வெள்ளை மாளிகையில் கறுப்பு இனத்தவரா? 60 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க அரசியலில் இது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாகும். கறுப்பின மக்களின் சம உரிமைக்காகக் களம் அமைத்துப் போராடி வெற்றி பெறும் நிலையில், இனவெறியர்களால் இளைய மார்ட்டின் லூதர் கிங் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் ‘நான் ஒரு கனவு காண்கிறேன் (ஐ hயஎந ய னுசநயஅ)’ என்கிற உலகப் புகழ் மிக்க உரிமை முழக்கத்தை இன்றுகூட நாம் பார்த்தும் கேட்டும் எழுச்சி பெற முடிகிறது. மார்ட்டின் லூதர் கண்ட கனவு இன்றைக்கு நான்காண்டுகளுக்கு முன்புதான் திரு. ஒபாமா அமெரிக்கக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதன் வாயிலாக நிறைவேறியிருக்கிறது.

ஒபாமா அமெரிக்க வெள்ளை மாளிகைக்குக் குடியரசுத் தலைவராகச் சென்றதை முற்போக்குச் சிந்தனையாளர்களும், நிறவெறிக்கு எதிராகப் போராடி வருபவர்களும் வரவேற்றார்கள்; மகிழ்ச்சியடைந் தார்கள். அமெரிக்கா, ஈராக் மீது போர்த்தொடுத்த போது, கறுப்பு இன மக்களின் போராளி, உலகம் போற்றும் மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா, அமெரிக்காவைக் கயவர் அரசு (சுடிரபந ளுவயவந) என்று கூறிக் கோபக் கனல் பொங்க அழைத்தார். நெல்சன் மண்டேலாவின் இத்தகைய கோபத்திற்குப் பின்னால் பெரிய சோக வரலாறே ஒளிந்து கொண்டிருக்கிறது.

13ஆம் நூற்றாண்டிலிருந்து, மேற்கு அய்ரோப்பிய நாடுகள் கறுப்பு இன மக்களுக்கு இழைத்த வன் கொடுமைகள் சொல்லி மாளாது. இங்கிலாந்து ஏகாதி பத்தியத்திலிருந்து விடுதலைக்காகப் போராடி, 18ஆம் நூற்றாண்டில் வெற்றி கண்ட அமெரிக்கா, தன்னை ஒரு ஜனநாயகக் குடியரசு என்று அழைத்துக் கொண்ட போதும், கறுப்பு இன மக்களுக்கு எதிரான இன ஒடுக்கல் கொள்கையை மட்டும் தொடர்ந்து பின்பற்றியது. கொடுமை நிறைந்த அடக்குமுறைகளைக் கடைப் பிடித்த அய்ரோப்பிய, வடஅமெரிக்க நாடுகள் தாங்கள் கைப்பற்றிய ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இனவெறிக் கொள்கையைத் திணித்ததையும் வரலாறு நமக்குச் சுட்டுகிறது. ஆங்கிலச் சொற்களஞ்சியத்தைப் புரட்டி, க்ஷடயஉம என்ற சொல்லிற்கு விளக்கம் தேடினால் நமக்கு அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது; கோபம் கொப்பளிக்கிறது. இனவெறியர்களால் கறுப்பின மக்களுக்குத் திட்டமிட்டு இழைக்கப்பட்ட அநீதிகளை, கொடுமைகளை, கொலை களை வரலாற்றின் பல பக்கங்களில் மட்டுமல்லாமல், சொற்களஞ்சியத்திலும் அந்த ஏகாதிபத்திய இனவெறி யைக் காண முடிகிறது.

Black’amoor       -              கறுப்பர், நீக்ரோ

Black-boding      -              தீமை நிறைந்த

Black book          -              குற்றங்கள் உடையவர் பட்டியல்

Black list               -              குற்றப்பட்டியல்

Black death         -              14ஆம் நூற்றாண்டில் உலக அளவில் பரவிய மனிதப் பேரழிவை ஏற்படுத்திய கொள்ளை நோய்

