உலகினர் பார்வையில் என்னை உயர்த்தியவரே, ஏன் என்னைப் பிரிந்தீர்?

என் பார்ப்பன - பார்ப்பனிய எதிர்ப்புப் பணிக்கு அகவை, 3.3.1940 முதல் 72 ஆண்டுகள்! உங்களின் பார்ப்பன - பார்ப்பனிய எதிர்ப்புப் பணிக்கு அகவை 1970 முதல் 42 ஆண்டுகள்!

இந்த 42 ஆண்டுக்காலத்தில் தந்தை பெரியாரின் போர்க் கருவியாக விளங்கிய “விடுதலை” நாளேட்டில் நீங்கள் எழுதிய கருத்துக்கள் பார்ப்பனரைக் குத்திக் குதறும் குத்தீட்டிகள் போன்றவை.

தானே நிறுவிய ‘விடுதலை’ ஏட்டில், குத்தூசி சா. குருசாமி யின், “பலசரக்கு மூட்டை”க் கட்டுரைக் கருத்துக்களைப் படித்து மகிழ்ச்சி பொங்கச் சிரித்தவர், பெரியார்! அவருக்கு அடுத்தாற்போல், உங்களுடைய கட்டுரைகளைப் படித்துத்தான், பெரியார் அப்படிச் சிரித்து மகிழ்ந்தார். உங்களின் “விடுதலை” கட்டுரை களைப் படித்த இளைஞர்கள் பார்ப்பன ஆதிக்கத்தின் கொடுமையைப் பளிச்செனப் புரிந்து கொண்டார்கள். “சங்கமித்ரா யார்? என்று அறியவும் காணவும் விழைந்தார்கள்.” “அவர் ஆணா, பெண்ணா?” என அறிய விரும்பினார்கள்.

அப்படிப்பட்ட சூழலில் தான், 1972இல், நாகப்பட்டினத்தில், நானும் திருச்சி நோபிள் கு. கோவிந்தராசலு, பெரியார் மாளிகை ச. சோமு, பொறியாளர் கு.ம. சுப்பிரமணியம் ஆகிய நால்வரும் உங்களை ஒரு பிற்பகலில் சந்தித்தோம்.

அதிக நேரம் பேச வாய்ப்பின்றி, பாரத அரசு வங்கி அதிகாரிகளுக்குப் பயிற்சி தரும் பணியில் அன்று நீங்கள் ஈடுபட்டிருந்தீர்கள்.

“பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” நூலின் 10 படிகளுக்கு உடனே முன்பதிவு செய்து கொண்டீர்கள்.

இடையில் சில ஆண்டுகள் நீங்கள் வட இந்தியாவில் பணியாற்றினீர்கள். நம்மிடையே சந்திப்பே இல்லை.

நீண்ட நாள்களுக்குப் பிறகு, 1979இல், ஒரு காலை நேரத்தில் உங்களின் துணைவியார் பத்மா அம்மையாருடன் எழும்பூரில் உள்ள “பீப்பிள்ஸ் லாட்ஜ்” எனும் விடுதியில் என்னைச் சந்தித்தீர்கள். அப்போது என் “சிந்தனையாளன்” கிழமை ஏட்டைப் படித்திருந்தீர்கள்.

சந்தித்த உடனேயே, “நான் உங்கள் கட்சியில் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். அதற்காகவே வந்தேன்” என்றீர்கள்.

“நீங்கள் நாள்தோறும் எழுதிக் குவிப்பவர். என் ஏடு ஒரு கிழமை ஏடு. ‘விடுதலை’ ஒரு நாளேடு. அதிலேயே எழுதிக் குவியுங்கள் - அங்கேயே இருங்கள்” என அன்புடன் நான் வேண்டிக் கொண்டேன்.

ஏன்?

உங்களின் வங்கிப் பணி வாழ்க்கையே ஒரு பெரும் போராட்ட வாழ்க்கை. உங்களின் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புக் கட்டுரைகள் தொடர்ந்து “விடுதலை”யில் வெளிவர வேண்டும்; அவை தமிழனைத் தட்டி எழுப்பும் - அதுவே முதன்மை என நான் மனமார எண்ணினேன். அமைதியாகவே அப்போது சென்றீர்கள்.

