இமயம் வென்றான், கடாரம் கொண்டான், கங்கை கொண்டான், வெற்றி கொண்டான் என்னும் பெயர்கள் தமிழ் மூவேந்தர்களின் வெற்றிச் சின்னங்களாக, 1000 ஆண்டுகளுக்கு மேலாக விளங்கும் ஊர்களின் பெயர்கள். இவ்வெற்றியில் சோழர்க்கே பெரும் பங்கு உண்டு.

இவ்வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்களை அன்னியில், ஆயுதக்களம், உட்கோட்டை, நாயகனைப் பிரியாள், அமர் உணக்கந்தூண்டில், பொன்பரப்பி என்னும் தமிழர் ஆட்சி அடையாளங்களைக் குறிக்கும் ஊர்களும் இப்பகுதியில் தான் உள்ளன.

இப்பெருமைக்குரிய பகுதியில், எல்லா மக்களும் காலம் நேரம் பார்க்காமல் உழைப்பவர்கள். எதனால்?

கொள்ளிடத்தின் வடகரை தவிர, நீர்வளம் மிக்க ஊர்களாக இப்பகுதி ஊர்கள் எதுவும் இல்லை. “புன்செய்” - துன்பந்தரும் வேளாண் நிலங்களே இங்கு அதிகம்; இவை பெரிதும் வானம் பார்த்த நிலங்கள்.

ஆனால் இப்பகுதியிலுள்ள சிற்றூர்களில்தான் - தமிழகத்தின் எந்த வட்டாரத் தை விடவும் அதிகம் படித்த ஆடவரும் மகளிரும் நிரம்பியிருக்கிறார்கள். இது ஒரு பேருண்மை.

‘வளமில்லாத பகுதியில் பிறந்த நாம் வளத்தை உண்டாக்கிக் கொள்ளத் துணையாகக் கல்வி கற்றால் போதும்’ என்ற நல்ல புரிதல் இப்பகுதி மக்கள் எல்லோருக்கும் உண்டு.

இவ்வுணர்ச்சிக்கு இப்பகுதியில் வித்திட்டவர்கள் கரடிகுளம் ஆசிரியர் சா. வேலாயுதம், கொடுக்கூர் இரா. விசுவநாதன், கீழமாளிகைத் தமிழ்மறவர் வை. பொன்னம்பலனார், வாரியங்காவல் ஆசிரியர் சீனிவாசன் - மற்றும் எல்லோர்க்கும் மேலாகத் தந்தை பெரியார் ஆகிய பெருமக்களே ஆவர்.

இவர்களை அடுத்து வீரானந்தபுரம் ந. கணபதி, வே. ஆனைமுத்து, கோ. குழந்தை வேலன் ஆகியோர் ஆவர். இவர்கள் எல்லோரும், “படியுங்கள்! படியுங்கள்!” என நாள்தோறும் தூண்டினர். எல்லா வகுப்பினரும் கடன் உடன்பட்டேனும் படித்தார்கள். தடுக்கிவிழுந்தால் ஊர்தோறும் பட்டதாரிகள், புலவர்கள் இருப்பது இங்கே அதிகம்.

இது வெறும் புகழ்ச்சி இல்லை.

இவ்வளவு பெரிய அளவில் கல்வி கற்றவர்கள் நிரம்பிய இப்பகுதியில் மார்க்சியப் புரட்சிச் சிந்தனைகளும், பெரியாரின் தன்மானக் கொள்கைகளும் 1960களில் வேர் பிடித்தன.

இக்கொள்கைகளை முன்னெடுத்துச் சென்ற ஆசிரியர் சா. வேலாயுதம், அதற்காகவே மேல்சாதிக்காரர்களால், 13.11.1947 காலை 8 மணிக்குக் கொல்லப்பட்டார்.

மார்க்சிய - மாவோ இயப்புரட்சியாளர் மதகளிர் மாணிக்கம் தமிழரசன், கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார்.

களப்போராளியான புலவர் கு. கலியபெருமாள் தம் குடும்பத்தினருடன் பல ஆண்டுகள் சிறையில் வாடிவ தங்கி விடுதலையாகிவந்து, அண்மையில் மறைந்தார்.

இத்துணை ஈகிகள் ஈந்த உயிரின் விலை, மதிக்க முடியாதது.

அவ்வளவு பெரிய ஈகிகள் உலவிய இப்பகுதியில் இன்றுள்ள படித்த - அரைகுறையாகப் படித்த இளைஞர்களும் மாணவர்களும் மனங்கொண்டு சில செய்தி களைச் சிந்திக்க வேண்டும்.

அவர்களின் உழைப்புக்கும் ஈகத்துக்கும் ஈடான பயனை நாம் வென்றெடுத்தோமா என்று, ஒவ்வொரு வரும் சிந்திக்க வேண்டும்.

சாதித் திமிர் ஒழிய வேண்டும் என, அவர்கள் பாடு பட்டார்கள். அது ஒழிக்கப்படுவதற்கு மாறாகக், கூர்சீவி விடப்படுகிறது - வாக்குவேட்டைக் கட்சிக்காரர்களால்.

மூடநம்பிக்கைப் பழக்கங்களும் வழக்கங்களும் விழாக்களும் பண்டிகைகளும் ஒழிக்கப்பட வேண்டும் என அவர்கள் பாடுபட்டார்கள். அவை ஒழிக்கப்படுவ தற்கு மாறாக, வலிவான மின் ஊடகங்களைப் பயன் படுத்தி மிகச் சிறப்பாக அவ்விழாக்களை இன்று நடத்து கிறார்கள்.

