1956-ஆம் ஆண்டுக்குப் பிறகு மொழிவழி மாநிலங்கள் பிரிந்தன. சென்னை மாகாணம் (Madras Province)  என்று இருந்த மாநிலத்தில் கேரள, கருநாடக, ஆந்திரப் பகுதிகள் பிரிக்கப்பட்டு கேரளா, கருநாடகம், ஆந்திரா மாநிலங்கள் புதிதாக உருவாயின.

இவ்வாறு மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது சென்னை மாநிலத்திருந்த மலை வளமும் நீர்வளமும் மிக்க பல பகுதிகள் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட கேரளா, கருநாடக, ஆந்திர மாநிலங்களுடன் சேர்க்கப்பட்டுவிட்டன. இயற்கை வளங்கள் ஒருநாட்டில் அனைவர்க்கும் பொதுவானவை யாயிருத்தல் வேண்டும். அதுவும் பலமொழிகள் தேசிய இனங்கள் கொண்ட இந்தியத்தில் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட 50-களில் சென்னை மாகாணத்திலிருந்து மொழிவழி பிரிந்து கேரளா, கருநாடகம், ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்கள் தனித்தனியாக உருவானபோது இவ்வளங்கள் பிரிக்கப்பட்டபின் எஞ்சியிருந்த தமிழ் நாட்டையும் சேர்த்த நான்கு மாநிலங்களிலும் சமமாக அமையுமாறு பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு வளங்கள் நிறைந்த மலைப்பகுதிகளில் சமமாகப் பங்கிடப்படவில்லை. பிரிந்து போன மாநிலங்கள் வளமான பகுதிகளை அளவுக்கதிகமாகவே பெறுமாறு பிரிவினை அமைந்துவிட்டது. இது தமிழகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

தமிழகத்தின் பல பகுதிகளை அண்டை மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்துள்ளோம். தமிழகத்தின் நலன்களைப் பாதுகாக்கத் தமிழர்கள் தவறி விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். மாநிலப் பிரிவினையின் போது, சென்னை மாகாணத்தில் இருந்த அரசின் தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறைச் செயலாளர், பொதுப்பணித்துறைத் தலைமைப் பொறியாளர் போன்றோர் பிரிந்து போன மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தமையாலும், தமிழகத்தின் நலம் பேணுகின்ற உயர்நிலை அதிகாரிகள் ஒன்றாயிருந்த சென்னை மாகாணத்தில் இல்லாமையாலும் தமிழகத்து உரிமைகளைத் தக்கவைத்துக் கொள்ள முடியாமற் போய் விட்டது. தமிழகத்தின் அரசியல் தலைவர்களும் அப்போது விழிப்புடனிருந்து தமிழகத்தின் உரிமைகளை வலியுறுத்தாத காரணத்தால் ஆரவாரமின்றி மாநிலப் பிரிவினைகள் நிகழ்ந்துவிட்டன.

சென்னை மாகாணத்திலிருந்து கேரளாவைப் பிரிக்கும்போது இருபகுதிகளுக்கும் பொதுவாக இருந்து வந்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மலைவளமும் நீர்வளமும் நிறைந்தவை. மலைவளம் நீர்வளம் நிறைந்த இப்பகுதியில் மாநிலங்களைப் பிரிப்பதற்குப் புதிய எல்லைகள் வகுப்பப்பட்டன. அப்போதைய சென்னை மாகாண அரசு வகுத்த எல்லைக்கோடு வளமான மலைப்பகுதிகள் தமிழகத்திற்குக் கால் பங்கும் கேரளத்திற்கு முக்கால் பங்கும் இருக்குமாறு அமைந்துவிட்டது. மலைவளங்கள் மிகவும் குறைவாக உள்ள தமிழகத்திற்கு நீர்வளம் மிகுந்த அச்சங்கோவில், பம்பா முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம் ஆழியாறு போன்ற ஆறுகளும் மலைகளும் நிறைந்த பகுதிகளில் மிகச்சிறு அளவே ஒதுக்கப்பட்டதோடு மலைவளமும் நீர்வளமும் மிகுந்த கேரளப் பகுதிக்கு பெரும் பகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. இது தமிழத்திற்கு அப்போதே இழைக்கப்பட்ட பெருங்கொடுமையாகும்.

