உலகத்தில் எந்த நாட்டிலும் வேடர்கள், பழங்குடிகள், மீனவர்கள் என்பவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தங்களுடைய பரம்பரைத் தொழில்களைத் தொடர்ந்து செய்து வருகிறவர்கள் ஆவர். அவர்கள் வாழும் இடங்கள் அடர்ந்த காடுகள், மலைகள், காலம் தெரியாத கடற்கரைகள் ஆகும்.

தமிழகம் ஏறக்குறைய 1050 மைல் நீளத்துக்குக் கடற்கரையைப் பெற்றிருக்கிறது. கடற்கரை மீனவர்கள் கட்டுமரத்திலும், பாய்மரப் படகிலும் கடலுக்குள் சென்று, உயிரைப் பணையம் வைத்து மீன்பிடித்த காலம் மாறிவிட்டது. இப்போது அவர்கள் ஃபைபர் படகுகளிலும், விசைப்பொறிகள் பொருத்தப்பட்ட படகுகளிலும் நெடுந்தூரம் கடலுக்குள் சென்று மீன்பிடிக்கிறார்கள்.

அப்படி மீன்பிடிக்கிற தமிழகக் கடற்கரை மீனவர்கள் ஏறக்குறைய 11,000 படகு களை இயக்குகிறார்கள். இவற்றுள் 3000 படகுகள் விசைப் பொறிகள் பொருத்தப் பட்டவை.

இவற்றுள் தமிழகக் கடல் எல்லைக்குள் ஆழமான பகுதிகளுக்குச் சென்றால்தான் அதிகமான மீன்கள் சிக்கும் என்று கருதிச் சில சமயங்களில் அப்படிச் செல்லுகிறார்கள்.

அதேபோல்தான், அரபிக் கடலிலும் வங்காளக் குடாக்கடலிலும் இலங்கை மீனவர் களும், தமிழக மீனவர்களும், பங்களாதேஷ் மீனவர்களும் கடலுக்குள் செல்கிறார்கள்.

எப்போதோ இவர்கள் தங்கள் தங்கள் நாட்டின் கடல் எல்லையைத் தாண்டிச் செல்ல நேரிட்டால், அப்படி எல்லை தாண்டியவர்களின் படகுகளைக் கைப்பற்றி, அமைதியாக அழைத்துச் சென்று, கைது செய்து, அவரவர் நாட்டின் சட்டத்தின்கீழ் வழக்கு நடத்தித் தண்டனை தருவது மட்டுமே சரியாகும்.

ஆனால், கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக, எப்போதோ இலங்கைக்கடல் எல்லைக்குள்ளோ - அல்லது இந்திராகாந்தி அரசினால் இலங்கைக்குத் தாம்பாளத்தில் வைத்துத் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவுப் பகுதியிலோ தமிழகக் கடற்கரைகளான நாகை, இராமேஸ்வரம், தூத்துக்குடி பகுதிகளிலிருந்து மீனவர்கள் கடலுக்குள் செல்ல நேர்ந்தால், இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் துப்பாக்கியால் சுட்டும், குண்டு வீசியும் கொல்லுகிறார்கள்; தமிழக மீனவர்களின் படகுகளைக் கைப்பற்றிக் கொள்கிறார்கள்; அவற்றிலுள்ள மீன்களைக் கொள்ளையடிக்கிறார்கள். இலங்கை மீனவர்களும் இதையே செய்கின்றனர்.

1981க்குப் பிறகு இந்தக் கொடுமைகள் அதிக அளவில் இலங்கைக் கடலோரக் காவல் படையினராலும், இலங்கையைச் சேர்ந்த மீனவர்களாலும் இழைக்கப்பட்டுவிட்டன. இன்றும் இந்தக் கொடுமைகள் நடைபெறுகின்றன. இந்தக் கொடுமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிற அதிகாரம் இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உண்டு.

இந்திய அரசு உலகக் கடல் எல்லைகள் என்பவற்றை (International Maritime Boundary) அடையாளம் கண்டு, அந்த எல்லைகளைக் கடக்கும் மீனவர்கள் பேரில் இலங்கையோ, பங்காளதேஷோ தாக்குதல் நடத்து வதை ஏன் தடுக்கவில்லை? அப்படித் தடுப்பதற்கான எல்லா அதிகாரங்களும் மற்றும் கடலோரக் காவல் படைகளும், வானூர்திகளும் இந்திய அரசிடமே உள்ளன.