Black-damp       -              நச்சுக்காற்று

Black guard     -              கயவன், இழிமகன்

Black hand       -              இரகசியக் கொள்ளைக்கூட்ட அமைப்பு

Blackmail            -              அச்சுறுத்திப் பணம் பறிப்பவர்

Black marketer               -              கள்ள வணிகர்

Black-maria -     சிறை வண்டி

Black mass       -              கேலி வழிபாடு, பேய் வழிபாடு

எனக் கறுப்பு இன மக்களை இழிவுபடுத்தும் எண்ணற்ற சொற்களைச் சொற்களஞ்சியத்தில் இன்றும் நம்மால் காண முடிகிறது. இத்தகைய வன்மம் பதிந்த அமெரிக்க மண்ணில்தான் வெள்ளை மாளிகையில் இரு கறுப் பர்கள் சில நாட்களுக்கு முன்பு சந்தித்து அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பற்றி உரையாடியிருக்கிறார்கள். ஒருவர் ஒபாமா, மற்றொருவர் அமர்த்தியா சென். இந்த உரையாடலின் குறிப்பை வெள்ளை மாளிகை வெளி யிடவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது, வரப்போகும் குடியரசுத் தலைவர் தேர் தலுக்கு முன்பு அமெரிக்காவின் பொருளாதாரத்தில் புத்துணர்வு ஊட்ட முடியுமா? முதலாளித்துவத்தை மீண்டும் எழச் செய்ய முடியுமா? என்ற கவலையில் ஒபாமா உள்ளார்.

அமெரிக்காவில் முதலாளித்துவம் இன்று தவி யாய்த் தத்தளித்துக் கொண்டிருக்கிறது; அடிமேல் அடி விழுகிறது. உலகிலேயே அதிகக் கடனைப் பெற்று அமெரிக்கா முதல் கடன்கார நாடாக விளங்குகிறது. அமெரிக்காவின் தேசிய வருமானத்திற்கு நிகராக அதன் உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன் உயர்ந்து வருகிறது. நொடிக்கு நொடி நேரம் நகருவதைக் கடிகாரம் காட்டுகிறது. அமெரிக்காவின் பெருகிவரும் கடன் அளவை, ‘கடன் கடிகாரம் (Debt clock)’ என்ற இணைய தளம் நொடிக்கு நொடி காட்டி வருகிறது. நொடிந்து வரும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் நிலையை மாற்றுவதற்குப் பல வல்லுநர்கள் தற்போது புறப்பட்டுள்ளனர். இதன் காரணமாகவேதான் அறிஞர் அமர்த்தியா சென் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

வெள்ளை மாளிகையில் முதன்முதலாக இந்தியா வைச் சேர்ந்த ஒரு கறுப்பர் இனத்தவரான அமர்த்தியா சென்னுக்கு (வெள்ளை இனத்தவர் தவிர்த்த அனை வரும் கறுப்பர்கள் என்றே அடையாளப்படுத்தப்படு கின்றனர்) அமெரிக்காவின் உயர்ந்த விருதான கலை-உயர் புலமை விருது (National Medal of Arts and Humanities) வழங்கப்பட்டுள்ளது. ஒரு வகையில், ஒடுக்கப்பட்ட -கறுப்பினத்தவரான ஒபாமா கையால் அமர்த்தியா சென் விருது பெறுவது, அதுவும் வெள்ளை மாளிகையில் சிறப்புச் செய்யப்படுவது வியப்பிற்குரிய நிகழ்வாகும். விருது வழங்கிய ஒபாமா, “நாம் எப் பொழுதும் எதிர்பாராத வகையில் ஒரு பொருளாதார அறிஞருக்கு இன்று விருது வழங்கப்படுகிறது” என்று ஒபாமா குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, பசி, வறுமைக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் அமர்த்தியா சென்னின் பங்கு அளப்பரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வில் இருவரும் சில பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள் என்று வெள்ளை மாளிகையில் இருந்து வெளியான செய்திகள் கோடிட்டுக் காட்டுகின்றன.

அமெரிக்க முதலாளித்துவம் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் நிதி நெருக்கடியில் தள்ளாடியது. பொதுவு டைமைச் சிற்பி லெனின் ‘ஏகாதிபத்தியம் (Imperialism)’ என்ற தனது நூலில், முதலாளித்துவம், நிதி முத லாளித்துவமாக வடிவெடுக்கும் போது ஏகாதிபத்திய நாடாக அமெரிக்கா மாறும் என்று துல்லியமாகக் கணித் தார். இருப்பினும், 20ஆம் நூற்றாண்டில் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தத்தால் (Great Depression, 1930) அமெரிக்காவின் பொருளாதாரம் நிலைகுலைந்து போனது. “முதலாளித்துவம் இயற்கை மரணம் எய்தியது” (Capitalism faced its natural death) என்று சில பொருளாதார அறிஞர்கள் அந் நிகழ்வினைச் சுட்டினார்கள். ஆனால், 1930ஆம் ஆண்டு களில் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்று மூன்று முறை அப்பணியில் நீடித்த ரூஸ்வெல்ட், இங்கிலாந்து நாட்டில் இருந்து கெய்ன்சு (Keynes) என்ற பொருளாதார அறிஞரை அழைத்து சந்தைப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சி களை மேற்கொண்டார். ஓரளவிற்கு அதில் வெற்றியும் கண்டார்.

