பழமைவாதிகளும், பணக்காரர்களுமே பல பத்தாண்டுகளாய்க் கொள்ளையடிக்கிறார்கள்! வெகுமக்கள் கீழே கீழே தள்ளப்படுகிறார்கள்!

1931 முதல் 1947 ஆகத்து 15 வரையில் காங்கிரசுக் கட்சிக்கு ஒரு திட்டவட்டமான குறிக்கோள் இருந்தது. இந்தியாவின் வளங்களைச் சுரண்டிக் கொண்டு, இந்தியரை மீளா அடிமைகளாக வைத்திருந்த வெள்ளையன் ஆட்சியை வெளியேற்ற வேண்டும் என்பதே அந்தக் குறிக்கோள். வருண வேறுபாட்டைக் காப்பதில் பகவத்கீதையை வழிகாட்டியாகக் கொண்ட காந்தியார் - இந்த மூலக்குறிக்கோளை அடைய 1942இல் “வெள்ளையனே வெளியேறு! இந்தியனே செயல்படு அல்லது செத்துமடி!” என்ற அறைகூவலில் உறுதியாக இருந்தார். அவர் தொடங்கிய அந்த அமைதி வழிப்போராட்டம் - வெள்ளையரைக் கொல்லுவது, தொடர்வண்டித் தண்டவாளங்களைப் பெயர்ப்பது, அஞ்சல் நிலையங்களை எரிப்பது என, வன்முறைப் போராட்டமாகவே வெடித்தது.

வெள்ளையன் வெளியேறுவதற்கு முன்னரே, 1946இலேயே, அவருடைய விருப்பப்படியே, பண்டித நேரு பிரதமர் ஆனார். 1947 ஆகத்து 15க்குள்ளேயே சுதந்திரத்தின் சாயம் வெளுத்தது; 1948 சனவரிக்குள் நன்றாகச் சாயம் போய்விட்டது.

காந்தியார் 30.01.1948 மாலை சுட்டுக் கொல்லப் பட்டார். அதற்கு முதல்நாளே காந்தியார் ஒரு குறிப்பை எழுதி வைத்தார். “காங்கிரசு தன் குறிக்கோளை அடைந்துவிட்டது. இனி ஆட்சிப் பொறுப்பை விட்டுக் காங்கிரசு விலக வேண்டும்; மக்களுக்குத் தொண்டு செய்யும் தொண்டு அமைப்பாக அது மாற்றப்பட வேண்டும்” என்றே அவர் எழுதி வைத்தார். காந்தி யாரின் சாம்பலைப் பயபக்தியோடு கங்கையிலும் குமரிமுனையிலும் கரைத்தார்கள்; ஆனால் அவருடைய அறிவுரையைக் குப்பைத் தொட்டியில் போட்டார்கள்.

1946 முதல் - 7 ஆண்டுகள் இடைவெளி தவிர, 67 ஆண்டுகள் ஆட்சிக்காலத்தில் - ஏதோ ஒருவடிவில் காங்கிரசே இந்தியாவை ஆண்டது; இன்றும் ஆளுகிறது. 1946 முதல் 17 ஆண்டுகள் நேருவின் ஆட்சி; 1965 முதல் 1984 வரை உள்ள காலத்தில் 17 ஆண்டுகள் இந்திராகாந்தியின் ஆட்சி; 1984 அக்டோபர் 31 முதல் 5 ஆண்டுகள் இராஜீவ்காந்தியின் ஆட்சி; 1991க்குப்பிறகு 2013 ஆம் ஆண்டுவரை 22 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் சோனியாகாந்தியின் தலைமையிலான - காங்கிரசு ஆட்சி என, 54 ஆண்டுகளாக - நேரு குடும்ப ஆதிக்கத்திலேயே இந்தியாவில் ஆட்சி நடை பெறுகிறது. மௌரிய வமிச ஆட்சி, குப்த வமிச ஆட்சி என்பது மாறி, முகலாயர் ஆட்சி வந்து, முகலாயர் ஆட்சி மாறி வெள்ளையன் ஆட்சி வந்தது.