ஆனால், 1967இல் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகம் 1969 ஆகஸ்டில் இந்திரா காந்தியுடன் கூட்டு வைத்தது முதல் - 1976 வரை யிலும், பின்னர் 1977க்குப் பிறகும் தமிழக மக்கள், இந்திய அரசின் மெத்தனத்தை எதிர்த்துப் போராடுவதை விட்டுவிட்டு, தமிழக மீனவர்கள் கொல்லப் படுகிற போதெல்லாம், குடும்பத் தலைவர்களை இழந்த மீனவர்களுக்கு ஆறுதல் கூறுவதும், பண இழப்பீடு தருவதும், இந்திய அரசுக்கு, முதலமைச்சர் வேண்டுகோள் மடல்கள் எழுதுவதையும் மட்டுமே செய்கிறார்கள்.

1974, 1976 இந்திய-இலங்கை ஒப்பந்தங்களின்படி தமிழரின் மண்ணான கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்துவிட்ட பிறகு, தமிழக மீனவர்களின் மீன் பிடிப்புக்கான கடல்பரப்பு குறைந்துவிட்டது. இந்த நிலையில் - கச்சத்தீவு ஓரத்தில் சென்று மீன் பிடித்தால் கூட, இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர் கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். கடந்த 20 ஆண்டுகளில் அப்படிக் கொல்லப்பட்ட மீனவர்கள் 600 பேருக்கு மேல் ஆவர்.

அப்படிச் சுட்டுக்கொன்றிட இலங்கைக் கடற்படைக்கோ, இலங்கை மீனவருக்கோ ஏது அதிகாரம்? தமிழகக் கடல் எல்லைக்குள் தவறி நுழைந்த இலங்கை மீனவர்களைத் தமிழகக் காவல்படையோ, இந்திய அரசின் தமிழகக் கடலோரக் கண்காணிப்புப் படையோ எப்போதாவது சுட்டுக்கொன்றதா? இல்லை.

அதேநேரத்தில் தமிழக அரசின் கடலோரக் காவல் படை, தமிழக மீனவர்களைக் கொல்லுகிற இலங்கைக் கடற்படை மீது ஏன் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வில்லை? ஏன் அவர்களைக் கைது செய்து, வழக்குப் போட்டுத் தண்டனை தரவில்லை?

இப்படியெல்லாம் தமிழர்களாகிய நாம் சிந்திக்கவும், தமிழகத்தை ஆண்டவர்களுக்கும், ஆளுகிறவர்களுக்கும் நெருக்கடி தரும் தன்மையில் போராட்டங்கள் நடத்தவும் தவறிவிட்டோம்; இந்திய அரசின் ஓரவஞ்சனையைக் கண்டிக்கவும், எதிர்த்துப் போராடவும் தவறிவிட்டோம்.

இப்போக்கைக் கண்டனம் செய்யும் வகையில் - தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்புத் தரப் போதுமான அளவுக்கு - உலகக் கடல் எல்லைப் பாதுகாப்புப் படைக்குக் கூடுதலான படை வசதிகளைச் செய்ய வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம், இந்திய அரசுச் செயலாளருக்கும், இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகருக்கும், இந்தியப் பாதுகாப்புத் துறைச் செய லாளருக்கும், இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் முதலானவர்களுக்கும் - 2011 அக்டோபர் 14 அன்று ஆணையிட்டது. அக்கட்டளையை அவர்கள் நிறை வேற்றவில்லை. அதை முன்வைத்து, அவர்கள் பேரில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதை இரத்துச் செய்ய வேண்டும் என்று, இந்திய அரசுச் சார்பில், 23.2.2012-இல் உயர்நீதிமன்றத் தாரிடம் இந்திய அரசின் சார்பில் கோரிக்கை வைக் கப்பட்டது.

அதைத் தமிழக அரசு உடனே எதிர்த்தது.

அதற்கு நீதிமன்றத்தில் மறுமொழி கூறிய இந்திய அரசு கூடுதல் வழக்குரைஞர் (Additional Solicitor General) என்ன விளக்கம் சொன்னார்?

“தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கள் எல்லாம், இலங்கைக் கடல் எல்லைக்குள்தான் நடந்தன. எனவே இந்திய அரசின் கப்பல் படை, உலகக் கடல் எல்லையைத் தாண்டிப் போக முடியாது. அப்படிப் போனால் அது அயல்நாட்டின் (இலங்கை யின்) பேரில் படையெடுத்ததுபோல் ஆகும்” என்று, 23.2.2012-இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் கூறியுள்ளார்.