அமெரிக்க நாட்டின் பொருளாதார அமைப்பில் ஏற்பட்ட மந்த நிலையைப் போக்குவதற்கு ஒரு பொரு ளாதார, நிதி சார்ந்த திட்டத்தைக் கெய்ன்சு பரிந்துரை செய்தார். பல புதிய புதியத் திட்டங்களை - கட்டுமானத் துறையில் தொடங்கிப் பல சமூகப் பொருளாதாரத் துறைகளிலும் பொது முதலீட்டை அமெரிக்கா பெருக்கி யது. பொதுச் செலவைப் பெருமளவில் அதிகரித்தது. இதன் காரணமாக நிதிநிலை அறிக்கையில் பற்றாக் குறை ஏற்பட்டாலும் கவலை கொள்ளத் தேவையில்லை என்று கெய்ன்சு வாதிட்டார். காலப்போக்கில் பொருளா தாரம் உயர் வளர்ச்சி நிலையை எட்டும் போது நிதி நிலை அறிக்கையில் விழும் பற்றாக்குறை குறைந்து விடும் என்றும் குறிப்பிட்டார். இத்தகைய பொது நிதியியல் அணுகுமுறையை அமெரிக்கா மேற்கொண்டது. இதைத்தான் ‘புதிய நிதியாக்கக் கொள்கை (New Fiscal Policy)’ என்று குறிப்பிட்டனர். இத்திட்டத்திற்குப் புதிய கொள்கை (New deal) என்று அமெரிக்கா பெயரிட்டது. சந்தைப் பொருளாதாரம் சரியும் போதெல்லாம் இத்த கைய நிதிக்கொள்கைகளைக் கடைபிடிக்கலாம் என்று பல உலகத் தலைவர்கள் நம்பிக்கை கொண்டனர். இவ்வாறுதான் வளர்ந்த நாடுகளிலும், வளர்கின்ற நாடுகளிலும் பற்றாக்குறை நிதியாக்கக் கொள்கை (Policy of Fiscal Deficit) பொது நிதியியலில் நிலைபெற்றது.

சந்தைப் பொருளாதாரத்தில் அரசு தலையிடக் கூடாது; தனிநபர் பொருளாதாரச் சுதந்தரத்தில் அரசு தனது பொது நிதியியல் கருவிகள் வழியாக எவ்வகை யிலும் மாற்றங்கள் செய்யக் கூடாது. இதுதான் முதலாளித்துவத்தின் அடிப்படைக் கோட்பாடு என்று பழமை முதலாளித்துவவாதிகள் வாதிட்டனர். அறிஞர் கெய்ன்சின் கொள்கைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். முதலாளித்துவம் தனது தனித்தன் மையை இழந்து, பொதுத் துறையோடு இணைந்து கலப்புப் பொருளாதாரமானது. இக்கூற்றினைத்தான் அமெரிக்காவின் தலைசிறந்த பொது நிதியியல் அறிஞர் மஸ்கிரேவ் புதிய முதலாளித்துவம் ஒரு கலப்புப் பொருளாதாரம் (Modern Capitalism is Mixed Economic System) என்று தனது பொது நிதியியல் நூலில் குறிப்பிட்டார். பொதுச் செலவைப் பெருக்கி, பொதுத் துறைத் திட்டங்களை அரசுத் துறைகள் வழியாக அக்காலக்கட்டத்தில் பெருக்கியதால்தான் அமெரிக்க நாடு அன்றைய மந்த நிலையிலிருந்து விடுபட்டது.

