இலண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்;தஞ்சை நகராட்சி மாவட்டக் கழகத் தலைவர்; தஞ்சை மாவட்டக் கல்விக் குழுத் தலைவர்;தஞ்சை மாவட்ட கழகத் தலைவர்;சென்னை ராஜதானி சட்டமன்ற உறுப்பினர்.சென்னை ஆளுநரின் நிர்வாகக் குழு உறுப்பினர்; மாநில நிதி, உள்துறை அமைச்சர்; சட்டப் பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர்; நீதிக் கட்சித் துணைத் தலைவர்... என்று பல்வேறு பதவி களை வகித்துப் பெருமை சேர்த்தவர்தான் ஏ.டி. பன்னீர்செல்வம் எனப்படும் அந்தோணிசாமி தாமரைச் செல்வம் பன்னீர் செல்வம்.

இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றுத் திரும்பிய நேரு நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் இறங்கினார்.அதே காலக்கட்டத்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்று, பன்னீர்செல்வமும் நாடு திரும்பினார்.தமிழகச் சூழலில் படித்த பிராமணரல்லாதவர்களை ஈர்க்கக் கூடியதாக இருந்த நீதிக் கட்சியின் கருத்தோட்டத்தில் ஈர்க்கப்பட்டு அதில் தீவிரமாக இறங்கியவர் இவர்.

தஞ்சை மாவட்டம் திருவாரூருக்கு அருகில் உள்ள செல்வபுரத்தில் 1.6.1888-இல் பிறந்தார். அவரது தந்தை தாமரைச்செல்வம். தாயார் இரத்தினம் அம்மையார். செட்டியபுரம் என்றிருந்த ஊர் பன்னீர் செல்வத்தின் நினைவாக, செல்வபுரம் என்று தற்போது வழங்கப்படுகிறது.

திருச்சியில் புனித வளனார் உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தார். கல்லூரியில் இடை நிலை மாணவராக இருந்த பன்னீர்செல்வம் இங்கிலாந்து சென்று சட்டக் கல்வி பயில விரும்பினார்.

அவருக்குக் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது.இதற்குள் அவருக்கு திருமணம் நடந்தது.அவரது மனைவி பொன்னுப் பாப்பாள் நிறைமாதக் கர்ப்பிணி. அவருக்குக் குழந்தை பிறந்ததும், இலண்டன் செல்ல லாமே என்பது பன்னீர்செல்வத்தின் எண்ணம். கால தாமதம் செய்தால்,கல்லூரியில் உரிய காலத்தில் சேரமுடியாது என்பதை அறிவுறுத்தி, அவரது தந்தை அவரைக் கப்பலில் அனுப்பி வைத்தார்.அவரது கப்பல் ஏடன் துறைமுகத்துக்கு வந்ததம் அவருக்கு மகள் பிறந்துள்ளது குறித்த கேபிள் செய்தி கிடைத்தது.மேரி அடினா செல்வம் என்று பெயர் வைக்கவும் என்று அங்கிருந்து பதில் செய்தி அனுப்பினார்.இலண்டனில் படிக்கும் போது பொன்னம்பலம் தியாகராஜன் (பி.டி. ராஜன்)அங்கு மாணவராக இருந்தவர்.பாரிஸ்டர் பட்டம் முடித்துத் திரும்பியதும் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.

‘அப்பா இறந்த போது எனக்கு 10 வயது. நானும் எனது சகோதரர் ஜார்ஜ் ஆகிய இரு வரும் ஏற்காட்டில் மாண்ட்போர்ட் பள்ளியில் படித்து வந்தோம். அவரைப் பாசமுள்ள அப்பா என்ற அள வில் தெரியும்.அவரது அரசியல் ஈடுபாடுகள் பற்றிப் பின்னர்தான் கேட்டுத் தெரிந்து கொண்டோம்’ என்கிறார் அவரது மகன் வழக்கறிஞர் ஆல்பர்ட் அருள்செல்வம்.

அவருக்கு மேரி தவிர, லூயிஸ், ஜார்ஜ் செல்வம், எட்வர்டு தாமரைச் செல்வம் (தற்போது பிரபல கண் மருத்துவர்), ஆல்பர்ட் அருள் செல்வம், டெய்ஸி இவாலின், விக்டோரியா ஆகிய குழந்தைகள் பிறந்தன. குழந்தை களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பார். ஒரு சமயம் வெளிநாட்டில் படித்த தமது மகனுக்காகக் காரை விற்றுப் பணம் அனுப்பவும் தயங்கவில்லை.