ஆனாலும், உங்களின் அடிநெஞ்சத்தில், “ஆனைமுத்து வுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்” என்ற ஆசை கொள்ளை கொள்ளையாக இருந்தது.

வடநாட்டில் இருந்தவாறே (1) “சித்தார்த்தன்” என்ற இன்னொரு புனைபெயரில், தொடர்ந்து கட்டுரைகளை எழுதி, “சிந்தனையாளன்” இதழுக்கு விடுத்தீர்கள்; (2) உங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றி ஆலோசனை கேட்டு எழுதினீர்கள்; (3) “உங்களுக்குப் பொருள் உதவி செய்ய விரும்புகிறேன்” என இரண்டு தடவை கள் 1979இல் எனக்குப் பதிவஞ்சல் எழுதினீர்கள்.

என்னைத் தூக்கிப் பிடிக்கவே இப்படி எழுதினீர்கள். நான் ஒரு கடிபடாத பாக்கு. “பண உதவியை ஏற்பது என் வழக்கமில்லை வங்கித் தொடர்பு இருப்பதால், வட்டிக்குக் கடன் வாங்கித்தர ஏற்பாடு செய்யுங்கள்” என வேண்டினேன். அதைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டு, உடனே அந்த ஏற்பாட்டைச் செய்தீர்கள். உங்களின் நிழலாக விளங்கும் தோழர் சோம. முத்தய்யன், அப்போது சென்னை ஆயிரம் விளக்குக் கிளையின் மேலாளர். அவர் காலை 10 மணிக்கு விண்ணப்பத்தைப் பெற்று, 11 மணிக்கு கலச. இராம லிங்கம், சி. பெரியசாமி, செஞ்சட்டை பஞ்சாட்சரம் மூவரின் பிணை ஒப்பந்தத்தைப் பெற்று, பகல் 12 மணிக்கே ரூ.19 ஆயிரம் - கேட்ட தொகையைக் கடனாகக் கொடுத்தார்.

என் நூல்களை அச்சிடுவது கவிஞர் நாரா. நாச்சியப்பனின் பொறுப்பு; மெய்ப்புப் பார்ப்பது கலசம் - கோவி இருவர் பொறுப்பு. நானோ வடநாட்டுப் பயணத் திலும், தொண்டர்களைத் திகார் சிறைக்கு அனுப்பும் போராட்டத்திலும் மூழ்கிக் கிடந்தேன்.

என் எழுத்துக்கள் - ஒரு சேர, ஒரே நேரத்தில் 1980இல் நூல்களாக வர உற்றுழி உதவிய உற்ற தோழர் நீங்கள். அதைச் செயல்படுத்தியவர் சோம. முத்தய்யன்.

என் பேச்சையும் தம் பேச்சையும் எழுதித் தரச் சொல்லிப் பெற்று, ஒரு நூலாக, 1965இல் முதன் முதலில் வெளியிட்டவர் தந்தை பெரியார் அவர்களே!

“வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்“

பெரியார் ஈ.வெ.ரா.

வே. ஆனைமுத்து

என்பது அந்நூலின் முகப்பு.

உங்களின் துணைகொண்டு, நான் 1980இல் வெளியிட்ட நூல்கள் - தமிழில் 4; ஆங்கிலத்தில் 1.

இவை தமிழ்ப் பற்றாளர்கள், தமிழறிஞர்கள், தன் மானக் கொள்கையினர் ஆகியோர்க்குத் தந்தை பெரி யாரின் சித்தாந்தத்துக்கு - கோட்பாட்டுக்கு அரிய விளக்க உரைகளாக இருப்பதை அனைவரும் உணர்ந்தனர்.

