அண்மையில் வெளிவந்த ஒரு பத்திரிகைச் செய்தி!

கடந்த மே மாதம் 25-ந் தேதி சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தின் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டு கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் மத்திய, மாநில அமைச்சர்கள் மகேந்திர கர்மா, வி.சி. சுக்லா, நத்தகுமார் பட்டீல் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் வி.சி. சுக்லா இருபது நாட்கள் ஆபத்தான நிலையில் இருந்து உயிரிழந்தார். இந்தியாவெங்கும் பரபரப்பான செய்தி இதுதான்.

நடந்த படுகொலையைப் பற்றி பத்திரிகையில் படித்த பாமரர் முதல் படிப்பாளிகள் வரை, பிச்சைக்காரர் முதல் பிரதமர் வரை, கொல்லப்பட்டவர்களுக்கு அனுதாபத்தையும், அவர்களைச் சுட்டுக்கொன்ற மாவோயிஸ்டுகளைக் கண்டிக்கும் மனநிலையில், திட்டியும் தீர்த்தனர். நியாயம்தான். இது மனித உணர்ச்சிதான். நம்மூரில் கூலிப்படைக் கும்பல் கள் கொல்லப்படும் போதுகூட, நமக்கு இதுபோன்ற உணர்ச்சி வழக்கமாக வருவதுண்டு. அதுவும் பிரபலங்கள் கொல்லப் படும் போது அதுபோன்ற உணர்ச்சிகள் சற்றுக் கூடுதலா கவே இருக்கும்.

எப்போதும் அரசியல் கொலைகள் நடைபெறும் போது அதை நிகழ்த்தியவர்கள் அதற்குப் பொறுப்பேற்று அவர்கள் செய்ததற்கான காரணத்தைச் சொல்வதுண்டு. அதேபோல் இப்படுகொலையில் என்ன சொன்னார்கள் என்று கவனிப் போம்.

“மனிதத்தன்மையற்ற கொடூரங்கள், படுகொலைகள், முடிவில்லாத பயங்கரவாதத்தை பஸ்தார் பழங்குடியின மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட சல்வா ஜூடும் எனும் பாசிச குண்டர் படையின் தலைவன் எங்களால் அழித்தொழிக்கப் பட்டுள்ளான். ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் “சல்வா ஜூடும்” குண்டர் படையாலும், அரசின் ஆயுதப் படை களாலும் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கவே நாங்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளோம்” என்று மாவோயிஸ்டுக் கட்சியின் சத்தீஸ்கர் மாநில தண்டகாரண்யா சிறப்புப் பிரிவு மே 26-ந் தேதி அறிவித்துள்ளது.

இந்தப் பின்னணியில் நாம் பின்னோக்கிப் பார்ப்போ மானால் ஆளும் இந்திய அரசு பன்னாட்டு முதலாளிகளுக்கு எப்படி சிவப்புக் கம்பளம் விரிக்கிறது? ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ‘எட்டையப்பர்கள்’ எப்படிப் பன்னாட்டு முதலாளி களுக்குக் காட்டிக்கொடுக்கும் வேலையைப் பார்க்கிறார்கள்? இவர்களால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் எப்படி வெகுண்டு எழுகிறார்கள்? கேள்விக்குறியாக்கப்பட்ட இவர் களின் வாழ்க்கைக்கு மாற்று எது? வாழ்வியலைத் தொலைத்துவிட்ட - உணர்ச்சிகளால் உந்தப்பட்ட இம்மக்களின் போராட்டத்தை ‘மாவோ’வின் தத்துவம் எப்படி வழிநடத்துகிறது? போன்ற பல கேள்விகளுக்குப் புரியாத பல உண்மைகள் நம் முன்னால் விரியும்.

