தமிழகம் போதிய நீர்வளம் இல்லாத நாடு.

தமிழகத்தில் பாயும் ஆறுகளில், தாமிரபரணி ஆறு மட்டுமே தமிழகத்தில் தோன்றி, தமிழகப் பகுதிகளி லேயே ஓடிக் கடலில் கலக்கிறது. அதன் கரைகளில் 4000 ஆண்டுகளுக்கு முந்திய நகர நாகரிகம் பெற்ற பேரூர்கள் இருந்து மறைந்துவிட்டன என்பது நம் வரலாறு.

காவிரி, கர்நாடகத்தில் தோன்றி, நெடுந்தொலைவு தமிழகத்தில் ஓடி, காவிரிப் பூம்பட்டினத்தில் கடலில் கலக்கிறது.

பாலாறு கர்நாடகத்தில் தோன்றி, 82 கிலோ மீட்டர் தொலைவில் ஆந்திரத்தில் நுழைந்து, தமிழகத்தில் வேலூர் மாவட்டம் வழியே 242 கி.மீ. ஓடி, காஞ்சி மாவட்டத்தில் சதுரங்கப்பட்டினத்தில் கடலில் கலக்கிறது.

mullaiperiyar_anai_370முல்லைப் பெரியாறு அணை கேரள மாநிலத்துக்குச் (அன்றைய திருவிதாங்கூர் சமஸ் தானத்துக்கு) சொந்தமான நிலத்தைச் சென்னை மாகாண அரசு 999 ஆண்டு களுக்குக் குத்தகைக்குப் பெற்று, 1886இல் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வெள்ளைக்காரப் பொறியாளர் மேஜர் ஜான் பென்னி குயிக் என்பவரால் கட்டப்பட்டது. அந்த அணை கட்டப்படுவதற்கு அரசு தந்த பணம் போதாததால், அவர் இங்கிலாந்திலிருந்த தன் சொந்த சொத்துக்களை விற்று, அதைக் கொண்டு அந்த அணையைக் கட்டி முடித்தார்.

முல்லைப் பெரியாறு அணை நீர் தான் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், இராமநாதபுரம் ஆகிய அய்ந்து தென்மாவட்டங்களின் வேளாண்மைக்கு உயிர் நாடியாகும். முல்லைப் பெரியாறு அணை கடல் மட்டத்திலிருந்து 2864 அடி உயரத்தில் கட்டப் பட்டுள்ளது. அந்த அணைக்குக் கீழ்ப்பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் சமவெளிகள் அல்ல; மிக மேடானவை.

அதாவது கடல் மட்டத்திலிருந்து குமுளி 3,100 அடி உயரத்திலும், வண்டிப் பெரியாறு 2743 அடி உயரத்திலும், பாம்பனாறு 4,402 அடி உயரத்திலும், வல்லாரம் குன்னு 3422 அடி உயரத்திலும், புல்மேடு 3583 அடி உயரத்திலும் உள்ளன. அதாவது முல்லைப் பெரியாறு அணையை விட உயரமான பகுதிகளே கீழ்ப்பகுதியில் உள்ளன.

நிலநடுக்கம், சுனாமி என எந்த இயற்கை இடர் ஏற்பட்டாலும் முல்லைப் பெரியாறு அணை அவற்றால் உடைபடாது என்பதை அரசு அமைத்த ஆய்வுக் குழுக்களே கண்டு உணர்ந்து அறிக்கை அளித்துள்ளன. எனவே, ஒரு வேளை முல்லைப் பெரியாறு அணை உடைந்தாலும், அதன் நீர் வழிந்து ஓடி 58 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள இடுக்கி அணைக்குத்தான் சென்று சேரும்.

கேரளத்தில் வாழும் மக்களையோ, குடியிருப்புகளையோ, பயிர்களையோ நீர் அடித்துச் செல்ல வாய்ப்பே இல்லை. இவை உண்மை.