என் பொதுவாழ்வில், 13.11.1979 இரவு 9 மணிக்கு, புதுதில்லியில், இராசேந்திர பிரசாத் சாலையில் எண். 18இல், இராம் அவதேஷ் சிங் வீட்டில் தோழர் கன்ஷிராம் என்னைச் சந்தித்தார். தந்தை பெரியார், திராவிடர் இயக்கம், வைக்கம் கிளர்ச்சி, கேரளத்து ஸ்ரீ நாராயண குரு ஆகியவை பற்றி ஆர்வத்துடன் அவர் கேட்டறிந் தார்.

“பெரியார் - அம்பேத்கர் கொள்கைகளை நாம் ஒன் றாக இணைந்து வட நாடெங்கும் பரப்ப வேண்டும்” என அவர் விருப்பம் தெரிவித்தார். பாம்செஃப், னுளு4 என்கிற அவருடைய இரண்டு அமைப்புகளின் எல்லா நிகழ்ச்சிகளிலும், 2.12.1979 முதல் 1984 முடிய என்னையே அவர் முதன்மைப்படுத்தினார். அந்த 5 ஆண்டுகளில், ஆண்டில் 4 மாதங்கள் நான் வடபுலத்தி லேயே வாழ்ந்தேன். எங்களின் இந்த இணக்கம், டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை முழுமை யாக நாங்கள் வெளியிட அடித்தளமாக அமைந்தது.

1991 முதல் உங்களையும், சேலம் எம். இராசுவையும் இல்லாமல் என் வடநாட்டுப் பயணம் நடைபெற வில்லை.

நாம் தில்லியில் மாதக் கணக்கில் டாக்டர் சுக் சத்திரத்திலும், வெஸ்டர்ன் கோர்ட்டிலும் ((Western Court),), ஒரு நண்பர் வீட்டிலும் தங்கிப் பணியாற்றினோம். து. தில்லைவனம், எம். இராசு, க. நாகராசன், கலசம் முத லானோரும் இணைந்து பணிபுரிந்தனர்.

அலிகரில் பியாரிலால் லோதி இல்லத்திலும், பயணர் விடுதிகளிலும்; லக்னோவில் அம்பேத்கர் பவன், தனியார் விடுதிகளிலும் - தங்கிப் பணயாற்றினோம்.

1991 அக்டோபர் 21 முதல் 30 முடிய - 50 தோழர் களும் 10 தோழியர்களும் கொண்ட பரப்புரைப் படையை அலிகர், கான்பூர், லக்னோ, பாட்னா, கல்கத்தா - சென்னை என அழைத்துச் சென்று வழி நடத்தினோம்.

14-10-2008 இல் தில்லிக்கு நாம் புறப்பட்டோம். 16-10-2008 முதல் 31-10-2008 முடிய இருவரும் ஒன்றாக உண்டோம்; ஒரே கட்டிலில் தூங்கினோம். 23, 24, 25இல் அலிகரில் பணியாற்றினோம். 29-10-2008இல் தில்லியில் நாடாளுமன்ற உறுப்பினர் கள் கூட்டம் நடத்தினோம். 2-11-2008இல் சென்னை யை அடைந்தோம். அதுவே நாம் இணைந்து சென்ற இறுதிப்பயணமாகிவிட்டதே.

உங்களோடு ஒரே இரட்டைக் கட்டிலில் படுத்து நான் உறங்கிய நாள்கள் - கடந்த 20 ஆண்டுகளில், 200 நாள்களுக்கு மேலாகும்.

7.4.2012 காலை 8 மணிக்கு - “சங்கமித்ரா மறைந் தார்” என்ற செய்தியை, தில்லியிலிருந்த எனக்குச் சொன்னார்கள். “வயிற்றில் புற்றுநோய் வலிமை யாகத் தாக்கியிருக்கிறது” என்பதை, 27.6.2011இல் அறிய வந்த நீங்கள் துணிச்சலுடன் நோயோடு போரா டினீர்கள். ஆனால் இவ்வளவு சடுதியில் எங்களை விட்டுவிட்டுப் போய்விடுவீர்கள் என, 27.2.2012 இரவு நானும் கவிஞர் காவிரிநாடனும் புதுதில்லிக்குப் புறப்பட்டபோது நான் கிஞ்சிற்றும் கருதவில்லை. “மீண்டும் உங்களைத் திருச்சியில் சந்திப்பேன்” என்ற முரட்டுத் துணிச்சலுடன் நான் பயணம் மேற்கொண் டேன். 40 நாள்களே தில்லியிலும், பஞ்சாபிலும், குஜராத்திலும் நாங்கள் இருவரும் பயணித்தோம்.

