கூடங்குளம் அணுமின்உலையை மூடுங்கள்!

தமிழக மக்களும், தமிழக அரசும் இணைந்து, தமிழக மின்தேவையை நிரப்புங்கள்!

தமிழ்நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தில், 4000 கிலோ வாட் பற்றாக்குறையாக இருக்கிறது. இது திடீ ரென்று ஏற்பட்டதல்ல. மக்கள் தொகைப் பெருக்கம், வீடுகளின் மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கைப் பெருக்கம் இவற்றைப் பற்றி முன்கூட்டியே திட்மிட்டு, அனல் உலை வழியாகவும், காற்றாலை வழியாகவும் மின் உற்பத்தியைப் பெருக்காமல், தமிழ்நாட்டு ஆட்சி யாளர்கள் 20 ஆண்டுகளாகத் தூங்கிவிட்டார்கள்.

25 ஆண்டுகளுக்குமுன் சோவியத் இரஷ்யாவின் உதவியுடன் கூடங்குளத்தில் அணுமின் உற்பத்தி நிலை யம் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட நாள் முதலே, அத்திட்டத்தை அப்பகுதியில் வாழும் மக்கள் எதிர்த்தார்கள். 1945இல் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் அணுகுண்டினால் ஏற்பட்ட பேரழிவை நினைக்க மட்டுமே அப்போது அவர்களுக்கு ஓர் முகாந்திரம் இருந்தது.

ஆனால் 2011ஆம் ஆண்டில் ஜப்பானில் புகுஷிமாவில் அணுஉலை வெடிப்பினால் ஏற்பட்ட பேரழிவைக்கண்டு, பல உலக நாடுகளில் அணுஉலை மின்சாரம் வேண்டாம் என்கிற எண்ணம் அறிவியல் அறிஞர்கள், மின்துறை நிபுணர்கள், மக்கள் நலன் நாடுவோரிடம் துளிர்விட்டு, இன்று கடு விசையில் அந்த எண்ணம் பரவி வருகிறது.

முதலில் புகுஷிமா அணுஉலை தற்காலிகமாக மூடப்பட்டது; பின் மறு ஆய்வு செய்யத் திட்டமிட்டனர். இப்போது, வீணாய்ப் போன புகுஷிமா அணுஉலையை அடி யோடு மூடிவிட்டு, புகுஷிமா கடற்கரையிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடற்கரை மய்யத்தில், காற்றைக் குழாய் மூலம் (Wind Turbines) கொண்டு சென்று மின்சாரம் உற்பத்தி செய்யவும், அத்துடன் கதிரொளி மின்மாற்றிகளை அமைத்து மின் உற்பத்தி செய்யவும் முடிவு செய்துள்ளனர். ஜப்பானில் இயங்கிவந்த 54 அணுமின் உலைகளில் 52 மூடப்பட்டுவிட்டன; இரண்டு உலைகள் மட்டும் இயங்குகின்றன. 2020இல் இவையும் மூடப்படும். 2040க்குள் சப்பானுக்குத் தேவைப்படும் மின் ஆற்றல் முழுவதையும் இந்த இரண்டு வழிகளில் மட்டுமே உற்பத்தி செய்திட, சப்பானியர் முடிவு செய்துவிட்டனர் (“The New Indian Express”, Chennai, 21.1.2013).

புகுஷிமாவில் பேரழிவு ஏற்பட்ட பிறகும், இந்திய அரசு அணுமின் உலைக் கொள்கை யைக் கைவிடாமல், 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதலாவது அணுமின் உலையை விரைவில் இயக்க முயற்சிக்கிறது.

இந்த முயற்சியைத் தமிழகத்திலுள்ள எல்லாத்தரப்பு மக்களும் எதிர்க்க வேண்டும் என்கிற ஒரு விழிப்புணர்வு அலையை, போராளி சுப. உதயகுமார் இடிந்தகரைப் பகுதி மக்கள் வழியாக உண்டாக்கிவிட்டார்.

ஏறக்குறைய 570 நாள்களாகத் தரையிலும், கடற்கரையிலும், கடல் நீரிலும் அமர்ந் தும், நீந்தியும், படகில் பயணித்தும் இத்தகைய மாபெரும் எழுச்சியை மக்கள் உருவாக்கி விட்டார்கள். முதற்கட்டத்தில் கிளர்ச்சிக்காரர்களைக் கண்டுகொள்ளாமல் விட்ட தமிழக அரசு, மின்தட்டுப்பாடு ஒருநாளில் 14 மணிநேரம், 12 மணிநேரம், 10 மணிநேரம் என்று ஆன நிலையில், போராட்டக்காரர்கள் பேரில் பல்வேறு வடிவங்களில் அடக்குமுறையை ஏவியது. போராட்டக்காரர்களிடையே பிளவை உண்டாக்க முயற்சித்தது.