அரிய மரங்கள் கொண்ட அடர்ந்த காடுகள்; மேகங் களை முத்தமிடும் மலைகள்; உச்சியிலிருந்து விழும் அருவி; காட்டைச் சுற்றிலும் நடைபயிலும் நதி; காணுமிடமெங்கும் கருத்தைக் கவரும் பச்சைச் செடி, கொடிகள்; மேகம் தரும் மழைப்பொழிவிற்குத் திருப்பித்தரும் வானுயர்ந்த மரங்கள். இவ்வளவு வளங்களை மேற்பரப்பிலும், விலை மதிப்பற்ற கனிம வளங்களை அடிப்பரப்பிலும் தன்னுள்ளே அடை காத்துக் கொண்டிருப்பவைதான் அடர்ந்த இக்காடுகள். உடல் உறுப்புகளுக்கு எப்படிப் பட்டா போட்டுப் பத்திரப்பதிவுகள் செய்யப்படுவதில்லையோ, அதேபோல் இக்காடுகளிலும் பத்திரப்பதிவு ஏதுமின்றிக் காலங்காலமாக வாழ்ந்து கொண்டி ருப்பவர்கள்தான் ஆதிப் பொதுவுடைமை பேணும் ஆதி வாசிகளான ‘கோண்டு’ இன மக்கள்.

மத்தியப்பிரதேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு உரு வானதுதான் சத்தீஸ்கர் மாநிலம். இம்மாநிலத்தில் பஸ்தர், தண்டேவாடா என்ற இரண்டு மாவட்டங்களின் வளங்கள் தான் மேற்குறிப்பிடப்பட்டவைகள். இவ் வளங்களை வெட்டி எடுத்து விற்றுப் பணமாக்கத் திட்டமிட்டன பன்னாட்டு நிறுவனங்கள். பூர்வீகக் குடிகளான ஆதிவாசிகள் அதற்குத் தடையாக இருக்கிறார்கள். அவர்களை அங்கிருந்து விரட்டியடிக்க வேண்டும். அதற்கு இரண்டு வகையான அடியாட்கள் அவர்களுக்குத் தேவைப்பட்டனர்.

ஒருவகை, பன்னாட்டு முதலாளிகளுக்கு மூளையாகச் செயல்படும் அரசாங்க அடியாள். இன்னொரு வகை, ஆதி வாசிகளை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்த, காட்டிக் கொடுக்கும் உள்ளூர் அடியாள். முதல் வகைக்குத் தேர்வானவர் நம்மூர் ப. சிதம்பரம். மற்றொருவர் நிலப்பிரவும், முன்னாள் அமைச்சரும், பழங்குடியினத்தைச் சேர்ந்த வரு மான மகேந்திர கர்மா.

பன்னாட்டு முதலாளிகள் பூர்வீகக் குடிகளான இம் மக்களை அவ்விடத்திலிருந்து விரட்டியடிக்கப் பல்வேறு முயற்சிகளைக் கையாள்கிறார்கள். முதலில் மயக்கும் பேச்சுப் பேசுகிறார்கள். பின் சலுகைகள் அறிவிக்கிறார்கள். பிறகு மிரட்டுகிறார்கள். எதுவும் வேலைக்காகவில்லை. இப்போது தான் ப. சிதம்பரத்தின் திருத்தொண்டு தொடங்குகிறது. ஏற்கெனவே இந்நிறுவனங்களுக்கு மூளையாகவும் பங் காளியாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இவர், இப்போது அடியாளாகவும் மாறுகிறார். ‘வளர்ச்சி’ என்ற பெயரில் காட்டுக்குச் சொந்தமான மக்களை விரட்டியடிக்கிறார்கள். மண்ணின் மைந்தர்களான இம்மக்கள் மாவோயிஸ்டுகள் துணையுடன் தடுக்கிறார்கள். ப. சிதம்பரம் கூட்டணி அடுத்த கட்டத்திற்குச் சென்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை இராணுவத்தினரை வரவழைக்கின்றனர். ‘காட்டு வேட்டை’ என்ற பெயரில் மிருகங்களாக ஆதிவாசிகள் வேட்டையாடப்படு கின்றனர். நிலங்கள் பறிக்கப்படுகின்றன. உடைமைகள் சூறையாடப்படுகின்றன. பெண்கள் பாலியல் வன்கொடுமை களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். குழந்தைகளைக் கொல் கிறார்கள். இப்பயங்கரவாதப் போரை அரசே நடத்துகின்றது. இதை நடத்துபவர் முதல் அடியாளான ப. சிதம்பரம்.