தில்லியில் நாம் இருவரும் படுக்கிற அதே கட்டிலில் 7.4.2012 இரவு புரண்டு புரண்டு அரற்றிக் கொண்டு - எங்கே சங்கமித்ரா என்று - பைத்தியம் போல் படுக் கையைத் தடவினேன். நீங்கள், திருச்சியில், மூச்சை இழந்த உடம்பாகக் கிடப்பது என் கண்முன் வந்தது. இரவு 2 மணிக்கு எழுந்த நான், காலை 7 மணிவரை யில் பேசா மடந்தையாக உட்கார்ந்திருந்தேன். ஏன்? ஏன்?

1. என் பொதுவாழ்வில் நான் கருத்துப் பிழை செய்து விட்டால், “உங்களுக்கு அறிவு இருக்குதா?”, “புத்தி இருக்குதா?” என்று என்னை இடித்துக் கூறி, என் பணியை நேர் செய்த ஒரே மாமனிதர் நீங்கள்!

2. என் வீடுதேடிச் சென்று, “பைத்தியக்கார ஆனைமுத்து எப்ப வீட்டுக்கு வந்தார்” என்று என் அப்பாவித் துணைவியாரிடம் கேட்டுவிட்டு, அவருடைய மனத்துயருக்கு மாமருந்து தந்தவர் நீங்கள்!

3. என்னை விட விரிந்த - பரந்த - ஆழமான பல்துறைக் கல்வி அறிவு பெற்றவர் நீங்கள். இந்தியிலும், ஆங்கிலத்திலும், தெலுங்கிலும், தாய்த் தமிழிலும் நீரோட்டமாகப் பேசவும், உரையாற்றவும் திறன் படைத்த பன்மொழி மேதை நீங்கள்! இவற்றை என் பணிக்குக் கைகொடுக்கவே நூற்றுக்கு நூறு மாகப் பயன்படுத்தி, என்னைத் தூக்கிப் பிடித்த ஒரே துணைவர், தோழர், அறிஞர், தொண்டர் நீங்கள்!

4. குருதி அடைப்பு அறுவைக்கு விசயா மருத்துவ மனையில் சேர்ந்த நீங்கள், “நான் சாக நேர்ந் தால், என்னை இறுதிச்சடங்கு ஏதுமின்றி எடுப்பது உங்கள் பொறுப்பு” என்று கூறித் தொலைபேசி செய்தீர்கள். ஆனால் எவரும் அங்கே வரக்கூடாது என்று தடைபோட்டீர்கள். அறுவை முடிந்த பிறகு, ஓர் அரைநேரம், உங்களோடு அம்மருத்துவமனை யில் உரையாடினேன். அதற்குப் பிறகு உங்கள் உடல்நிலை பழைய நிலைக்கு மீளவே இல்லை.

5. இந்த இயலாமைகள் நேரும் முன்னரே எனக்காக - என் எழுத்துக்கள் எல்லாம் தமிழுலகுக்கு நூலாகக் கிடைக்க வேண்டும் என நீங்களே முடிவெடுத்து, எண்ணற்ற இடங்களுக்குச் சென்று, இரண்டு இலக் கம் ரூபாவைத் திரட்டி நிதி அளிப்புச் செய்தீர்கள்.

