2012ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 11ஆம் நாளன்று, புகுசிமா அணுஉலை நேர்ச்சி (விபத்து) நடந்து ஓராண்டு ஆகிறது. கடந்த ஓராண்டில் உலகம் முழு வதும் அணுசக்திக்கு எதிரான கருத்துகள் மேலோங்கி ஒலிக்கின்றன. செருமனி உடனடியாக 8 அணுமின் நிலையங்களை மூடுவதாகவும், மீதியுள்ள 9 அணு நிலையங்களை 2022க்குள் மூடப்போவதாகவும் அறிவித்தது. அணுமின் நுகர்வில் உலகில் முதலிடத் தில் உள்ள பிரான்சு, தன் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில், அணுமின் உற்பத்தி 75 விழுக்காடாக இருப்பதை, 2025க்குள் 50 விழுக்காடாகக் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் மகாராட்டித்தில் ஜெய்தாபூரிலும் மேற்கு வங்காளத்தில் ஹரிப்பூரிலும் மக்களின் கடும் எதிர்ப்புக் காரணமாக அணுமின் நிலையங்கள் அமைக் கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இரஷ்ய நாட்டின் உதவியுடன் கூடங்குளத்தில் அமைக் கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தில் 2011 திசம்பரில் 1000 மெகாவாட் கொண்ட ஒரு அணுஉலையும்; 2012 சூன் மாதத்தில் 1000 மெகாவாட் கொண்ட மற்றொரு அணுஉலையும் இயக்கத் தொடங்குவதாக இருந்தது. இதை எதிர்த்துக் கூடங்குளத்தைச் சுற்றி யுள்ள ஊர்களில் வாழும் மக்கள் ஒன்றுதிரண்டு இடிந்தகரையில் 2011 செப்டம்பர் முதல் தொடர்ந்து போராடி வருகின்றனர். அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் இப்போராட்டத்தை முன்னின்று நடத்துகிறது.

கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி தமிழ்நாடு முழுவதும் கூட்டங்களும், கிளர்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. இடிந்தகரையில் மக்களின் போராட்டத்திற்குக் கிறித்துவப் பாதிரிகள் ஆதரவாகச் செயல்படுகின்றனர் என்று கூறி, பா.ச.க.வும் இந்து சங் பரிவார அமைப்புகளும் எதிர்க்கின்றன. திருநெல் வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த போராட்டக் குழுவினரை இந்துத்துவ குண்டர்கள் தாக்கினார்கள். இப்போராட்டத்திற்கு எதிராகக் காங்கி ரசுக் கட்சியும் பரப்புரை செய்து வருகிறது. 4.2.12 அன்று திருநெல்வேலியில் காங்கிரசுக் கட்சி நடத்திய பொதுக் கூட்டத்தில் நடுவண் அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என்று பேசினர்.

நடுவண் அரசு அமைத்த 15 பேர் கொண்ட வல்லுநர் குழு கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆய்வு செய்தது. போராட்டக் குழுவினரைச் சந்தித்து, அணுஉலை எல்லாவகையிலும் பாதுகாப்பானதாக இருக்கிறது என்று கூறியது. ஆனால் போராட்டக் குழு வினரின் முதன்மையான வினாக்களுக்கு விடை யளிக்காமல் தில்லிக்குத் திரும்பியது. நடுவண் அரசு அப்துல் கலாமை அனுப்பி அணுஉலை மிகவும் பாது காப்பானதாக இருக்கிறது என்று அறிவிக்கச் செய்தது. ஆனால் அப்துல் கலாமின் கூற்றோ கோமாளித்தன மாக இருந்தது.