தஞ்சை மாவட்டக் கழகத் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்ட அவர்,1924-ஆம் ஆண்டு வாக்கில்,சமஸ்கிருதம் மட்டுமே கற்றுத் தரப்பட்ட திருவையாறு கல்லூரியில் தமிழ் வகுப்புகளைத் தொடங்க ஏற்பாடு செய்தார்.

நீதிக்கட்சித் தலைவர் பதவியிலிருந்து பொப்பிலி அரசர் விலகிய பிறகு,அடுத்த தலைவராகப் பெரியாரே நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானத்தை முத்தையா செட்டியார் முன்மொழிந்தார்.பன்னீர் செல்வமும் கே.சி.சுப்பிரமணியச் செட்டியாரும் வழி மொழிந்தனர்.

1930-ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்றுச் சட்டமன்றம் செல்லும் வரை, செல்வத்தின் பணிகள் தஞ்சை மாவட்டத்தையே மையமாகக் கொண்டு அமைந்திருந்தன.சட்டமன்ற உறுப்பினரான பிறகு,செல்வத்தின் பணி தமிழ்நாடெங்கும் விரிவிடைந்தது.பெரியார் நீதிக்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக் கப்பட்ட பிறகு, அவருக்கு அடுத்த தலைவராக நீதிக் கட்சியில் விளங்கினார். அவரைக் கலந்து பேசாமல் எதையும் பெரியார் செய்ததில்லை. கட்சி முழுமையாக பெரியாரின் பிடிக்குள் வந்தால்தான்,பெரியார் தமது திட்டங்களை நிறைவேற்ற முடியுமென்று எண்ணி, அதற்குரிய செயல்களில் செல்வம் ஈடுபட்டார். அதில் வெற்றியும் பெற்றார்.

சென்னை மாநிலச் சட்டமன்றத்தில் 1930 ஆம் ஆண்டு முதல் 1934 ஆம் ஆண்டு வரையிலும் 1937 ஆம் ஆண்டு முதல் 1939 ஆம் ஆண்டு வரையும் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக விளங்கி னார். 1934 முதல் 1937 வரை ஆளுநர் நிர்வாகக் குழுவின் உள்துறை உறுப்பினராகவும் அவர் இருந்தார். ஆங்கிலத்தை அழகுபடக் கையாள்வதுடன் நகைச்சுவை ததும்பப் பேசக் கூடியவர்.எதிர்க்கட்சியினர் பேசும் போது தக்கபடி பதில் கூறுந் திறனும் தமது கட்சியினரின் தவறுகளையும் சுட்டிக்காட்டத் தயங்காத நேர்மையும் அவருக்கு உண்டு.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது,கைது செய்யப்பட்ட பெரியாரைப் பற்றி, சட்டமன்றத்தில் பன்னீர்செல்வம் பேசினார்.பெரியார் என்றால் என்ன பொருள்?என்று காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் குறுக் கிட்டுக் கேட்டார். பெரியார் என்றால் மகாத்மா என்று பதில் சொல்லி அந்த உறுப்பினரின் வாயை அடைத்தார்.

கிறிஸ்தவ சமயத்தாரிடையே சாதி வேற்றுமைகள் நிலவுவதையும் தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டத்தகாத வர்கள் என்று சிலர் ஒதுக்கி வைக்கப்படுவதையும் அவர் கண்டித்து வந்தார். அரசுப் பதவிகளில் சாதி சமய பேதமின்றி அனைவருக்கும் நியமனங்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்பதை அடிக்கடி சட்டசபையில் வலியுறுத்துவார் செல்வம்.

ஆதிதிராவிட மக்களை அரிஜன் (கடவுளின் மக்கள்) என்னும் பெயரால் அழைக்க வேண்டும் என்று காந்தியடிகள் வலியுறுத்தியபோது,ஆதி திராவிடர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முயற்சி செய்யாமல் பெயரை மட்டும் மாற்றி என்ன பயன்? என்பது செல்வத்தின் கேள்வி.

உள்ளாட்சிஅமைப்புகளின் முக்கியத்துவம் குறித்து சட்டமன்றத்தில் வலியுறுத்தியிருக்கிறார். இந்தி எதிர்ப்பு மறியலில் கலந்து கொண்டு சிறை சென்ற தாளமுத்து, நடராசன் இருவரும் சிறையிலேயே இறந்தபோது, அரசைக் கடுமையாகக் கண்டித்தார். அவர்கள் நோயுற்ற போது விடுதலை வழங்காதது குறித்து அன்றைய காங்கிரசு அரசைச் சாடினார்.