இப்போது இரண்டாவது அடியாளான, மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்ட மகேந்திர கர்மாவின் தொண்டு தொடங்குகிறது. இவர் யார்? எப்படிப்பட்டவர்? எனத் தெரிந்து கொள்வதும் அவசியம். பழங்குடியின நிலப்பிரபு குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் இந்த மகேந்திர கர்மா. சட்டம் பயின்ற இவர், 1978இல் வலது கம்யூனிஸ்ட்டு சட்டமன்ற உறுப்பினராகிறார். பின்னர் 1996இல் காங்கிரசில் சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகிறார். பிறகு, பிரிக்கப்படாத ம.பி.யில் அஜித் ஜோகி அரசாங்கத்தில் அமைச்சராகிறார். சத்தீஸ்கர் மாநிலம் உருவான பிறகு, காங்கிரஸ் கட்சியில் தலைவராகிறார். 1990களின் இறுதியில். சத்தீஸ்கரில் கனிம வளங்களைக் கொள்ளையடிக்க, பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளே நுழைகின்றன. இவர்களுக்கு ஏற்ற ஒரு அடியாள் தேவைப் படுகிறார். அதற்கு மகேந்திர கர்மா தேர்வாகிறார். 2005இல் இவரது தலைமையில் ‘சல்வா ஜூடும்’ என்ற குண்டர் படை கட்டமைக்கப்படுகிறது. இக்கொடூரமான குண்டர் படையி னருக்கு ‘சிறப்புக் காவல் அதிகாரிகள்’ என்று சத்தீஸ்கர் அரசு பெயர் சூட்டி அங்கீகரிக்கிறது.

“சல்வா ஜூடும்” பயங்கரவாத கொலைகாரப் படை யினரால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நூற்றுக் கணக்கான கிராமங்கள் தீயிட்டுச் சாம்பலாக்கப்பட்டிருக் கின்றன. இருபது இலட்சத்திற்கும் மேலான மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு நாடோடிகளாக்கப்பட்டுள்ளனர். அய்ம்ப தாயிரத்திற்கும் மேலான மக்கள் அவர்களது வாழ்விடங் களிலிருந்து கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு நிவாரண முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். பல நூற்றுக் கணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர். இவ்வளவும் படை தளபதி போல் இந்தப் பன்னாட்டு முதலாளிகளின் இரண்டாவது அடியாள் மகேந்திர கர்மா தலைமையேற்று நடத்தியவைகள். இதனால் இவர் ‘பஸ்தார் புலி’ என்று சத்தீஸ்கர் அரசு கும்பலால் அழைக்கப் படுகிறார்.

சல்வா ஜூடும் என்ற இந்த பயங்கரவாத கொடூரக் கும்பலுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்படுகின்றன். உச்சிக்குடுமி மன்றமான உச்சநீதிமன்றம் எப்போதாவது சில நல்ல தீர்ப்புகளை வழங்கித் தமக்குக் கழுவாய் தேடிக் கொள்ளும். அப்படி ஒரு தீர்ப்பு இவ்வழக்கில், “சிறப்புக் காவல் அதிகாரிகள் என்ற பெயரில் பழங்குடி இளைஞர்களை நக்சல்பாரிகளுக்கு எதிரான போரில் ஈடுபடுத்துவது சட்ட விரோதமானது” என்று கூறி, சல்வா ஜூடும் போன்ற அமைப்புகளைக் கலைக்குமாறு, 2011இல் உத்தரவிட்டது. ஆனால் சத்தீஸ்கர் அரசு, சத்தீஸ்கர் துணைப்படை, சிறப்புத் துணைப்படை, கோயா கமாண்டோ படை என்ற பெயரில் “பழையகள், புதிய மொந்தை” என்பதுபோல், இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறது. சல்வா ஜூடும் செய்த கொலைகள், கற்பழிப்பு வழக்குகள், நீதிமன்றங்களில் அப்படியே உறங்கிக் கொண்டு தானிருக்கின்றன.

