•  இந்தியாவிலுள்ள இந்துக்களில் 52 விழுக்காட்டினரும், இஸ்லாம், சீக்கியம், கிறித்துவம் முதலான சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்களில் 52விழுக்காட்டினரும், சமுதாயத்திலும், கல்வியிலும், பிற்படுத்தப்பட்டவர்கள் என “மண்டல் குழுவினர்” கண்டறிந்தனர். இவர்களுக்கு 52 விழுக்காடு இடஒதுக்கீடு தரப்படுவதே இவர்கள் மற்ற வகுப்பினரைப்போல முன்னேற்றம் பெற வழியாகும்.ஆயினும் 1963-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அரசமைப்புச் சட்ட விதிகள் 15(4), 16(4), 338(10) இவற்றில் இல்லாத ஒரு கோட்பாட்டை அவர்களாகவே உருவாக்கி, “ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களில் அளவு 50 விழுக்காட்டுக்குள் இருக்க வேண்டும்” எனத் தீர்ப்பளித்தனர்.
  • இதன் நேரடி விளைவாகவே எப்போதும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27விழுக்காட்டுக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட முடியாத-மக்கள் நாயக உரிமைவேண்டுமென்றே மறுக்கப்பட்டவர்களாகப் பிற்படுத்தப்பட்டவர்கள் வைக்கப்பட்டுவிட்டனர்.இது அநீதியாகும் எனக் கருதுகிறோம்.  இக்குறையை நீக்கும் வகையில் இந்தியாவிலுள்ள இந்து மற்றும் சிறுபான்மை மதங்களிலுள்ள முற்பட்ட வகுப்பினர்,எல்லா மதங்களிலும் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியல் வகுப்பினர்,பட்டியல் பழங்குடியினர் ஆகிய நான்கு வகுப்பினருக்கும் (Communities or Segments) அந்தந்த வகுப்பினரின் மக்கள் தொகை விகிதாசாரத்திற்குச் சமமாக இடப்பங்கீடு செய்து தந்திட ஏற்ற வகையில் கல்வியிலும்,வேலையிலும் உள்ள 100விழுக்காடு இடங்களையும் பங்கீடு செய்து தர உரிய ஏற்பாட்டை உடனடியாக இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோருகிறோம்.விகிதாசார இடப்பங்கீடு தரும் நடைமுறையை-பட்டியல் வகுப்பினர், பழங்குடியினருக்கு 1955 முதலே அளிக்கப்படுவதன் மூலம் இந்திய அரசினரால் ஏற்றுச் செயல்படுவது போன்று, பிற்படுத்தப்பட்டோருக்கும் தரப்படவேண்டும் என்று, 1955 லேயே, காகா கலேல்கர் குழு பரிந்துரைத்துள்ளது.
  • 1934இல் இசுலாமியர்கள், சீக்கியர்கள், கிறித்தவர்கள், பார்சிகள் ஆகியோருக்கு மத்திய அரசாங்க வேலைகளில் இடஒதுக்கீடு தரப்பட்டது. பெரியார் ஈ.வெ.இராசாமி, சென்னை மாகாண முதலமைச்சர் பொப்பிலி அரசர் ஆகியோரின் முயற்சியால் 1935இல் சென்னை மாகாண எல்லைக்குள் இருக்கிற எல்லா மத்திய அரசு அலுவலக வேலைகளில் 100 விழுக்காடு இடங்களும் 5 வகுப்புகளுக்குப் பிரித்தளிக்கப்பட்டன. மேலும் பழைய சென்னை மாகாணத்தில் 100 இடங்களையும் பங்கீடு செய்து தரும் நடைமுறை 1928 முதல் 1954 வரை பின்பற்றப்பட்டது.அதனால் எல்லா வகுப்பினரிலும் உள்ள தகுதியுள்ளவர்கள் வாய்ப்புப் பெற்றனர்.தகுதியுள்ளவர்கள் எந்த வகுப்பிலும் புறக்கணிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.எனவே மொத்தமுள்ள 100விழுக்காட்டு இடங்களையும் பங்கீடு செய்து தர உரிய ஏற்பாட்டை நிறைவேற்றிட இந்திய அரசினரும்,இந்திய நாடாளுமன்றத்தினரும் ஆவன செய்ய வேண்டுமென இக்கூட்டத்தின் வாயிலாக வேண்டிக் கொள்கிறோம். 