மீண்டும் 1970இல் அமெரிக்கப் பொருளாதாரம் வியட்நாம் போரினால் பெரும் இழப்பைச் சந்தித்தது. மக்கள் வரிப்பணத்தால் உறுதிப்பெற்று வந்த அரசின் பொது நிதி, போர்ச் செலவிற்காகச் சூறையாடப்பட்டது. அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டும் தள்ளாடியது. இந்த நிகழ்வைப் பொருளாதாரப் பின்னிறக்கம் (Recession) என்று பொருளியல் அறிஞர்கள் குறிப்பிட் டார்கள். பின்னிறக்கம், பொருளாதாரப் பூரிப்பு (Economic boom), பணவீக்கம், பணவாட்டம் (Deflation) ஆகிய கூறுகளால் முதலாளித்துவம் சுழற்சி முறையில் பிரச்சனைகளைச் சந்திக்கிறது அல்லது சரிகிறது என்று பல அறிஞர்கள் இந்நிகழ்வைக் குறிப்பிடுகிறார்கள். இந்த வணிகச் சுழற்சி முறை அடிக்கடி மக்களுக்குப் பொருளாதாரப் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது என்பதையும், கடந்த 80 ஆண்டுகளின் பொருளாதார வரலாறு சுட்டுகிறது.

1970களுக்குப் பிறகு அமெரிக்கா பெரிய அளவில் வேளாண், தொழில் உற்பத்தித் துறைகளில் சாதனைகளை எட்டவில்லை. பணித்துறையில் (Service sector) அதிக கவனம் செலுத்தி, குறிப்பாக, கணினி மென்பொருள் துறையில் புதிய தொழில்நுட்பம் வழியாக அமெரிக்கா கொள்ளை இலாபத்தை ஈட்டியது. குறைந்த கூலியில் பணி செய் வதற்கு, வளருகின்ற நாடுகளில் இருந்து பொறியியல் பட்டங்களோடு கணினித் துறையில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் வேலையில் அமர்வதற்கு விருப்பம் தெரிவித்தார்கள்; குவிந்தார்கள். இவர்களின் உழைப் பைச் சுரண்டி அமெரிக்க முதலாளிகள் தங்கள் செல்வ நிலையைப் பெருக்கிக் கொண்டார்கள். இந்தப் பணித் துறை வளர்ச்சி அணுகுமுறையும் 1990க்குப் பிறகு தள்ளாடியது.

நோபல் பரிசு பெற்ற அமெரிக்காவின் ஜோசப் ஸ்டிக்லிசும், லிண்டா பிலிமசும் இணைந்து எழுதிய நூலில் (Three Trillion Dollor War), அமெரிக்கா 150 இலட்சம் கோடி ரூபாயை ஒரே ஆண்டில் செலவிட்டு ஈராக் போரை நடத்தியது தவறு என்று புள்ளிவிவரங் களோடு வாதிட்டுள்ளனர். இதன் காரணமாக அமெரிக் காவின் கடன் அளவு பெருகி நிதிப்பற்றாக்குறையும், பொருளாதார நிலைகுலைவும் ஏற்பட்டன. இருப் பினும், அமெரிக்க மக்களுக்கு இடையே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருகிக் கொண்டே வந்தன. தனியார் சுதந்தரம் என்ற பெயரில் அமெரிக்க முதலாளிகளும், அமெரிக்க நடுத்தர வர்க்கத்தினரும் எவ்விதக் கட்டுப் பாடுகளுமின்றி வங்கிப் பணத்தைக் கடனாகப் பெற்றுச் சூறையாடினர். தனியார் துறை தங்களின் மதிப்பிற்கு மேல் கடனைப் பெற்றது. நடுத்தர வர்க்கத்தினர் ஒரே வீட்டிற்கு மூன்று வங்கிகளில் கடன் பெற்றனர்.

முதலாளிகள் இலாபத்தைச் செயற்கையாகக் கூட்டிக்காட்டி, அதற்குத் தணிக்கை நிறுவனங்களின் சான்றிதழை யும் பெற்றனர். போலிச் சான்றிதழ்களை வழங்கிய இந்தத் தணிக்கை நிறுவனங்கள் பல கோடிப் பணத்தைக் கைமாறாகப் பெற்றன. இங்கு தான் முதலாளித்துவ ஊழல் முற்றிப்போனது. அதனால் நிதி நிறுவனங்களும், வங்கிகளும் மூடப்பட்டன. தனியார் துறை நிறுவனங்களும் இலாபம் ஈட்ட முடியவில்லை என்று தங்கள் தொழில்களை நிறுத்திக் கொண்டன.