மனசாட்சியோடு நாம் சிந்தித்துப் பார்ப்போம். பழங்குடி மக்கள் என்பவர்கள் யார்? அவர்கள் இந்தியர்களா? இல்லையா? சுதந்திர இந்தியா வழங்குகிற உரிமைகள் இவர்களுக்கு வழங்கப்படுகின்றனவா? “காவல்துறை நமது நண்பன்”, “கண் துஞ்சாமல் நாட்டைப் பாதுகாப்பது இராணுவம்” போன்ற செதுக்கிய வார்த்தைகள் எல்லாம் யாருக்கு? பழங்குடி மக்களிடம் இவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் ‘இல்லை’ என்பதே பதில். அப்படியானால் பாதுகாப்பற்ற மக்களுக்குப் பாதுகாப்பு யார்? வேலியே பயிரை மேய்ந்தால் என்னவாகும்? மூன்று வேளை உணவும், உத்திரவாதமான வாழ்க்கையும் உள்ள சராசரி குடிமகனுக்கு மேற்சொன்ன கேள்விகளெல்லாம் கேலியாகத்தான் தெரியும். நெருப்பில் சிக்கிக்கொண்டவன் தான் தப்பிப்பதற்கு எப்படியாவது முயற்சிப்பதற்குத்தான் முயலுவான். அப்படிப்பட்ட முயற்சி களின் போது, அவன் எவரையும் பயன்படுத்திக் கொள்வான். அதுபோன்ற சூழ்நிலையில்தான் மீட்பவர்களாக பழங்குடி யினருக்கு வாய்த்தவர்கள் மாவோயிஸ்டுகள்.

உலகமயம், தாராளமயம் என்று 25 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கிற இந்தியா, சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன பின்பும் கல்வி, மருத்துவம், போக்கு வரத்து வசதி, சட்டப்படியான மற்ற உரிமைகள் எதுவும் கிடைக்காத மக்களுக்கு இந்திய அரசு என்ன தீர்வு வைத் திருக்கிறது? ஆனால் அரசே அவர்களைச் சுரண்டுவதற்குக் குறைவில்லை. கந்துவட்டிக்காரர்களாலும், சிறு வியாபாரி களாலும் ஏமாற்றப்படுவது ஒரு பக்கம். காவல்துறையும், வனத்துறை அதிகாரிகளும் பழங்குடியினப் பெண்களைத் தமது உரிமையாகக் கருதி வல்லுறவு கொள்வது மறுபக்கம். வயிற்றுக்காகவும், மானத்திற்காகவும் போராடிக் கொண் டிருக்கும் இந்த ஆதரவற்றவர்களுக்குத் தோளோடு தோள் நிற்பவர்கள் மாவோயிஸ்டுகள். இருண்டு போய்க் கிடக்கும் இவர்களின் பாதையில் ஒளி பாய்ச்சி முன் செல்பவர்கள் மாவோயிஸ்டுகள்.

ஆதரவற்ற இம்மக்களுக்காக யார் குரல் கொடுத்தாலும் அவர்களுக்கு, “பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், வன்முறை யாளர்கள்” என இச்சமூகமும், அரசும் பெயர் சூட்டுகின்றன. எது வன்முறை? யார் செய்வது பயங்கரவாதம்?

ஹிமான்ஷூகுமார், இவர் ஒரு காந்தியவாதி. சுதந்தரப் போராட்டத் தியாகியின் மகன். சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா மாவட்டத்தில் பழங்குடியின மக்களிடையே பணியாற்றியவர். இதோ, அவர் பேசுகிறார் கேட்போம்...

