13.10.2012 மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சூலூர் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் - 1 : காவிரி நீர்ப்பங்கு உரிமையைக் காப்போம்

காவிரி ஆற்று நீர் ஆணையத்தின் தலைவ ராக உள்ள இந்தியப் பிரதமரின் ஆணையையும், இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும், கர்நாடக அரசினரும், அரசியல் கட்சிகளும், பொது மக்களும் துச்சமாக மதிக்கின்றனர். இதன் உடனடி விளைவாகத் தமிழகத்தில் ஒரு போகம் சம்பா நெல் பயிரேற்றுவது கூட முடியாத இக்கட்டான நிலைமை உண்டாகி விட்டது.

இவ்வளவு பெருங்கேடான நிலையின் கொடூரத் தைத் தமிழக மக்களும், தமிழக ஆளுங்கட்சியும், தமிழக எதிர்க்கட்சிகளும் உணர்ந்து, ஒன்றுபட்டு, ஏற்ற நடவடிக்கைகளை எடுக்க முன்வரவில்லை என மா.பெ.பொ.க. பொதுக்குழு மனமாரக் கருதுகிறது. ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வும், முதன்மையான எதிர்க்கட்சியான தி.மு.க.வும், தமிழகம் பற்றிய ஒவ்வொரு சிக்கலிலும் பங்காளிப் பகைவர்கள் போல் கருதி இயங்குவதும், அவரவர் கட்சி சார்பில் இந்திய அரசுக்கு அழுத்தம் தருவதும் போதாததும் தகாததும் ஆகும். மேலும் இப்போக்கு, தமிழக மக்களை ஒன்றுசேர விடாமல் தடுப்பதும் ஆகும்.

இந்நிலையில் தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கட்சி களையும் சார்ந்த 57 நாடாளுமன்ற உறுப்பினர் களும் - அந்தந்தக் கட்சிகளின் தலைவர்களும் முதல மைச்சர் செல்வி. செயலலிதா தலைமையில் ஒன்று பட்டுத் தில்லிக்குச் சென்று, குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய நீர்வள அமைச்சர், மத்தியப் பொதுப் பணித்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகி யோரை நேரில் கண்டு பேசித் தமிழகத்தின் காவிரி நீர் உரிமைகளை உடனே மீட்க வேண்டும் என்றும், ஒரு நாளேனும் இவர்கள் அனைவரும் ஒரு சேர நாடாளுமன்ற வளாகத்துக்குள் உண்ணாநிலையை மேற்கொள்ள வேண்டுமென்றும்; காவிரிச் சிக்கல் பற்றிப் பல இந்திய மொழிகளில் அறிக்கைகளை அச் சிட்டுப் பரப்பி, காவிரிச் சிக்கலில் தமிழகத்தின் பக்கம் உள்ள நியாயத்தை இந்தியர் அனைவர்க்கும் புரிய வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசினரையும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர் களையும், தமிழ்ப் பெருமக்களையும் மா.பெ.பொ.க. பொதுக்குழு வேண்டிக் கொள்கிறது.

அ)         இன்று கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள (1) இந்தியப் பிரதமரின் ஆணை மீறல், (2) உச்சநீதி மன்றத் தீர்ப்பு அவமதிப்பு, (3) தமிழக - கர்நாடக நீர்நிலைகளை ஆய்வு செய்த நிபுணர் குழுவினரின் தீர்ப்பு அவமதிப்புப் போக்கு முதலானவை - இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கும், இந்திய மாநிலகளிடையே நிலவ வேண்டிய ஒற்றுமைக்கும் எதிரானது என்ப தால், அதை இந்தியக் குடியரசுத் தலைவருக்கு உரிய வாறு உணர்த்தி, அவரே நேரடியாக இராணுவத்தை அனுப்பி, கர்நாடக நீர்நிலைகளிலிருந்து, தமிழகத் துக்கு உரிய பங்கு நீரைத் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசும், இந்திய அரசும், குடிஅரசுத் தலைவரிடம் வற்புறுத்திக் கோர வேண்டும் என்றும் இப்பொதுக்குழு தீர்மானித்து, அனைவரையும் அப்படிச் செயல்பட வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறது.