அ.தி.மு.க. தலைமையில் உள்ள தமிழ்நாட்டு அரசு, 2011 அக்டோபரில் உள்ளாட்சிகளுக்குத் தேர்தல் நடைபெறவிருந்ததைக் கருத்தில் கொண்டும், கூடங் குளம் போராட்டம் காங்கிரசுத் தலைமையிலான நடுவண் அரசுக்கு ஒரு தலைவலியாக இருக்கட்டுமே என்ற அரசியல் உள்நோக்கத்தினாலும், 22.9.2011 அன்று தமிழக அமைச்சரவையில்,“கூடங்குளம் பகுதி மக்களின் அச்சத்தைப் போக்கும் வரையில், கூடங்குளத்தின் அணுமின்நிலையத்தின் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று ஒரு தீர்மானம் இயற்றியது. நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தலை மையில் ஒரு குழுவை தில்லிக்கு அனுப்பி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இத்தீர்மானத்தை அளித்து விளக்கியது.

மேற்கு வங்காளத்தில் பொதுவுடைமைக் கட்சிகளின் தலைமையில் நடந்த ஆட்சியே, இந்தியப் பெருமுதலாளி களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சிவப்புக் கம்பளம் விரித்தது; சிங்கூரிலும் நந்திகிராமிலும் தங்கள் நிலம் பறிக்கப்படுவதற்கு எதிராகப் போராடிய மக்களைக் கடுமையாக ஒடுக்கியது. இந்நிலையில், புதிய பொருளாதாரக் கொள்கையில் அழுத்தமான நம்பிக்கை கொண்ட முதலமைச்சர் செயலலிதா மட்டுமே வேறு வகையில் நடந்து கொள்வார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? இதில் தி.மு.க. - அ.தி.மு.க.; காங்கிரசு-பா.ச.க. என எல்லாக் கட்சிகளுக்கும் ஒரே கொள்கைதான்.

கூடங்குளம் அணுமின்நிலையத்திற்குத் தன் உள்ளத்தில் உள்ள ஆதரவை வெளிப்படுத்துவதற் கான ஒரு கருவியாக முதலமைச்சர் செயலலிதா, ‘மக்களின் அச்சத்தைப் புரிந்துகொண்டு அறிக்கை தருவதற்கு’ எனச் சொல்லி, ஒரு வல்லுநர் குழுவை அமைப்பதாக 4.2.2012 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தார். 9.2.2012 அன்று நால்வர் கொண்ட வல்லுநர் குழுவை செயலலிதா அரசு அறிவித்தது. இக்குழுவில் இந்திய அணுசக்திக் கழகத்தின் மேனாள் தலைவரும் - அணுசக்திக்கு ஆதரவாகத் தீவிரமாகப் பரப்புரை செய்துவருபவரும் ஆன எம்.ஆர். சீனி வாசன் இடம்பெற்றார் என்ற செய்தி வெளிவந்ததும், இக்குழுவின் முடிவு அணுஉலைக்கு ஆதரவாகவே இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது.

அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி ஆய்வு மையத்தின் பேராசிரியர் எஸ். இனியனை ஒருங்கி ணைப்பாளராகக் கொண்ட நால்வர் குழுவினர் 18.2.2011 அன்று கூடங்குளம் அணுமின் நிலையத் தைப் பார்வையிட்டனர்; அங்குள்ள விஞ்ஞானிகளிடம் கலந்துரையாடினர்; 19.2.2011 அன்று போராட்டக் குழுவினருடன் 3ஙூ மணிநேரம் கலந்துரையாடினர். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நல்லவண்ணம் இருப்பதாகக் கூறினர். சுப. உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவினர், தமிழக அரசின் வல்லுநர் குழுவினரிடம் - தாங்கள் அமைத்துள்ள வல்லுநர் குழுவிடம் பேச வேண்டும்; அத்துடன் கூடங்குளம் பகுதி மக்களிடமும் பேச வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை வைத்தனர். இவ்வாறு செய்வதற்கு எங்களுக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை என்றுகூறி வல்லுநர் குழுவினர் இக்கோரிக்கைகளை ஏற்க மறுத்து விட்டனர்.

