தமிழக அரசின் கதிரொளி மின் திட்டம் வெற்றி பெற்றிட எல்லாம் செய்வோம்!!

மனிதகுல வரலாற்றில் மனிதன் உற்பத்தி செய்கின்ற ஒவ்வொரு பொருளுக்கும் அவன் உடலே கருவியாக வும், அவன் உழைப்பே ஆற்றலாகவும் பயன்பட்டன. வயிறு வளர்க்கவும் உடை உடுத்தவும் மனிதன் மாடாக உழைத்தான்; மாடுகளும் உழைப்பைத் தந்தன. இந்த உழைப்பிலிருந்து மனிதனுக்கு விடுதலை கொடுத்தது, நீராவியைப் பயன்படுத்தி எந்தக் கருவியையும் இயக்க முடியும் என்ற நிலை ஏற்பட்ட பிறகுதான். அத்துடன் அடுப்புக்கரி, நிலக்கரி, கல்நெய் (குருடாயில்) இவற்றின் பயன்பாடும், நிலக்கரியைப் பயன்படுத்தியும், நீர்வீழ்ச்சியைப் பயன்படுத்தியும் மின் ஆற்றலை உண்டு பண்ணுவதும் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்தான் கண்டுபிடிக் கப்பட்டது.

மின் ஆற்றலைப் பயன்படுத்திக் கருவிகளையும், வாகனங்களையும் இயக்கவும் வீட்டில் சமையல் செய்யும் பணியை நிறைவு செய்யவும் கற்றுக் கொண்டார்கள்.

மின்னாற்றலைப் பயன்படுத்திய நாடுகள் எல்லாம் தொழில் வளர்ச்சியிலும், வாழ்க்கை வசதிகளை அனுபவிப்பதிலும் விரைவில் முன்னேறிவிட்டன. அதற்குக் காரணம், மின் தேவையை அளவிட்டு, முன்கூட்டியே திட்டமிட்டு, தேவைக்கேற்ற அளவுக்கு மின்னாற்றலை அவ்வப்போது உருவாக்கியதுதான்.

ரசியாவில் 1917இல் புரட்சி செய்து ஆட்சியை அமைத்த லெனின், அந்நாட்டை முன்னேற்றுவதற்கு இன்றியமையாத உடனடித் தேவைகளாக மின்னாற்றலை உற்பத்தி செய்வதையும், கூட்டுறவு முறையில் வேளாண் தொழில் மற்றும் வணிகம் செய்வதையும் முதலில் அறிமுகப்படுத்தினார்.

மின்னாற்றல் + கூட்டுறவு = சமதர்மம் என்ற முழக்கத்தை மக்களுக்கு அளித்தார். அதனால்தான், அவர் 1924இல் மறைந்துவிட்டாலும் 1936க்குள் சோவியத்து சோசலிசக் குடியரசு மாபெரும் வளர்ச்சியைப் பெற்றது.

இந்தியா 1947இல் விடுதலை பெற்றது. அதன்பிறகு பல மாநிலங்களில் புனல் மின்திட்டங்களும், அனல் மின்திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்திலும் நெய்வேலி மின் திட்டம் உட்படப் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆயினும், எந்த அய்ந்தாண்டுத் திட்டத்திலும் வருங்காலத் தேவையைக் கணக்கிட்டுத் தேவையை நிறைவு செய்யக் கூடிய அளவுக்கு, அனல் மின் திட்டங்களையோ - புனல் மின் திட்டங்களையோ தமிழக அரசு தீட்டவில்லை. அதன் விளைவாகத்தான் 1991 முதல் கடந்த இருபதாண்டுகளாக மின் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே வந்தது.

தமிழ்நாட்டின் இன்றைய மொத்த மின்சாரத் தேவை ஏறக்குறைய பன்னிரண் டாயிரம் (12000) மெகாவாட் ஆகும். ஆனால் எல்லா வகையிலும் உற்பத்தி செய்யப் படும் மின்சாரம் எட்டாயிரம் (8000) மெகாவாட்டே ஆகும். இதில் மத்தியத் தொகுப்பிலிருந்து பெறுகின்ற மின்சாரமும் அடங்கும். எனவே, பற்றாக்குறை மின் சாரத்தின் அளவு நான்காயிரம் (4000) மெகாவாட்டாக உயர்ந்துவிட்டது. தமிழகத் தொழில் நகரங்களான கோயமுத்தூர், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, சேலம், மதுரை, திண்டுக்கல், சிவகாசி முதலான இடங்களில் பத்து மணி முதல் பதினான்கு மணி நேரம் மின்தடை அமலில் உள்ளது. சென்னையில் 16.10.2012 முதல் இரண்டு மணி நேரம் கட்டாய மின் தடை இருக்கின்றது. இதனால் பெருந்தொழில்கள், சிறுதொழில்கள், வேளாண்மை, வணிகம், அன்றாட வீட்டு வாழ்க்கை எல்லாமே சீர் கெட்டுவிட்டன. மேலும் பொருள் உற்பத்திக் குறைபாடு, வேலை இழப்பு இவை நாட்டின் பொருளாதாரத்தைப் பெரிய அளவுக்குச் சீரழித்துவிட்டன.