மோசடியில் ஈடுபட்ட அமெரிக்க முதலாளிகள் பலப் பல இலட்சம் கோடி இழப்பைச் சரி செய்து மீள்வதற்கு (Bailout) அரசுப் பொது நிதியில் இருந்து பல இலட்சம் கோடி டாலர்களை உதவித் தொகையாகக் கேட்டனர். இதுதான் மீட்பு நடவடிக்கை என்றும் இவர்கள் வாதிட்டனர். இதற்கு அமெரிக்க அரசும் செவிசாய்த்தது. உயர்ந்த நெறிகளைப் பின்பற்றுவேன் - சாதாரண மக்களின் வாழ்நிலையை உயர்த்துவேன் - சுகாதாரத் துறை அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் நிதி உதவியை அளிப்பேன் என்று பல வாக்குறுதி களை அளித்துக் குடியரசுத் தலைவரான ஒபாமா, அரசியல் அழுத்தத்தால் மோசடி செய்த முதலாளி களுக்கும், நிறுவனங்களுக்கும் துணை போனார்.

முதலாளிகளின் தொடர் மோசடிகளால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி ஆண்டிற்கு ஒரு விழுக்காட்டிற்கும் கீழே வீழ்ந்துள்ளது. பசி, பட்டினி, வருமான ஏற்றத்தாழ்வு, வேலையில்லாத் திண்டாட்டம் இன்று அமெரிக்காவை அச்சுறுத்தி வருகின்றன. பல பெரு நகரங்களில், தெருக்களில் அமெரிக்கர்கள் பிச்சையெடுக்கத் தொடங்கியுள்ளனர். ஓய்வூதியம் பெறுகிற முதியவர்கள் ஒரு வேளை உணவுக்கே திண்டாடுகின்றனர். இவர்களுக்கு உணவு அளிப்பதற்குப் பணத்தைக் குவித்துள்ள பெரும் பணக்காரர்கள் அறக்கட்டளை களையும் தொடங்கி யுள்ளனர். நோய் பாதிப்புக்குள் ளானவர்களுக்குக் காப்பீட்டு நிறுவனங்கள் உரிய நேரத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு நிதியளிக்க முடியாததால் மருத்துவப் பணிகளில் தேக்க நிலை உச்சத்திற்குச் சென்றுள்ளது. மருத்துவப் பணிக்கே முதலாளித்துவப் பிணி தொற்றிக் கொண்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ஒபாமா, சிவசேனைத் தலைவர் பால்தக்கரேவின் அவதாரத்தை எடுத்துள்ளார். ‘மராட்டியம், மராட்டியர்களுக்கே’, மற்ற மொழி பேசு பவர்கள் மராட்டியத்தை விட்டு வெளியேற வேண்டும், என்று தக்கரே கூறி வருவது போல, அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்கர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும்; இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகிறார். இதற்காகச் சட்டங்களும் இயற்றப்படுகின்றன.

அமெரிக்காவால் முன்மொழிந்து அதன் எடுபிடி அமைப்புக ளான உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் உலகிற்கே வழிமொழிந்த உலகமயமாதல் திட்டம் ஒபாமா வால் ஆழக்குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு வழங்கப்படுகிற சமூகப் பாதுகாப்புச் செலவினைக் குறைக்க வேண்டும்; வங்கிகள் முதலாளி களுக்குச் சலுகைக் கடன்களை வாரி வழங்க வேண்டும்; வரிகளின் அளவை முதலாளிகளுக்கு 15 விழுக் காட்டிற்குக் குறைக்க வேண்டும்; சாதாரண மக்கள் தற்போதுள்ள 30 விழுக்காட்டு வரியே கட்ட வேண்டும் என்று பல புதிய புதியத் திட்டங்கள் அறிவிக்கப்படு கின்றன. இவ்வாறாக, ஏழை, எளிய, சாதாரண மக்களின் வரிப்பணத்தை முதலாளிகளுக்கு வாரி வழங்கும் திட்டத்தைத்தான் புதிய முதலாளித்துவம் (சூநற ஊயயீவையடளைஅ) என்றும் சிலர் சுட்டுகின்றனர்.