தமிழக அரசு அமைத்த வல்லுநர் குழுவினர் 17.2.2012 அன்று தலைமைச் செயலகத்தில் முதல மைச்சர் செயலலிதாவைச் சந்தித்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய இக்குழுவின் ஒருங்கிணைப் பாளர் இனியன், “கூடங்குளத்தில் சில நாள்கள் தங்கி யிருந்து அங்குள்ள பொதுமக்கள், போராட்டக் குழுவின் பிரதிநிதிகள், இந்த விவகாரத்தில் புறக்கணிக்கப்பட்ட தாகச் சொல்லப்படுபவர்கள் என அனைவரையும் சந்தித்துக் கருத்து கேட்க உள்ளோம்” என்று செய்தி யாளர்களிடம் கூறினார்.

ஆனால் ஒருநாள் இடைவெளியிலேயே இனியன் ‘பல்டி’ அடித்துவிட்டார். கூடங்குளம் பகுதி மக்களின் அணுஉலையின் ஆபத்துகள் குறித்த அச்ச உணர் வை அறிவதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழு மக்களைச் சந்திக்க மறுத்ததை என்னவென்று சொல் வது? மக்களைச் சந்திக்க எங்களுக்கு அதிகாரம் அளிக் கப்படவில்லை என்பது - எல்லாவற்றையும் ஆளும் அதிகார வர்க்கம் முன்கூட்டியே முடிவு செய்துவிட்டது - வல்லுநர் குழு என்பது ஒரு நாடகம் என்பதையே காட்டுகிறது.

எதிர்பார்த்தபடியே வல்லுநர் குழுவினர், “கூடங்குளம் அணுமின் நிலையம் எல்லா வகையிலும் பாதுகாப் பானதாக இருக்கிறது. 6.5 எக்டர் அளவுக்கு நிலம் நடுக்கம் ஏற்பட்டாலும், 25 அடி உயரத்துக்கு ஆழிப் பேரலை தாக்கினாலும் அணுஉலைக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படாது” என்று நெல்லையில் செய்தி யாளர்களிடம் தெரிவித்தனர். இத்தன்மையில்தான் அரசுக்கு அறிக்கை அளிக்கப் போகிறார்கள் என்பது உறுதி.

வளர்ச்சி பெற்ற - சுதந்தரமும் சனநாயகமும் சிறந்தோங்கி இருப்பதாகக் கூறப்படும் சப்பான் நாட்டு அரசே அணுஉலை பாதுகாப்புக் குறித்துப் பொறுப் பற்று இருப்பதுடன், உண்மைகளைப் பொதுமக்கள் அறியாதவாறு மறைக்கும்போது - பொறுக்கித் தின்பதே - கோடிக்கணக்கில் பணம் குவிப்பதே குறிக்கோளாகக் கொண்ட அரசியல்வாதிகளும், உயர் அதிகாரிகளும் ஆட்சி செய்யும் இந்தியாவில், நடுவண் அரசும், மாநில அரசுகளும் அளிக்கின்ற உறுதிமொழிகள் எவ்வகை யிலும் உண்மையானதாக இருப்பதற்கான வாய்ப்பே இல்லை.

சப்பானில் கடந்த 2011 மார்ச்சு மாதம் புகுசிமா அணுஉலை நேர்ச்சியின் கொடிய விளைவுகள், அரசின் பித்தலாட்டங்கள் கடந்த சில மாதங்களாக வெளிப்பட்டு வருகின்றன. ஆழிப்பேரலை தாக்கிய தால் அணுஉலைகளிலிருந்து வெளிப்பட்ட அணுக் கதிர்வீச்சின் அளவு (7,70,000 வசடைடiடிn நெஉளூரநசநடள) ஹிரோஷிமா நகரத்தின் மீது போடப்பட்ட அணுகுண்டி லிருந்து வெளியேறிய அணுக்கதிர் வீச்சைப் போல் இது 60 மடங்கு அதிகம். அணுக்கதிர்வீச்சு (ஊயநளரைஅ-137) பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்புக்குப் பரவியது. 20 கி.மீ. சுற்றளவிலிருந்து ஒரு இலட்சம் மக்கள் எந்த முன் அறிவிப்பும் இன்றி வெளியேற்றப் பட்டனர். இவர்கள் தொடர்ந்து கதிர் வீச்சுக்கு உள்ளாகி வருகின்றனர். 200 கி.மீ. தொலைவில்கூட தாய் மார்களின் தாய்ப்பாலிலும் சிறுவர்களின் சிறுநீரிலும் கேசியம்-137 அதிக அளவில் கலந்துள்ள்து.