எந்தவகையான நடவடிக்கைகளையும் அமைதி யான முறையிலேயே அப்போராட்டத் தலைவர் சுப. உதயகுமார் எதிர்கொண்டதால் - வன்முறை பற்றிச் சிந்திக்கவே இடந்தராததால், அப்போராட்டத்தில் உள்ள மனித இனக்காப்பு - கடலுயிர்கள் காப்பு - விலங்குகள் காப்பு - காற்று மண்டலக் காப்பு - எல்லாவற்றுக்கும் மேலாக, வருங்கால இளையதலைமுறையின் நலப் பாதுகாப்பு இவற்றைப் பற்றி எல்லாத் தரப்பாரும் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்; செயல்பட முன்வந்தனர்.

தூத்துக்குடி, திருநெல்வேலி கடற்கரைப் பகுதிகளி லுள்ள மீனவர்கள், உப்பளக்காரர்கள், வணிகர்கள், சிறு தொழிலதிபர்கள், வேளாண் மக்கள் எல்லோருமே அணுஉலைக்கு எதிராகத் திரண்டு வருகின்றனர்.

எதிர்பாராத தன்மையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி. செயலலிதா, தமிழ்நாட்டு அரசு, முழு மூச்சாக, கதிரொளி மின்மாற்றித்திட்டத்தை ஏற்று திட்டம் வகுத்துள்ளதாக 20.10.2012இல் அறிவித்தார்.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி, 13.10.2012 அன்று இப்படிப்பட்ட கதிரொளி மாற்றுத் திட்டத்தை அறிவித்தது; தமிழ்நாட்டு அரசின் அறிவிப் பையும் மனமார வரவேற்றது.

மேலும், தொடர் நடவடிக்கையாக, 1.3.2013 முதல் 7.3.2013 முடிய 7 நாள்களுக்கு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிக் குழுவினர் “கூடங்குளம் அணுஉலையை மூடுங்கள்! வீடுதோறும் ஊர்தோறும் கதிரொளி மின்மாற்றியை அமைத்திடுங்கள்” எனக்கோரி, தெருமுனைப் பரப்புரை செய்வது என, வேலூரில் 6.1.2013 நடைபெற்ற, அரசியல் கட்சி மாநாட்டில், முதலாவதான தீர்மானமாக நிறைவேற்றி முடிவெடுத் தோம்.

எதற்காக? ஏன்?

இந்தியா முழுவதிலும் குறைந்தது 300 நாள் களிலும் அதிக அளவு 330 நாள்களிலும், பகலில் 8 மணிநேரம் கதிர் ஒளி கடுமையாகக் காய்கிறது. வட மாநிலங்களில் மே, சூன் திங்களில் மனிதர்கள் சுருண்டு விழுந்து சாகும் அளவுக்குக் கடுமையான வெப்பம் எரிக்கிறது. இது அவ்வளவையும் கதிர் மின்மாற்றி (Solar Panel) மூலம் மின் ஆற்றலை உண்டாக்கப் பயன்படுத்தலாம்.
இவ்வளவு பெரிய அளவு மூலப்பொருளுக்கு ஒரு காசு கூட விலை தரவேண்டியது இல்லை.

அதை மின்சாரமாக மாற்றுவதற்கான மின்மாற்றியை வீடுதோறும் மாடியில் அமைக்கலாம். அதற்கான முதலீடு ஒரு தடவை மட்டுமே. பின்னர் பழுது பார்ப்பதோடு போதும்.

இந்தியாவில் உள்ள 122 கோடி மக்கள், 24 கோடி வீடுகளில்தான் குடியிருக்கிறார்கள். இவற்றில் பழைய மாடி வீடுதோறும் கதிரொளி மின்மாற்றி அமைப்பது கட்டாயம் என்றும்; 2013 முதல் கட்டப்படும் எல்லாப் புதிய வீடுகளின் கட்டடக் கூரைகளிலும் கதிர் ஒளி மின்மாற்றி வைப்பதற்கான திட்டத்துடன் விண்ணப் பித்தால்தான் வீடு கட்ட - பள்ளிகள் கட்ட - தொழிற் சாலைகள் கட்ட அரசு ஒப்புதல் அளிக்கும் என்றும், இது மீறப்படக் கூடிய விதி அல்ல என்றும் இந்திய அரசும், தமிழக அரசும் தகுந்த சட்டங்களையும் துணை விதிகளையும் உடனடியாக இயற்ற வேண்டும்.

இன்றைய இந்திய அரசையோ, நாளைய இந்திய அரசையோ எதிர்பார்க்காமல், தமிழக அரசினர் வரும் 2013 பிப்பிரவரி-மார்ச்சு சட்டமன்றத் தொடர் கூட்டத்திலேயே இதற்கான சட்டத்தை நிறைவேற்றி இந்தியாவுக்கு வழிகாட்ட முடியும்.