அரசு, ஆட்சி, அதிகாரம் என்பவை சட்டமன்ற உறுப் பினர் ஆவதால் - நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதால் வந்து சேரும் என்று வாக்குவேட்டைக் கட்சிக்காரர்கள் வாய்கூசாமல் சொல்லுகிறார்கள்.

சுயசாதி, தன்கட்சி என்கிற பேரால் இளைஞர்கள் அவர்களை நம்புகிறார்கள்.

அதேநேரத்தில் நேற்றுப் பொறுப்பிலிருந்த தமிழக முதலமைச்சரும் இன்று பொறுப்பிலுள்ள முதலமைச் சரும் ஒரு நாளைக்கு ஒரு வேண்டுகோள் மடலை பிரதமர் என்பவருக்கு எழுதிக்கொண்டே இருக்கிறார் கள். இது ஏன் அப்படி?

தமிழர்களுக்கு - தமிழகத்துக்கு நேரும் கேடு களைத் தீர்ப்பதற்குத் தமிழக அரசுக்குப் போதிய அதிகாரம் இல்லை.

எல்லா உயிரான - உரமான - உயர்வான அதிகாரங் களும் தில்லியில் குவிந்து கிடக்கின்றன. தில்லியில் எவர் ஆட்சி - எந்தக் கட்சி இருந்தாலும் அவர்கள் தான் ஆண்டைகள் - தமிழர்களாகிய நாம் அவர்களுக்கு அடிமைகள்.

‘என் அடிமை விலங்கை முறிக்க நான் பாடுபடு கிறேன்’ என்று சொன்னால், “உன்னை அடிமையாக வைத்து அதிகாரம் செய்ய எனக்கு உரிமை இருக் கிறது” என்று உரத்துக் கூவுகிறான், தில்லிக்காரன்.

‘மேல்சாதிக்காரர்களும், பெருநில உடைமைக்காரர் களும், வணிக-தொழில் முதலாளிகளும் உங்கள் நலனைப் பாதுகாக்க எழுதிக் கொண்ட அரசமைப்புச் சட்டம் எங்களைக் கட்டுப்படுத்தாது’ என்று சொன்னால், ‘நீ பிரிவினைவாதி - போ, சிறைக்குள்ளே’ என்கிறான் தில்லிக்காரன். ஏன்?

உண்மையான அதிகாரம் பெற்ற ஆண்டை, தில்லி யை - இந்திய அரசை ஆள்பவன்தான். தமிழக அரசை - கருநாடக அரசை - கேரள அரசை - பஞ்சாப் அரசை - அரசாங்கத்தை ஆளுகிற எவரானாலும், அவர் தில்லிக் காரனுக்கு அடங்கிப் போக வேண்டிய அடிமையே.

இதுவே நம் “அரசு” பற்றிய உண்மை. இதை எந்த ஒரு கட்சியோ, ஒரு குழுவோ, ஒரு பகுதிக்காரரோ உணர்ந்தால் மட்டும் போதுமா? போதாது! ஏன்?

“நம் எல்லோரையும் அடக்கி ஆளுபவன் தில்லிக் காரன் - அது நமக்கு சுதந்தரம் ஆகாது” என ஒவ் வொரு மாநில மக்களும், மாநில மக்கள் தலைவர் களும் - குறிப்பாகப் படித்த இளைஞர்களும் மாணவர்களும் உணர்வு பெற்றே தீரவேண்டும். இவர்கள் எல் லோரும் ஒன்றுசேர்ந்தால் தான், தில்லி ஆட்சியைக் கைப்பற்ற முடியும்.

அப்படிப்பட்ட இந்திய ஆட்சி - இந்திய அரசு ஓர் உண்மையான மதச்சார்பற்ற - சமதர்ம அரசாக - ஆட்சி யாக நம்மால் - எல்லா மாநில மக்களால் அமைக்கப்பட வேண்டும்.

மூன்று துறைகளுக்கான அதிகாரங்களைத் தவிர, மற்றெல்லாத்துறை அதிகாரங்களும், ஒவ்வொரு மாநி லத்துக்கும் - தமிழகத்துக்கும் வந்து சேரவேண்டும்.

இவற்றைப் பற்றியெல்லாம் மாணவச் செல்வங்களும் இளைஞர்களும் கூட்டங்கூட்டமாகக் கூடிக் கலந்துரை யாடுங்கள்.
“அரசு-அரசமைப்பு சட்டம் என்றால், அது என்ன?” என்பதைத் தெளிவாக உணருங்கள். நீங்கள் உணர்ந்த உண்மைகளை உங்கள் ஊரார்க்கும், தமிழகத்தார்க் கும் எடுத்துச் சொல்லுங்கள்.

நாம் எந்த ஓர் அரசுக்கும் அடிமையாக இருக்கக் கூடாது - அது அவமானம், அநீதி, அடாதது என உணர்ந் திட ஒரு வாய்ப்பாக - எல்லோரும் செயங்கொண்ட சோழபுரம் மாநாடுகளுக்கு வாருங்கள்! வாருங்கள்! என அன்புடன் அழைக்கிறோம்.

Pin It