வெள்ளையன் ஆட்சி மாறிய இடத்தில் நெடுங்காலம் காங்கிரசுக் கட்சியே ஆட்சியில் அமர்ந்தது. இது ஏன்?

காங்கிரசுக் கட்சிக்கு மாற்றாக உருவாகியிருக்க வேண்டிய பொதுவுடைமைக் கட்சி, அவர்கள் இந்திய மண்ணில் செயல்படுவதாக நினைக்காமல் - அதற்கு இந்திய சமூக அமைப்பை எண்ணாமல்-அதற்கேற்ற போர்த் தந்திரங்களையும் வியூகங்களையும் வகுக் காமல் - 1948 வரையில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுக் கட்சியின் கட்டளையை ஏற்றும் - பின்னர் 1963 வரை சோவியத்து நாட்டின் வழி நின்றும் - அதன் பிறகு மற்றொரு பிரிவினர் சீனத்தின் வழி நின்றும் தங்களின் செயல்பாடுகளை வடிவமைத்துக் கொண்டு - 1987 முதல் மாறி, மாறி காங்கிரசுத் தலைமையிலான கூட்டணி ஆட்சி, பாரதிய சனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி இவற்றுக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டு - தங்களுக்கு உரிய இடத்தை பாரதிய சனதாவுக்கும், மாநிலக் கட்சிகளுக்கும் விட்டுக் கொடுத்துவிட்டார்கள்.

பாரதிய சனதாக் கட்சி இன்று ஒரு திட்டவட்ட மான குறிக்கோளை வைத்துள்ளது. 1948 பிப்பிர வரியில் பூனாவில் கூடிய இராஷ்டிரிய சுயம் சேவக் சங்கக் கூட்டத்தில் (R.S.S.)முடிவெடுத்தபடி, “இந்தியா வில் இந்துக்களின் - இந்துத்துவக் கொள்கைகளின் - இராமாயண, மகாபாரதக் கொள்கைகளின் ஆதிக்கம் கொண்ட ஓர் ஆட்சியை 2000க்குள் நிறுவ வேண்டும்” என்பதில் அவர்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களும் காங்கிரசுக்குப் போட்டியாக உருவாக முடியவில்லை. ஏன்?

அவர்கள் என்ன கொள்கையை வரித்துக் கொண் டிருக்கிறார்களோ - அது இந்திய அரசமைப்புச் சட்டத் தாலும் வழக்கச் சட்டத்தாலும் கெட்டியாகக் காப்பாற்றப் படுகிறது; நிருவாகத் துறையும் நீதித்துறையும் இவற்றை வரிந்து கட்டிக்கொண்டு பாதுகாக்கின்றன. இன்றையக் கல்வித் திட்டமும் அதற்கு ஏற்ப அமைக்கப்பட்டுவிட்டது.

எனவேதான் பாரதிய சனதாக் கட்சியின் கொள்கை களையே அதிகார முறையில் அறிவிக்கப்படாத - கமுக்கமான தங்கள் கொள்கையாக வைத்துக் கொண்டு - அவற்றை நிலைக்க வைப்பதற்கான திறமையான கருவியாக இருக்கிற இந்திய ஆட்சியைப் பிடிப்பதில், காங்கிரசு தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.

1991 வரை டாட்டா, பிர்லா, பஜாஜ் போன்ற - பழைய-காந்தி காலத்துப் பணமுதலைகளை நம்பித் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரசு, 1991 முதல் அம்பானி, ரிலையன்ஸ், மித்தல், மல்லய்யா முதலான பன்னாட்டுத்தரகு முதலாளிகளின் பெரிய பண ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெறுகிறது.