இவ்வாறு மொழிவழி மாநிலங்களின் பிரிவினைக்குப் பிறகு கேரளம், நீர்வளம் மிகுந்ததாகவும் தமிழகம் நீர்வளம் பற்றாக்குறையுடையதாகவும் இன்று வரை இருக்கும் நிலைமை உள்ளது. தமிழகத்துடன் இருந்திருக்க வேண்டிய மலைப்பகுதி களான இடுக்கி, முல்லைப் பெரியாறு, அச்சங்கோவில், பம்பா, பரம்பிக்குளம், ஆழியாறு, தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் வாழ்ந்த மக்கள் எல்லாம் தமிழர்களே! மொழி அடிப்படையிலும் கூட இப்பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். பறிபோன பகுதிகள் தமிழகத்திற்கு மீண்டும் கிடைக்கத் தமிழகம் இதுவரை எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. தமிழகத்தின் தென்மாவட்டங்கள், நீர்வளம் பெறவிருந்த ஒரு திட்டம் கேரளத்தில் உள்ள அச்சங்கோவில் பம்பா ஆற்று நீரைத் தடுத்துக் கிழக்கே தமிழகத்துக்குத் திருப்பும் திட்டம். இத்திட்டம் கடந்த இருபதாண்டுகளுக்கு முன்பு நடுவணரசின் ஆற்றுப் பாசன நீர்மேலாண்மைத் துறையினரால் முன்மொழியப்பட்டு, கேரளா தமிழக மாநில அரசுகளின் ஏற்பிசைவுக்காக அனுப்பப் பட்டது. கேரள அரசு ஒப்புதலளிக்கவில்லை. தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த திராவிடக் கட்சி அரசுகள் இதைப்பற்றிக் கவலைப் படவும் இல்லை. இதுதான் இன்று வரை உள்ள நிலைமை.

முல்லைப் பெரியாற்று அணையில் தேக்கப்படும் நீர் மொழிவழி மாநிலங்கள் பிரியாத போதே தமிழகத்திற்குப் பயன்படவேண்டும் என்ற நோக்கத்திலேயே அணை கட்டப் பட்டுள்ளது. எனவே இவ்வணையின் நீரை முழுதாகப் பயன் படுத்தும் தார்மீக உரிமை தமிழகத்திற்கே உண்டு. தமிழகந் தான் ஏமாந்து போய் உரிமையை நிலை நாட்டாமல் உள்ளது. அவ்வப்போது கேரள அரசின் நீர் மேலாண்மை அமைச்சர்களும் முதல்வர்களும் தமிழகத்திற்கு முல்லைப் பெரியாற்று அணையின் நீரைத் தமிழகம் பயன்படுத்துவதற்கு முழுச் சம்மதம் தெரிவித்தள்ளனர். எனவே அணையை உயர்த்தாமலே அணையின் நீர்மட்டத்தை 100 அடிக்கு மிகாமல் வைத்துக் கொண்டே அணையின் நீரைத் தமிழகத்திற்குத் திருப்பிக் கொள்ள முடியும். இப்போது நீர் வெளியேறும் கால்வாயின் அளவைப் பெரிதுபடுத்தினால் முழு நீரும் தமிழகத்திற்குக் கிடைக்கும் கேரள அரசின் ஒப்புதல் தேவையில்லை. நீதிமன்றங் களையும் அணுகத் தேவையில்லை. ஆரவாரமின்றித் தமிழக அரசு துணிந்து இதைச் செய்யவேண்டும். எதற்கும் துணிந்த வரான முதல்வர் ஆட்சியில் இது எளிதில் நிறைவேறும் என்று எதிர்ப்பார்ப்போம். இப்போது கேரள அரசு தூண்டுதலின் பேரில் அணை இடிந்து போவதாக ஆங்கிலத்தில் திரைப்படமெடுத்து உலக அளவில் பரப்பி வருகின்றனர். இது தமிழர் நலனுக்கு எதிரானதால் முதல்வர் இதில் கருத்தூன்றி ஆவன செய்தல் நன்று.

Pin It