ஆ)        காவிரி நடுவர் மன்றம் 2007ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை உடனடியாக இந்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும் என இந்தியப் பிரதமரை இப்பொதுக்குழு வேண்டிக் கொள்கிறது.

தீர்மானம் - 2 : கூடங்குளம் அணு உலையை மூடு

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கப்பட்ட காலத்திலேயே 1988 தொடங்கி அப்பகுதியில் வாழுகிற பொது மக்களும் பல்வேறு அமைப்பினரும் எதிர்த்துப் போராடினர். அதை அரசு வன்கொடுமை செய்து அடக்கிவிட்டது.

இப்போது ஏறக்குறைய 300 நாட்களுக்கும் மேலாக இடிந்தகரை, கூடங்குளம் மற்றும் மீனவர்கள் நிரம்பிய தூத்துக்குடி முதலான இடங்களிலும், தமிழ கத்தின் பல மாவட்டங்களில் உள்ள மக்கள் அமைப்பு கள் பலவும் இடிந்தகரையிலும், மற்றும் எல்லா மாவட் டங்களிலும் மக்களைத் திரட்டி எதிர்ப்புக் காட்டியுள்ளனர்.

எதற்கும் இடங்கொடுத்து ஆய்வு செய்யாமல், இரஷ்ய அரசுடனான ஒப்பந்தப்படி, அத்திட்டப்படியான முதல் உலையை உடனடியாக இயக்கிட இந்திய அரசு முனைந்திருப்பதும், அதற்குத் தமிழக அரசினர் துணை போவதும் தமிழகக் கடற்கரை ஓர மக்களையும், விலங்குகளையும், நீர்நிலைகளையும், நீர்வாழ் உயிரி னங்களையும் நாளாவட்டத்தில் பெரிய அழிவுக்கு வேண்டுமென்றே உள்ளாக்குவதாகும்.

இந்திய அரசின் அணுஉலையை இயக்குவதற் கான தொழில்நுட்பம், இடையில் ஏற்படும் பழுது களைக் களைவதற்கான உதிரி பாகங்கள், பதப்படுத் தப்பட்ட யுரேனியத் தேவை, கழிவுகளைச் சேகரித்தல் - அழித்தல் இவற்றில் சுயச்சார்பைப் பெற்றிருக்க வில்லை.

அணுஉலை மின்னாற்றலைப் பயன்படுத்துவதில் முன்னணியில் உள்ள வளர்ந்த மேலை நாடுகள் எல்லாம் இன்னும் 25 ஆண்டுகளுக்குள் அணுஉலைகளை மூடத் திட்டமிட்டுவிட்டனர்.

இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு கூடங் குளம் அணுஉலையை மூடிவிட இந்திய அரசும், தமிழக அரசும் முன்வரவேண்டும். தமிழக மக்கள் அந்த அளவுக்கு எதிர்ப்புக் காட்டி அது மூடப்பட எல்லாம் செய்ய வேண்டும்.

இந்தியா வெப்ப மண்டலத்தில் உள்ளது. ஓர் ஆண்டில் 330 நாள்களுக்கு இங்கு நல்ல வெயில் காய்கிறது. இந்திய அரசு 12ஆம் அய்ந்தாண்டுத் திட்டத்திலும், மைய - மாநில அரசுகளின் மின் உற்பத்தித் திட்டங்களிலும், மாநில அரசுகளின் அய்ந்தாண்டுத் திட்டங்களிலும் கதிர்மின் ஆக்கத் திட்டம் (Solar Energy Production) என்பதற்கு முதன்மை தந்து, ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள எல்லாக் கட்டடங்கள், தொழிலகங்கள்; 2013 முதல் கட்டப்படும் கட்டடங்கள், தொழிலகங்கள் எல்லாவற்றிலும் கதிர்மின் ஆற்றல் உற்பத்திச் சாதனங்கள் நிறுவப் படுவதற்கு ஆகும் மொத்தச் செலவில் 50 விழுக்காடு இந்திய அரசும்; 25 விழுக்காடு மாநில அரசும்; மீதி 25 விழுக்காடு கட்டட உரிமையாளரும் ஏற்க வேண்டும் என்று இந்திய அரசு கொள்கை முடிவெடுத்துச் செயற்படுத்த வேண்டும் என்று இந்திய அரசினரை யும், தமிழக அரசினரையும் இப்பொதுக்குழு வேண்டிக் கொள்கிறது.