6. “பெரியார் கண்ட பேரறிஞர் வே. ஆனைமுத்து” என்னும் என் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கக் கருத்துத் தொகுப்பு நூலை, முனைவர் அ. ஆறுமுகம் ஒத்துழைப்புடன் உருவாக்கி நிதி அளிப்பு, நூல் வெளியீடு என்னும் இருபெரும் சிறப்பு நிகழ்ச்சி களை நடத்தி என்னையும், என் குடும்பத்தாரையும், கட்சித் தோழர்களையும் மகிழ்ச்சியுறச் செய்த மாமனிதர் நீங்கள்!

“வே. ஆனைமுத்துவைத் தூக்கிப் பிடிப்பதே என் பணி” என்பதாக வரித்துக் கொண்டு, முழுவதுமாக அதிலேயே தோய்ந்துவிட்ட உங்களின் பிரிவு - என் பொதுவாழ்வுக்கும், சொந்த வாழ்வுக்கும் விழுந்த ஒரு பெரிய அடி என்பதை எண்ணி வெதும்புகிறேன்.

மா.பெ.பொ.க. 1976இல் தொடங்கப்பட்டது; ஒடுக் கப்பட்டோர் பேரவை 1978இல் தொடங்கப்பட்டது. கடந்த 33 ஆண்டுகள் செயல்களத்திலும், போராட்டத் திலும் பெரும் பங்காற்றிய தோழர்களுள் 33 பேர் மறைந்துவிட்டனர். கடந்த ஆறு மாதங்களில் சீரிய சிந்தனையாளர் து. தில்லைவனமும், இப்போது சங்கமித்ராவும் இறுதி விடை பெற்றுக் கொண்டனர். இப்பேரிழப்புக்களை நம் தோழர்கள் தாங்கிக் கொள்ள வேண்டுகிறேன்.

ஓ, சங்கமித்ரா! நீங்கள் பார்ப்பனியத்தின் வைரி! பார்ப்பன ஆதிக்க ஒழிப்புப் படையின் முன்னணிப் போராளி! ஒடுக்கப்பட்டோர் உரிமைக் காப்புப் படை யின் ஒப்பற்றத்தலைவர்! பெண்ணுரிமைக் காப்புக்கு ஒரு சங்கமித்ரையாகப் பணியாற்றிய சங்கமித்ரா! மொகஞ்சதாரோ - அரப்பா நாகரிகக் காலம் முதல் கி.பி. 2012 வரை உள்ள நெடிய காலத்தில் - தமிழனின் வீழ்ச்சிக்குக் கரணியமாக அமைந்த வேத - இதிகாச - புராண - ஆகம வாழ்க்கை நெறியை அடியோடு ஒழிப்பதற்கான ஆழ்ந்த கருத்துக்களை - 1. சங்கமித்ரா விடையளிக்கிறார், 2. ஒடுக்கப்பட்டோர் குரல், 3. தன் முன்னேற்றம் என்னும் சொந்த ஏடுகளின் வழியாக வும்; “விடுதலை”, “உண்மை”, “சிந்தனையாளன்”, “PERIYAR ERA” வழியாகவும், “வளர் தொழில்”, “கண்ணியம்”, “முகம்” போன்ற இதழ்களின் வழியா கவும் 1970 முதல் 42 ஆண்டுக்காலம் ஆழமாகவும், அகலமாகவும் ஆய்வுக் கண்ணோட்டத்துடனும் வெளி யிட்டு அழியாக் கருத்துக் கருவூலத்தைத் தமிழர்க்கு விட்டுச் சென்றிருக்கிறீர்கள்!

நீங்கள் புற்றுநோய் மருத்துவமனையிலிருந்து, கோவை ஞானிக்கு, இவையனைத்தையும் உள் வாங்கி எழுதிய கடைசிக் கட்டுரை உங்களின் ஒரு சாகா இலக்கியம். இன்றும் நாளையும் என்றென்றும் - எம் போன்றோர் நெஞ்சங்களில், கோடிக்கணக்கான உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் நிரந்தரமாக நீங்கள் குடியிருப்பீர்கள்.

உங்கள் புகழ் பொன்றாது; மறையாது!

வாழிய, வாழிய சங்கமித்ரா புகழ்!

- வே.ஆனைமுத்து

Pin It