இதனை எதிர்கொண்டு சமாளிக்கத் தமிழக அரசு செய்துள்ள ஏற்பாடு, சென்னை அருகே வல்லூரில் தொடங்கப்படப் போகும் 500 மெகாவாட் அனல் மின் நிலையம் ஆகும். இதில் 348 மெகாவாட் மட்டுமே தமிழகத்துக்குக் கிடைக்கும்.

அடுத்து, 1988 முதல் கூடங்குளம் பகுதி மக்களாலும், தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள மக்கள் நலம் நாடும் அமைப்புகளாலும், அரசியல் கட்சிகளாலும் கடுமையாக எதிர்க்கப்பட்டு வரும் கூடங்குளம் அணு மின்னிலை யத்தில் முதலாவது உலையில் வருகின்ற நவம்பர் அல்லது டிசம்பர் முதல் ஆயிரம் (1000) மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும், அதில் நானூற்று அறுபது (460) மெகாவாட் மட்டுமே தமிழ கத்தின் பயன்பாட்டுக்குக் கிடைக்குமென்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான மொத்தச் செலவு 16,000 கோடி ரூபாயாகும். ஆயிரம் (1000) மெகா வாட் மின்சாரத்தையும் தமிழகத்திற்கே தரவேண்டு மெனக் கேட்கத் தமிழகத்திற்கு வக்கில்லை. அப்படியே கேட்டுப் பெற்றாலும், பிறகும் நமக்கு இரண்டாயிரத்து எழுநூறு (2700) மெகாவாட் மின்சாரம் தேவை.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் 2011 முழுவதிலும் கூடங்குளம் மக்களின் மனநிலையை அறிந்து, அவர்களின் கோரிக்கையை ஏற்று, இடைக்கால மாக அணுஉலையை இயக்குவதை நிறுத்தி வைக் கும்படிக் கோரினார். ஆனால், 2012இல் தம் நிலை பாட்டை மாற்றிக் கொண்டார். கூடங்குளம் அணுஉலையை இயக்கத் தம்மாலான எல்லாவித ஆதரவையும் அளித்தார்.

இருப்பினும் கடந்த 20.10.2012 சனி அன்று மிகவும் பொறுப்போடும், அறிவுடைமையோடும் ‘கதிரொளி’ மூலம் மூவாயிரம் (3000) மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய மின்கொள்கையை மாண்புமிகு முதல மைச்சர் அறிவித்துள்ளார். இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய சிறந்த கொள்கையாகும்.

அக்கொள்கையின் விவரம் வருமாறு :

“சூரிய சக்தியானது, மனித குலத்துக்குத் தூய்மை யானதும், சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாததும், அளப்பரியதும் மற்றும் குறைவற்ற எரிசக்தி ஆதாரமு மாகும். சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்து தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டத் துடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

எரிசக்திப் பாதுகாப்பு, சூரிய சக்தியைக் கொண்டு 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்தல் மற்றும் உள்நாட்டிலேயே சூரிய சக்தி சாதனங்களை உருவாக்கும் வசதி ஆகியன சூரியசக்திக் கொள்கை யின் முக்கியக் குறிக்கோளாகும். இதன் மூலம் 2013, 2014 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் தலா ஆயிரம் மெகாவாட் வீதம், மொத்தம் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்உற்பத்தி செய்யத் தமிழக அரசு திட்டமிட் டுள்ளது (“தினமணி” - 21.10.2012).

மேலே கண்ட தன்மையிலான கதிரொளி மின் உற்பத்தித் திட்டம் பற்றி, கடந்த 13.10.2012 சனி முற்பகலில் கோவை மாவட்டத்தில் உள்ள சூலூரில் நடைபெற்ற மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழுவில் விரிவானதொரு தீர்மானத் தை நிறைவேற்றி உள்ளோம் என்பதையும்; அத்தீர் மானம் உள்ளிட்ட எல்லாத் தீர்மானங்களையும் ஒரு வேண்டுகோள் மடலுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு 15.10.2012 திங்கட்கிழமையன்று விரைவு அஞ்சல் வழியாகவும்; ஃபேக்ஸ் வழியாகவும் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைத்தோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இதனை 16.10.2012 அன்றாவது முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு அதிகாரிகள் கொண்டு சென்றிருப்பார்கள் என்று கருதுகின்றோம்.