வாஷிங்டனில் இயங்கிவரும் அட்சன் ஆய்வு நிறுவனத்தின் பொருளாதார ஆய்விற்கான இயக்குநர் இர்வின் ஸ்டெல்சர் ‘புதிய முதலாளித்துவம்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். அமெரிக்கப் பொருளாதாரத்தில் பணக்காரர்கள் மிகப் பெரிய பணக்காரர்களாகவும், நடுத்தர மக்கள் ஏழை களாகவும், ஏழைகள் பெரும் ஏழைகளாகவும் மாறிக் கொண்டு வருகிறார்கள். அதற்குக் காரணம் மக்கள் தொகையில் 2 விழுக்காட்டினர் ஏறக்குறைய 25 விழுக்காடு செல்வத்தையும், வருமானத்தையும் பெற்று வருகின்றனர். 45 விழுக்காட்டுப் பெரும்பான்மை மக்கள் 10 விழுக்காட்டு அளவிற்குக்கூட வருமானத்தை ஈட்ட முடியவில்லை. வீடு, நிலம் போன்ற சொத்துகள் கூட வங்கிகளின் அடமானப் பிடியில் உள்ளன. வேலை வாய்ப்புக் குறைந்து வருவதால் பெரும்பான்மையோர் பொருள்களின் நுகர்ச்சியைக் குறைத்துக் கொண்டு வருகின்றனர். மேலும், செல்வம் சிலரிடம் குவிவதால் பணத்தின் சுற்றியக்கம் குறைந்து பொருளாதாரத்தில் ஒரு மந்தநிலையை ஏற்படுத்தி வருகிறது. சந்தையில் பொருள்களுக்கான தேவை சரிந்து வருகிறது. இதன்காரணமாக, பொருள் உற்பத்தி பாதிப்புக்குள்ளாகி வருகிறது. விற்பனை நடவடிக்கைகள் குறைந்து வருவதால் அரசிற்குக் கிடைக்கும் வரி வருவாயும் உரிய அளவில் கிட்டவில்லை. எனவே, அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது அண்மைக்காலத்தில் இயலாத காரியம் என்று இர்வின் ஸ்டெல்சர் குறிப் பிட்டுள்ளார்.

“பணக்காரர்கள், பேராசைக்காரர்களாக மாறிவிட்டார்கள். இந்தப் பேராசைதான் நிதி மோசடி களுக்கும், நெருக்கடிகளுக்கும் அடிப்படையாக அமைந் துள்ளது” என்றும் இந்த ஆய்வாளர் மேலும் சுட்டுகிறார். ‘பொருளாதாரத் தந்தை’ என்று போற்றப்படுகிற ஆடம் சுமித் வலியுறுத்திய தடையற்ற வணிகமும் சந்தைச் சுதந்தரமும் அமெரிக்காவில் சந்தி சிரிக்கின்றன. இந்த வலையில் அய்ரோப்பிய நாடுகளும் சிக்கித் தவிக் கின்றன. ‘பாவமில்லாத மதத்தைப் போன்றதுதான் தோல்வியில்லாத முதலாளித்துவம் (Capitalism without failure is like religion without sin)’ என்று அமெரிக்காவின் சிறந்த பொருளாதார அறிஞரான ஆலன் மில்சர் குறிப்பிட்டதை, இர்வின் ஸ்டெல்சர் மேற்கோள் காட்டியுள்ளார். மீண்டும் பாவம் செய்பவர் களுக்கே மீண்டும் மீண்டும் பாவ மன்னிப்பு வழங் குவது போல்தான் அமெரிக்காவின் நிதியியல், வங்கியியல் கொள்கைகள் (Fiscal and Banking Policies) அமைந்து வருகின்றன என்றும் இர்வின் ஸ்டெல்சர் விளக்கியுள்ளார்.

1930ஆம் ஆண்டுகளில் முதலாளித்துவ மீட்பிற் காகப் பொருளாதார நிதி நடவடிக்கைத் திட்டத்தினை அறிஞர் கெய்ன்சு பரிந்துரை செய்தது போன்று, இன்றையச் சூழலில் அறிஞர் அமர்த்தியா சென் வழங்கும் கருத்துகள் அமெரிக்காவில் ஈர்க்கப்படுமா? ஏற்கப்படுமா? வெற்றி பெறுமா? என்ற கேள்விகள் எழுகின்றன. சந்தைப் பொருளாதாரத்திற்கு அப்பால் சமூக நலன் காக்கும் திட்டங்களையும், வேலையில் லாதவர்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகையை யும், ஓய்வூதியதாரர்களுக்கு அதிக அளவில் ஓய் வூதியத்தையும் பெருக்க வேண்டும் என்று அறிஞர் அமர்த்தியா சென் வழங்கி வரும் கருத்துகள் வட அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளின் பொருளாதாரங் களைத் தேக்க நிலையிலிருந்து மீட்குமா என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது.

