடுகள் உலக அளவில் தொழில் வளர்ச்சியும், வளமும் பெற்ற நாடுகளாகத் திகழ்கின்றனவே! உலக அளவிலான மனிதவள மேம்பாட்டு அறிக்கையில் ஆண்டுதோறும் தங்கள் தாய்மொழியில் கற்கும் இந்த நாடுகள் முதனிலை பெற்று விளங்குகின்றன. இந்தியாவைவிட நான் கைந்து மடங்கு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ள - 140 கோடி மக்கள் வாழும் சீனாவில் சீன மொழியில் மட்டுமே எல்லா நிலைக் கல்வியும் கற்பிக்கப்படுகிறது. தொழில் - வணிகத் தேவைக்காகச் சிலர் ஆங்கிலத் தைக் கற்கின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியில் வட அமெரிக்காவுக்கு இணையாக விளங்கும் சப்பானில் எல்லா நிலைக் கல்வியும் சப்பானிய மொழியில் தான் தரப்படுகிறது.

‘வரலாறு, பொருளாதாரம், தத்துவம், அறிவியல், இலக்கியம் முதலானவற்றில் உயர்கல்வி பெறுவதற்கான நூல்கள் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. அதனால் ஆங்கில வழியில் படிக்க வேண்டும்’ என்று மார்கண்டேய கட்சு வாதிடுகிறார். ஆங்கில நூல்களைச் சார்ந்திருப்பது அடிமைத்தனம் என்று கொதிப்புற்று, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளி, பஞ்சாபி, மராத்தி, குசராத்தி, ஒடியா போன்ற மொழிகளில் அவற்றை மொழிபெயர்த்திருக்க வேண்டியது அவ்வவ் மொழி பேசும் அறிஞர்களின், கல்வியாளர்களின், ஆட்சியாளர்களின், மக்களின் கடமையல்லவா! பிற மொழி நூல்களை மட்டும் சார்ந்திராமல் சொந்தமாகத் தங்கள் தாய்மொழியில் நூல்களை எழுதியிருக்க வேண்டாமா? வெறும் சோற்றாலடித்தப் பிண்டங்களாக வாழ்வதே போதும் என்றிருப்பது வெட்கக்கேடல்லவா? தங்கள் தாய் மொழிக்கும், அம்மொழி பேசும் மக்களுக்கும் இழைக்கும் இரண்டகமல்லவா? இவ்வாறெல்லாம் வினா எழுப்பி உணர்வூட்ட வேண்டிய நீதிபதி கட்சு மக்களை நிலையான ஆங்கில மயக்கத்தில் - போதையில் ஆழ்த்திட முயல்கிறார்.

யூதர்கள் 1800 ஆண்டுகளுக்கு முன் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறிப் பல நாடுகளில் பிரிந்து வாழ்ந்தனர். உலகம் முழுவதும் அவர்கள் மீது வெறுப்பும் தாக்குதலும் ஏவப்பட்டதால் தங்களுக்கென, முன்பு வாழ்ந்த பகுதியில் - பாலஸ்தீனத்தில், இசுரேல் நாட்டை 1948இல் உருவாக்கிக் கொண்டனர். பிரிட்ட னும் வடஅமெரிக்காவும் யூதர்களுக்கு அரணாக நின்றன. வழக்கொழிந்து போன தங்கள் தாய்மொழியான எபிரேய (ஹிப்ரு) மொழிக்குப் புத்துயிரூட்டினர். ஏசு கிறித்து / பேசிய மொழி எபிரேயம். இப்போது இசுரேல் நாட்டில் எல்லா நிலைக் கல்வியும் எபிரேய மொழியில் வழங்கப்படுகிறது. தாய்மொழியில் கல்வி இல்லை என்ற நிலையில் உள்ள ஒவ்வொருவரும் இசுரேல் நாட்டை முன்னோடியாகக் கொண்டு செயல்பட வேண்டும்.

