periyar in perambalur districtதொகுப்பாசிரியர் : கு.வரதராசன்

ஆசியர், தலைவர், திருவள்ளுவர் உழவர் மன்றம், பூலாம்பாடி.

நூலாக்கம்: பேராசிரியர் முனைவர் சா.தங்கப்பிரகாசம்

தலைவர், பெரம்பலூர் மாவட்டப் பகுத்தறிவார் கழகம்.

வெளியீடு : கவிமாறன் பதிப்பகம்,36, முதன்மைச் சாலை, பூலாம்பாடி -621 110.

பக்கம் : 160 ம் விலை ரூ.100.00

பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்கள் 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தன்மானத்தையும் பகுத்தறிவையும் பரப்பி மூடநம்பிக்கை ஒழித்தலைத் தம் கடமையாகக் கொண்டு ஈரோட்டுச் சிங்கமாய் உலாவந்து செயலாற்றிய சிறப்புக்குரியவர்; கடவுளை மற; மனிதனை நினை, என மனிதம் வர முதன்மை தந்தவர். பக்தி தனிச் சொத்து; ஒழுக்கம் பொதுச் சொத்து என்று மக்களிடையே ஒழுக்கத்துக்கு முதன்மை தந்து தம் கொள்கையைப் பின்பற்றி வாழ்ந்து காட்டியவர்; கல்லடிக்கும் சொல்லடிக்கும் கலங்காமல் எதிர்ப்புக்கிடையே வாழ்நாளெல்லாம் இவ்வையத்தை வலம் வந்து கொள்கைகளை வலியுறுத்தியவர்; நான் சொல்வதை உன் அறிவைக் கொண்டு சிந்தித்துப் பார்த்து சரி என்றால் ஏற்றுக் கொள், என்று சிந்தனைக்கு உரிமை தந்தவர்; பொதுவுடைமை மலர வேண்டும் என விழைந்தவர்.

பெரியார் கண்ட பேரறிஞர் வே.ஆனைமுத்து, திருச்சி சிந்தனையார் கழகத்தின் வழி பெரியாரிடம் ஒப்புதல் பெற்று, அவர் தம் கருத்துக்களைத் தொகுத்து மூன்று தொகுதிகளாக வெளியிட்டவர்; பெரியார் புகழுடம்பு அடைந்தபின் மேலும் விடுபட்ட வற்றையும் சேர்த்து 20 தொகுதிகளாக 2010 இல் அண்ணா அறிவாலயத்தில் கலைஞரைக் கொண்டு வெளியிட்டவர். அப்போதைய திருச்சி மாவட்டத்தில் இருந்த பெரம்பலூர் வட்டம், உடையார்பாளையம் வட்டம் என்ற இரு பகுதிகளிலும் தந்தை பெரியாருடன் பயணித்துக் கொள்கை பரப்பில் முதன்மை பெற்றவர் ஆனைமுத்து. இவரது படைப்புகள் திருச்சி வே.ஆனைமுத்து கருத்துக் கருவூலம் என்ற தலைப்பில் 20 தொகுதிகளாக வெளிவந்துள்ன. தொகுப் பாசிரியர் கு.வரதராசன் அவர்களும் தந்தை பெரியார் கலந்துகொள்ளும் கூட்டங்களில் பங்கேற்றும், தனியே கூட்டங்களுக்கு ஆவன செய்தும் தொண்டு செய்தவர். அப்போதைய பெரம்பலூர் வட்டமே தற்போது பெரம்பலூர் மாவட்டம் ஆகியுள்ளது.

ஆசிரியர் கு.வரதராசன் அரிதின் முயன்று பெரம்பலூர் மாவட்டத்தில் பெரியார் கலந்து கொண்ட பரப்புரை செய்த ஊர்களையும் பங்கு பெற்றவர் களையும் பட்டியலிட்டு இந்நூலில் ஆவணமாக்கியுள்ளார். அப்போதைய “விடுதலை” ஏடுகளைத் தேடிப் பிடித்து அவற்றில் வெளிவந்த செய்திகளையும் ஆவணமாக்கி யுள்ளார். எந்தெந்த நாள்களில், எந்தெந்த ஊர்களில் பெரியார் கலந்து கொண்டார் என்ற செய்தி இன்றைய இளைஞர்கள் கருத்தூன்றி அறிய வேண்டிய செய்தி யாகும். இனி வரும் உலகம், பெரியாரின் இறுதி உரை இரண்டும் இந்நூலிலும் இடம் பெற்றுள்ளது தேடுவோர்க்கு எளிமை தருவதாகும். பெரியாரின் வண்ண நிழற் படங்கள் இடம் பெற்றுள்ன. நூலின் பின் அட்டையில் பெரம்பலூரில் ஓவியர் முகுந்தன், எழில் நகரில் அமைத் துள்ள பெரியார் சிலை அணி செய்கிறது. 27 ஊர்களில் பெரியார் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் ஊர்ப்பெயர்கள் அகர வரிசையில் இடம் பெற்றுள்ளன. பெரம்பலூர் மாவட்டப் பெரியார் தொண்டர்கள் என்ற தலைப்பில் 153 பெயர்களைப் பட்டியலிட்டிருக்கிறார். பெயர் விடுபட்டிருப்பின் மறுபதிப்பில் இணைக்கிறோம் எனத் தொகுப்பாசிரியர் தெரிவித்துள்ளார்.

இப்பட்டியலில் இலந்தங்குழி ஆ.செ.தங்கவேலு பெயர் விடுபட்டுள்ளது. இவர் தந்தை பெரியாரின் தன்மான நெறியாளராக வாழ்நாள் முழுதும் வாழ்ந்தவர்; ஆனைமுத்து அவர்களின் வலதுகரமாக இருந்தவர். 1957 இல் நடைபெற்ற சட்ட எரிப்புப் போராட்டத்தின்போது நான் கூடலூர் உயர்நிலைத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரிய ராகப் பணியாற்றினேன். அப்போராட்டத்தை நேரில் அறிந்தவன். நான் குடியிருந்த வீட்டு உரிமையார் கூடலூர் பொ.கருப்பையா போராட்டத்தில் கலந்து கொண்டு ஒன்றரையாண்டு சிறைத்தண்டனை பெற்றவர். அவர் பெயர் இடம் பெற வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த கல்லூரி மாணவர்கள் இந்நூலைத் துணையாகக் கொண்டு தொண்டர்களின் நிழற்படங் களையும் தன்விவரக் குறிப்புகளையும் சேர்த்து வெளியிட்டால் மிகச் சிறந்த வரலாற்று ஆவணமாக அமையும் என்ற வேண்டுகோளையும் இளைய தலை முறையினருக்கு முன்வைக்கிறேன். தொகுப்பாசிரியரும், நூலாக்கத்துக்கு உரியவரும் பாராட்டுக்கு உரியவர்கள். நூல்களுக்குச் செலவிடுவது அறிவு வளர்ச்சி எனக் கருதி தொகுப்பாசிரியருக்குத் துணைநிற்க வேண்டுகிறேன்.

- முனைவர் அ.ஆறுமுகம், தலைவர், திருமழபாடித் தமிழ்ச்சங்கம்.

Pin It