  • பிற்படுத்தப்பட்டோர் குழு மற்ற குழுக்களைப் போலவே ஏழு (7)உறுப்பினர்களைக் கொண்டதாக விரிவு செய்யப்பட வேண்டும் என்றும்,அந்தக் குழுவின் தலைவராக நீதிபதிகளாக இருந்தவர்களே அமர்த்தப்படுவது உடனடியாகத் தவிர்க்கப்படவேண்டும் என்றும்,அதற்குப் பதிலாகப் பிற்படுத்தப்பட்டோர் நலனில் அக்கறை உள்ள அரசியல் கட்சிச்சார்பற்ற தகுதி வாய்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு நிபுணரையே அமர்த்த வேண்டும் என்றும்; இக்குழுவிற்கு இப்போது உள்ள ஒரே பணி, பட்டியலிலுள்ள சாதிகளில் எவற்றை நீக்குவது எவற்றைச் சேர்ப்பது என்பதை மட்டுமே செய்யும் அதிகாரம் தரப்பட்டிருக்கிறது நகைப்பிற்கு இடமானது என்றும் இம்மாநாடு மனமாரக் கருதுகிறது.இக்குழு அரசியல் சட்ட அமைப்பின்படி முழு அதிகாரம் வழங்கப்பட்டதாக  (Vested with Constitutional and Statuory Powers)அமைக்கப்பட வேண்டும் என்றும் இந்திய அரசினரை இந்த மாநாடு வேண்டிக் கொள்கிறது.
  •  
  • பிற்படுத்தப்பட்டோராக உள்ளவர்கள் 2013-ல் ஏறக்குறைய 57விழுக்காட்டினர் ஆவர். இவ்வகுப்பினர் பெரியார் ஈ.வெ.இராமசாமி,டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்,டாக்டர் ராம் மனோகர் லோகியா ஆகியோரின் வழிநின்று இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள எல்லாத் தீர்மானங்களையும்,எல்லா வகுப்பு மக்களிடமும் விளக்கிக் கூறி விழிப்புணர்வை உண்டாக்கிட ஆர்வத்துடன் முன்வர வேண்டுமென்றும், பிற்படுத்தப்பட்டோர் எல்லோரும் ஒன்று திரண்டு இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் போராட வேண்டுமென்றும்;முற்பட்ட வகுப்பினர் எல்லோரும் இம்மாநாட்டின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை உணர்ந்து அவர்கள் எல்லோரும் இக்கோரிக்கைகள் முழுவதுமாக நிறைவேற்றப்பட மனமுவந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.
  •  
  • ஆங்கிலம் எல்லா இந்தியருக்கும் அந்திய மொழி, நம் முன்னேற்றத்திற்குப் பயன்படும் என்பதால், எல்லா இந்தியரும் ஆங்கிலம் கற்கிறார்கள். இந்தி பேசாத எல்லா மக்களுக்கும், இந்தி அந்நிய மொழி, இரண்டாவதாக இன்னொரு அந்நிய மொழியைக் கற்பது, இந்தி பேசாத மக்களுக்குக் கூடுதலான சுமையாகும். எனவே, இந்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்துவதற்கான அதிகாரம்  படைத்த       இந்திய அரசுப்பணிகளுக்கான தேர்வு ஆணையம் (Union Public Service Commission) நடத்தும்  எல்லாவகைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு,இறுதித் தேர்வு இரண்டையும், எப்போதும்,இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள எல்லா மொழிகளிலும் தேர்வர்கள் (Candidates) தேர்வு எழுதுவதற்கு முழுஉரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், இதற்கான நெறிமுறைகளை உடனடியாக வகுத்து, இந்திய அரசுப்பணிகளுக்கான தேர்வு ஆணையம் வெளியிட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்தி வேண்டிக் கொள்கிறது.
  •  
  • இந்தியா முழுவதிலும் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள், பட்டியல் வகுப்பு மக்கள், பழங்குடி மக்கள் ஆகியோர் தாங்கள் சொந்த மாநிலங்களிலிருந்து வேறு மாநிலங்களுக்குக் குடிபெயர்ந்திருந்தால் அந்த மாநிலத்தில் அவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் பட்டியல் வகுப்பினராகவும் பழங்குடி வகுப்பினராகவும் கருதப்பட்டு அவர்கள் குடியேறி இருக்கிற மாநிலத்தில் உள்ள சம்பந்தப்பட்ட துறையினர் அவர்கள் பிற்படுத்தப்பட்ட துறையினர் அவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,பட்டியல் வகுப்பினர்,பழங்குடிய வகுப்பினர் என்பதற்கான சான்றிதழை அவரவர் பிறந்த மாநிலத்திலிருந்து பெற்று அளித்தால் அதை ஏற்றுக்கொண்டு அந்தந்த வகுப்புக்குரிய சாதிச் சான்றிதழை வழங்கவேண்டும் என்று சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையினர் உடனடியாக ஓர் அரசாணை பிறப்பிக்க (Executiveorder) வேண்டும் என்று இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்தி வேண்டிக் கொள்கிறது. 
Pin It