இந்தத் திட்டத்தை அணுமின் திட்ட ஒழிப்பில் அக்கறையுள்ள எல்லோரும் மனமார வரவேற்று, இச்சிந்தனைக்கு மக்களிடம் ஆதரவு திரட்ட வேண்டும் என மா.பெ.பொ.க. பொதுக்குழு அன்புடன் வேண்டிக் கொள்கிறது.

அ)         மேலே கண்ட எல்லாத் திட்டங்களிலும் மின் உற்பத்தி பற்றிய இக்கொள்கையை இணைக்க வேண் டும் என்றும், தமிழகத்திலுள்ள எல்லா அமைப்புகளும் ஒரே குரலில் கோரிக்கை வைத்து - மக்களுக்கும் இதுபற்றிய புரிதலை உண்டாக்க வேண்டுமென்றும் மா.பெ.பொ.க. பொதுக்குழு அனைவரையும் வேண்டிக் கொள்கிறது.

தீர்மானம் - 3 : பெரியார் இயக்கம் ஓர் அரசியல் இயக்கமே!

தந்தை பெரியாரின் இயக்கம் ஒரு புரட்சிகரச் சிந்தனையை விதைக்கும் இயக்கம் என்று மட்டுமே அவருடைய தொண்டர்களாலும், ஆய்வாளர்களாலும், பொது மக்களாலும் கருதப்படுகிறது. இது முற்றிலும் பிழையானது.

அவர் 1928லேயே தென்னாட்டுச் சீர்திருத்தக் காரர்கள் மாநாட்டிலேயே, “சுயமரியாதை இயக்கம் சீர்திருத்த இயக்கம் அல்ல. இது, நம் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கு ஏற்ற அதிகாரம் படைத்த ஓர் அரசை நிறுவ விரும்பும் அரசியல் இயக்கம்” என முதல் முதலாக உறுதிப்படக் கூறினார்.

அதன்வழி நின்றே, 1938இல் “தமிழ்நாடு தமிழருக்கே” என முழங்கினார்; 1939இல் “திராவிட நாடு திராவிடருக்கே” என அறிவித்தார். உண்மையில், இவை தனிச் சுதந்தர நாட்டுக் கோரிக்கைகளாக இல்லை.

30.9.1945இல் திருச்சி மாநாட்டில் அவர் தெளிவாக அறிவித்த கோரிக்கைதான் “முழுச் சுதந்தரத் திராவிட நாடு” கோரிக்கையாகும். 1.11.1956இல் அவர் “முழுச் சுதந்தரத் தமிழ்நாடு” தான் வேண்டும் எனக் கோரினார்.

தனிச் சுதந்தர நாடு கோரிய அமைப்பு ஓர் அரசியல் கட்சி அல்ல என்கிற புரிதல் தவறானது. அவர் 1924 முதல் தேர்தலை ஒதுக்கி வைத்தபடி, இது தேர்தல் அரசியல் கட்சி அல்ல (Not an Electoral Party) என்பதே உண்மை.

தீர்மானம் - 4 : இந்தியாவை உண்மையான கூட்டாட்சி நாடாக மாற்றிடுவோம்!