இந்தியாவில் பொதுவாகத் தாய்மொழி உணர்ச்சியும் பற்றும் மக்களுக்கு இல்லாததற்கு முதன்மையான காரணம் இங்குள்ள சாதி அமைப்பேயாகும். எந்தமொழி பேசும் மாநிலத்திலும், ஒவ்வொருவரிடம் முதலில் மேலோங்கியிருப்பது, தான் பிறந்த சாதி குறித்த உணர்வேயாகும். ஏனெனில் இன்றும் சமூக வாழ்நிலை - குடும்ப வாழ்நிiலை என்பன சாதி சார்ந்ததாகவே இருக்கின்றன. தான் இன்ன சாதி - மற்றவன் இன்ன சாதி என்ற பேத உணர்ச்சி நீடிக்கிற வரையில் இந்தியாவில் உண்மையான சனநாயக உணர்வு அரும்பாது என்று மேதை அம்பேத்கர் சொன்னார். அடுத்ததாகப் பிறந்தது முதல் செத்த பிறகும் ஒருவரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் அனைத்திலும் சமற்கிருதமே சடங்குமொழியாக - வழிபாட்டு மொழியாக - தேவபாஷையாக விளங்குகிறது. ‘தமிழால் ஒன்றுபடுவோம்’ என்று முழங்குகிறோம். ஆனால் சாதியின் முதுகெலும்பை முறித்து, கோயில்களிலிருந்தும் வீட்டு நிகழ்ச்சிகளிலிருந்தும் பார்ப்பனியச் சமற்கிருதத்தை, விரட்டியடிக்காத வரையில் ‘நாம் தமிழர்’ என்ற உணர்வையும் ஓர்மையையும் உருவாக்குவதில் வெற்றி பெற முடியாது.

மார்கண்டேய கட்சு 20.9.12இல் ‘தி இந்து’ ஏட்டில் ‘இருமொழிகள் தேவை’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைக்கு மறுப்பு போன்ற தன்மையில், தில்லிப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் சமன்யு சத்பதி என்பவர் 27.9.12 அன்று ‘தி இந்து’ நாளேட்டில் ‘ஓராயிரம் மொழிகள் வளரட்டும்’ என்ற தலைப்பில் ஒரு பெரிய கட்டுரை எழுதியிருந்தார். அவருடைய கட்டுரையின் பிழிவான கருத்து - ஆங்கிலம், இந்தி இரு மொழிகளின் ஆதிக்கத்தை ஒழித்து, அவரவர் தாய்மொழியை எல்லா நிலைகளிலும் முதன்மைப்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டும் என்பதேயாகும் (வாய்ப்புள்ளவர்கள் அக்கட்டுரையைத் தேடிப் படியுங்கள்).

இதற்கு மறுமொழிபோல் கட்சு 28.9.12 அன்று ‘தி இந்து’ நாளேட்டில் ‘இந்தியைக் கற்பது குறித்துப் பகுத்தறிவோடு சிந்தியுங்கள்! உண்மையை உணர்வீர்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தார். இந்தியத் தேசியம், இந்திய ஒற்றுமை எனும் பெயர்களில் ஆதிக்கம் செலுத்தி, மக்களைச் சுரண்டி வரும் கும்பலினரும், இந்தி மொழி வெறியர்களும், இந்துத்துவத் தலைமையினரும் பல ஆண்டுகளாகக் கூறிவரும் சொத்தை வாதங்களையே கட்சு மீண்டும் இக் கட்டுரையில் முன்வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் 7.2 கோடிப் பேர்தான் தமிழ்மொழியைப் பேசுகிறார்களாம். ஆனால் இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் உ.பி.யில் 20 கோடி, பீகாரில் 8.2 கோடி, மத்தியப்பிரதேசத்தில் 7.5 கோடி, இராஜஸ்தானில் 6.9 கோடி, ஜார்க்கண்டில் 2.7 கோடி, சதீஷ்கரில் 2.6 கோடி, அரியானாவில் 2.6 கோடி என்ற அளவில் வாழ்கிறார்களாம். எனவே இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழர்கள் ஏற்க வேண்டும்; கற்கவேண்டும் என்று கட்சு கூறுகிறார். வடமாநிலங்களுக்கு வரும் தமிழர்கள் இந்தி தெரியாததால் மிகவும் துன்பப்படுவதாகக் கட்சு கவலைப்படுகிறார். கெட்டிக்காரத்தனமாகக் கட்டுரையின் இறுதியில் ‘தமிழர்கள் இந்தியயைக் கற்க வேண்டும் என்பது என் அறிவுரை! ஏற்பதும் ஏற்காததும் தமிழர்களின் விருப்பம்’ என்று முடித்திருக்கிறார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்வரையிலும் இந்தி படித்தால் இந்தியா முழுவதும் வேலை செய்யலாம் என்றார்கள். கட்சு கூறுகின்ற பீகார், உ.பி. போன்ற மாநிலங்களிலிருந்து கூலி வேலைக்காகக் கடந்த பத்து ஆண்டுகளில் பல இலட்சம் இந்தி பேசுவோர் தமிழ் நாட்டுக்கு வந்துள்ளனர். இவர்கள் தமிழ் மொழியில் ‘புலவர்’ பட்டம் பெற்றுக் கொண்டா தமிழகத்திற்குள் நுழைந்தார்கள்? ஆங்கிலம் படித்தால் உலகம் முழுவதும் வேலை கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அமெரிக்காவில் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது. அமெரிக்காவின் 32 கோடி மக்களில் 5 கோடி பேருக்கு நல்ல உணவும், அடிப்படையான மருத்துவ வசதியும் இல்லாமல் அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதற்கு எதிர் மறையாகக் கடந்த ஆண்டு அமெரிக்காவில் முதல் நிலையில் உள்ள பெரும் பணக்காரர்கள் பத்துப் பேர் பெற்ற வருவாயைக் கொண்டு உலகம் முழுவதிலும் பசியால் வாடுவோர்க்கு ஓராண்டிற்கு உணவளிக்கலாம் என்று பி.சாய்நாத் 18.10.12 அன்று ‘தி இந்து’ ஏட்டில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். எனவே ஆங்கிலமும் இந்தியும் வெறும் மொழிகள் மட்டுமல்ல; ஏகாதிபத்தியவாதிகளின் - இந்தியத் தேசிய வாதிகளின் - இந்துத்துவவாதிகளின் அரசியல் - பொருளியல் ஆதிக்க ஆயுதங்களேயாகும்.