2009இல் வெளிவந்த “நீதியின் தோற்றம்” (The Idea of Justice) என்ற தனது நூலில், 16 இடங்களில் மார்க்சின் பொருளாதார நெறிகளை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பகிர்ந்தளிக்கும் நீதியை (Distributive Justice) ஏற்பதன் வாயிலாகவும், தொழிலாளர்களின் உழைப்பைச் சரியான முறையில் மதிப்பீடு செய்து உரிய கூலியை வழங்க வேண்டும் என்ற நெறியாலும், காரல்மார்க்சின் கருத்துகள் இன்றும் ஒளிர்கின்றன - தேவைப்படுகின்றன என்று அமர்த்தியா சென் இந் நூலில் குறிப்பிட்டுள்ளார். கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவது போன்று அமெரிக்கா அலைய வேண்டாம். அறிஞர் காரல் மார்க்சின் கருத்துகளை மறு ஆய்வு செய்வது காலத்தின் கடமை என அமெரிக்காவில் பல அறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, தாமஸ் பேட்டர்சன் (Karl Marx – Anthropologis by Thomas Patterson, 2009) காரல் மார்க்சு - மானுட இயலாளர் என்ற நூலை 2009இல் வெளியிட்டுள்ளார்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மானுட இயல் துறையின் பெரும் பேராசிரியரான தாமஸ் பேட்டர்சன் முன்வைத்துள்ள கருத்துகள் அமெரிக்காவில் சலசலப்பை உருவாக்கி வருகின்றன. இச்சூழலில் அமெரிக்கா சென்று விருதினைப் பெற்ற சென், மார்க்சு கூறிய கருத்துகளை அமெரிக்காவில் கூற மறந்துவிட்டாரா? இன்றைய அமெரிக்காவில்தான் சென் குறிப்பிடுகிற பகிர்ந்தளிக்கும் நீதி முற்றிலுமாகப் புறந்தள்ளப்பட்டு வருகிறது. தொழிலாளர்களும் ஏழை களும் சுரண்டப்படுகிறார்கள் என்பதை நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளாதார அறிஞரில் தொடங்கி தாமஸ் பேட்டர்சன் வரை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

‘முதலாளித்துவம் சுரண்டலில் தொடங்கி, சுரண்ட லில் முடிவடைகிறது’ என்பதை மார்க்சு தெள்ளத் தெளிவாக மூலதனம் நூலின் முதல் தொகுதியின் 31வது இயலில் சுட்டியுள்ளார். தொழில் முதலாளியின் தோற்ற வரலாறு (Genesis of Industrial Capitalist) என்ற தலைப்பில் மார்க்சு கூறிய கருத்துகள் காலத்தை வென்று நிற்கின்றன. இன்றைய பொருளாதாரச் சூழலுக்கு வழிகாட்டு நெறிகளாக அவை அமைந்திருக்கின்றன. “அமெரிக்காவில் பொன்னும் வெள்ளியும் கண்டுபிடிக் கப்பட்டன. தொல்குடி மக்கள் வேருடன் அழிக்கப்பட்ட னர். மீதமிருந்த மக்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். சுரங்கங்கள் என்ற கல்லறைகளில் அவர்கள் அடைக் கப்பட்டார்கள். கிழக்கிந்தியத் தீவுகள் பிடிபட்டு, கொள்ளை யடித்தல் தொடங்கியது. ஆப்பிரிக்கா முழுவதும் நீக்ரோ அடிமை வணிகம் பெருகியது. எல்லாம் சேர்ந்து முத லாளித்துவ உற்பத்தி முறையின் விடியலுக்கு வழி கோலின” என, நுண்மான் நுழைபுலத்தோடு மார்க்சு விளக்கியுள்ளார்.