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா முதலான தென் மாநிலங்களில் 1969க்குப் பிறகு, மாநிலக் கட்சிகளைப் பணத்துக்கும் பதவிக்கும் அடிமையாக்கிக் கொண்டும்; உ.பி., ம.பி., பீகார் முதலான வடமாநிலங்களிலும் அதே வியூகத்தைப் பின்பற்றிக் கொண்டும், 2004, 2009 நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று, இன்றும் காங்கிரசு ஆட்சியில் உள்ளது.

இனி, 2014இல் நடைபெறவுள்ள தேர்தலில், நேரடியாக, நேருவின் கொள்ளுப்பெயரன் ஆன இராகுல் காந்தியை இந்தியாவின் தலைமை அமைச்சராக ஆக்குவதற்கு ஏற்ற நாடாகக் காட்சிகளை, வெற்றியா கவே நடத்தியிருக்கிறது, காங்கிரசுக் கட்சி.

இன்றுவரையில் அவர்களின் ஆட்சியில் பங்கேற்றும், பங்கேற்காமல் வெளியிலிருந்தும் காங்கிரசுக்கு முட்டுக் கொடுக்கிற தி.மு.க.; சமாஜவாதி, ராஷ்டிரிய ஜனதாதள், பகுஜன் சமாஜ் கட்சி முதலானவற்றை - தங்களிட முள்ள சி.பி.அய். துறையின் குற்றவியல் சட்ட அதி காரங்களை வைத்து, மின்சாட்டை போல அதைப் பயன்படுத்தி, அக்கட்சியினரின் எந்தவகை எதிர்ப்பும் தங்களை மீறிவிடாமல் கட்டுக்குள் வைத்துக் கொண் டார்கள். மாநில அளவிலான மற்ற கட்சிகள் இந்தக் கட்டுகளை மீறியும் இயங்க முடியுமே அன்றித், தேர் தலில் வெற்றி பெறுவது இயலாது.

இவை எல்லாவற்றையும் தாண்டி - இந்தியாவிலுள்ள 6 இலட்சம் ஊர்களிலும், ஊர் தோறும் பெயரளவில் வாக்கு வங்கியைப் பெற்றிருப் பது, சுதந்தரம் வாங்கிய கட்சி - காந்தி கட்சி - நேரு கட்சி என்கிற முத்திரையோடு உள்ள, காங்கிரசுக் கட்சியே.

இந்த,இஸ்லாம், கிறித்துவ, சீக்கிய எனப்பட்ட எல்லா மதக்காரர்களிடமும் ஓரளவு வாக்கு வங்கியைக் கொண்டது காங்கிரசுக் கட்சியே.

எல்லா உள்சாதிக்காரர்களிடமும் - 6700 உள்சாதி களிடமும் சில வாக்குகளையாவது பெற்றிருப்பது காங்கிரசுக் கட்சியே.

இக்கூறுகள் வாக்குவேட்டை வணிகத்துக்குத் தொடக்க முதலீடு (Initial Capital) ஆகும்.

மற்றெந்த அனைத்திந்தியக் கட்சிக்கும் இந்த இயல்பான - வரலாற்று வழிப்பட்ட வாய்ப்பு இல்லை.

இவற்றை அடுத்து, இந்தியரிடம் தோய்ந்துவிட்ட அடியார்க்கு அடியேன் - தாசானுதாசன் என்கிற அடிமைப்புத்தி எவ்வளவு பெரிய படிப்பும் அறிவும் உள்ளவர்களிடமும் போகவில்லை. எப்படி?

பண்டிதநேரு, இங்கிலாந்தில் படித்தவர்; இளவரசர் ஆறாம் ஜார்ஜுடன் படித்தவர்; சோசலிசத்தில் நாட்டம் உள்ளவர்; சிறைப்பறவை; சொத்துக்களைக் காங்கிர சுக்குத் தந்த குடும்பத்தவர் என்கிற குடும்பப் பெருமை யை - ஈகத்தை மிக நன்றாக மனதில் மக்கள் பதித்துக் கொண்டார்கள். அவர் பேரிலுள்ள அதே மதிப்பு, அப்படியே இந்திராகாந்திக்குக் கை முதல் ஆனது.

