(30.8.1885 நாளிட்ட ‘The Thinker’ ஆங்கிலக் கிழமை ஏட்டில் எம்.வி.செல்லம் என்பவர் எழுதிய கட்டுரை. தமிழாக்கம் : க.முகிலன்)

இந்துக்கள், சுதந்தரமான சிந்தனைக் கண்ணோட் டம் கொண்ட மேலை நாட்டுக் கல்வியையும் அறிவி யலையும் கற்றிருந்த போதிலும் இந்தியாவில் கட்டற்ற - சுதந்தரமான - சுயசிந்தனைப் போக்கின் வளர்ச்சி ஆமை வேகத்தில் இருப்பதைக் கண்டு இங்கிலாந் திலும் அமெரிக்காவிலும் உள்ள தனிமனித உரிமைக் கும் உணர்வுக்கும் முதன்மை தருகின்ற சிந்தனை யாளர்கள் வியப்படைகிறார்கள். இதற்கான காரணத் தைக் கண்டறியப் பெரிதாக ஒன்றும் தேடி அலைய வேண்டியதில்லை.

இந்துக்கள் தங்கள் வீட்டு நடவடிக்கைகளில்கூட மதச் சடங்குகளை விடாப்பிடியாகப் பின்பற்றுகிறவர்கள் என்பது இந்துக்களைப் பற்றி ஆராய்ந்தவர்களுக்கு நன்கு தெரியும். பிறக்கும் போதும், வளரும் போதும், வாழும் காலத்திலும், இறக்கும் சமயத்திலும் இந்துக்கள் மதத்துடன் பின்னிப்பிணைக்கப்பட்டிருக்கின்றனர். தனிப்பட்ட சொந்த வாழ்விலும் மதம் இழையோடியுள்ளது. பரந்த மனப்பான்மையை வளர்க்கக் கூடிய கல்வியை இந்துக்கள் ஓரளவு கற்றுள்ள போதிலும் பள்ளிகளில் சிறுவயது முதலே அழுகிய, கேடான பல மூடக் கருத் துகள் அவர்களின் மண்டையோட்டிற்குள் திணிக்கப்படு கின்றன. கல்வியறிவில்லாத தங்கள் தாய்மார்களின் மார்பகங்களில் பாலைக் குடித்துக் குழந்தைகள் வளருவது போல, இவர்கள் பிறந்தது முதலே இவர் களுக்கு மதச்சிந்தனையும் ஊட்டப்படுகிறது.

எழுத்தறிவற்றவர்களும், அரைகுறையாகப் படித்த மரமண்டையர்களும் ‘இராமன்’, ‘கோவிந்தன்’, ‘கணேசன்’ போன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடவுளர்களைச் சூதுவாது அறியாத இளம்பிஞ்சு மனங்களில் கட்டாயப் படுத்தித் திணிக்கிறார்கள். நமது தாத்தாக்களும் பாட்டிகளும் புராணங்களில் போற்றப்படுகின்ற முட்டாள் தனமான, இயற்கைக்கு மாறான உருவங்களைக் கொண்ட தொப்பைக் கணபதி - பிள்ளையார் போன்ற கடவுள்களின் பெயர்களைக் காலையும் மாலையும் உச்சரிக்குமாறு நமக்குக் கற்பித்ததை நாம் எளிதில் மறந்துவிட முடியாதல்லவா! அந்தப் புராணக் குப்பை களை நம்பவில்லை என்பதற்காக நம்மீது அவர்கள் வசைமாரி பொழிந்தனர்.

வேறு வகையில் சொல்வதானால் நம் தந்தைமார்கள் நாம் சிறுவர்களாகவே (சொல்படிக்கீழ்ப்படிந்து நடப்பவர் களாக) இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பார்ப்பன ஒட்டுண்ணி வகுப்பினர் மீது மரியாதை கொள்ளுமாறு செய்வதற்காக நாள்தோறும் சிறுவர் களையும் சிறுமிகளையும் பலவகையான பூசைக ளைச் செய்து வழிபடுமாறு கற்பிக்கின்றனர்.. இவ்வாறு சிறுவர்களைப் பழக்காவிடில், அவர்கள் வளர்ந்து பெரிய வர்களாகும் போது பார்ப்பனர்களை வெறுப்பார்களோ என்று அஞ்சுகின்றனர்.

அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் இடமளிக்காமல் திணிக் கப்பட்ட கருத்தோட்டங்களும், தப்பெண்ணங்களும் மனிதர் வாழ்வில் பெரும் பங்காற்றுகின்றன. இன்றைய குழந்தை நாளைய தந்தை என்பதை நாம் அறிவோம். அதனால், பார்ப்பனரை உயர்வாக மதிக்க வேண்டும் என்று குழந்தைப் பருவத்தில் ஊட்டப்படுகின்ற உணர்வு பெரியவனாக வளரும் போதும், அந்தச் சிந்தனையும் சேர்ந்தே வளர்கிறது. இளமை முதலே நெஞ்சில் வேர்விட்டு வளர்ந்து இறுகிப்போய் விட்ட இச்சிந்தனை யை எளிதில் உள்ளத்திலிருந்து அகற்ற முடிவதில்லை. அதனால்தான், அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் ஆகிய வற்றால் உருவான கூரிய அறிவுக் கோடாரியால், காழ்ப்பேறிய மூடத்தனங்களின், முட்டாள்தனமான நம்பிக்கைகளின் வேர்களை வெட்டுவதற்குச் சிறிது காலமாகிறது. பகுத்தறிவுக் கொள்கையில் பற்றுறுதியும், உள்ள உரனும் உடையவர்களால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

அத்தகைய ஒருவர், இந்தியாவில் மலிந்து கிடக்கும் எண்ணற்ற மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் கடுமை யாகப் போராட வேண்டியிருக்கும். எஃகு போன்ற மனஉறுதி அவரிடம் இருக்க வேண்டும். இல்லாவிடில் மூடநம்பிக்கைகள் அவரைத் தாறுமாறான மனக்குழப் பத்தில் ஆழ்த்திவிடும். பல்வேறு கட்டங்களில், வடிவங் களில் மூடநம்பிக்கை அவர் பகுத்தறிவுப் பாதையில் முன்னேறிச் செல்வதைத் தடுக்கும். பேரச்சமூட்டக் கூடிய ஒரு பெரும் பூதமாகக் குறுக்கே வந்து முதலில் தடுப்பது சாதியே ஆகும்.

சாதியைப் போன்றதோர் கொடிய எதிரியை உலகில் வேறெங்கும் காண முடியாது. சாதியமைப்பை உருவாக்கியவர்கள் தன்னல வஞ்சகப் பார்ப்பனர்களே ஆவர். நமது வாழ்நிலையும் மனநிலையும் இழிந் திருப்பதற்கு இப்பார்ப்பனர்களே காரணமாவர். கற்ற றிந்த நமது சகோதரர் எம். மாசிலாமணி முதலியார் எழுதிய - சென்னைச் சுதந்தரச் சிந்தனையாளர் கழகம் தமது முதலாவது வெளியீடாக வெளியிட்டுள்ள அறிக் கையில், சாதியின் கேடுகள் பற்றியும் கொடுமைகள் பற்றியும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அந்த அறிக் கையை நம் தமிழ் வாசகர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். சாதியை ஒழித்தால்தான், எழுத்தறிவற்ற நம் மக்களின் மூடத்தனத்தை மூலதனமாகக் கொண்டு விலாப் புடைக்கத்தின்று கொழுப்பேறிக்கிடக்கும் பார்ப் பனர்களின் சுகபோக வாழ்வு ஒரு முடிவுக்கு வரும். அப்போதுதான், கேடான பார்ப்பனப் புரோகிதத் தொழிலை நம் சமூகத்திலிருந்து அடியோடு அகற்ற முடியும்.

அறிவு வளர, வளர நம் இளைஞர்கள் இச்சமூகத் தைச் சீரழிக்கும் சாதியமைப்பின் கேடுகளை உணர் வார்கள் என்பது உறுதி! ஆனால் இதற்கு எதிராகச் செயல்படுவதற்கான துணிவை அவர்களுக்கு ஊட்ட வேண்டியுள்ளது. பகுத்தறிவுப் பாதையில் நடப்பது பற்றி இளைஞர்கள் சிந்திக்கும் நேரத்தில், அதனால் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய இடையூறுகளும் துன்பங்களும் அவர்களின் கண்முன் நிற்கின்றன. அதனால் அவர்கள் எண்ணியவாறு செயல்பட முடி யாமல் தவிக்கின்றனர். துணிந்து, பகுத்தறிவுப் பாதையில் நடந்தால், அவர் நேசிக்கின்ற அனைத் தையும் இந்து மத - சாதியக் கட்டமைப்பு அவரிடமி ருந்து பறித்துவிடும். கணவன் மனைவியைப் பிரிய நேரிடும். பெற்றோரிடமிருந்து மகனும், மகனிட மிருந்து பெற்றோரும் பிரிக்கப்படுவார்கள்.

சங்கிலித் தொடர் போல் நீண்டு கிடக்கும் மூடநம்பிக் கைகளில் ஒன்றை எதிர்ப்பதாயினும், இந்து மதத்தைக் கேள்விக்கு உட்படுத்தும் ஓர் இந்து, கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. இதற்கே இப்படியெனில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடவுள்களை அவரால் எப்படி எதிர்க்க முடியும்?

ஆனால் கிறித்துவ இளைஞர்களுக்கு இந்த அளவுக் குச் சிக்கல் இல்லை! சுதந்தரச் சிந்தனையாளனாக மாறுவதற்குச் சுருக்கமான வழி இருக்கிறது. கிறித்துவ மதத்தின் புனித (?) நூலான பைபிளைக் கடலில் தூக்கி எறிந்து விட்டால் போதும் -அத்துடன் எல்லாம் முடிந்தது - சுதந்தரச் சிந்தனையாளனாக எந்தத் தடையுமின்றி உலாவலாம்.

Pin It