பார்க்கின்ற திரைப்படங்கள்
எல்லாம் காதல்.
கேட்கின்ற திரைப்பாடல்கள்
எல்லாம் காதல்.
குறள்மொழியும் குறுந்தொகையும்
கொண்டாடுவதெல்லாம் காதல்.
ஆனால்
உயிர் சுமக்கும்
உடல்கூடுகள் இரண்டு
மனங்கள் என்கின்ற
நாற்றங்காலில்
காதலைப் பயிர்செய்தால்
சாதிவெறி என்கின்ற
எருமை மாடுகள்
திமிரோடு மேய்ந்துவிடுகின்றன.
தமிழ் தமிழன் என்று
கூப்பாடு போட்டும்
தமிழ் தேசியமென்று
வாய்ப்பாடு படித்தும்
சாதிமறுப்புக் காதலென
வந்துவிட்டால்
வருணாசிரமக் கருநாகம்
படமெடுத்தாடுகின்றது.
கேட்பாரின்றிக் கீழ்சாதியானவர்களின்
சேரிகளைச் சூறையாடப்
பகுத்தறிவுச் சூத்திரர்களும்
படையெடுக்கத் தயங்குவதில்லை.
ஈழத் தமிழர்களுக்காய்
இரங்கற்பா படிப்போரே
சேரித்தமிழர்களை நேசித்தால்
சிரசா வெடித்துவிடும்?

Pin It