நேரு தான், அரசியலில் வாரிசு உரிமைக்கு விதை போட்டவர்.

தந்தையான நேரு பிரதமர்; நேருவின் மகள் இந்திராகாந்தி 1955இல் அனைத்திந்தியக் காங்கிரசின் தலைவர். இதற்குப் பெயர் என்னவாம்? நிற்க.

1955 வரையில் தன்னை ஒரு பார்ப்பனர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளாத நேரு, பிற்படுத்தப் பட்டோருக்கு மத்திய அரசில் இடஒதுக்கீடு என்று வந்தவுடன், தன்னை ஒரு பச்சைப் பார்ப்பனர் என்று செயல்முறையில் காட்டிக்கொண்டார். எப்படி?

பிற்படுத்தப்பட்டோர் குழுவின் தலைவர் காகா கலேல்கர் ஒரு நேர்மையான பார்ப்பனர். அவரிடம், “பிராமணரில் ஏழையாக இருக்கிற எந்த ஒரு பிரிவை யும் (Seet) பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வில்லையா?” என்று 1955இல் கேட்டவர் நேருதான். “அதை நான் செய்ய முடியாதே!” என்று தான், கலேல்கர் விடை சொன்னார். பயன் என்ன ஆயிற்று?

1961 மே மாதம் மத்திய அமைச்சரவை யைக் கூட்டி, “காகா கலேல்கர் உருவாக்கிய பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை இந்திய அரசு ஏற்காது. இந்திய அரசு வேலையிலும் கல்வி யிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக் கீடு தரமுடியாது” என்றே, நேரு, தீர்மானம் நிறைவேற்றினார்.

1961 ஆகத்தில், எல்லா மாநில முதலமைச்சர் களுக்கும் கமுக்க மடல்கள் ((D.O. Letters) எழுதி, “சாதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தராதீர்கள். வேண்டுமானால், அவர்கள் படிக்கப் பண உதவி தரலாம்” என்று கூறி, வெளிப்படையாகப் பிற்படுத்தப்பட்டோரான 52 விழுக்காட்டு மக்களுக்கு ஆப்பு வைத்த வன்னெஞ்சர், நேரு.

“வருண சாதிக்குப் பாதுகாப்பாக இருக்கிற அரச மைப்புச் சட்டத்தை எரிப்போம்” என, 3.11.1957இல் அறிவித்தார், பெரியார் ஈ.வெ.ரா.

மெத்தப்படித்த நேரு மனம் வைத்திருந்தால், 1958இலேயே அரசமைப்பு விதிகள் 25, 26, 372 இவற்றை அடியோடு நீக்கி, பிறவி வருண வேறு பாட்டை நீக்கி இருக்க முடியும். அதற்கு மாறாக, என்ன செய்தார்?

அப்போது பெரியார் வாழ்ந்த திருச்சிக்கு வந்த பிரதமர் நேரு பேசும்போது, திருச்சியில், “அரசியல் சட்டம் பிடிக்காத மூளை கெட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம்” என்று பேசி, பெரியாருக்கு நல்ல தண்டனை வழங்கிட வழி செய்தார். அன்று அவர் வருணப் பாதுகாப்பைக் கையாலேயே கிள்ளியெறிந் திருக்க வேண்டியவர், அதைச் செய்யவில்லை; அவருக்குப் பிறகு அவருடைய மகளாரோ, பெயரரோ அது பற்றிக் கவலைப்படவே இல்லை.

இன்று சோனியா காந்திக்கும்; நேற்று அமெரிக்க புஷ்ஷுக்கும், இன்று ஒபாமாவுக்கும் பண்ணையடிக் கும் - மெத்தப்படித்த வேலைக்காரரான மன்மோகன் சிங் ஆட்சியும் அதைச் செய்யவில்லை.

