‘தேசிய அறிவு ஆணையம்’ என்ற அமைப்பை பிரதமர் மன்மோகன்சிங் உருவாக்கியிருக்கிறார். அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள இந்த அறிவாளிகள் ஆணையம் பற்றி, ஏற்கனவே ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழில் எழுதியுள்ளோம்.

இதன் தலைவராக இருக்கும் சாம்.பிட்ரோடா, 27 சதவீத இடஒதுக்கீட்டை அமைச்சர் அர்ஜுன் சிங் அறிவித்தவுடனேயே, எந்தவித ஆய்வுமின்றி, அரசியல்வாதி போல அதை எதிர்த்தார். தொடர்ந்து, 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த ஆணையத்திலிருந்து அந்திரபெட்ரெலே, பிரதாப்பானுமேத்தா என்ற இரண்டு ‘அறிஞர்கள்’ விலகிவிட்டனர்.

அர்ஜுன்சிங் 27 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்தவுடனேயே, தங்களைக் கலந்து ஆலோசிக்காமல், இதை அறிவித்திருக்கக் கூடாது என்று கூறினார், சாம் பிட்ரோடா. நல்லவேளை, நாடாளுமன்றத்தில் அரசியல் சட்டத்திருத்தம் வருவதற்கு முன்பே, தங்களது ஒப்புதலைக் கேட்காமல் போனது தவறு என்று, கூறாமல் விட்டாரே!

இதுபற்றி, பிரபல சமூக ஆய்வாளரும் எழுத்தாளருமான காஞ்சா அய்லய்யா, ‘டெக்கான் கிரானிக்கல்’ ஏட்டில் (ஜூன் 20) எழுதிய கட்டுரை ஒன்றில், சில கேள்விகளை எழுப்பியுள்ளார். நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு அரசியல் சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு உரிமை பற்றி கேள்வி எழுப்ப, இந்த ‘அறிவாளிகளுக்கு’ யார் அதிகாரம் தந்தார்கள்? இடஒதுக்கீடு பிரச்சினை வரும்போது மட்டும் “சாதி எதிர்ப்பாளராக” உருவெடுக்கும் இவர்கள்  இந்தியாவில் சாதி அமைப்பு சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்று வேறு எப்போதாவது கூறியிருக்கிறார்களா? அதற்கான திட்டம் வைத்திருக்கிறார்களா?

இனவேறுபாட்டைப் போலவே சாதி வேறுபாட்டையும் கருதி அதை ஒழிக்க அய்.நா. சபை முன்வரவேண்டும் என்று, தென்னாப்பிரிக்காவில் டர்பனில் நடந்த சர்வதேச இனவெறி எதிர்ப்பு மாநாட்டில், வலியுறுத்தப்பட்டபோது, இந்த “அறிவாளிகள்” எல்லாம் என்ன சொன்னார்கள்? சாதி இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை, அதில் சர்வதேசத் தலையீடு கூடாது என்றார்கள்.

இதை, சர்வதேச அரங்கில் விவாதிக்கக் கூடாது என்று அன்றைய வாஜ்பாய் ஆட்சி எடுத்த முடிவுக்கு, இவர்கள் எல்லாம் ஆதரவாக இருந்தவர்கள் தானே! தனியார் மருத்துவ பொறியியல் கல்லூரிகளில், எந்தத் தகுதியும் பார்க்காமல், இடங்கள் விற்பனை செய்யப்படுவதை இவர்கள் எதிர்த்தார்களா?

நாடு முழுதும் எல்லோருக்கும் பொதுவான கல்வி அமைப்பை உருவாக்கி, கல்வி முறையில் ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதை ஒழிக்க, இவர்கள் திட்டம் வைத்துள்ளார்களா? என்ற நியாயமான கேள்விகளை எழுப்பியுள்ளார் அய்லய்யா!

Pin It