அவரவர் வீட்டில் தனித்தனியே 2.5 KWp கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான கதிரொளி மின்மாற்றி (Solar Panel) யை நிறுவிட, அதிகப்படியாக, மூன்று இலக்க உருவா செலவாகும்.இந்த முதலீட்டில் 50 விழுக்காட்டுப் பங்கை இந்திய அரசு தரவேண்டும்; 25 விழுக்காட்டுப் பங்கைத் தமிழ் நாட்டு அரசு தரவேண்டும்; மீதி 25 விழுக்காட்டுப் பங்கைக் கட்டடச் சொந்தக்காரர் ஏற்று, அரசுக்குச் செலுத்த வேண்டும்.
 தமிழ்நாட்டு அரசிடம் நிலம் பெற்று, அரசிடமும், வங்கிகளிலும் கடன்பெற்று 500MW மெகாவாட், 1000 மெகாவாட் அளவு, மொத்தமாகக் கதிரொளி மின்சாரம் உற்பத்தி செய்கிற தனிப்பட்டவர்களை அதிக அளவு ஊக்கப்படுத்தாமல், முடிந்த வரையில், அரசு நிறுவன மாகவே அமைக்க வேண்டும். அப்படி அமைத்தால் தான், சொந்தமாக மின்மாற்றி அமைக்க முடியாதவர் களுக்குக், குறைந்த விலையில் மின்சாரத்தைத் தர முடியும்.காற்று என்கிற மூலப்பொருளையும் விலை கொடுத்து வாங்குவது இல்லை.கதிரொளி என்கிற மூலப்பொருளை விலை கொடுத்து வாங்குவது இல்லை.
தண்ணீர் என்கிற மூலப்பொருளுக்கும் விலை தருவது இல்லை. ஆனால் தமிழகத்தில் இப்போது தண்ணீர் அரியதான-கொடிய வணிகப் பொருள் ஆகி விட்டது.

எனவே, தமிழ்நாட்டு அரசினரின் இந்த முயற்சிக்கு, எந்தக் கண்ணோட்டமும் பாராமல், தமிழக மக்கள் எல்லோரும் முழு ஆதரவு தரவேண்டும். இதில் இன்றும், நாளையும் கட்சிக் கண்ணோட்டம் அடியோடு தவிர்க் கப்பட வேண்டும்.

தமிழக அரசும் மக்களும் ஒன்றிணைந்து இத்திட்டத் தினை நிறைவேற்றினால்தான் - வேண்டாத அணு உலை முதலில் மூடப்படும்.

அடுத்து, நிலக்கரி, பழுப்பு நிலக்கரி கொண்டு அனல் மின் நிலையம் அமைப்பதால் - சுரங்கத்திலிருந்து, தொழிற்சாலை வரையில் காற்று மண்டலம் மாசுபடு வதும் குறையும்.

போக்குவரவுக்கான சரக்கு உந்துகள், மகிழுந்துகள், பேருந்துகள், தொடர் வண்டிகளை இயக்க நிலக்கரி, டீசல், பெட்ரோல் இவற்றை இடைவிடாது பயன்படுத்து வதால், தட்பவெப்பம் கெடுவதற்கும் சுற்றுச்சூழல் மாசுபடவும் உண்டான வாய்ப்பைக் கட்டாயம் - ஒரு தலைமுறைக்காலத்தில் குறைத்து விட வழி ஏற்படும்.

இந்திய அரசும், இந்திய - மாநிலக் கட்சிகளின் அரசியல்வாதிகளும் - அறிவியல் மேதையானாலும் பழமையைப் போற்றும் அப்துல்கலாம் போன்றவர்களும் அணுமின் உலைக்கு ஆதரவாகப் பேசுகிறார்களே. அதை நாம் துச்சமாக மதிக்க வேண்டும்.

“எதுவும் மாற்றத்திற்குப்பட்டது” என்ற இயற்கை விதிக்கு முற்றிலும் முரணாக-“நேற்று நடந்ததெல்லாம் நன்மைக்கே; இன்று நடப்பதெல்லாம் நன்மைக்கே; நாளை நடக்கப்போவதும் நன்மையே” என்கிற பகவத்கீதை வாசகமே, நம் மதிப்பிற்குரிய அப்துல்கலாம் அவர்களுக் குப் பிடித்த நெறி.

அணுமின் உலைகளை மூடுங்கள்! கதிரொளி மின் மாற்றித் திட்டத்தை இந்தியா முழுவதிலும் தொடங்குங்கள்!

தமிழ்நாட்டில் 1.20 கோடி வீடுகள் - 120 இலட்சம் வீடுகள் இருக்கலாம்; மற்றக் கட்டடங்கள் அந்த அளவு இருக்க இயலாது.

எனவே அய்ந்தே ஆண்டுகளில் தமிழக அரசும் மக்களும் இணைந்து, தமிழ்நாட்டுக்குத் தேவையான மின்னாற்றலில் பெரும் பகுதியைக் கதிரொளி மின்மாற்றி மூலமே உற்பத்தி செய்து பெறுவோம், வாருங்கள்!

                - வே.ஆனைமுத்து

Pin It