இடுக்கி அணை கேரளாவுக்கு வேண்டிய மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கென்றே உள்ளதாகும். இது 1973இல் கட்டப்பட்டது. அதன் தண்ணீர் கொள்ளளவு 70.50 கோடி கனஅடியாகும். அதைக் கொண்டு 780 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கி றார்கள். முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டால், அதன் கொள்ளளவு நீர் 10.50 கோடி கன அடியும் இடுக்கி அணைக்கு வந்துசேரும்; அதனால் மேலும் அதிக அளவு மின்சாரத்தை அவர்கள் உற்பத்தி செய்யலாம் என்பதே கேரள அரசியல் கட்சிகளின் இப்போதைய திட்டம் ஆகும். இப்போதும், முல்லைப் பெரியாறு அணைக்கு 136 அடிக்கு மேல் சேரும் தண்ணீர் இடுக்கி அணைக்குக் கீழ்தான் போகிறது.

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி உயரம் வரையில் நீரைத் தேக்கலாம். அப்போதுதான் 10.50 கோடி கன அடியாக நீரைத் தேக்க முடியும்.

ஆனால் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும், அது உடைந்தால் பல்லாயிரக்கணக்கான கேரள மக்கள் செத்துவிடுவார்கள்; பல ஊர்கள் அழிந்துவிடும் என்றும் ஒரு கற்பனைச் செய்தியை “மலையாள மனோரமா” என்ற கேரள நாள் இதழ் முதன்முதலில் கிளப்பிவிட்டது. அது ஒரு கட்டுக்கதை. அதையே முன்வைத்து - 1979 முதல் கேரளாவில் ஆட்சி செய்த எல்லாக் கட்சிகளின் ஆட்சிகளும் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்றும்; அதை இடிக்க வேண்டும் எனக் கோரியும் கேரள மக் களிடத்தில் அச்சத்தைப் பரப்பியும், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பணிபுரியும் தமிழக அரசுப் பணியாளர்களை அச்சுறுத்தியும், அத்துமீறி அணைப் பகுதிக்குள் நுழைந்து சிறு சேதங்களை விளைவித்தும் வருகின்றன.

இந்த முயற்சிகள் பயன் அளிக்காததால், முல்லைப் பெரியாறு அணையில் 136 அடி உயரத்துக்கு மட்டுமே நீரைத் தேக்க வேண்டும் என்று கேரள அரசு கோரிக்கை வைத்தது. அத்துடன் முல்லைப் பெரியாறு அணையில் நீர்க் கசிவுகள் இருப்பதாகக் கூறியதால், தமிழக அரசினர் 3 கட்டங்களில் சிறுசிறு பழுதுகளைப் பார்த்துச் சீர்செய்து முல்லைப் பெரியாறு அணையைக் கெட்டிப்படுத்தி விட்டனர்.

முல்லைப் பெரியாறு அணை பற்றிய வழக்கில், உச்சநீதிமன்றம், “முல்லைப் பெரியாறு அணை கெட்டியாக உள்ளது; எனவே அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம்” என, 27.02.2006 இல் தீர்ப்பு அளித்தது.

1.            அந்தத் தீர்ப்பை முடக்கும் வகையில் கேரள அரசு ஒரு சட்டத்தை இயற்றியது.

2.            அத்துடன் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் முன் னிலையில், 29.11.2006இல் நடைபெற்ற கூட்டத் தில், முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு, கேரளா ஒரு புதிய அணையைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தது.

3.            எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல், 2011இல் “DAM 999” என்கிற ஒரு திரைப்படத்தை எடுத்து, அதனைப் பல மொழிகளிலும் மாற்றி எடுத்து, முதலில் - கேரள மக்களிடையே, ஓர் அணை உடைவது போலவும், அதனால் பேரழிவும் மக்கள் சாவும் பயிர் அழிவும் ஏற்படுவது போலவும் காட்டி, கேரள மக்களிடம் பீதியையும், அச்சத்தையும் பரப்பி, முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீர வேண்டும் என்கிற சிந்தனையைக் கேரளப் பொது மக்களிடத்திலே விதைத்துவிட்டார்கள். அப்படத்துக்குத் தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இது மிகச் சரியானது.