சப்பான் அரசு அமைத்த ஆய்வுக்குழு 2011 திசம்பரில் அதன் அறிக்கையை அரசிடம் அளித்தது. இத்தகைய ஆபத்தான நிலைகளை எதிர் கொள்வதற்கான ஏற்பாடுகளை டோக்கியோ மின்உற்பத்திக் கழகமும் (Tepco), அணுசக்தி மற்றும் தொழிற்சாலைப் பாதுகாப்பு முகமையும் (Nuclear and Industry Safety Agency) அரசும் செய்யத் தவறிவிட்டன என்று ஆய்வுக்குழு குற்றம் சாட்டியுள்ளது. 507 பக்கங்கள் கொண்ட அந்த ஆய்வறிக்கையில், “அதிகாரிகள் ஆழிப் பேரலையின் உயரம் 20 அடிக்குமேல் இருக்காது என்று தவறாக மதிப்பிட்டனர்; ஆனால் ஆழிப்பேரலை 45 அடி உயரத்திற்கு எழும்பித் தாக்கியது. புகுசிமா அணுஉலை 20 அடி உயரம் கொண்ட ஆழிப்பேரலை யின் தாக்குதலைத் தாங்கக் கூடிய தன்மையில் மட்டுமே பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டதாகும். அணுஉலையைக் குளிர்விப்பதற்காக வைக்கப்பட்டி ருந்த மின்ஆக்கிகளும் (ஜெனரேட்டர்களும்) செய லிழந்துவிட்டன. அதாவது, குளிர்விப்புச் சாதனங்கள் செயலிழந்துவிட்டன என்பதை அறிவதற்கே ஊழி யர்களுக்குப் பல மணிநேரமாயிற்று. இந்த நெருக்கடி நிலையை எப்படி எதிர்கொள்வது, மாற்று வழிகள் என்ன என்பன குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டி ருந்தால், 2011 மார்ச்சு 12, 14, 15 ஆகிய நாள்களில் அணுஉலையிலிருந்து பெருமளவில் ஏற்பட்ட கதிர் வீச்சைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும்” என்று கூறப் பட்டுள்ளது (பிரண்ட்லைன் 2012, பிப்ரவரி 24).

புகுசிமா நேர்ச்சி நிகழ்வதற்கு முன்பே, 20 மாதங்களாகச் சப்பானில் உள்ள அணுஉலைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பல குறைபாடுகள் உள்ளன என்பது சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. ஆனால் அரசோ, புகுசிமா அணுஉலையை இயக்கும் பொறுப்பில் இருந்த டோக்கியோ மின் உற்பத்திக் கழகமோ, அணுசக்தி பாதுகாப்பு முகமையோ எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. புகுசிமா நேர்ச்சி நிகழ்வதற்கு 4 நாள்களுக்குமுன், 7.3.2011 அன்று டோக்கியோ மின்கழகமும், அணுபாதுகாப்பு முகமையும் கூட்டாக நடத்திய கூட்டத்தில், புகுசிமா அணுஉலையை ஆழிப் பேரலை 33 அடி உயர அளவில் தாக்க வாய்ப்புள்ளது - ஆனால் புகுசிமா அணுஉலை 20 அடி உயரம் வரையிலான ஆழிப்பேரலையின் தாக்கத்தை எதிர் கொள்ளும் அளவுக்கே வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சிலர் தெரிவித்த கருத்து செவிடன் காதில் ஊதிய சங்கு போலாயிற்று.

புகுசிமா அணுஉலையிலிருந்து தொடர்ந்து வெளி யேறும் கதிர்வீச்சைக் குறைத்து, அதைச் செயலிழக்கச் செய்ய 30 ஆண்டுகளாகும். இதற்கு பலகோடிப் பணம் செலவாகும்.