மேலும், “பன்னாட்டுக் கடல் எல்லையைத்தாண்டும் தமிழக மீனவர்கள், இலங்கையைச் சேர்ந்த தமிழ் மீனவர்களின் கோபத்துக்கு ஆளாகத்தான் நேரிடும். தொடர்ந்து இந்தியக்கடல் எல்லையில் மீன்கள் அரிக்கப்பட்டுவிட்டதால், உண்மையில் இந்தியக் கடல் எல்லையானது மீன்கள் அற்ற பகுதியாகிவிட்டது. அதனால் தமிழக மீனவர்கள் உலகக் கடல் எல்லையைத் தாண்டிப் போகிறார்கள்; 250, 300 குதிரை வேகம் கொண்ட இயந்திரப் படகுகளில் சென்று மீன்பிடிக்கிறார்கள். அப்படிப் போகும்போது அவர்கள் தாக்குதலுக்குத்தான் ஆளாவார்கள்....” என்றும் கூறி, இந்திய அரசு வழக்குரைஞர் எம். இரவீந்திரன் 23.2.2012-இல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வாதாடியுள்ளார். இந்தச் சூழலில்தான், இந்திய அரசு எப்போதுமே செயல்படுகிறது. இது முற்றிலும் தமிழரை உதாசீனம் செய்யும் போக்காகும்.

கடந்த 15.2.2012 அன்று, கேரளாவில் கொச்சியை ஒட்டியுள்ள அரபிக்கடல் பகுதியில் அஜீஸ்பிங்கி, ஜலஸ்டின் என்கிற வெலண்டைன் என்னும் ஒரு தமிழக மீன வரும், ஒரு கேரள மீனவரும் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியே சென்ற இத்தாலி நாட்டுச் சரக்குக் கப்பலில் இருந்த இரண்டு கப்பல் படை வீரர் கள், அந்த இரண்டு மீனவர்களை நோக்கிச் சுட்டுக் கொன்றுவிட்டனர். “அவர்கள் கடல் கொள்ளைக்காரர்கள் என்று நினைத்துச் சுட்டுக்கொன்றுவிட்டதாகக்” கூறினார்கள்.

உடனேயே, கேரள மாநில அரசே தம் காவல் படை யை இத்தாலிக் கப்பலுக்குள் அனுப்பி, மீனவர்களைச் சுட்டுக்கொன்ற இரண்டு கப்பல் படை வீரர்களைக் கைது செய்து, சிறையில் அடைத்து, வழக்குப் போட்டுள்ளது.

இதை எதிர்கொள்ள வேண்டி, இத்தாலி அரசு, அந்த நாட்டின் அயல் உறவு இணை அமைச்சர் ஸ்டெபன் டி மிஸ்டுரா (Stefen De Mistura) என்பவரை இந்திய அரசிடம் அனுப்பிப் பேச வைத்துள்ளது. அவர் இந்திய அரசின் அயலுறவு இணை அமைச்சர், பிரனீத் கவுர் (Preneet Kaur) என்பவரைக் கண்டு 22.2.2012-இல் பேசிவிட்டு, கொச்சிக்கு வந்து, அங்கு 23.2.2012-இல் நடைபெற்ற வழக்கை நடத்திட எல்லாம் செய்துள் ளார்.

இதற்கிடையில் ஜலஸ்டின் என்கிற மீனவரின் மனைவி ஒரு கோடி ரூபா இழப்பீடு கோரியும், அஜீஸ் பிங்கி என்பவரின் உடன் பிறந்தவர்கள் இரண்டு கோடி ரூபா இழப்பீடு கோரியும் கொச்சி நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடுத்துள்ளனர்.

இத்தாலி அரசு, தங்கள் நாட்டு, கப்பல் படை வீரர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் முதலாவது தகவல் அறிக்கையையே  தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் கோரியுள்ளது.

மேலும் இத்தாலி அரசு இக்குற்றச் செயல் பன்னாட்டுக் கடற்பகுதியில் நிகழ்ந்துள்ளதால் அவர்கள் நாட்டுக் கப்பல் படை வீரர்களைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் அவர்கள் பன்னாட்டுக் கடற் பகுதியில் இருந்த இந்திய மீனவர்களைச் சுட்டிருந்தால் ஏன் தப்பியோட முயன் றனர். இதிலிருந்து அவர்கள் இந்தியக் கடல் எல்லைக் குள் மீன்பிடித்து கொண்டிருந்தவர்கள் மீது சுட்டுக் கொன்றுள்ளனர் என்பது தெளிவாகிறது. எனவே இந்த இத்தாலியர்கள் மீது இந்தியச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்று இந்திய அயலுறவு அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இச்செய்தியில் கேரள மாநில அரசு இத்தாலி வீரர் கள் மீது மேற்கொண்ட குற்றவியல் நடவடிக்கைகளை இந்தளவுக்கு வலிந்து உடன்பட்டுச் செயல்படும் இந்தியஅரசு தமிழக மீனவர்களை இலங்கை அரசும், இலங்கை மீனவர்களும் கொடுமைப்படுத்தும் போதும், கொன்று வருவது குறித்தும் கிஞ்சித்தும் கவலை கொள்ளாது இலங்கையின் அத்துமீறிய செயல்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் தொடரமுன்வராது இருந்தே வருகின்றது. இது மிகவும் ஓரவஞ்சனைத் தன்மையானது. கடும் கண்டத்துக்குரியதாகும்.