4.            இவை போதாதென்று, தற்போது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறுவதையொட்டி, 25.11.2011 இல் கேரளாவைச் சார்ந்த காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் கட்சிகளைச் சேர்ந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களிடம் தமிழகம் - கேரள அரசுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டு மென்று கோரிக்கை வைத்தனர்.

5.            அதனை அடுத்து, 29.11.2011, செவ்வாய் அன்று, நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலைக்கு முன்னால் கேரள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் கூடித் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆனால் தமிழகத்தைச் சார்ந்த 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், காங்கிரஸ் கே.எஸ். அழகிரி, ம.தி.மு.க. கணேசமூர்த்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் லிங்கம், விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடராசன் ஆகிய 5 பேர்கள் மட்டுமே காந்தி சிலை அருகில் முல்லைப் பெரியாறு அணைக்குப் பாதுகாப்புக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தமிழர்க்கு ஓர் அவமானம்.

6.            இவ்வளவும் நடந்த பிறகு, கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 120 அடிகளாகக் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதையே கோரிக்கையாக வைத்துப் போராடுகின்றது.

இவ்வளவு கேடுகள் சூழ்ந்ததைக் கண்டு கொதித் தெழுந்த தமிழக மக்கள், 5.12.2011 முதல் குமுளி, கம்பம் மெட்டுச் சாலைகளை நோக்கிப் பல்லாயிரக் கணக்கில் திரண்டு சென்று ஆர்ப்பாட்டங்கள் செய்து கோரிக்கைகளை முழங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் ஈரோடு, கோவை முதலான பகுதிகளில் மலையாளிகளின் உணவு விடுதிகள், நகைக் கடைகள், துணிக் கடைகளைத் தாக்குவதில் தமிழக இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். கேரளத்தில் நூறாண்டுகளுக்கு மேலாக வாழும் தமிழகத் தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும், துரத்தப்பட்டும் - இரவோடு இரவாக குழந்தை குட்டிகள், தட்டுமுட்டுச் சாமான்களுடன் 200க்கு மேற்பட்ட குடும்பத்தினர் தமிழகத்தில் அடைக்கலம் புகுந்துவிட்ட கொடுமைகளும் நடக்கின்றன.

7.            இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையை அவர்களே உடைக்கத் திட்டமிட்டு, கேரள காங்கிரஸ் தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் கடப்பாரை, மண் வெட்டி, பெரிய பெரிய இரும்புத் தடிகளுடன் 3.12.2011 முற்பகலில் தேக்கடிக்கு வந்து, தமிழகத்துக்குத் தண்ணீர் வரும் மதகுகளை உடைக்க முயன் றனர்; காவலர்களைத் தாக்கினர்.

கேரளாவில் இப்போது காங்கிரஸ் ஆட்சி நடை பெறுகிறது. காங்கிரசுக் கட்சிக்கு இன்று முழுப் பெரும்பான்மை இல்லை. அண்மையில் அங்கே ஒரு தொகுதி யில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், போதிய பெரும்பான்மை கிடைக்கும். எனவே, “மலையாளிகளுக்கு ஆபத்து” என்ற கூக் குரலை இந்திய மட்டத்துக்குக் கொண்டு செல்வதை, ஒரு தேர்தல் வியூகமாகவும் இன்றைய கேரள காங்கிரஸ் கொண்டுள்ளது.

மத்தியிலும் இன்று காங்கிரசுத் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

1.            இச்சூழ்நிலையில் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் அல்லது அதன் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும்;

2.            கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வருவதைத் தடுத்திடும் வகையில், 500 கோடி ரூபா திட்டத்தில் புதிய அணை ஒன்றைக் கட்டியே தீர வேண்டும் என்னும் இரண்டு கோரிக்கைகை களை நிறைவேற்றிக் கொள்ளக் கேரள அரசும், மக்களும், கேரளத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டுப் போராடுகிறார்கள்.

இந்தப் பெருங்கேட்டிலிருந்து தமிழகத்தை மீட்க இன்றைய தமிழக அரசு என்ன செய்துள்ளது?