அவர் தமது அரசியல் வாழ்வில் நீதிக் கட்சியிலேயே இருந்தார்.1937இல் கட்சி தோல்வியைத் தழுவிய போது பலர் கட்சியை விட்டு விலகினாலும் அவர் நீதிக் கட்சியிலேயே இருந்தார்.

1938இல் செல்வபுரத்தில் வசிக்கத் தொடங்கிய அவர் ஆதி திராவிடர்களுக்குப் பல்வேறு சேவைகளைச் செய்தார்.விவசாயக் கூலிகளுக்கு ஞாயிற்றுக்கிழ மையை ஓய்வு நாளாக மாற்றினார். அன்றைய தினம் அவர்களுக்கு ஊதியமும் கிடைக்கச் செய்தார். அவர் களுக்கு இலவச மருத்துவ வசதிக்கும் ஏற்பாடு செய்தார்.

ஆளுநரின் நிர்வாகக் குழுவில் உள்துறை உறுப்பினராக இருந்தபோது தமது துறையில் ஆதிதிராவிடர் களை அதிகமாகச் சேர்க்குமாறு ஆணை பிறப்பித்தார்.

1940-இல் இங்கிலாந்தில் இந்திய அமைச்சருக்கு ஆலோசகராகப் பதவி ஏற்கச் செல்வம் புறப்பட்ட போது, அவரது வங்கிக் கணக்கில் 15 ரூபாய், 2 அணா 5 பைசா மட்டுமே இருந்தது. பயணச் செலவுக்கு ராஜாசர் முத்தையா செட்டியாரிடமிருந்து ரூ.3000கடன் பெற்று இலண்டன் சென்றார்.சென்னை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும் பின்பு நிதித்துறை,உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய போதும் மாதம் ரூ.5000ஊதியம் பெற்றார்.ஆனாலும் கூட அந்த நாள்களிலும் கூட தனக்கென பணத்தைப் பெரிதாகச் சேர்த்துக் கொள்ளவில்லை. பெயரில் செல்வம் இருந்தாலும் கூட செல்வத்தைச் சேர்ப்பதில் அவருக்கு நாட்டமில்லை.

இவர் வாழ்ந்த காலத்தில் நீதிக்கட்சித் தலைவர்கள் பி.தியாகராய செட்டியார்,சி.நடேச முதலியார்,அ.முத்தையா செட்டியார் என்று சாதிப் பெயர்களும் சேர்த்தே பெயர்கள் வழங்கப்பட்டன.ஆனால் அவர் தமது பெயரை ஏ.டி.பன்னீர்செல்வம் என்றே எழுதினார். உடையார் இனத்தைச் சேர்ந்தவர் என்றாலும் அவர் தமது சாதிப் பெயரைத் தன் பெயருடன் சேர்த்துக் கொள்ளவில்லை.அரசின் பல்வேறு துறைகளிலும் மலையாளிகளும் தெலுங்கருமே அதிகமாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டி,தமிழருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்தி வந்தார்.மாநிலத்தில் அமைதியும் நீதியும் நிலவ வேண்டுமானால், நீதித்துறையை அரசு நிர்வாகத்திலிருந்து பிரித்துத் தனித்துறையாக அமைக்க வேண்டுமென்று தொடர்ந்து அவர் வாதாடினார்.மாநிலத்தின் நிதி நிலைமை மோசமாக இருக்கும் போது, இந்தித் திணிப் புக்குப் பணத்தைச் செலவழிப்பதா? என்று எதிர்ப்புக் குரல் எழுப்பியவர் அவர்.

1940-இல் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், இங்கிலாந்தில் போர்க்கால அமைச்சரவையில் இந்திய அமைச்சருக்கு உதவி யாக ஆலோசனைக் குழுவில்,ஆலோசனைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.மார்ச் மாதம் முதல் தேதி, கராச்சியிலிருந்து புறப்பட்ட ஹனிபால் விமானத் தில் பன்னீர்செல்வம், அவருடன் மூன்று விமான அதிகாரிகள்,நான்கு இராணுவ அதிகாரிகள்.

விமானம் இங்கிலாந்து நோக்கி புறப்பட்டது.வழியில் ஜிவானி விமானத் தளத்தில் இறங்கி அங்கிருந்து மீண்டும் புறப்பட்டது.ஆனால் நடுவானில் ஹனிபால் விமானத் தின் சங்கேத ஒலித் தொடர்புகள் நின்றுவிட்டன.ஓமன் தீபகற்பத்தின் அருகில், வளைகுடாப் பகுதியில் விமானம் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த யாரும் தப்பவில்லை என்பது உறுதியானது.

 நினைக்கப்பட வேண்டியவர்கள் என்ற நூல்
 குடிமக்கள் முரசு

Pin It