கடந்த இரண்டு மாதங்களாகக் காஷ்மீர் மாநில முதல்வர் உமர் பரூக் அப்துல்லா ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை (Armed Forces Special Powers Act) மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று குரல்கொடுத்து வருகிறார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 21 மாவட்டங்கள் இருக்கின்றன. ஓரளவுக்கு அமைதி திரும்பியிருக்கும் ஜம்மு, ஸ்ரீநகர், பட்காம் மற்றும் சாம்பா ஆகிய நான்கு மாவட்டங்களிலாவது ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டுமெனப் பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சோனியா காந்தியிடம் உமர் பரூக் அப்துல்லா வலியுறுத்தியிருக்கிறார்.

அம்மாநிலத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், பிரதான எதிர்க்கட்சியான மக்கள் சனநாயகக் கட்சி (PDP)  ஆகியன உமர் பரூக் அப்துல்லாவின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. கூடவே கூடாது என்று பி.ஜே.பி. எகிறி குதிக்கிறது.

இந்திய இராணுவத் தலைமைத் தளபதி வி.கே. சிங்கும், காஷ்மீர் மாநிலத்தில் இயங்கும் இராணுவக் கூட்டுப்படைத் தளபதிகளும் (இராணுவம், மத்திய ரிசர்வ் படை, எல்லையோரக் காவல்படை) முதல்வர் உமர் பரூக்கின் கோரிக்கைக்குப் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள்.

வழக்கம்போல் காங்கிரஸ் கட்சி “விளக்கெண்ணெ யில் வெண்டைக்காயைத் தாளித்த கதையாக எந்த முடிவையும் சொல்லாமல் ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொல்லி தாங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், உமர் பரூக்கின் கோரிக்கை நியாயமானது என்கிறார். பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி, இராணுவத் தளபதிகள் ஒத்துக்கொண்டால்தான் உமர் பரூக் கோரிக்கையைப் பரிசீலிக்க முடியும் என்கிறார். மன்மோகன் சிங், ஆயுதப் படை சிறப்புச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக இந்தப் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் மேலும் கலந்துபேசி ஒரு முடிவிற்கு வரக் காலஅவகாசம் தேவை யென்ற ‘பொன்னான’ கருத்தைச் சொல்லியிருக்கிறார். அதாவது, இவர் பிரதமராக இருக்கும்வரை இதில் எந்த உருப்படியான முடிவையும் எடுக்கப் போவதில்லை என்று பொருள்.

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை உமர் பரூக்கின் கோரிக்கை மட்டுமல்ல. இந்தச் சட்டத்தை அடியோடு நீக்க வேண்டுமென வலியுறுத்தி இந்த சட்டம் அமலிலிருக்கும் அசாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநில மக்களும் கடந்த பல ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மணிப்பூர் வீராங்கனை இரோம் சார்மிளா இந்தச் சட்டத்தை நீக்கக்கோரி 2000 ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதியிலிருந்து பத்தாண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைப் பிரிவு இந்தச் சட்டத்தை கண்டித்திருக்கிறது. சர்வதேசப் பொது மன்னிப்பு அமைப்பு (Amnasty International)  மற்றும் உலகச் செஞ்சிலுவைச் சங்கம் இந்தியா இந்தச் சட்டத்தைக் கைவிட வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்திற் கெதிராக, சனநாயக அமைப்புகளும், மனித உரிமைப் பாதுகாப்புப் பேராளிகளும் கிளர்ந்தெழுந்து இயக்கம் நடத்துவது ஏன்?

இந்தச் சட்டம் அமலில் இருக்கும் காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் இராணுவத்திற்கும் துணை இராணுவப் படைகளுக்கும் (CRPF, Border Security Force) அடியிற்கண்ட சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட் டிருக்கின்றன.

1.            சட்டத்தை மீறும் நபரை அல்லது சட்டத்தை மீறலாம் என்று சந்தேகிக்கப்படும் இராணுவம் சுட்டுக் கொல்லலாம்.

2.            யாரை வேண்டுமானாலும் நீதிமன்ற பிடிஆணை இல்லாமல் இராணுவம் கைது செய்யலாம்; விசாரிக் கலாம்.

3.            நீதிமன்ற உத்தரவில்லாமல் எந்த நேரத்திலும், யாருடைய வீட்டுக்குள்ளும் புகுந்து சோதனை செய்யலாம்.

4.            கலவரக்காரர்கள் அல்லது ஊடுருவல்காரர்கள் தங்கி யிருப்பதாகச் சந்தேகப்படும் வீடுகளை, சொத்துகளை இடித்துத் தரைமட்டமாக்கி அழிக்கலாம்.

5.            இராணுவத்தினர் மேற்கொள்ளும் மேற்கண்ட நட வடிக்கைகளுக்காக இந்தியாவில் எந்த நீதிமன்றத் திலும் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது.

“ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் - அடக்குமுறையின் வடிவம். அதிகார போதையில் ஆட்டம் போடுவோருக்குப் பயன்படும் கருவி. சனநாயகத்தை நேசிக்கும் மக்களால் நஞ்சென வெறுக்கப்படுவது. ஆகையால் இந்தச் சட்டத்தை முற்றிலுமாக நீக்குவது இந்த நாட்டுக்கு நல்லது” என்று மத்திய அரசால் 2004இல் உச்சநீதிமன்ற நீதிபதி ஜீவன்ரெட்டி தலை மையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் அரசுக்குத் தாக்கல் செய்த அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு அந்த அறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதைப் பத்திர மாகப் பரண்மேல் தூக்கியெறிந்துவிட்டது.

இந்தச் சட்டத்திற்கெதிராகக் காஷ்மீர் மக்கள் மற்ற வர்களைக் காட்டிலும் கூடுதலாகத் தெருவிலிறங்கிப் போராடுவதற்கு நியாயமான காரணங்களுண்டு. அங்கு ஒவ்வொரு ஏழு காஷ்மீரிகளுக்கும் ஒரு இராணுவ வீரன் வீதம் ஆயுதப்படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

1990இல் இந்தச் சட்டம் காஷ்மீரில் நடைமுறைக்கு வந்ததிலிருந்து நாளதுவரை விசாரணைக்கென்று இராணுவம் அழைத்துச்சென்ற 8000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீடு திரும்பவில்லை. அவர்களின் கதி யென்ன, உயிரோடிருக்கிறார்களா இல்லையா என்று கூட அவர்களது பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் தெரியாது. “காணாமல் போனவர்களின் பெற்றோர் களின் சங்கம்” என்றொரு அமைப்பு காஷ்மீரைத் தவிர உலகத்தில் வேறெங்காவது நாம் கேள்விப்பட்டதுண்டா?

2008இல் பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை கள் பாதுகாப்புப் போராளிகளின் குழு ஒன்று காஷ்மீர் நிலவரங்களைக் கண்டறிய நேரில் சென்றது. அந்தக் குழுவில் சென்ற பேராசிரியர் அ. மார்க்ஸ், புதுச்சேரி சுகுமாரன் இராணுவத்தால் தரைமட்டமாக்கப்பட்ட வீடுகளையும் இராணுவத்தின் சர்வாதிகார நடவடிக் கைகளையும் நேரில் கண்டு வந்தார்கள். அ. மார்க்ஸ் அங்குக் கண்டவற்றின் அடிப்படையிலும், மக்களிடம் பேட்டி கண்டு தெரிந்து கொண்ட விவரங்களின் அடிப் படையிலும், எழுதி வெளியிட்டிருக்கும் “காஷ்மீர் - என்னதான் நடக்குது அங்கே?” என்கிற புத்தகம் நமக்கு அதிர்ச்சியளிக்கும் பல உண்மைகளை வெளிப்படுத்தி யிருக்கிறது.

மூன்று மாதங்களுக்கு முன்னால் காஷ்மீர் மாநில மனித உரிமை ஆணையத்தின் கீழ் இயங்கும் உளவுத்துறைக் காவலர்கள் பாரமுல்லா, பந்திப்பூர் மற்றும் குப்வாரா மாவட்டங்களில் அந்த ஊர் மக்க ளுக்கே தெரியாத 38 இரகசியப் புதைகுழிகளைக் கண்டுபிடித்தார்கள். அங்கே புதைக்கப்பட்டிருந்த 2730 சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டன. 517 உடல்களை மட்டும் உறவினர்கள் அடையாளம் காட்டியிருக் கிறார்கள். 2156 உடல்களை உடனே அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. 1692 உடல்களில் சித்ரவதை செய்து கொல்லப்பட்டதற்கான அடையாளங்கள் இருக் கின்றன (22.8.2011, இந்து நாளேடு).

 நவீன அறிவியல் அதிசயமான மரபணு ஆய்வின் (DNA) மூலம் அடையாளந்தெரியாத உடல்களின் பெற்றோர் யாரென்று கண்டுபிடிக்கும் நடவடிக்கை களில் மாநில அரசு ஈடுபட்டிருக்கிறது. சுட்டுக்கொல்லப் பட்டுப் புதைக்கப்பட்ட அனைவருமே தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று இராணுவம் துணிந்து கூறு கிறது. அதற்கான ஆதாரத்தைத் தெரிவிக்க மறுக்கிறது.

எல்லை தாண்டிவரும் ஊடுருவல்காரர்களையும், தீவிரவாதிகளையும் அடக்கியொடுக்கு கிறோம் என்ற பெயரில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சொத்துக்களைச் சூறையாடுதல் என்ற பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராணுவத்தினர் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள “ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம்” தொடர வேண்டும் என்றுதான் சொல்வார்கள். காங்கிரசு -தேசிய மாநாடு கூட்டணியினர் வெற்றி பெற்றார் “ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை” நீக்க நட வடிக்கையெடுக்கப்படும் என்று காஷ்மீர் மக்களுக்கு அந்தக் கூட்டணி தலைவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதியளித்தார்கள். “தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்று” என்று கேட்பது இந்த நாட்டில் சட்ட விரோதமென ஆட்சியாளர் கருதுகிறார்கள். சனநாயக ஆட்சிமுறைக்கு நெருக்கடியை ஏற்படுத் தியிருக்கும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை விரைவில் விலக்கிக் கொள்வது அவசர அவசியமான நடவடிக்கையாகும்.

Pin It