இந்நிலையில் மா.பெ.பொ.க. 19.10.1991இல் வரித்துக் கொண்டபடி, “இந்தியாவைத் தன்னாட்சி பெற்ற மொழி வழி மாநிலங்களை உள்ளடக்கிய ஓர் உண்மையான கூட்டாட்சியாக மாற்றிட எல்லாம் செய்ய வேண்டும்” என்கிற கோட்பாட்டை மக்களுக்கு விளக்கும் தன்மையில், 2013 சனிவரி 6இல் நடை பெறவுள்ள “சிந்தனையாளன்” பொங்கல் சிறப்பு மலர் வெளியீட்டு விழா நாளன்று பிற்பகலில், “மா.பெ.பொ.க. அரசியல் கொள்கை விளக்க மாநாடு” என நடத் திடவும்; நாம் 8.8.1976இல் கட்சி நிறுவப்பட்ட நாளில் உறுதிபூண்டபடி “விகிதாச்சார வகுப்புவாரி இடப் பங்கீடு” என்கிற கொள்கையை வென்றெடுக்க ஏற்ற வகையில், “விகிதாச்சார வகுப்புவாரி இடப்பங்கீடு மாநாடு” என வேறொரு நாளில் நடத்திடவும், தமிழ் நாடு, புதுதில்லி, உத்திரப்பிரதேசம், பீகார், பஞ்சாப் மாநிலங்களின் தலைவர்களை அழைத்து இம்மா நாட்டை நடத்தித் திட்டங்கள் தீட்டிடவும், போராடவும் இப்பொதுக்குழு முடிவு செய்வதுடன், இம்முயற்சிக்கு முற்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச்சிறுபான்மையினர் ஆகிய எல்லா வகுப்பினரும் பேராதரவு தரவேண்டும் என்றும் இப்பொதுக்குழு வேண்டிக் கொள்கிறது.

தீர்மானம் - 5 : தமிழ்நாடு மாநிலம் அமைந்த நாள் - பொதுக்கூட்டம்

இந்திய அரசின் மொழிவாரி மாநிலப் பிரிவினைக் கொள்கையின்படி, 1.11.1956இல், தமிழ்நாடு தனி மாநிலமாக அமைக்கப்பட்டது. ஆண்டுதோறும், அந்நா ளைக் கொண்டாடும் வகையில், வரும் 2012 நவம்பர் 1 அன்று எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும், “தமிழ்நாடு மாநிலம் அமைந்த நாள்” என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடத்திடவும், தமிழ்நாடு வரைபடம் பொறித்த வெள்ளைக் கொடியை உயர்த்திடவும் வேண்டும் என மா.பெ.பொ.க. உறுப்பினர்களையும், தமிழ்ப் பெருமக்களையும் இப்பொதுக்குழு வேண்டிக் கொள்கிறது.

தீர்மானம் 6 : “பிராமணாள்” பெயர் அழிப்பு

தமிழகத்தின் முதன்மையான நகரமான சீரங்கத்தில் “ஓட்டல் ஸ்ரீ கிருஷ்ணய்யர் “பிரமணாள் கபே” என்ற பெயரில், ஆறு மாதங்களுக்கு முன் ஓர் உணவு விடுதி தொடங்கப்பட்டுள்ளது.

அய்யர் - பார்ப்பனர் - ஆரியர் என்கிற சொற்கள், ஆரிய இனம் என்பதை மட்டும் குறிப்பவை. “பிராம ணாள்” - “பிராமணன்” என்கிற சொற்கள் பிறவியால் தாங்கள் மட்டும் உயர்ந்த வருணம்; மற்ற எல் லோரும் பிறவியால் தாழ்ந்த வருணம் என்கிற பொருள் தருபவை. இது ஒட்டுமொத்தப் பார்ப்பனர் அல்லாத 96 விழுக்காடு மக்களை இழிவுபடுத்துவது. இந்தச் சாதி இழிவைச் சுமத்தும் பட்டப் பெயiரை உடனடியாக அந்த விடுதி உரிமையாளரே நீக்கிவிட வேண்டும் எனக் கோருகிறோம். இல்லாவிட்டால், தமிழகர்கள் ஒன்றுதிரண்டு, அமைதியான முறையில், அந்தப் பலகையில் உள்ள “பிராமணாள்” என்ற பெயரை அழிக்க வேண்டும் என அனைவரையும் வேண்டிக் கொள்கிறது.