இது எப்படி இருப்பினும், தமிழக முதலமைச்சர் அவர்கள் 20.10.2012 அன்று அறிவித்த மின்கொள் கையை மகிழ்ச்சியுடன் வரவேற்பதுடன் இக்கொள் கைக்கு ஆக்கம் சேர்க்க மார்க்சியப் பெரியாரியப் பொது வுடைமைக் கட்சி தன்னாலான எல்லாம் செய்யும் என்று உறுதி கூறுகின்றோம். கூடங்குளம் அணு உலையை மூடவேண்டுமென்று கூறும் எல்லா அமைப்பு களும், தமிழக அரசின் இக்கொள்கையைத் தமிழ் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழக அரசினர் கதிரொளி மின்திட்டத்தை வெற்றி கரமாக நிறைவேற்றுவதற்கு மின் உற்பத்தித் துறை யிலும், மின் பகிர்வுத் துறையிலும் பின்கண்ட மாற் றங்களைப் பின்பற்ற வேண்டுமெனத் தமிழக முதல் வரவர்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

1. மின்துறைக்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளைத் தலைவர்களாக அமர்த்துவதை உடனே அரசு கைவிட வேண்டும்.

மருத்துவத்துறைத் தலைமைக்கு ஒரு மருத்துவ ரையும், மருத்துவம் கற்றவரையும்; பொறியியல் துறைக்கு ஒரு பொறியியல் படித்தவரையும், சட்டத் துறைக்குச் சட்டப் படிப்புப் படித்தவரையும், தலைவர் களாக அமர்த்துவதைப் போல், மின்துறைக்கு மின் துறைப் பட்டம் பெற்றவராகவும், அத்துறையில் நீண்ட காலம் பணியாற்றியவராகவும் உள்ள ஒருவரையே மின்துறைக்கான குழுத் தலைவராக அமர்த்த வேண்டுமென்றும், இதனை உடனடியாக அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றோம்.

காங்கிரசு ஆட்சிக் காலத்தில் அப்படிப்பட்டவர்தான் மின்துறைத் தலைவராக அமர்த்தப்பட்டார் என்பதை அரசின் பார்வைக்குக் கொண்டு வருகின்றோம். அத் துறையில் நல்ல பட்டறிவு மிக்க அப்பாதுரை முதலியார் தலைவராக வந்த காலத்தில் தான், தமிழக மின்துறை நல்ல வளர்ச்சியை அடைந்தது. தி.மு.க. ஆட்சிக் காலத் திலும், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் இந்திய ஆட்சிப் பணிக்குரியவர்கள்தான் திறமைசாலிகள் என நம்பி அவர்களைத் திணித்தது. இது மின்துறைச் சீரழிவுக் குத்தான் வழிகோலியது. இது உண்மை.

2. தலைமைச் செயலகத்திலும் மின்துறைப் படிப் பாளிகளே செயலாளர்களாகவும், துணைச் செயலாளர் களாகவும், உதவிச் செயலாளர்களாகவும் அமர்த்தப்பட வேண்டும். அவர்கள் கதிரொளி மின்திட்டத்தில் நம்பிக் கையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.

எல்லோருக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும்; எல்லா ஏழைப் பிள்ளைகளுக்கும் மதிய உணவு வழங்கப்பட வேண்டுமெனக் கருதிய பெருந்தலைவர் காமராசர் ஒரு நூதனமான திட்டத்தினை அறிமுகப் படுத்தினார். இத்திட்டத்தை வரவேற்க விரும்பாத துணைச் செயலாளர்களை டெல்லிக்கு மாற்றினார். இந்திய ஆட்சிப்பணி தகுதி பெற்றவர்கள்தான் துணைச் செயலாளர்களாக வரவேண்டுமென்பதையும் மாற்றினார். இந்திய ஆட்சிப் பணி தகுதி பெற்றிராத துணைச் செயலாளர் பதவிகள் என ஒன்றை உருவாக்கினார். துணைச் செயலாளர் பதவிகளிலும், இணைச் செயலாளர் பதவியிலும் மேலே கண்ட கொள்கைகளில் பற்றுக்கோடு உள்ளவர்களாகவும், தமக்கு நம்பிக்கை உள்ளவர்களாகவும் தேர்வு செய்து அப்படிப்பட்டவர்களைச் துணைச் செயலாளர்களாகவும், அவர்களுள் ஒருவரைத் தலைமைச் செயலாளருக்கு அடுத்த பதவியில் இணைச் செய லாளராகவும் அமர்த்தினார். அதனால் தான் 1957க்கும் 1962க்கும் இடையில் தமிழகத்தில் கல்வி வெள்ளமெனப் பாய்ந்தது; ஏழைக் குழந்தைகள் எல்லாம் கல்வியை மாந்தினர். இப்படிப்பட்ட நிர்வாகிகள் மாற்றங்களை மாண்புமிகு முதல்வர் அவர்கள் நிறை வேற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம்.