சப்பான் நாட்டின் அணுசக்தி பாதுகாப்புத் தலைவர் ஹருக்கி மதராமே, “சப்பான் நாட்டின் அணுசக்திப் பாதுகாப்பு ஏற்பாட்டுமுறைகளில் பல குறைபாடுகள் உள்ளன; காலவழக்கொழிந்தவையாகவும், உலகத் தரத்திற்குத் தாழ்ந்த நிலையினவாகவும் உள்ளன. மார்ச்சு மாதம் சுனாமி தாக்கியபோது நல்ல பாதுகாப்பு அளிக்கத் தவறியதற்காக மன்னிப்புக் கோருகிறேன். இக்குறைகளைக் களைவதற்குப் பல அதிகாரிகள் தடையாக இருந்தனர்” என்று கூறி இருக்கிறார் (தி இந்து 16.2.2012).

டோக்கியோ நகரின் யு.என். பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் ஜான் கிளாமர் 19.2.2012 அன்று பெங்களூரில் புகுசிமா அணுஉலை நேர்ச்சி குறித்து உரையாற்றினார். அப்போது, “புகுசிமா நேர்ச்சிக்குப்பின்னர், சப்பான் அரசு மக்களுக்கு உரிய தகவல்களைத் தெரிவிக்கவில்லை. அதிகாரிகள் தெரி வித்த தகவல்களும் தவறானவைகளாக இருந்தன. ஒரு குறிப்பிட்ட அளவிலான கதிர்வீச்சு பாதுகாப்பானது என்று அரசு கூறியது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் (WHO) நிர்ணயித்துள்ள கதிர்வீச்சின் பாது காப்பு அளவு என்பதைக் காட்டிலும் இது 20 மடங்கு அதிகமாக இருந்தது. தமிழ்நாட்டின் கடற்கரைகளில் அமைக்கப்படுகின்ற அணுஉலைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும். அணுஉலை தேவையா என்பதையே தீவிரமாக மறு ஆய்வு செய்ய வேண்டும். அரசுகள், மக்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காகப் பல உண்மைகளை மறைக்கின்றன் (தி இந்து 20.2.12, பெங்களூரு பதிப்பு).

சப்பான் அரசு அமைத்த ஆய்வுக்குழுவிடம் ஒரு விவசாயி சொன்னார் : “விபத்து நடந்த அடுத்த மாதம் (ஏப்பிரல்) கதிர்வீச்சு பாதிப்பு உங்கள் பகுதியில் இல்லை என்று அரசு எங்களிடம் சொன்னது. ஆனால் சூன் மாதம் நான் ஊரைவிட்டு வெளியேற வேண்டும் என்று கூறியது. நான் வளர்த்து வந்த மாடுகளின் இறைச்சியிலும் கதிர்வீச்சு இருப்பதால், அவற்றை இங்கேயே கொன்று புதைத்துவிட்டு, நான் வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர்”.

சப்பான் நாட்டில் நிலநடுக்கங்களும், ஆழிப்பேர லையின் தாக்குதல்களும் நீண்டகாலமாக நிகழ்ந்து வருபவை. இந்த நெடிய அனுபவங்களும், உயர்ந்த தொழில்நுட்பமும், பணவலிமையும், மக்கள் பற்றுக் கொண்ட அரசும் உடையது சப்பான் நாடு. ஆயினும் அந்நாட்டிலேயே அணுஉலைகளுக்குப் போதிய பாது காப்பு ஏற்பாடுகளை உருவாக்கவில்லை. புகுசிமா அணுஉலை நேர்ச்சி நடந்தபோது - அப்பேரழிவை உரிய வகையில் தடுக்கவும், எதிர்கொள்ளவும் தவறி விட்டனர். பொறுப்பற்ற போக்கும், ஊழலும், நிர்வாகச் சீர்கேடுகளும் மலிந்த இந்தியாவில் அமைக்கப்படும் ஒவ்வொரு அணுமின் உலையும் ஒவ்வொரு தாயின் கருப்பையிலும் வைக்கப்படும் அணுகுண்டு போன்ற தேயாகும்.