தீர்மானம் - 7 : இரங்கல்

*             மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரியக் கோட்பாடு களைச் செழுமைப்படுத்தும் விதத்திலும் - உலக விடுதலை இயக்க வரலாறுகளை அவற்றுக்குரிய ஆழத்துடன் வெளிப்படுத்தும் வகையிலும் - உலக அறிவைத் தமிழில் தரும் பேராவலுடன் தொடர்ந்து புத்தகங்களை வெளியிட்டு அறிவு விழிப்புக்கு வலிமை சேர்த்த விடியல் பதிப்பகம் பெ. சிவா (எ) சிவஞானம் 30.7.2012ஆம் நாள் இயற்கை எய்திவிட்டார்.

*             இலக்கிய ஆய்வாளராகவும் சமுதாய மறுமலர்ச்சிச் சிந்தனையாளராகவும் இன்றளவும் ஊக்கங்குன் றாமல் பணியாற்றிவரும் ‘தமிழ்நேயம்’ இதழா சிரியரும் மார்க்சிய அறிஞருமான தோழர் கோவை ஞானி அவர்களின் அனைத்துப் பணிகளுக்கும் அடித்தளமாகவும் உறுதுணையாகவும் நின்ற அவரின் துணைவியார் திருவாட்டி இந்திராணி அம்மையார் 5.9.2012ஆம் நாள் காலமாகிவிட்டார்.

*             திருப்பூர் மனிதநேயப் பாசறை அமைப்பாளராகவும், மார்க்சிய இயக்கங்களின் நெடுநாள் ஊழியராகவும், தமிழ்த்தேசிய - பெரியாரியச் சிந்தனையாளரா கவும், பேராசிரியர்கள் சாலை - சாலினி பணி களுக்கு வலிமை சேர்த்து அவர்களின் உற்ற தோழராகவும் விளங்கிய திருப்பூர் மு. சக்திவேல் எதிர்பாராத நேர்ச்சியில் சிக்கி 10.10.2012ஆம் நாள் நம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டார்.

இவர்களுக்கு நம் வீர வணக்கமும் இரங்கலும் உரியன.

*             13.10.2012 ஆகிய இன்று நடைபெறும் பெரியார் நூல் வெளியீட்டக நூல் வெளியீட்டு விழாவில் முன்னிலை ஏற்றிட ஒப்புதல் நல்கியிருந்தவரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைச் செயற் குழுவின் உறுப்பினரும், தமிழகச் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும்; சூலூர் பேரூராட்சியின் இந்நாள் தலைவரும், சூலூர் முன்னேற்றத்திற்கும், மக்கள் முன்னேற்றத்திற்கும் எல்லா வகைகளிலும் அரும்பாடு ஆற்றியவரும்; திராவிட இயக்க வளர்ச் சிக்கு எல்லா வகைகளிலும் உறுதுணை புரிந்த பொது நல நோக்கினரும் ஆன, மதிப்புக்குரிய தோழர் சூ.சு. பொன்முடி அவர்கள் தம் 58ஆம் அகவையில் 2.10.2012இல் மறைவுற்றது கருதி மா.பெ.பொ.க. பொதுக்குழு ஆழ்ந்த வருத்தத் தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.

அன்னாரின் குடும்பத் தலைவர் சூ.ர. தங்கவேல் மற்றும் பொன்முடியின் துணைவியார், குடும்ப உறுப்பினர்கள் அனைவர்க்கும் மா.பெ.பொ.க. மனங் கசிந்த ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

- வே.ஆனைமுத்து, பொதுச் செயலாளர், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி

Pin It