இந்தக் கேடுகெட்டவர்களின் கட்சியைச் சார்ந்தவர் என்பதற்காகவே - இராஜீவ் காந்தியின் துணைவியார் என்பதற்காகவே - 129 ஆண்டைய வரலாறு படைத்த காங்கிரசில் உள்ள மானங்கெட்டவர்கள் - நேருவின் வாரிசு என்கிற பேரில் மரியாதை தந்து, அவருடைய பெயரரின் மனைவி - எங்கோ பிறந்த சோனியா காந்தியைத் தன்னிகரற்ற தலைவராக ஏற்றுக்கொண்டி ருக்கிறார்கள்.

சோனியா காந்தியின் கணவர் தமிழீழத் தமிழருக்கு இழைத்திட்ட மாபெருங்கொடுமைக்கு ஆளாகிவிட்ட நிலையில், இந்திய அமைதிப்படை (IPKF) என்கிற, ஈழத்தில் திருட்டு - கொள்ளை - கற்பழிப்புச் செய்த படையினரால் குதறப்பட்ட வீராங்கனை தாணு - காங்கிரசுத் தொண்டர் குழுவினருடனேயே திருப்பெரும் புதூருக்கு வந்து, இராஜீவ் காந்தியைக் குண்டுவெடித் துக் கொன்றார். அதையே முன்வைத்து, பிரபாகரன் உள்ளிட்ட தமிழ்ச்செல்வன், நடேசன், தமிழேந்தி உள் ளிட்ட 20,000 விடுதலைப்புலிகளையும், 1,50,000 தமிழீழத் தமிழரையும் - இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அன்றைய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, எஸ்.எம். கிருஷ்ணா, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஆகியோர் இந்திய இராணுவத் தளபதி களின் ஆதரவுடன் கொன்று குவித்தது - சோனியா காந்தி தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் சோனியாவின் காங்கிரசு ஆட்சியே.

1984இல் இந்திராகாந்தியால் அமிர்தசரஸ் பொற் கோயிலில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான சீக்கியர்கள்;

1984 அக்டோபர் 31இல் இராஜீவ் காந்தியால், தில்லித் தெருக்களிலும் சுற்றுப்புறங்களிலும் கொல்லப் பட்ட 3000 சீக்கியர்கள் - கற்பழிக்கப்பட்ட சீக்கியத் தாய்மார்கள் இவர்களுக்கு எந்தவித நீதியையும் 29 ஆண்டுகளாக வழங்காதது காங்கிரசுக் கட்சி ஆட்சி;

1984இல் போபால் நச்சுவாயு தாக்கிக் கொல்லப் பட்ட ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. இராஜீவ் காந்தியும், அர்ஜூன் சிங்கும் சோலங்கியும் இதில் அமெரிக்கான் தரகர்கள் ஆயினர்.

இராஜீவ்காந்தியும் இத்தாலிய குட்ரோச்சியும் போபஃர்ஸ் ஆயுதபேர ஊழலில் தட்டிப்பறித்த கள்ளப் பணத்தை முதலீடாக வைத்துக் கொண்டு, இன்று ரிலையன்சு, அம்பானி, மல்லையா இவர்களும், அமெரிக்க சி.அய்.ஏ. வும் தரும் கைக்கூலி, பில்கேட்சு தரும் தாராளமான நன்கொடை இவற்றையெல்லாம் வைத்து, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தன் அன்பு மகன் இராகுல் காந்தியை இந்தியத் தலைமை அமைச் சராக முடிசூட்டிட எல்லாம் செய்துவிட்டார் சோனியாகாந்தி.

உத்தரப்பிரதேசத்தின் மக்களின் வாழ்நிலையை ஆய்வு செய்ய விரும்பிய பில்கேட்சுக்கும் அவருடைய மனைவிக்கும் வழிகாட்டியாகச் சென்று - அவர்களின் வானூர்தியிலேயே பயணித்து, அவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து உலகப் பெரிய ஒரு பணக் காரருக்கு நல்ல பிள்ளையாக நடந்து பயிற்சி பெற்றவர், இராகுல்காந்தி.