இந்தியாவில் முன்பே அணுமின் நிலையங்களில் விபத்துகள் நடந்துள்ளன. இவற்றைப் பழுதுநீக்கம் செய்யப் பெருந்தொகையும், நீண்டகாலமும் தேவைப் பட்டன. அவற்றுள் சில விவரங்கள் :

1987 மே 4 அன்று கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உலைத்தண்டு சிதைந்து 2 ஆண்டுகள் மூடல். செலவு 300 மில்லியன் டாலர்.

1989 செப்டம்பர் 10 அன்று தாராப்பூர் அயோடின் கசிவு - கதிர்வீச்சு பாதுகாப்பு அளவைவிட 700 மடங்கு. செலவு 78 மில்லியன் டாலர்.

1995 பிப்பிரவரி 3, இராஜஸ்தான் கோட்டா அணுமின் நிலையத்தில் ஹீலியம்/கனநீர் கசிவு. 2 ஆண்டுகள் மூடல். செலவு 280 மில்லியன் டாலர்.

2002 அக்டோபர் 22 அன்று கல்பாக்கத்தில், 100 கிலோ சோடியம் (கதிர்வீச்சு) கசிவு. செலவு 30 மில்லியன் டாலர்.

கடந்த ஆண்டு சப்பான் நாட்டில் நடந்த புகுசிமா அணுநேர்ச்சியால் வெளிப்பட்ட அணுக்கதிர் வீச்சு பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்குப் பரவி யுள்ளது. பலநூறு கிலோமீட்டர் பரப்பளவில் கதிர் வீச்சின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே தமிழ் நாட்டின் வடகோடியில் உள்ள கல்பாக்கத்திலும், தென் பகுதியில் உள்ள கூடங்குளத்திலும் உள்ள அணுமின் நிலையங்களில், ஊழியர்களின் கவனக் குறைவா லோ, பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாகப் பராமரிக் காததாலோ (போபால் யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்டதுபோல) இவற்றில் திடீரென்று ஏற்படும் பெருங்குறைபாடுகளாலோ, நிலநடுக்கம், ஆழிப்பேரலை போன்ற இயற்கைச் சீற்றங்களின் தாக்கத்தாலோ பெருமளவிலான நேர்ச்சிகள் நடந்தால் தமிழ்நாடே சுடுகாடாகும் என்பது திண்ணம். கதிர்வீச்சின் கடும் பாதிப்புகளால் தமிழினமே பல தலைமுறைகளுக்கு உயிர்வாழத் தகுதியற்ற இனமாக மாறிவிடும்.

2012 பிப்பிரவரி முதல் தமிழ்நாட்டில் சென்னை தவிர மற்ற நகரங்களில் 8 மணிநேர மின்வெட்டு; சிற்றூர்களிலோ இது 10 முதல் 12 மணிநேரம் என்ற அளவில் இருக்கிறது. இதனால் வேளாண்மை, விசைத்தறி, சிறுதொழில்கள் என எல்லாத் தொழில் களும் நிலைகுலைந்துபோய் உள்ளன. தொழிலாளர் களும் இவற்றின் உரிமையாளர்களும் மக்களும் வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கின்றனர். தி.மு.க. ஆட்சியின் போது இருந்த 2 மணிநேர மின் வெட்டு என்பது திடீரென 8 மணிநேர மின்வெட்டாக மாறியது ஏன்? எப்படி? என்று மக்கள் திகைத்துப் போய் உள்ளனர். தமிழ்நாட்டில் 2000 மெகாவாட் அளவிலான தனியார் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டி ருப்பது ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. 2012 ஆகசுட்டு மாதத்திற்குள் மின்வெட்டு முற்றிலுமாக நீக்கப்படும் என்று முதலமைச்சர் ஆளுநர் உரையில் தெரிவித்தார். ஆனால் ஆகசுட்டு மாதத்திற்குள் 8 மணிநேர மின்வெட்டை ஓரளவேனும் குறைக்க முடி யுமா? என்பது பெரிய வினாக்குறியாக அச்சுறுத்துகிறது.