1.            தமிழகச் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை 15.12.2011இல் நடத்தி, அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு நீரைத் தேக்கிட உரிமை வேண்டும் என்ற தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியிருக் கிறது. இது பாராட்டுக்குரியது.

                அத்துடன், இதற்கு உரிமை தந்து ஏற்கெனவே உச்சநீதிமன்றம் 27.2.2006இல் அளித்த தீர்ப்பை இந்திய அரசு கெசட்டில் வெளியிட்டு அதை அமல் படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது.

2.            இதுபற்றி முத்தரப்புப் பேச்சுவார்த்தையை மேற் கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளது.

3.            அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக முதல்வர் தந்த மடலுடன் பிரதமரைக் கண்டு பேசினர். 1.12.2011 அன்று 12 நாடாளு மன்ற அ.தி.மு.க. உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

                தி.மு.க.வினர் தமிழகம் முழுவதிலும் பல இடங்களில் ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்தனர். தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், இராம நாதபுரம் மாவட்டங்களில் 14.12.2011 அன்று மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.

இவை போதமாட்டா.

                அப்படியானால், தமிழக ஆற்று நீர்ச்சிக்கல்களுக்கு நல்ல தீர்வுகள் வர, நாம் என்ன செய்ய வேண்டும்?

1.            தமிழக முதலமைச்சர் அவர்கள், முன்னாள் முதல மைச்சர் கலைஞர் அவர்கள் கோரியுள்ளபடி -அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்தி, இதே தீர்மானங்களை அக்கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும். அத்துடன் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் அவரே புதுதில் லிக்கு அழைத்துச் சென்று, பிரதமர் அவர்களையும், மத்திய நீர்வள அமைச்சரையும், மத்திய சட்ட அமைச்சரையும் கண்டு பேசித் தமிழகக் கட்சிகளின் ஒன்றுபட்ட வலிமையை மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும்.

2.            இன்று தமிழகத்தின் சார்பில் 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

                மக்கள் அவை           மாநிலங்கள் அவை

காங்கிரசு        8              4

தி.மு.க.           18           7

அ.இ.அ.தி.மு.க.       9              5

சி.பி.அய்.        1              1

சி.பி.எம்.         1              1

ம.தி.மு.க.     1              -

விடுதலைச்சிறுத்தைகள்             1              -

நியமன உறுப்பினர்கள்    -              2

                -------    -------

மொத்தம்      39           20

                -------    -------

மேலே கண்ட 59 உறுப்பினர்களையும் அழைத்துத் தமிழக முதல்வர் அவர்கள் அவர்களுடன் பேசி ஆதரவு திரட்டுவதுடன், இந்த 59 உறுப்பினர்களும் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், ஆளுங் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி ஆகியோரிடம் முல்லைப் பெரியாறு பற்றிய ஒரே தன்மையிலான கோரிக்கை களை முன்வைத்து வாதாட ஏற்பாடு செய்ய வேண்டும்.

இது நடக்க முடியாதது அன்று; கட்டாயம் நடக்கக் கூடியது; நடக்க வேண்டியது.

3.            உடனடியாக முல்லைப் பெரியாறு பற்றிய உண்மை நிலையையும், தமிழகத்தின் நியாயமான கோரிக் கைகளையும், கேரளத்தின் அக்கிரமமான அடாவடிக் கோரிக்கைகளையும் விளக்கி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் அறிக்கைகளை அச்சிட்டு, 790 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழக - கேரள - கர்நாடக - ஆந்திரச் சட்டமன்ற உறுப்பினர் களுக்கும், பத்திரிகை ஆசிரியர்களுக்கும் அவை சென்று சேர ஏற்ற நடவடிக்கையைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

                1991 காவிரிச் சிக்கல் பெரிதான போது, கருநாடக அரசினர் காவிரியில் தங்களுக்குள்ள உரிமையை விளக்கி, ஒரே அறிக்கையைப் பல மொழிகளில் வெளியிட்டுப் பரப்பினர். தில்லியில் அதை நேரில் கண்டேன்.