குண்டடிப்பட்டும், சாதிக் கலவரத்திலும் செத்துப் போனவர்களில் - சில ஏழைகளின் வீடுகளுக்குச் சென்று அங்கே தேநீரும், ரொட்டியும் சாப்பிட்டு ஓர் ஏழைப் பங்காளனாகக் காட்டிக்கொண்டவர், இராகுல் காந்தி.

இவை எல்லோருக்கும் தெரிந்தவை.

எல்லோருக்கும் தெரியாத சில உண்மைகளைப் பாருங்கள்!

1. 2009 (NCERT) கணக்குப்படி, இந்தியா முழுவ திலும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையில் கல்வி தரும் பள்ளிகள் 13.06 இலட்சம் உள்ளன. இவற்றுள் 84 விழுக்காடு பள்ளிகள் சிற்றூர்களில் உள்ளன. இவற் றில் 5 முதல் 17 அகவை வரை உள்ள 22.8 கோடி ஆண்களும் பெண்களும் படிக்கிறார்கள்.

13.06 இலட்சம் பள்ளிகளில் : 20 விழுக்காடு பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை; 30 விழுக்காடு பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லை; 50 விழுக்காடு பள்ளிகளில் விளையாட இடம் இல்லை.

2. 01.11.2008 கணக்குப்படி, இந்திய அரசு உயர் நிருவாகத்தில், முதல் நிலைப் பதவிகள் எனப்படுகிற – அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ்(அயல்நாடு), அய்.எஃப்.எஸ்(காடு),அய்.இ.எஸ்(கல்வி), அய்.இ.எஸ்(பொருளாதாரம்), அய்.ஆர்.எஸ் (இரயில்வே), அய்.ஆர்.எஸ்(ரெவின்யூ) - மொத்தம் 97,951 பேர் - எல்லா மதங்களையும், சாதிகளையும் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். 

இதில் பார்ப்பனர், சத்திரியர், வைசியர், காயஸ்தர், பூமிகார், கார்காத்தார், தொண்டைமண்டலம், ரெட்டி, நாயுடு, மேனன் என்கிற இந்து - கிறித்துவ உள்சாதி களைச் சார்ந்தவர்களுக்கும்; சையத், ஷேக் என்கிற இஸ்லாமிய மேல் வகுப்பினரும் ஆகிய, முற்பட்ட வகுப்பின், இந்திய மக்கள்தொகையில் - வெறும் 17.5 விழுக்காடு பேர்களே இருக்கிறார்கள். இவர் கள் மட்டும் மொத்தம் உள்ள 97,951 பதவிகளில் 75,585 பதவிகளைப் பெற்றிருக்கிறார்கள்.

ஆனால் எல்லா மதங்களையும் சேர்ந்த பிற் படுத்தப்பட்ட வகுப்பினர், மக்கள் தொகையில் - 57 விழுக்காடு இருக்கிறார்கள். இவர்கள் வெறும் 5,331 இடங்களை மட்டுமே பெற்றிருக்கிறார்கள். இது ஏன்?

1961இல் நேரு செய்த பெரிய கேட்டினை நீக்கு வதற்காக - மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியும், அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவை யும், பீகார் பிற்படுத்தப்பட்டோர் பேரவையும் இணைந்து, 1978 முதல் 1982 வரை மூன்று பெரிய போராட்டங் களை நடத்தியதன் விளைவாக - 1994இல்தான் மத்திய அரசில் முதன்முதலாக இடஒதுக்கீடு வந்தது. இந்த இழிநிலை இவர்களால் வந்தது அல்லவா? இது, இன்னமும் நீடிக்கலாமா?

அதேபோல் இந்திய அளவில் இன்று 17 விழுக்காடு உள்ள பட்டியல் வகுப்பாருக்கு - 1943 முதல் மத்திய அரசில் இடஒதுக்கீடு இருந்தும், 2008இல் - 12,281 பதவிகளே கிடைத்துள்ளன. இவர்களுக்கு உரிய விகிதாசாரம் வரவேண்டாமா?