வல்லாதிக்கக் கருவியாக விளங்கும் இந்தி - ஆங்கிலம் ஆகியவற்றை மொழித்தளத்தில் மட்டுமின்றி, அரசியல், பொருளியல், பண்பாடு ஆகிய தளங்களிலும் எதிர்த்துப் போராட வேண்டும்.

இந்தி மட்டுமே இந்தியாவின் அலுவல் மொழி என்ற நிலையை ஒழித்து, தேசிய மொழிகள் அனைத்தும் அலுவல் மொழிகளாக ஆக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்தி இந்தியாவின் ‘பொது மொழி’, ‘தேசிய மொழி’, ‘இணைப்பு மொழி’ போன்ற மாயைகளை உடைத்தெறிய முடியும்.

மாநிலங்களில் உள்ள நடுவண் அரசு அலுவலகங்கள் அனைத்தும் அந்தந்த மாநில - தேசிய மொழியிலேயே இயங்க வேண்டும். கல்வி உடனடியாகப் பொது அதிகாரப் பட்டியலிலிருந்து மாநில அதிகாரப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். உயர்கல்வி தொடர்பான அகில இந்தியத் தேர்வு முறை உடனடியாக நீக்கப்பட வேண்டும். இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்தியக் காவல் பணி (IPS) முதலானவைகளுக்குப் பதிலாக ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் அதிகாரி போன்ற பதவிகளுக்குத் தேர்வு மூலம் ஆள்களை அமர்த்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே இருக்க வேண்டும்.

மழலையர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை யிலான எல்லா நிலைக் கல்வியும் தாய்மொழி வாயிலாகவே இருத்தல் வேண்டும். உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறை முழுவதும் அம்மாநில - தேசிய மொழியிலேயே நடைபெறல் வேண்டும். உயர்நீதிமன்ற நீதிபதிகளை அமர்த்தும் அதிகாரம் மாநிலங்களுக்கு இருக்க வேண்டும்.

வழிபாட்டு மொழியாகச் சமற்கிருதம் நீடிப்பதையும், பார்ப்பானே கோயிலில் அர்ச்சனை செய்ய முடியும் என்ற நிலையையும் நீக்க வேண்டும். தாய்மொழியில் கோயிலில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சனை செய்யும் உரிமை பெறல் வேண்டும்.

இவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு எல்லாத் தமிழ் மக்களையும் அணிதிரட்டிப் போராட வேண்டும். அதே நேரத்தில் பிற மாநிலத் தேசிய இன மக்களையும் இணைத்துப் போராடினால்தான் இந்தியப் போலி தேசியத்தை வீழ்த்த முடியும்.

நவம்பர் 1 - மொழிவழியாகத் தமிழ் மாநிலம் அமைந்த நாள். இந்நாளைத் தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்கான-தன்னுரிமை பெற்ற தமிழகத்தின் மலர்ச்சிக்கான நாளாகக் கொண்டாடுவோம். விழா எடுப்போம்; வீறு கொள்வோம்.

Pin It