திருநெல்வேலியில் 4.2.2012 அன்று கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஆதரவாகக் காங்கிரசுக் கட்சி நடத்திய பொதுக் கூட்டத்தில் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், “இந்தியா 5 ஆண்டு காலத்தில் கூடுதலாக 78,000 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கே படாத பாடுபடுகிறது. ஆனால் சீனா ஓராண்டில் 78,000 மெகாவாட் மின்சாரத்தைக் கூடுதலாகத் தயாரிக்கிறது. அதனால் சீனா எல்லாத் துறைகளிலும் இந்தியாவை விஞ்சி நிற்கிறது. சீனாவுக்கு இணையாக நாமும் முன்னேற வேண்டாமா?” என்று பேசியிருக்கிறார். 50 ஆண்டுகளுக்கு மேல் நடுவண் ஆட்சியில் இருந்து வரும் காங்கிரசு ஆட்சி மின் உற்பத்தியைப் பெருக்கி சீனாவைப் போல் இந்தியாவை ஏன் முன்னேற்ற வில்லை? இவர்களின் கைகளை யாராவது கட்டிப் போட்டிருக்கிறார்களா?

மின்உற்பத்தியைப் பெருக்குவதற்கு உருப்படியாக எதையும் செய்யாமல், கடந்த 20 ஆண்டுகளாகத் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற பெயரில் இந்தியப் பெருமுதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குவது ஆண்டிற்கு ஆண்டு அதி கரித்ததுதான் மின்பற்றாக்குறைக்குப் பெரிய காரண மாகும். குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்களின் ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்கு முன்னுரிமை தரப் படுகிறது. சென்னை துறைமுகத்திலிருந்து நாள்தோறும் 300 மகிழுந்துகள் ஏற்றுமதியாகின்றன. இவை 16 இலட்சம் யூனிட் மின்சாரம் செலவில் உருவானவை. ஆனால் இந்தியாவில் 100க்கு 33 வீடுகளுக்கு மின் இணைப்பே இல்லை. மின் இணைப்பு உள்ள வீடு களுக்கும் இப்போது 12 மணிநேரத்திற்குமேல் மின் வெட்டு! அணுமின் நிலையங்களிலிருந்து பெறப்படும் மின்சாரத்தை இவர்களுக்கா அளிக்கப் போகிறார்கள்? நாட்டின் வளர்ச்சி என்ற பெயரால் பெருமுதலாளி களுக்கே அது அளிக்கப்படும்.

அடுத்த 20 ஆண்டுகளில் 36 அணுஉலை களை இந்தியா முழுவதும் அமைப்பதற்காக இந்திய அரசு அமெரிக்கா, இரஷ்யா, பிரான்சு முதலான நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களு டன் ஒப்பந்தம் போட்டு வருகிறது. இப்படி உரு வாகப் போகும் அணுமின்உலைகளின் மதிப்பு 6 இலட்சம் கோடி உருபா ஆகும். இப்படிச் செய்து மக்கள் வரிப்பணத்தைப் பன்னாட்டு நிறுவனங் களும் இந்திய ஆளும் வர்க்கமும் பங்குபோட்டுக் கொள்ளப் போகிறார்கள். இதற்காகத்தான் மின் பற்றாக்குறையைப் போக்கிட அணுசக்தி மின் சாரம் ஒன்றே தீர்வு என்று ஆட்சியாளர்களும் ஆளும் வர்க்கத்தினரும் ஒன்றுசேர்ந்து ஊளை யிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஆண்டில் மிகக் குறைந்த நாள்களில் மட்டுமே வெயில் இருக்கின்ற அய்ரோப்பிய நாடுகளில் கதிரொளி மின் உற்பத்திக்கு முன்னுரிமை தரப் படுகிறது. செருமனியில் 17,000 மெகாவாட் கதிரொளி மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஓராண்டில் 330 நாள்களுக்குமேல் பகல் முழு வதும் கதிரொளி உள்ள இந்தியாவில், இந்நேரம் இரண்டு இலட்சம் மெகாவாட் கதிரொளி மின் சாரத்தை உற்பத்தி செய்திருக்க முடியும். இதற்குச் செலவு அதிகம் என்ற நிலையும் வர வர மாறி விட்டது. உலகச் சந்தையில் கதிரொளித் தகடுகளின் (Solar Panels) விலை குறைந்துவருகிறது. முன்பு ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க ரூ.12 செலவாயிற்று. இப்போது ஒரு யூனிட் ரூ.7.30 க்குத் தர நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இன் னும் 5 ஆண்டுகளுக்குள் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.5க்குக் கிடைக்கும் நிலை ஏற்படும் என்று இத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