1950இல் மத்திய அரசில் இடஒதுக்கீடு பெற்ற பழங்குடியினர், மக்கள் தொகையில் 8.5 விபக்காடு உள்ளனர். இவர்களுக்கு 4,754 இடங்களே கிடைத் துள்ளன. இது இவர்களுக்கு உரிய பங்கு ஆகாது.

அதாவது, 82.5 விழுக்காடு உள்ள கீழ்ச்சாதி - கீழ் வகுப்பு மக்களுக்கு - கடந்த 62 ஆண்டுக் காலத்தில், வெறும் 22,366 முதல் நிலைப் பதவிகளே கிடைத்துள்ளன.

இது மானங்கெட்டத்தனம் என்பது - கீழ்ச்சாதி களில் பிறந்துவிட்ட, அனைத்திந்திய அளவில் அறியப் பட்ட - கலைஞர் மு. கருணாநிதி, மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணி, நரேந்திரமோடி, முலாயம்சிங் யாதவ், மாயாவதி, ராம்விலாஸ் பஸ்வான், லல்லு பிரசாத் யாதவ், நிதீஷ்குமார், பாதல் சிங் (ஜாட்) ஆகியவர்களுக்கும், மற்ற மாநிலங்களில் உள்ள ஒடுக் கப்பட்ட வகுப்புத் தலைவர்களுக்கும் இப்போதாவது வரவேண்டும்.

இன்றையப் பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அமைச்சர் கபில்சிபல் போன்றவர்கள் இந்த ஏற்பாட்டை மாற்றிட விரும்பாத -உழைக்கும் மக்களின் எதிரிகள் ஆவர்.

இன்று உள்ள கல்வித் திட்டம் அறிவும் உரிமை உணர்ச்சியும் வர உதவாதது.

இன்று உள்ள இந்திய அரசு நிருவாகம் என்கிற ஆளும்வர்க்கக் கருவி மேல்சாதி - பணக்கார - பெருநில உடைமைக்காரர்கள் கையில் சிக்கிவிட்டது.

அவரவர் நாடு, மொழி, பண்பாடு, உரிமை, வரலாறு என்கிற அடையாளங்களைக் காப்பாற்றிடப் போராட வேண்டும் என்கிற உண்மையான எண்ணமும் செயல்பாடும் மேலே கண்ட கீழ்ச்சாதித் தலைவர் களுக்குப் போதிய அளவில் இல்லை. இவர்கள் எல்லோரையும் ஆட்டிப்படைக்கவும், இந்திய அரசின் கட்டுக்குள் வைக்கவும் - சி.பி.அய். துறையும் (CBI), ரா (RAW) என்கிற வெள்ளை யானையான - வேலை கெட்ட துறையும், இராணுவ வலிமையும் பயன்படுகின்றன. காவல் துறை என்பது கழிசடை களின் புகலிடமாகிவிட்டது. இவை இன்னமும் - கெட்டதிலிருந்து கழிசடையாகக் கூடிய நிலைமைக்கே நம் எல்லோரையும் கொண்டு செல்லும்.

அன்றியும், மக்களுக்குத் தரமான கல்வி அளித்திட - மொத்தச் செலவில் 3 விழுக்காடு நிதி கூட ஒதுக்கப் படவில்லை.

மக்களின் உடல்நலக் காப்புக்கு 1.8 விழுக்காடுக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

படித்த வேலையற்றோர் 12 கோடிப் பேருக்கும், வேளாண் கூலிகளுக்கும் வேலை வாய்ப்புக்குத் திட்டமிடப்படவில்லை.

ஆனால், படை வலிமையைப் பெருக்குவதற்கு மட்டும் 2002 முதல் 2011 முடியப் பெருந்தொகை களை இந்திய அரசு செலவு செய்திருக்கிறது.