4.            தமிழகத்திலுள்ள மற்ற அரசியல் கட்சிகளும், தமிழர் நல அமைப்புகளும் இதன் முதன்மையை உணர்ந்து இதற்குத் துணை நிற்க வேண்டும்.

5.            தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரண்டு திரா விடக் கட்சிகளின் ஆட்சிக் காலங்களில் உருவான சிக்கல்கள் தாம் - காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு ஆற்று நீர்ச் சிக்கல்கள்.

                இந்த இரண்டு கட்சிகளும் காங்கிரசு ஆட்சிகளுக்கும் முட்டுக்கொடுத்தன; பாரதிய சனதா மற்றும் இடைக் கால ஆட்சிகளுக்கும் முட்டுக்கொடுத்தன.

                ஆனால் கர்நாடக அரசியல் தலைவர்களும், அவ் வந்நாள் முதல்வர்களும், முன்னாள் முதல்வர் களும் பொதுச் சிக்கல்களில் - சொந்த மானம், கட்சி மானங்களைத் தூக்கியெறிந்துவிட்டு, ஒன்றுபட்டு தில்லிக்குச் சென்று மத்திய அரசுக்கு அழுத்தம் தந்தது போல் தி.மு.க. முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களும் செய்யவில்லை; அ.இ.அ.தி.மு.க. முதலமைச்சர்கள் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்க ளும் செய்யவில்லை; இன்றைய முதலமைச்சர் செல்வி. செயலலிதா அவர்களும் செய்யவில்லை.

                தமிழகச் சிக்கல்கள், இக்கட்சித் தலைவர்களுக் கிடையே ஆன - இவ்விரண்டு கட்சிகளுக்கிடை யிலான சொந்தச் சிக்கல்கள் அல்ல; அன்று 6 கோடித் தமிழ் மக்களின் வாழ்க்கையைப் பற்றி யவை; இன்று 7.20 கோடித் தமிழ் மக்களின் உயிரான, வாழ்க்கைச் சிக்கல்கள் இவை. “நெல்லும் உயிரன்றே, நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்பது நம் தமிழ்ப் பாட்டன் கண்ட அரச நெறி; ஆட்சி நெறி.

இன்று மன்னன் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் தலைவர்கள் - முதலமைச்சர்கள், தலைமை அமைச்சர்கள் என உள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்கள். இந்த நிலைமை கேரளத்தில் அன்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது; கருநாடகத்தில் எப்போதும் நிரம்ப வே இருக்கிறது.

தமிழகத்தில் இந்த நிலை வந்தே தீரவேண்டும். தமிழர் நலன் - தமிழக நலன்களை வென்றெடுக்க இவையே ஏற்ற ஆட்சி நெறிகள்.

இத்தன்மையில், காவிரிச் சிக்கலை முன்னிட்டு, 1997 பிப்பிரவரியில் “சிந்தனையாளன்” இதழுக்கு நான் 24.01.1997இல் எழுதிய தலையங்கக் கட்டு ரையில் தெளிவுபட இவற்றை விளக்கியுள்ளேன்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் :

1.            அனைத்துக் கட்சித் தலைவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு, அவரே நேரில் தில்லியில் பிரதமரைப் பார்த்துப் பேச வேண்டும்.

2.            தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 59 பேர் களும் ஒரு தடவையேனும், 2012 பிப்பிரவரியில் பிரதமரையும் சோனியா காந்தியையும் பார்த்துப் பேசி வாதிட, முதல்வர் அவர்களே வழிகாண வேண்டும்.

3.            முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு சிக்கல்கள் பற்றி 6 மொழிகளில் அறிக்கைகள் அச்சிட்டு, 790 நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கும் - அவரவர் மொழியில் அது சேரத் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.

இப்பணிகள் நன்கு நடைபெற மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி தன் பங்களிப்பை மகிழ்ச்சி யுடன் செய்யக் காத்திருக்கிறது. செய்வோம்!

Pin It