மேலும், இப்பகுதியில் இந்தியாவில் கிழக்கிந்தியக் குழுமங்கள் அடித்த கொள்ளையையும், அவற்றில் பணியாற்றிய வர்கள் செய்த ஊழல்களையும் மார்க்சு பட்டிய லிட்டுள்ளார். மேலும், இந்தியாவில் வெள்ளையர் ஆட்சி உருவாவதற்கு அடித்தளம் அமைத்த வாரன் ஹேஸ்டிங்சின் மீது இங்கிலாந்து அரசு நடத்திய ஊழல் விசாரணையையும் மார்க்சு குறிப்பிட்டு, “ஒரு நாளி லேயே மழைக்காளான்கள் போல் மாபெரும் செல் வங்கள் வணிகக் குழுமத்தில் குவிந்தன. ஒரு ஷில்லிங் (இங்கிலாந்து நாட்டின் நாணயம்) கூட முன்பணமாக முதலீடு செய்யாமல் முதல் மூலதனக் குவிப்பு நடை பெற்றது” எனப் பல புள்ளிவிவரங்களை அளித்து விளக்கியுள்ளார். முத லாளித்துவம் எவ்வாறு தேசியக் கடன் வழியாகத் தனது மூலதனத்தைப் பெருக்கிக் கொள்கிறது என்பதையும் மார்க்சு அழகுறக் குறிப்பிட்டுள்ளார். “மேலும் அரசாங்கத்திற்கும், நாட்டிற்கும் இடைமனிதர்களாய்ப் பணம் கொடுக்கல் வாங்கல் செய்தவர்கள் பெரும் செல்வந்தர்களாக உருவாகிவிட்டனர்”.

இது போன்று பண விரிவாக்கத்தாலும், மோசடியாலும் இன்றைய அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளின் பொரு ளாதாரத்தில் ஏற்பட்டு வருகிற மூலக்கூறுகளை அறிஞர் மார்க்சு மதிநுட்பத்துடன் ஆய்வு செய்து எடுத் துரைக்கிறார். அதே இயலில் (பின் குறிப்பில் உள்ளது) மூலதனம் அதிக இலாபத்தை ஈட்டுவதற்காக டி.ஜே. டன்னிங் மூலதனத்தையும், முதலாளித்துவத்தைப் பற்றியும் டி.ஜே. டன்னிங் குறிப்பிட்ட அரிய கருத்தை மார்க்சு மேற்கோளாக காட்டியுள்ளார். “10 விழுக்காடு ஆதாயமென்றால் எங்கு வேண்டுமானாலும் மூல தனத்தின் முதலீடு செய்யப்படும். 20 விழுக்காடு இலாபம் ஆவலை மேலும் தூண்டும். 50 விழுக்காடு இலாபம் ஐயப்பாடற்ற துணிச்சலைத் தூண்டும். 100 விழுக்காடு இலாபமெனில் மூலதனம் எல்லா மனித விதிகளையும் காலில் மிதித்துத் தள்ளிவிடும். 300 விழுக்காடு இலாபம் என்றால் மனச்சாட்சியின்றி எத்த கைய கொடிய குற்றத்தையும் செய்யும். இவ்வகைக் குற்றங்களுக்காகத் தூக்கில் தொங்குவதற்கும் முதலாளிகள் முன்வருவர்... கள்ளக் கடத்தல், அடிமை வணிகம், வாணிகம் இரண்டிற்கும் தாராளமாக ஊக்க மளிக்கும். இதற்கெல்லாம் சான்றுகள் உள்ளன” என்று டி.ஜே. டன்னிங் குறிப்பிடுகிறார். அன்று மார்க்சு ஆதாரத் தோடு குறிப்பிட்ட நிகழ்வுகள், பண, சுரண்டல் மோச டிகள், சமூக விரோதச் செயல்கள் இன்றைய முதலாளித் துவத்திலும் பெருமளவில் வெடித்து வருகின்றன. இதைத்தான் இன்றைய அறிஞர்கள் புதிய முதலாளித் துவம் என்று குறிப்பிடுகிறார்களோ?

பெருச்சாளி தன் குணத்தை என்றும் மாற்றிக் கொள்ளாது, முதலாளிகளும் பொருளாதாரச் சுரண்டலை, சமூகச் சூறையாடலைக் கைவிட மாட்டார்கள். இச் சூழலில்தான் வெள்ளை இன வெறியர்களால் கறுப் பர்கள் என்று சுட்டப்பட்ட ஒபாமாவும், அமர்த்தியா சென்னும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்ளும் வியப்பு நடந்திருக்கிறது. அமர்த்தியா சென்னிற்கு உயர் விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைய முதலாளித்துவச் சிக்கல்களுக்கும், சுரண்டல் முறை முற்றுப்பெறுவதற்கும் அமர்த்தியா சென் மார்க்சியத் தீர்வை ஒரு பரிந்துரையாக ஒபாமாவிற்கு வழங்கு வாரா? ஒபாமா அதை ஏற்க முன்வருவரா? இந்நிகழ்வுகளில் இருந்து மன்மோகன் சிங் பாடம் கற்றுக்கொள் வாரா?

Pin It