2002இல் ரடார் கருவிகள் வாங்க 19 கோடி டாலர்.

2006இல் கடலிலும் தரையிலும் செலுத்தும் ஊர்திகள், ஹெலிகாப்டர்கள் வாங்க 9.25 கோடி டாலர்.

2007இல் உயர்தர வானூர்திகள் வாங்க 96.2 கோடி டாலர்.

2009இல் கடல் பாதுகாப்புக்கான வானூர்தி வாங்க 21 இலட்சம் டாலர்.

2010இல் எதிரிகளின் கப்பல்களைத் தாக்கும் தொலைதூரம் செல்லும் வானூர்திகள் வாங்க 17 கோடி டாலர்.

2010இல் இராணுவ வானூர்திக்கான இயந்திரங்கள் வாங்க 82.2 கோடி டாலர்.

2011இல் ஊ-17 பெரிய வானூர்திகள் வாங்க 41 இலட்சம் டாலர்.

இவையெல்லாம் ஏற்கெனவே செய்யப்பட்ட செலவுகள்.

இப்போது ஆயுதங்கள் கொள்முதலுக்காக - நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவிட்ட - 5 வகையான செலவினங்களுக்கு மட்டும் 64.53 காடி டாலர் ஒதுக்கப்பட்டுவிட்டது. (“The Times of India”, Chennai,23.1.2013, page 10). 

இவையெல்லாம் சேர்த்து 288.60 கோடி டாலர் - அதாவது 15 ஆயிரத்து 503 கோடியே 59 இலட்சத்து 20,000 உருபாவை, 10 ஆண்டுகளில் இந்திய அரசு வாரி இறைத்துவிட்டது.

இவற்றைக்கொண்டு 8ஆம் வகுப்புப் படிப்புள்ளவர்கள் முதல் பெரிய படிப்புப் பெற்றவர்கள் வரையில் - இந்தியா எங்கே இட்டுச் செல்லப்படுகிறது - இந்திய அரசு எதைநோக்கி நம் மக்களை அழைத்துப் போகிறது - இன்றைய காங்கிரசே தொடர்ந்து ஆட்சிக்கு வந்தால் என்ன நேரிடும் - இதற்கு மாற்றாக வரத்துடிக்கும் பாரதிய சனதா ஆட்சிக்கு வரநேர்ந்தால் நம் மக்கள் என்ன நிலைமைக்கு ஆளாவார்கள் என்ற அதிரடிச் சிந்தனைக்குத் தங்களை ஆளாக்கிக் கொண்டு, இளந்தலைமுறையினர் எழுச்சி கொண்டு தெருவுக்கு வந்து போராடத் துணியவேண்டும்.

மார்க்சு, மகாத்மாகாந்தி, ஜவஹர்லால் நேரு, பெரியார், அம்பேத்கர், லோகியா ஆகிய மாபெருந் தலைவர்களைச் சொல்லிச் சொல்லி - மக்கள் முன் தங்களை உயர்த்திக் கொண்டவர்கள், மானமும் அறிவும் பொறுப்பும் இருந்தால் - இன்றைய அரச மைப்பையும், இன்றையப் பன்னாடை அரசியல் கட்சிகளையும் அப்புறப்படுத்த எல்லாம் செய்ய வேண்டும்.

இன்றேல், பார்ப்பானுக்கும் பணக்காரனுக்கும் மேல்சாதிக்காரனுக்கும் 2013இல் அடிமைகளாக உள்ள நம் மக்கள், மிக விரைவில், அமெரிக் கனுக்கும், சீனனுக்கும், அய்ரோப்பியனுக்கும் அடிமைகளாக ஆகிவிடுவார்கள்.

இன்றைய சோனியாவும், மன்மோகன் சிங்கும், அத்வானியும் இந்தத் தொலைதூர அந்நியரை இருகை நீட்டி வரவேற்கிறவர்கள் - எச்சரிக்கை! எச்சரிக்கை!

- வே. ஆனைமுத்து

Pin It