இந்நிலையில் தமிழகக் கடலோரக் காவல் படை யானது, தமிழக மீனவர்களைக் கொல்லும் இலங்கை மீனவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?

இந்திய அரசின் அயலுறவுத் துறையினர், கேரள அரசின் நடவடிக்கையில் தலையிட முடியவில்லை என்பதுடன் அதனடன் இணைந்து செயல்படுகிறது.

ஆனால் தமிழகத்தின் நிலை என்ன?

நாகை மீனவர்கள் எட்டுப்பேர் 18.2.2012-இல் புறப்பட்டு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கோடியக் கரைக் கடலை ஒட்டி, 35ஆவது கடல் மைல் பகுதியில் 21.2.2012 இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை மீனவர்கள் ஏழு படகுகளில் வந்து, இவர் களின் படகுகளைச் சுற்றிவளைத்து, தமிழக மீனவர் கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியும், அரிவாள் களால் அவர்களை வெட்டியும் கொடுமைப்படுத்திவிட்டு ஒரு இலக்கம் ரூபா பெறுமான மீன்களையும் மற்றும் கைப்பேசிகளையும் பறித்துக் கொண்டு போய்விட்டனர். வையாபுரி, வடிவேலு என்கிற இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். தப்பித்தோம், பிழைத்தோம் என்று 22.2.2012 காலை 8 பேரும் நாகைக்குத் திரும்பி வந்து, எல்லோரும் நாகை மருத்துவமனையில் வைத்தியம் பெறுகிறார்கள்.

தமிழ்நாட்டு அரசு, கேரள அரசு போல், துணிச்ச லாக, அந்த இலங்கை மீனவர்களைத் துரத்திச் சென்று, கைது செய்து, நாகைக்குக் கொண்டு வந்து ஏன் அவர்கள் பேரில் வழக்குப் போடக் கூடாது?

தமிழக முதலமைச்சர் அவர்கள், இந்திய அரசினைக் கெஞ்சிக் கொண்டும், உருக்கமான வேண்டுகோள் மடல்களை அவர்களுக்கு எழுதிக் கொண்டும் இருந் தால், தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும் அநீதியும் தீர்ந்துவிடுமா? தமிழக மீனவர்களுக்கு நேரும் தீங்கு, எல்லாத் தமிழர் களுக்கும் இழைக்கப்படும் தீங்கு அல்லவா?

தமிழக மீனவர்களின் உரிமைகளைக் காத்திடப் போதிய அதிகாரம் தமிழ்நாட்டு அரசுக்கும் உண்டு.

ஆனால் தமிழகத்திலுள்ள கட்சிகளின் தலைவர்களிடையேயும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 59 பேர்களிடையேயும் கடந்த காலங்களிலும், இப்போதும், தமிழகத்தைச் சூழ்ந்துள்ள - மய்ய அரசினால் இழைக் கப்படுகிற கேடுகளை எதிர்த்து, ஒரே குரலில் பேசுவதும், எழுதுவதும், ஒன்றுபட்டுப் போராடுவதும் ஆன நிலை இல்லை; இல்லவே இல்லை.

இதுபற்றித் தமிழகத் தமிழர் எல்லோரும், தமிழகக் கட்சிகளின் தலைவர்கள் எல்லோரும், தமிழகத்தை 45 ஆண்டுகளாக மாறி, மாறி ஆட்சி செய்யும் தி.மு.க. - அ.தி.மு.க. கட்சிகளின் தலைவர்களும், இவர்களின் ஆதரவாளர்களாக அவ்வப்போது தொங்கும் வவ்வால் கட்சிகளின் தலைவர்களும் மனங்கொண்டு சிந்திக்க வேண்டும் என வேண்டுகிறோம்.

- வே. ஆனைமுத்து

Pin It