நகரங்களில் வீடுகள், வணிக வளாகங்கள், தொழிலகங்கள், பெரிய உணவு விடுதிகள் ஆகிய வற்றின் மாடிகளில் கதிரொளித் தகடுகளைப் பொருத்தி, அவற்றிற்குத் தேவையான மின்சாரத் தை உற்பத்தி செய்து கொள்ளும் நிலையை அரசு உண்டாக்க வேண்டும். அதேபோன்று சிற்றூர்களில் எல்லா வீடுகளுக்கும் வேண்டிய மின்சாரத்தின் உற்பத்திக்கான சாதனங்களை ஒரே இடத்தில் பொருத்தலாம். இராஜஸ்தானில் மகிந்தரா கதிரொளி மின்தயாரிப்பு நிறுவனம் 2011ஆம் ஆண்டு 100 நாள்களில் 5 மெகாவாட் கதிரொளி மின் உற்பத்திக்கான சாதனங்களை நிறுவியது. இது 60,000 கிராமப்புற வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப் போதுமானதாக இருக்கிறது.

இதைப்போலவே காற்றாலை மின்உற்பத் தியைப் பெருக்கவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் தற்போது உற்பத்தியாகும் மின் சாரத்தில் 30 விழுக்காடு மின்கம்பிக் கசிவு மூலம் (Transmission loss) இழப்பு ஏற்படுகிறது. இங்கு மின் உற்பத்தி, மின்பகிர்வு இவற்றில் அளவுக்கு மிஞ்சிய ஊழல் நடப்பதே இதற்குக் காரணம். உலக சராசரி இழப்பு 9 விழுக்காடு தான். இதை உலக சராசரிக்குக் கொண்டு வந்தாலே நிறைய அளவு மின்சாரம் சேமிப்பாகும். சப் பானின் மின்உற்பத்தித் திறனுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் மின் உற்பத்தித் திறன் 27 விழுக்காடுதான். இதை மேம்படுத்தினால் பெரு மளவில் மின்சாரம் கிடைக்கும். எனவே அணு மின் உலைதான் ஒரே தீர்வு என்பது மக்களை வஞ்சிப்பதாகும்.

கூடங்குளம் அணுஉலைகளை விரைவில் இயக்குவதற்காக, நடுவண் அரசும்,மாநில அரசும் எதிர்ப்புப் போராட்டங்களைக் கடுமையாக ஒடுக்கிட அணியமாகிக் கொண்டிருக்கின்றன. 26.2.2012 சென்னையில் அணுசக்திக்கு எதிரான இயக்கத் தின் சார்பில் எழுச்சிமிக்க வகையில், கருத் தரங்கம், பேரணி, பொதுக்கூட்டம் ஆகியவை நடைபெற்றன. தமிழ் நிலத்தின் - தமிழர்களின் எதிர்காலம் அணுஉலைகளால் பேரழிவுக்கு உள் ளாகும் என்பதால், அரசின் அடக்குமுறைகளை முறியடிக்கும் வகையில், இடைவிடாது பரப்புரை செய்து, விழிப்பை உண்டாக்கி, மக்களை அணி திரட்டிப் போராடுவோம். வாரீர்!

Pin It