“இது மாவோயிஸ்டுப் புரட்சியல்ல, இவ்ஆட்சி அமைப் பால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏழைகளின், ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சி. சற்று யோசியுங்கள். ஒரு வேளை, நீங்கள் அந்தக் கடைகோடி மக்களில் ஒருவராய் இருந்தீர்களானால் - கொலை, கற்பழிப்பு, ஒடுக்குமுறைகள் உங்கள் மீது ஏவப் பட்ட வண்ணம் இருக்குமானால் - நீங்களும் இத்தகைய தொரு புரட்சியைச் செய்யமாட்டீர்களா? இச்சூழலில் மாவோயிஸ்டுகள் அல்லது நக்சலைட்டுகள் எனப்படுவோரின் இருத்தல் ஒரு தற்செயல் நிகழ்வு மட்டுமே. நக்சலைட் என்ற பெயர் இல்லையானால், அவன் இன்னொரு பெயரின் கீழ் போராடியிருப்பான். இவ்வுலகில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை போராட்டம் தவிர்க்க முடியாதது. ஒருவேளை மாவோ அவர்கள் பிறக்கவில்லை என்றால், அந்த ஏழை மக்கள் தமது ஏழ்மை நிலைக்கு எதிராகப் போராடியிருக்கமாட்டார் களா? போராட்டம் தொடர்ந்து கொண்டுதானிருக்கும். அந்த ஏழைகளுக்கு ஒரு தலைமையோ, ஒரு அமைப்போ அல்லது வேறு எதுவோ, எதுவும் முக்கியமில்லை. அவன் போராடுவான். போராடிக் கொண்டிருக்கிறான். சில நேரங்களில் அவனை ஆதரிப்பவர்கள் காந்தியாக இருக்கிறார். சில நேரங்களில் வினோபாவாக, சில நேரங்களில் மாவோயிஸ்டுகளாக இருக்கிறார்கள். தன்னை ஆதரிப்பவர்களை அந்த ஏழை ஏற்றுக்கொள்கிறான். சில நேரங்களில் அவன் வீழ்த் தப்படுகிறான். ஆனால் இந்த மூர்க்கத்தனமான சமூகக் கட்ட மைப்பை எதிர்த்து அவனது போராட்டம் மட்டும் ஓய்வதில்லை.”

“சல்வா ஜூடுமை தொடங்குகையில் மாவோயிஸ்டு களின் எண்ணிக்கை 5,000 ஆக இருந்ததாகக் காவல்துறை கூறுகிறது. இதுபோன்ற கொடுஞ்செயல்கள் தொடர்ந்த பின்னால், மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 22 மடங்கு உயர்ந்து 1,10,000 பேராக அதிகரித்து இருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருப்பது என்னவென்று தெரிகிறதா என்று இந்த அரசைக் கேட்கிறோம். நீங்கள் மீண்டும் தாக்குதலில் இறங்குவீர்களானால், மிச்சம் இருப்போரும் மாவோயிஸ்டுகள் ஆவார்கள். முழு நேரப் போராளியாவார்கள்.”

கை, கால் இல்லாத ஒரு புழுக்கூட, அதைத் தீண்டும் போது வளைந்து, நெளிந்து தனது எதிர்ப்பைக் காட்டுகிறது. ஆரோக்கியமான உடல் உறுப்புகளைப் பெற்ற உழைக்கும் மக்கள் தமக்கு வரும் தாக்குதல்களை எதிர்ப்பதற்குத் தமது உடல் உறுப்புகளை ஆயுதமாக ஆக்கிக்கொள்கிறார்கள். சூழல்நிலை மாறும்போது தம்மைத் தற்காத்துக் கொள்ள ஆயுதங்களை உடல் உறுப்புகளாக மாற்றிக் கொள்கிறார்கள்.

மாவோ சொன்னார் : “நீ ஏந்த வேண்டிய ஆயுதம் எது என்று தீர்மானிப்பது உன் எதிரிதான்” என்று. இந்தியா வெங்கும் மெல்லப் பரவிவரும் மாவோயிஸ்டுகளும், இந்தியாவெங்கும் பெருவாரியாக இருக்கும் பாட்டாளிகளும், ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்று சேர்ந்து போராடும் போது இந்தியா பற்றி எரியும். அந்த நெருப்பில், எப்படிப்பட்ட படை வந்தாலும் பொசுங்கியே போகும்.

Pin It