3. அண்மையில் பிரதமர் மன்மோகன்சிங் அறி வித்த 122 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில், 24 கோடி வீடுகள்தான் உள்ளன. ஏழு கோடியே இருபத்தைந்து இலட்சம் மக்கள் உள்ள தமிழகத்தில், ஒரு வீட்டுக்கு ஆறு பேர் என்று கணக்கு வைத்தால், 120 அல்லது 125 லட்சம் வீடுகள் தான் இருக்க முடியும். இவற்றுள் 50 அல்லது 60 விழுக்காடு வீடுகளே மெத்தை வீடுகளாக இருக்க முடியும். மெத்தை வீடு களின் மேற்பரப்பில்தான் கதிரொளி மின்மாற்றியை (Solar Panel) அமைக்க முடியும். ஒரு வீட்டில் கதிரொளி மின்மாற்றியை அமைத்து வீட்டுச் சமைய லுக்கும், வெந்நீர் போடவும், மின்விளக்குகள், மின் விசிறிகள் இயக்கவும், குளிரூட்டிப் பெட்டி (Fridge) அமைக்கவும் போதுமான மின்சாரத்தைப் பெற்றிட, ஒரு வீட்டுக்கு மூன்று இலட்சம் ரூபாய்கள் செலவில் கதிரொளி மின்மாற்றியை அமைத்திட முடியும். இது பிற வகைகளிலான அனல், புனல், அணுஉலை முத லான மின்திட்டங்களை ஊக்குவிக்க வேண்டிய தேவை யைப் பெரிய அளவுக்குக் குறைத்துவிடும். மேலும் சுற்றுச்சூழல் கெடுவது, காற்று மண்டலம் கெடுவது, மரங்கள், செடி-கொடிகள் அழிக்கப்படுவது, மனித உயிர் கள் பாதிப்புக்கு உள்ளாவது, கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவது முதலான எல்லாமே குறையும்.

4. இத்தகைய திட்டம் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள வீடுகளில் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும்; இனிமேல் புதிதாக வீடு கட்ட அனுமதி கோருவோர் எல்லோரும் அவரவர் வீட்டில் கதிரொளி அமைத்தால்தான் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தமிழகச் சட்டமன்றத்தில் இதற் கான சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டுமென் றும்; அப்படிச் சட்டத்தை நிறைவேற்றும் பொழுது கதிரொளி மின்மாற்றியை அமைத்திட ஒவ்வொரு வீட்டுக்கும் ஆகும் மொத்தச் செலவில் 50 விழுக்காட்டை இந்திய அரசு ஏற்க வேண்டுமென்றும், 25 விழுக்காட்டுச் செலவைத் தமிழக அரசு ஏற்கும் என்றும் மீதப்பட்ட 25 விழுக்காட்டுச் செலவைக் கட்டடச் சொந்தக்காரர் ஏற்க வேண்டுமென்றும்; இந்த ஏற்பாடு தொடர்ந்து நடைமுறையில் இருக்கச் செய்ய ஏற்ற துணை விதிகள் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டு மென்றும் அன்போடு தெரிவித்துக் கொள்கின்றோம்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு செயல்பட்டால், அவரது விருப்பப்படி 2013, 2014, 2015ம் ஆண்டுகளிலேயே தமிழ்நாட்டுக்குப் போதுமான மின்சாரம் கிடைக்கு மெனவும், தமிழ்நாடு 2015இல் போதிய மின்சாரத்தைப் பெற்ற மாநிலமாகத் திகழ வாய்ப்பு ஏற்படு மென்றும் மனமார நம்புகிறோம்.

இத்தன்மையில் மின்சாரத் தேவையில் தமிழகம் நிறைவு நிலையைப் பெறும் என்பதால் மனித குலத் திற்குப் பெரும் அழிவை ஏற்படுத்தும் என உலகளவில் கருதப்படும் கூடங்குளத்தில் தொடக்கத் திட்டமிடப் பட்டுள்ள அணுமின்உலை உள்ளிட்ட எதுவும் இனியும் தேவையில்லை என்று தமிழக அரசு முடிவெடுத்துச் செயல்பட வேண்டுகிறோம்.

- வே.ஆனைமுத்து

Pin It